அகநானூறு பாடல் – 5

பாலை பாடிய பெருங்கடுங்கோ எழுதியது

தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடும் தலைவன் என்பதைக் கருவாகக் கொண்டு எண்ணற்ற பாடல்கள் அகநானூறில் இருக்கின்றன.

பொருள் தேடப் போகும் முன், பிரிந்து இருக்கும் போது, திரும்பி ஓன்று சேர வந்து கொண்டிருக்கும் போது என்ற மூன்று நிலைகளையும் சொல்லும் பாடல்கள்.

அவ்வகை பாடல்களில், இது ஒரு மென்மையான உறவை வரைந்து காட்டுகிறது.

*************************

சிரித்துக் கொண்டே ஓடி வந்து கட்டிக் கொண்ட மகனை தூக்கி அணைத்துக் கொண்டான் சரவணன்.

“என்ன கண்ணு இது? பொண்ணு மாதிரி டிரஸ் போட்டிருக்கீங்க. உங்க அம்மா ஏதோ வேண்டுதல்னு முடியை வேற வெட்ட மாட்டேங்கறா”. பையன் புரிந்த மாதிரி சிரித்தான்.

“நீங்கதானே பொண்ணு வேணும் பொண்ணு வேணும்னு அடிச்சிக்கிட்டீங்க” காப்பி கொண்டு வந்த சாந்தியின் முகத்தில் பெருமிதம்.

“மகேஷ்.. இங்க பாருய்யா” கையில் ஒரு மரப் பொம்மை. அழகான மூன்று மான்கள். “இதுலே யாரெல்லாம் இருக்கா சொல்லுங்க”.

பையனுக்கு பேச்சு இன்னும் வரவில்லை. “இது நான். அப்பா. கொம்பு இருக்கில்லே. இது அம்மா. இது குட்டி மகேசு”.

அம்மாவிடம் தாவிச் சென்று பெருமையாய் பொம்மையை காட்டி கேட்காமலேயே அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்தான்.

“எனக்கு…” என்று பக்கத்தில் வந்த சரவணனை பையனோடு சேர்த்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். “அப்பாவே மகேசுக்கு பண்ணினது.. அழகா இருக்கில்லே?”

பையனைக் கதை சொல்லி தூங்க வைத்தவன் பக்கத்தில் வந்து படுத்தாள்.

குளித்த சந்தன சோப்பு வாசம்.

“செல்லம்மா நான் ஒன்னு சொல்றேன். கொஞ்சம் பொறுமையாக் கேளு”

“என்ன?” கையும் காலும் அவன் மேல் விழுந்தன. காதுப் பக்கம் மூச்சுக் காற்று.

“நான் Gulfலே சௌதி போய் வேலை பாக்கட்டுமா?” சட்டென எழுந்து உட்கார்ந்தாள்.

“யாரு இந்த துர் போதனை? பிரபுவா? நமக்கு என்ன இல்ல? உங்க தச்சு வேலைதான் வேணும்னு எத்தனை பேர் வராங்க? உங்களை மரச் சிலை செஞ்சு கொடுங்கன்னு எவ்வளவு கேட்கிறாங்க. நீங்கதான் காசுக்கு சிலை செய்ய மாட்டேனுட்டிங்க” குரலில் கோபமும் கூடவே பெருமையும். நீர் தேக்கின கண்கள்.

முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு

“கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கெஞ்சினான்.

“என்ன சொன்னிங்க நம்ம முதல் ராத்திரிலே? பாரதியார் பாட்டுல்லாம் வேற. ஏதோ தெப்பம், குளம்னு” கேவத் தொடங்கினாள்.

வட்டங்கள் இட்டும் குளம் அகலாத

மணிப் பெரும் தெப்பத்தைப் போலே

உன்னை விட்டு விட்டு பல லீலைகள் செய்து

உன் மேனி தனை விடலின்றி” இதழில் முத்தமிட்டு அவள் அழுகையை அடக்கினான்.

“என்ன அற்புதமான பாட்டு – எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி”. கண்ணீரை இதழால் ஒற்றி எடுத்தான். “அத்தனை கஷ்டத்துலயும் காதலைக் கொண்டாடினவர் எங்க சுப்பையா”.

“அவரும் வீட்டுலே அவங்களை விட்டுட்டு  எங்கயாவது போனாரா?”

இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்று படு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல

 “பாரதியாரும் கொஞ்ச நாள் காசிலே இருந்தாரு” என்றவனை பேசவிடாமல் கையால் வாயை மூடினாள். “அந்தம்மா பட்ட கஷ்டம் யாரும் படக் கூடாது”

“ரெண்டு வருஷம்மா. கொஞ்சம் பணம் சேர்த்துட்டா, நம்ம கிராமத்திலே வீட்டை சரி பண்ணி, கிணத்தை தூறு வாரிலலாம். கொஞ்சமா விவசாயம் பண்ணலாம். ஊரிலே அப்பா ஆள் வச்சு பாத்துக்கிடுவாரு. ரெண்டு நாட்டு மாடு வாங்கி விடலாம். அவங்களுக்குப் போக, தாயாகப் போற ஊர் ஏழைப் பொண்ணுங்களுக்கு கொடுக்கலாம்”. பேசிக் கொண்டே போனவனை கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுவும் அவள் காதை தாண்டவில்லை.

“சரி விடு. நாளைக்கு யோசிக்கலாம்”

நீண்ட பிரிவு வரக்கூடும் என்ற நினைப்பு தகித்தது.

தகித்ததை மறக்க மௌனத்தில் நடத்திய முயக்கம்

அவனின் ஓன்று அவளிடம் சென்று

பிரிய மனமின்றி அவளிடமே தங்கியது.

இப்போது சந்தன வாசம் இருவர் மீதும்.

********************

இரண்டு மாதம் நல்ல வேலை அவனுக்கு. அவர்கள் சேர்ந்து சிரித்த தருணங்கள் மறைந்தன.

பாஸ்போர்ட், விசா என்று அலைந்தான். பையனுக்கு வாரம் ஒரு பொம்மை செய்தான்.

“சாந்தி.. யார் வந்திருக்கா பாரேன்”

“பிரபு அண்ணா!! எப்ப வந்தீங்க. நீங்க Gulf போய் மூனு வருஷம் இருக்கும்லே”

“ஆமாம்மா. நடுவிலே வர முடியலே. நீ எப்படியோ என்னை அடையாளம் கண்டு பிடிச்சுட்டே. ஆனா, என் பொண்ணு – இப்போ ஆறு வயசு. நான் அப்பாடான்னு சொல்ல வேண்டியதாயிடுச்சு.” விரக்தி சிரிப்பு.

உடம்பு பெருத்து தொப்பை பெரிதாய். முடியெல்லாம் கொட்டி இருந்தது. கால் நகம் எல்லாம் பிய்ந்து போய், பாதம் இரண்டும் வெடிப்பு வெடிப்பாய். கருத்துப் போயிருந்தான். கண்கள் சிவந்து இருந்தன. “

“குடிக்க ஆரம்பித்திருப்பாரோ?”

மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல்.
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்

“அங்கே வசதியெல்லாம் எப்படிண்னே?” என்றவளை சரவணன் முறைத்தான்.

“பரவால்லேமா. கொஞ்சம் கஷ்டப்பட்டாதானே, சம்பாதிக்க முடியும். பொண்ணை போன்லே பாத்துகிடுதேன். ஒரு தடவைக்கு அடுத்த தடவை பேசறதுக்குள்ளே வளர்ந்துர்றா”. கைபேசியில் இருந்த மகளின் போட்டோவை பார்த்துக் கொண்டே பேசினான்.

“அவ அம்மாவும் அவளும் எப்படி தனியா சமாளிக்கிராங்களோ”. கண்ணீரை அடக்க தலை குனிந்து போனை நோண்டி சமாளித்தான்.

“எனக்கு என்ன குறை? என்ன..பேச்சு துணைக்கு ஆளில்லே. சரவணன் வந்துட்டான்னா தேறிடுவேன். விசாக்கு அடுத்த மாதம் போறேல்லே?”

“வாங்க சாப்பிடலாம்”. சாந்தி எழுந்தாள். அப் பேச்சு பிடிக்கவில்லை என்று முகம் சொன்னது.

“என் சமையலையே சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கு. இப்படி சாப்பாட்டை பாத்தே எவ்வளவு நாளாச்சு. சரவணா… நீயாவது கொஞ்சம் சமைக்க கத்துகிட்டு வா.”

சாப்பிட்டு இரவில் நெடு நேரம் வரை பேசி பின் “லேட்டாயிடுச்சு. பொண்ணு முழிச்சு இருக்கும்” என்று கிளம்பினான்.

வாசலில் இருந்து தெரு திரும்பும் வரை பார்த்துக் கொண்டே இருந்தனர்.

கையால் கண்ணை துடைத்துக் கொண்டே போனான்.

கால்கள் ஒத்துழைத்ததாய் தெரியவில்லை.

*********************************

காலையில் விசா நேர்காணல் போகும் முன் “ஏன் இப்படி என்னவோ மாதிரி இருக்கேம்மா? காய்ச்சல் இருக்கா?” சரவணன் அவள் நெற்றி தொட்டான். .

