அகநானூறு – மழையின் கூடல்

அகநானூறு பாடல்கள் முழுவதும் இயற்கை வர்ணனைகள் பிரமிக்க வைக்கும்.

இனிக்கும் உவமைகள், உள்ளுரை புரிந்தால் இன்னும் மயக்கும். .

ஒரு வகையில் மழைதான் பாட்டுடைத் தலைவன். நிலம் தான் தலைவி. குறிஞ்சியும், முல்லையும், மருதமும், நெய்தலும், பாலையும் அவ் உறவின் பல்வேறு நிலைகள்.

மேகத்தை குறிக்க முப்பத்திரண்டு வார்த்தைகளும் நீரை குறிக்க ஐம்பதும், நிலத்துக்கு அறுபத்திரண்டும் தமிழில் இருக்கின்றன23.

மழையைக் கொண்டாடிய மக்கள். அவர் தம் நிலத்தை மழை நெகிழ்வித்தது.

மழையின் கூடலுக்கு நிலம் தயாராகும் போதும், கூடலின் போதும், மழையுடன் கூடி மகிழ்ந்த பின்னும் உண்டாகும் “தோற்ற மயக்கங்கள்” நிரம்பிய பாடல்கள் பல.

முன் இரவில் முயங்கி மகிழ்ந்து, காலையில் முதலில் குளித்து, கணவனின் முகத்தில் கூந்தல் நீரை சிதறடித்து எழுப்பும் உறவின் பரவசம், அகநானூறில் மழை வர்ணனை படிக்கும் போது வருகிறது.

**************************

கொல்லி மலை. நாமக்கல் அருகில் இருக்கிறது.

சங்கப் புலவர்கள் பார்த்து மயங்கிய கொல்லி மலைப் பாவை இன்றும் அங்கு பிரமாண்டமாய் படுத்து இருக்கிறாள். அதே உருவம். கொஞ்சம் மூக்கு மட்டும் கூர்மை மழுங்கி இருக்கலாம். அவள் பச்சை உடையில் நிறைய இடங்கள் வெளிறிக் கிடக்கின்றன.

சங்க காலத்தில் அவள் மிக அழகு. அவள் மேனியெங்கும் ஒளி வீசும் கற்கள். அதற்காக நடந்த போர்கள் இன்னும் முழுதும் அறியாத, எழுதப்படாத வரலாறு.

எரி மருள் கதிர திருமணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லிக் குடவரை25

இருள் இன்னும் பிரியாத அதி காலை.

சூலுற்ற பெண் யானைகள் அவளை சுற்றி அங்கும் இங்கும் அலைகின்றன. கூட்டம் கூட்டமாய்.

திடீரென்று பெண் யானை மேகங்கள் ஒன்று சேர்கின்றன.

வானம் முழுதும் மறைத்து நிற்கும் கரிய யானைகள்1

வயவுப் பிடி இனத்தின் வயின் வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே மாலைக் – 183

கடல் இடம் மாறி வானம் சேர்கிறது­2

கடல் கண்டன்ன மாக விசும்பின் – 183

*****************************

ஒரு பெரிய ஆண் யானையின் தும்பிக்கை வானில் இருந்து நீண்டு பூமி தொடுகிறது3 பெய்குழல் மேகம். (Funnel cloud).

பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால் வீழ்த்து
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ – 334

வானம் தூங்குவது போல் கண்களை மூடியது4

துஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு

எங்கும் ஒரே இருட்டு. திசை தெரியா இருட்டு8.

சிறிது நேரத்தில் வானம் கண் சிமிட்ட தொடங்குகிறது4.

தீக் கதிரை கொடியாய் செய்த மின்னல். வானத்தை கிழித்து விசிறிப் பாய்கிறது.5,6.

முரசும் பறையும் உள்ளம் கலங்க முழங்கும் இடி4.

இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்– 72

அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்கக்
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி – 162

வானத்தை உரித்துக் கொண்டு மேகம் மழையாய் இறங்குகிறது7.

வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி-24

வானுக்கும் மண்ணுக்கும் இருந்த எல்லை மறைந்தது13.

நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி

***************************

கற்களின் மேல் உருளும் தேரும், தேர்க் குதிரைகளின் குழம்படியும் எழுப்பும் சத்தம்.

விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும் – 14

பருத்த அமுத நீர் கோல்கள் பூமி இடிக்கும் ஒலி9.

“வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

கொட்டி யிடிக்குது மேகம்;-

கூவென்று விண்ணைக் குடையுது காற்று;

சட்டச்சட சட்டச்சட டட்டா”-   பாரதி

மற்றொரு ஒலி இப்பொழுது.

பெண்கள் தூக்கி பிடித்து விளையாடும் தட்டான் கற்கள் தரையில் எங்கும் பட்டு உருளும் ஓசை10.

வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழுறை சிதறிப்
பெயல் தொடங்கின்றால் வானம் – 334

பனை நொங்கின் நீர் செறிந்த இளங் கண்கள் போல் எடுத்த கையில் நழுவும் பனிக் கட்டியாய் ஆலங் கட்டிமழை11.

நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர்ப் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு – 304

*****************************

வைகறை தொடங்கிய மழை எல்லை இல்லாமல் தொடர்கிறது12.

எல்லையும் இரவும் என்னாது கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத் – 34

நேரம் சொல்ல முடியாத கும்மிருட்டு. நீர் கன்னல் (water bowl clock) இருந்தால் மட்டுமே சொல்லலாம்13.

பெரு மழை. இடை விடாது முடிவில்லாது  நிலத்தை கூடி மகிழும் ஒலி.

*****************************

மேற்கே ஒளி கீற்று.

நில மங்கை கூடி மகிழும் காட்சியை மேகத் திரையை சற்றே விலக்கி.  எட்டிப் பார்க்கும் கதிரவன். மயங்கி நிற்கிறான் வெட்கம் கெட்டவன்

விண்ணுக்கும் மண்ணுக்கும் நீள்கிறது ஒரு வில். திருமாலின் பெரு மார்பில் ஏழு வண்ண மாலையாய் வானவில்14.

நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
திரு வில் தேஎத்துக் குலைஇ உருகெழு

மலைப் பாறைகளில் முரசின் கண்களாய் சுனைகள் நீரில் நிரம்பி வழிகின்றன.

சுனைகளில் மழைச் சரம் பட்டு முளைக்கும் நீர் பூக்கள்16.

பறைக்கண் அன்ன நிறைச் சுனை தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய – 324

தெருவெல்லாம் வெள்ள ஓட்டம்.

பாம்பு சென்ற தடங்கள் போல் நீர் ஓடுகிறது17.

தண்ணில மருங்கில் போழ்ந் வழியுள்
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச் – 325

மலையில் வெள்ளி உருக்கிய பிரகாசமாய், பேரழகாய் அருவிகள் விழத் தொடங்குகின்றன20

பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி – 278

திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட – பாரதி

*****************************

இடியும் மின்னலும் நின்று விட்டன.

முரசும் பறையும் அடித்து களைத்த பாணன் யாழ் கருவி மட்டும் இசைக்கும் மென்மை ஒலி15.

இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல
பெயல் பெய்து – 374

நாளெல்லாம் பிரிவது போல் மின்னல் கிழித்த மேகங்கள் இப்போது தாழ்ந்து சோர்ந்தன15.

பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ
போழ்ந்த போலப் பலவுடன் மின்னி
தாழ்ந்த போல நனியணி வந்து
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி

 “மழை இனிமையுறப் பெய்கின்றது.

மழை பாடுகின்றது.

அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக் கருவி

வானத்திலிருந்து அமுத வயிரக் கோல்கள் விழுகின்றன” – பாரதி

பகல் முழுவதும் கூடி மகிழ்ந்த மழை இரவில் மென்மையாய் நிலத்தை அணைத்து கிடக்கிறது.

முயங்கி அயர்ந்த மழை.

மெல்லிய கோல்களால் மழைத் துணைவன், நில மங்கையின் உடல் வருடிக் கொண்டிருக்கிறான்.

பல முறை உழுது விட்ட நிலம் நெகிழ்ந்து கிடந்தது19.

தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண் போல் – 26

மேகம் தன் திரை மூடி கதிரவனை மேலும் பார்க்க விடாமல் விரட்டியது.

*****************************

வாடைக் காற்று. கடுங் குளிர்.

வீடுகளில் விளக்கின் வெளிச்சம்.

அதோ ஒரு பெரிய வீடு. வீட்டின் முன் மணல் பரப்பி இருக்கிறது. மாணிக்கமும் பவளமும் இறைந்து கிடக்கின்றன18.

ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவும்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப் – 304

மண்ணில் உதிர்ந்த காயாப் பூக்களின் மேலும் கீழும் மூதாய் பூச்சிகள் ஒளிந்து விளையாடுகின்றன..

செழிப்பான வீடு.

பெரிய அறையில் கட்டில். கட்டில் மேல் அடுக்கடுக்காய் நிரப்பிய மெத்தை.

மெத்தையில் ஓருடல். இல்லை இரு உடல்கள்.

காதல் கள் பருகிய மயக்கம்22.

பருகுவன்ன காதலொடு திருகி
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ – 305

அருந்த அருந்த சுரக்கும் அதரக் கள்.

ஒன்று மற்றொன்றில் புகுந்த நிலையில் முயக்கம்22.

குளிர்,  நடுக்கும் குளிர்.

இறுக்கம், மேலும் இறுக்கம்.

மழையில் ஊரின் குளங்கள் எல்லாம் நிரம்பின. எல்லோர் மனதிலும் அளவில்லா மகிழ்ச்சி21.

என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்று -42

அத்தனை உவகையும் ஒரு சேர இருவர் மனதிலும் ………….

***************************

மழையை பார்த்து, ரசித்து, கொண்டாடிய நாகரீகம்.

ஒரு வைகறை தொடங்கி மறு வைகறை வரைப் பெய்யும் மழை.

இப்படி ஒரு மழை நாமெல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆயிற்று?

இத்தகைய மழை நாட்கள் வருங் காலங்களில் நமக்கெல்லாம் கிடைக்க “நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன்” 14 பெரிய பெருமாளை வேண்டுவோம்..

***************************

ரசித்து மகிழ இப்படி ஒரு மழை.

பக்கத்தில் உயிருக்கும் உடலுக்கும் என்றும் இனிக்கும் நம் துணைவி (அல்லது துணைவன்).

படித்து மகிழ பாரதியும் புதுமைப்பித்தனும். .

கூடவே என்றென்றும் ராசா.

மழையின் துணையாய் மதுரை மணி.

“மா ஜானகி செட்ட பட்டக மஹராஜவு ஐதிவி”

மழையின் தாளத்துக்கு தப்பாத மதுரை மணியின் இசைக் குதிரை.

க க ம க க ம

ரி க ரி ரி க க

த த ரி த த ரி ரி

ச க ரி த ச த ச

“ராமா!  எமது ஜானகியை கை பிடித்ததால் தானே  நீ பெரிய ஆளானே?”

தியாகப்பிரும்மம் காம்போதியில் இராமனை கடிந்து கொள்கிறார்.

ராவணன் நிலமகளை24 மறைத்தான். ராமன்  காட்டில் தேடி அலைந்து கடலை அடைந்தான்.

இப்பொழுது குளத்தையும், ஏரியையும் தேடிக் களைத்து மழை கடலை அடைகிறது.

பெரிய பெருமாளையே மழையாய் கொண்டாடினாள் கோதை.

“ஆழி மழைக் கண்ணா… ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தெறி” 26

மழை தான் ராமன்.

ராஜாவின் இசை வார்ப்புகள்…

“நான் இங்கு கண்டு கொண்டேன் ராமனை! வான் மேகங்களே” பாடுவது ஜானகி!

நிலமகளைக் கூடி அவளுடனேயே தங்கி அவளை மலரச் செய்வதுதான் அவன் கடமை. அதில்தான் அவன் பெருமை புகழ் எல்லாம்.

முடிவாய், தெய்வம்தான் இயற்கை.

இயற்கையின் பல்வேறு “தோற்ற மயக்கங்கள்”, ஒன்றின் பல உருவுகள்.

காடு, மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர், காற்றுதீ, வான். ஞாயிறு திங்கள் வானத்துச் சுடர்கள் – எல்லாம் தெய்வங்கள் – பாரதி

************************

மூல பாடல் வரிகளும் பாடல் எண்ணும்

 1. வயவுப் பிடி இனத்தின் வயின் வயின் தோன்றி
  இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
  காலை வந்தன்றால் காரே மாலைக் – 183

 

 1. கடல் கண்டன்ன மாக விசும்பின் – 183

 

 

 1. பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால் வீழ்த்து
  இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ – 334

 

 1. துஞ்சுவது போல இருளி விண் பக
  இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
  ஏறுவதுப் போலப் பாடு சிறந்து உரைஇ
  நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு – 139

 

 

 1. இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
  துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்– 72

 

 1. அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்கக்
  கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி – 162

 

 

 1. வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
  விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி-24

 

 1. மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர – 84

 

 

 1. விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
  கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
  கார் மழை முழக்கு இசை கடுக்கும் – 14

 

 1. வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
  கழங்கு உறழ் ஆலியொடு கதழுறை சிதறிப்
  பெயல் தொடங்கின்றால் வானம் – 334

 

 

 1. நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
  சூர்ப் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு – 304

 

 1. எல்லையும் இரவும் என்னாது கல்லெனக்
  கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத் – 34

 

 

 1. நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி
  குறு நீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
  கதிர் மருங்கு அறியாது அஞ்சுவரப் பாஅய் – 43

 

 1. நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன்
  போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
  திரு வில் தேஎத்துக் குலைஇ உருகெழு
  மண் பயம் பூப்பப் பாஅய்த்,
  தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே.-175

 

 

 1. பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ
  போழ்ந்த போலப் பலவுடன் மின்னி
  தாழ்ந்த போல நனியணி வந்து
  சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி
  இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
  வடியுறு நல்யாழ் நரம்பு இசைத்தன்ன
  இன் குரல் அழி துளி தலைஇ நன் பல
  பெயல் பெய்து – 374

 

 1. பறைக்கண் அன்ன நிறைச் சுனை தோறும்
  துளி படு மொக்குள் துள்ளுவன சாலத்
  தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய – 324

 

 

 1. தண்ணில மருங்கில் போழ்ந் வழியுள்
  நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச் – 325

 

 1. ஆல வரி மணல்
  மணி மிடை பவளம் போல அணிமிகக்
  காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவும்
  ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப் – 304

 

 

 1. தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
  மண் போல் – 26

 

 1. பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
  வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
  இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி – 278

 

 

 1. என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்
  பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை
  பல்லோர் உவந்த உவகை எல்லாம்
  என்னுள் பெய்தந்தற்று -42

 

 1. பகலினும் அகலாதாகி யாமம்
  தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத்
  தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
  பனி மீக்கூரும் பைதல் பானாள்
  பல்படை நிவந்த வறுமை இல்சேக்கை
  பருகுவன்ன காதலொடு திருகி
  மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து
  ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ – 305

 

 1. Tamil Studies – M. Srinivasa Iyengar – Asean Educational Press 1914

 

 

 1. Rig Veda 4:57 “Auspicious Sita, come thou near; We venerate and worship thee. That thou mayst bless and prosper us. And bring us fruits abundantly”. Rig Veda says Sita is the Goddess of Fertility (or earth). Ramayana says she is daughter of Boomidevi.

 

 1. எரி மருள் கதிர திருமணி இமைக்கும்
  வெல் போர் வானவன் கொல்லிக் குடவரை – 213

 

 1. ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தெறி –
  • ஆண்டாள் திருப்பாவை – 4 வது நாள்

 

Print Friendly
பகிர்ந்து கொள்ள