அகவை ஐம்பது.

ஐம்பது வயதின் தொடக்கத்தில் சில தீர்மானங்கள் எடுத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

புது வருட தீர்மானங்களைப் போல் உடல் பயிற்ச்சி சார்ந்ததாக இல்லாமல், மன நலன் சார்ந்ததாக சிலவற்றை முடிவு செய்து, நடைமுறைப்படுத்தினால், நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை நினைவில் வைத்துக் கொள்ள சில நல்ல அனுபவங்களை விட்டுச் செல்லலாம்.

1. குற்றம் குறை கூறாமை

“இன்னிக்கும் உப்புமாவா?”, “இந்தியாக்கு வந்தாலே உடம்புக்கு ஏதாவது வந்துரும்”, “இந்த ஊர் திருந்தவே திருந்தாது – குப்பையை பிரிச்சுப் போட்டா என்னவாம்?”, “ச்சே ஒரே traffic – எப்பதான் இங்க rules follow பண்ணுவாங்களோ”, “கல்யாணத்துக்கு பத்திரிகை whatsapp லே அனுப்பினா யார் போவா? நேர்லே வந்து கூப்பிட வேண்டாமோ”, “தோசைக்கு பொடி தரலை..என்ன ஹோட்டல் இது?”, உன் தங்கை வரேன்னு சொல்லிட்டு வந்தா சிங்கப்பூர்லே இருந்து ஏதாவது கொண்டு வரச் சொல்வோம்னு பயந்துக்கறா போலிருக்கு”, – இது போன்ற வாயாடலை மட்டுமல்ல, நினைவுகளையே தவிர்த்து விடுவது நலம். இப்படி சொல்ல வேண்டி வரும்  சமயங்களில் ‘பெற்ற தாயினும் ஆயின செய்யும்  நலம் தரும் சொல்லான’ நாராயணா என்பதை பல முறை உரக்கவே சொல்லிக் கொள்ளலாம். அது “நீள் விசும்பு அருளும்”.

2. பழம் பெருமை பேசாமை

“நாங்கல்லாம் தனி ரூம்லேயா படிச்சோம்..தெரு விளக்குதான்”, “என் முதல் கார் ஒரு பத்து வருஷ பழைய toyota”, “மொத்தமே மாதம் இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளம். அதுலே ஐநூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்பிடுவோம்”, “தாமிரபரணித் தண்ணி.. ஜிலு ஜிலுன்னு ஓடும்.. டெய்லி அங்க போய்தான் குளிச்சுட்டு வருவோம்”, “இப்ப யாரு தமிழ் படிக்கறா. எல்லாம் எங்க தலை முறையோட போச்சு”, “பாட்டுனா இளையராஜா பாட்டுதான் – அதுக்கப்பறம் தமிழ்லே நல்ல பாட்டுன்னா விரல் விட்டு எண்ணிடலாம்”, “பானுப்ரியா, மிஞ்சிப் போனா சிம்ரன்.. அப்புறம் எந்த தமிழ் ஹீரோயின் பாக்கற மாதிரி இருக்கா?”, “மௌன ராகம் மாதிரி படம் இனிமே வருமா?” போன்ற கமென்ட்களை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வது நலம்.  இந்த நோய் தீர வில்லை என்றால், காலையில் சீக்கிரம் எழுந்து சன் மியூசிக் சானலில் “நியூ மெலோடீஸ்” நிகழ்ச்சியை இரண்டு வாரம் தவறாமல் பார்க்கவும். அதில் வரும் நடிகைகளின் பெயர்களை குறித்து வைத்து கொள்ளவும். தெலுங்கிலும் அதே நிகழ்ச்சி இருக்கிறது என்று கேள்வி!.  அதே நேரத்தில் சங்கரா டிவியில் சுப்ரபாதம் காண்பிப்பார்கள். “Swap” பட்டன் அழுத்தினால் உடனே அங்கே செல்லுமாறு வைத்துக் கொள்ளவும். மனைவி வந்தால் மாற்றிக் கொள்ளலாம்.

3. சிறியனவானாலும் நல்லவை புகழ்தல்

காலை வேலையில் சிலு சிலுவென்ற சாரலுடன் பனி மூடிய பெங்களூர் வானிலை, சிரிப்புடன் உணவு பரிமாறிய சர்வர், நமக்கு பிடிக்கும் என்று தெரிந்து  நாம் வெளியூரில் இருந்து வந்த நாளில் செய்து வைக்கப்படும் அடை அவியல், எப்போதே உறவினர் வாங்கிக் கொடுத்த உடையை அவர்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, அவர்கள் வரும் போதோ அணிந்து கொள்வது, எதிர்பாராமல் காப்பியுடன் கிடைத்த இலவச முருக்கு, சொந்தமாக யாரவது எழுதிய முகநூல் (facebook) பதிவு பிடித்து இருந்தால், முயற்சி எடுத்து செய்யப்படும் வாடிக்கையாளர் சேவை (customer service) – இது போல சிலவற்றை மனமாரப் பாராட்டினால், பெரிய பெருமாளுக்கு ஆளுயர துளசி மாலை வாங்கிப் போட்ட புண்ணியம் கிடைக்கும் என்று விஷ்ணு புராணம், புதிய காண்டம் சொல்கிறது.