“ஒன்னும் இல்லே கொஞ்சம் அசதியா இருக்கு. நீங்க வர பொழுது சாஞ்சிரும்லே. நான் சாப்பாடு கட்டித் தரேன்” என்று உள்ளே சென்றாள்.

சௌதி அரேபியா போகட்டுமா என்று கேட்ட நாளிலிருந்து இப்படித்தான் பட்டும் படாமல்.

அளி நிலை பொறா அது அமரிய முகத்தள்
விளி நிலை கொள்ளாள் தமியள்

“வரேன் செல்லம்” என்றவனை எப்போதும் போல் இல்லாமல் உள்ளிருந்தே “சரி..” என்று தலை அசைந்து அனுப்பி வைத்தது.

அவன் தலை மறைந்ததும், இவள் தலை இடம் வலமாய், “போகாதயேன்” என்று கண்கள் மருகின.

வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்

காலை கட்டி முகம் தூக்கி அவளைப் பார்த்த மகேஷின் தலையில் கண்ணீர் துளிகள் சொட்டென்றன.

தெரு கடக்கும் முன் அவன் தலை திருப்பி அவள் முகம் தேடினான். தோற்றான்.

தெப்பம் வட்டத்தை விட்டு விலகியது.

**************************

“காலையிலிருந்தே, ஏன் இப்படி வயத்தை குமட்டிகிட்டு வருது” பையனை மடியில் போட்டுத் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

Visa வாங்கப் போனவர் இன்னும் கொஞ்சம் நேரத்திலே வந்துருவாரே, ஏதாவது டிபன் பண்ணனுமே என்று எழுந்தாள்.

“அய்யா  அடுத்த வீட்டு புனிதா அக்கா கூட கொஞ்சம் நேரம் விளையாடுங்க” என்று பையனை அனுப்பி வைத்தாள்.

மீண்டும் புரட்டியது. குடித்த coffee எல்லாம் வெளியே வந்தது. முகம் கழுவி கிச்சன் வந்தவள், ஏதோ உந்த அலமாரியைத் திறந்தாள்.

இரண்டு மாதம் முன்பு வாங்கிய stayfee  பிரிக்காமலேயே இருந்தது.

********************

வாசலில் ஆட்டோ சத்தம். பையன் உள்ளே ஓடி வந்தான். அவனைத் தூக்கி கட்டி கொண்டாள்

அப்பா” பையன் பேசும் முதல் வார்த்தை. அவனைக் கட்டி முத்தமிட்டாள். “ஐ… அப்பா சொன்னியாய்யா? இன்னொரு தடவை சொல்லுங்க”.

“அப்பா” என்றவனை பார்த்து முதல் அப்பாவிலேயே உள்ளே வந்து விட்ட சரவணன் கதவருகிலேயே நின்று சிரித்தான்.

பையன் தலையில் பெரிதாய் அல்லிப் பூ இரண்டு. இப்போதுதான் தொட்டியில் இருந்து எடுத்து இருக்க வேண்டும். நீர் சொட்டின. அழகான நீல நிறம். “யாரு கண்ணு வச்சு விட்டா பூ? புனிதா அக்கவா”.

பையன் மீண்டும் “அப்பா” என்றான்.

சரவணன் ஏதாவது சொல்லுவான் என்று மெதுவாய் அடி எடுத்து அவன் பக்கம் வந்தாள்.

நலமிகு சேவடி நிலம் வடுக் கொளா அக்
குறுக வந்து

“காபி கொண்டு வரேன்” என்று திரும்பினாள்.

பையனின் தலையில் முத்தமிட்டு  ஒரு பெருமூச்சு.

அச்சூடு அவனை வந்து தொட்டது.

பூக்கள் வாடித் தலை கவிழ்ந்தன.

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூ நீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்

 “விசா என்ன ஆச்சு? எல்லாம் நீங்க நினச்ச மாதிரி பழம்தானே” பக்கத்தில் வந்து காபியை ஆற்றி கையில் கொடுத்தாள்.

வலிய வரவழைத்த புன்னகை மறைக்க முயன்று தோற்ற பிரசவ வலி வேதனை.

முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு. என்ன சொல்லிவிடக் கூடாது என்று முகம் காட்டியது.

 தன் கூர் எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணியது உணரா அளவை ஒண்ணுதல்

“விசா…. கிடைக்கலேம்மா. இந்த வருஷ கோட்டா முடிஞ்சிருச்சாம். ஒரு வருஷம் கழிச்சு வரச் சொல்லிட்டாங்க”

நீண்ட நேர பிரசவ வலியின் உச்ச அழுத்தத்தில்

உதித்த முதல் அழுகைக் குரல் கேட்டு மலர்ந்த

அவள் முகம்.

அதே முகம்.

காப்பி கப்பை வாங்கி டேபிளில் வைத்து சேரில் உட்கார்ந்து இருந்தவன் முன் வந்து நின்றாள். அவன் கையை எடுத்து தன் அடி வயிற்றில் வைத்துக் கொண்டாள்.

“ஒரு வருஷத்துக்கு அப்புறம் உங்க பொண்ணு சரின்னு சொன்னா போங்க. எங்கிட்டே கேட்க வேண்டாம்”

குரல் உடைய சிரித்தாள். கன்னமிரண்டிலும் கண்ணீர். .

அவன் கை நீண்ட நேரம் அங்கேயே இருந்தது.

கண்டு கடிந்தனம் செலவே ஒண் தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே

***********************

வெளியில் மழை.. புனிதாவுடன் மகேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். தரையில் கிடந்த காகிதத்தை எடுத்து புனிதா கப்பல் செய்தாள். மகேஷிடம் கொடுத்து தண்ணீரில் விடச் சொன்னாள்.

அவன் விசாவுக்கு அனுமதி கிடைத்த காகிதம்.

“ஹை…எவ்வளவு வேகமா போது பாரேன்”. புனிதா கை தட்டினாள்.

பொண் பிறந்த அடுத்த மாதம் மகேஷுக்கு திருசெந்தூரில் மொட்டை அடித்தனர்.

***********************

அகநானுறு 5, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை, தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அளி நிலை பொறா அது அமரிய முகத்தள்
விளி நிலை கொள்ளாள் தமியள் மென் மெல
நலமிகு சேவடி நிலம் வடுக் கொளா அக்
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணியது உணரா அளவை ஒண்ணுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல் அம் காட்டுப்
பளிங்கத் தன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல்.
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்று படு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூ நீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
கண்டு கடிந்தனம் செலவே ஒண் தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே.

வருந்தத்தக்க எம் நிலை. அதை பொறுக்க முடியாமல் வாடி மாறுபட்டு நிற்கும் அவள் முகம். நான் சொல்வதை அவள் காதில் வாங்கவேயில்லை.

தனியாய் அவள். மெதுவாய் நிலம் பதிய நடந்து வந்தாள். முகத்தில் வரவழைத்த போலிப் புன்னனகை. என் முடிவு என்ன என்று அறிந்து கொண்டவள், நான் பிரிந்து போவது பிடிக்காததை உணர்த்தினாள்.

பட்டுப் போன ஓமை மரம். பலத்த வெய்யிலில் காயும் பாறைகள். பளிங்கு போன்ற சாப்பிட முடியாத நெல்லிக் காய்கள், உருட்டி விட்ட பகடைகள் போல் அப் பாறைகளில் உதிரும்.

குறுகிய கல் நிறைந்த பாதைகள். உளி கொண்டு கூர்மையாக்கினால் போல் கற்கள். கால் நகம் ரத்தம் வரச் சிதைக்கும்.

“இப்படிப்பட்ட ஒன்றுக்கும் பயன் இல்லலாத காட்டை கடந்து சென்றிர்கள் என்றால் காதலித்தவரை விட்டுச் செல்வது தவறு என்று உரைத்த பழம் சொல் வெறும் சொல்லே”. அவள் வாய் விட்டு சொல்லவில்லை. முகம் காட்டியது.

கண்ணின் மணியை மறைத்த கண்ணீர். உடம்போடு அணைத்த எம் மகன். மகன் தலையில் முத்தமிட்டு பெருமூச்சு. அல்லி மலரால் தொடுத்து இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் பூ (சூடு தாங்காமல்) நிறம் மாறியது.

இப்படி பொலிவு இழந்து வாடிய அவள் தோற்றம் கண்டேன். நான் இன்னும் போகவில்லை. இங்குதான் இருக்கிறேன்.  ஆனால் இப்பொழுதே இப்படி வாடி விட்டாள். நான் சென்று விட்டால் பிழைத்திருக்க மாட்டாள்.

பொருள் தேட போவதில்லை என்று முடிவை மாற்றினேன்.

 

Print Friendly
பகிர்ந்து கொள்ள

1 thought on “அகநானூறு பாடல் – 5”

  1. சங்க கால பாடலுக்கு எங்க கால பாரதியின் பாடலுடன் இணைத்து ஒரு விளக்கப்பதிவு. மேலும் தெளிவான புரிதலுக்கு உதவுகிறது. Enjoyed the connect .Way to go Ganesh.

Leave a Reply