4. நேரம் அழிக்காமை

சராசரி ஆயுசு எண்பது வருடம் என்று எடுத்துக் கொண்டால், மீதி இருப்பது 10950 நாட்கள். அவற்றை வெட்டியாய் அழிக்காமல் இருப்பது நலம்.

ஐபோனின்  புதிய OPERATING சிஸ்டம் IOS பன்னிரண்டு, நான் சராசரியாக ஒரு நாளில் நாலு மணி நேரம் அதன் திரையையே பார்த்துக் கொண்டு இருப்பதாக சொல்லி விட்டது.

அதன் படி, மீதமிருக்கும் ஆயுசு முப்பது வருடங்களில், ஐந்து வருடங்களுக்கு மேலே செல்போன் திரைக் கணக்கு வருகிறது.

சிறு திரையுடன் ஐந்து வருடங்கள்!!!

இதில் கால் பாகம் துணைவியின் விழித் திரையை காண்பதற்கும், இன்னொரு கால் பாதியை காலை, மாலை நேர சூரியனை பார்ப்பதற்கும் பயன்படுத்தினால், வைட்டமின் D கூடும், உடம்பு சூடு குறையும், கணவன் மனைவியிடத்தில் உறவு பலப்படும், குடும்பத்தில் அமைதி நிலவும், இரவு நேர உணவு செரிக்கும், காலையில் தாம்பத்திய நலன் நீளும் என்று கருங்குளம் கல்யாணராம ஜோசியர் எழுதிய திரைப் பெயர்ச்சி கணிப்பு கூறுகிறது. அவருக்கு வயது எண்பத்தி நாலு. அனுபவ ஜோதிடர்.

5. பகிர்வது தவறாமை, பகிர்ந்தது பேசாமை

இது வரை படிக்கா விட்டால் ஒரு முறை கருட புராணம் படித்து விடுவது நல்லது. அந்நியன் படத்தில் அம்பி அளிக்கும் தண்டனைகள் பெறும் அளவுக்கு வாழக்கையில் குற்றங்கள் இதுவரை செய்யா விட்டாலும், நாம் இறந்த உடன், நம் வாரிசுகள் செய்ய வேண்டிய தான தர்மங்கள் பயமுறுத்துகின்றன.

செய்யாவிட்டால், ஆன்மா பேயாய் அலையுமாம்.

நமக்கு பின் நம் பிள்ளைகள் செய்ய விரும்பினாலும், தர்மம் வாங்கிக் கொள்ளும் நிலையில் உள்ள அந்தணர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

இன்னொரு புறம், ஐயன் வள்ளுவர், சொர்க்கம் என்று ஓன்று இல்லாவிட்டால் கூட கொடுத்து வாழவும் என்கிறார்.

நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று

நான் வள்ளுவர் கட்சி.

 மீதம் உள்ள நாட்களில் முடிந்த வரை உதவி செய்து விடுவோம். பொருளோ, நேரமோ, புத்திமதிகளோ – யார் விரும்பிக் கேட்கிறார்களோ முடிந்த வரை கொடுத்து விடுவது நலம்.

சொர்க்கம் இருக்கிறதோ இல்லையோ, நோயில் படுக்காமல் இருப்பதற்கும், பிள்ளைகள் ட்ரம்ப் ஆதரவாளர்களாக மாறி விடமால் தடுப்பதற்கும், அவர்கள் தங்களுக்கு தாய் மொழி தெரிந்த துணைகளை தேர்ந்தெடுப்பதற்கும் கண்டிப்பாக உதவக் கூடும் ஈதலே நன்று.

பெருமாளையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

சொர்க்கம் உண்டு என்று நம்பி, அந்த வைகுண்டத்தில் அழகருக்கு ஆயிரம் தடாவில் ஆண்டாள் வடிக்கும் அக்கார வடிசல், வரிசையில் நில்லாமல் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும் கொடுக்கலாம்.

கடைசியாய் ஓன்று – . “தாய் மொழியில் எழுத பேசத் தெரியாதவர்கள் அடுத்த பிறவியில் குரங்காய்ப் பிறப்பார்கள்” என்கிறார் பாரதி.

மகனோ, மகளோ – தாய் மொழியில் பேசுவதற்காகவாவது சொல்லிக் கொடுத்து விடுங்கள்.

உயில் தாய்  மொழியில் எழுதி வைத்து விடுவது இதற்கு கை கொடுக்கும்.

மன்னிக்கவும் – கடைசி கடைசியாய் இன்னும் ஓன்று.

ஐம்பது வயதுக்கு பிறகு, இது மாதிரியான அச்சு பிச்சென்று புத்திமதி சொல்லும் பதிவுகளை – “படித்ததில் பிடித்தது”, “பிடித்தால் பகிரவும்”, “இருபது நிமிடங்களில் இருபது பேருக்கு forward செய்தால் நினைத்தது நடக்கும்” என்று எழுதி அனுப்ப வேண்டாம்.

உடனேயே குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடவும்.

நான் ஏன் எழுதினேன் என்று கேள்வி வரும்..

நாளைதானே எனக்கு ஐம்பது வயது ஆகப் போகிறது 😊

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள