அமெரிக்கா – ஒரு தேடல் – பாகம் 3

டாலஸ் விமான நிலையம்.

வயதாகி, வலு குறைந்து, களை இழந்த முனையங்கள் (terminals).

ஆனால், நிலையத்தில் பெரும்பாலோர் இளைஞர்கள், வெயிலுக்கேற்ற ஆடைகளில் இளைங்கிகள்..

என்னை ஏற்றிச் சென்ற Uber டிரைவர் Sleepless in Seattle படத்தில் வரும்  Tom Hanks சாயலில் இருந்தார்.

பொதுவாய் Uber ஓட்டிகள் சின்ன வண்டிகளில் வர, இவர் வந்ததோ Lexus-RX SUV.

ஒரு தொழில்நுட்ப கம்பெனியின் பெயர் சொல்லி, அங்கு விற்பனை பிரிவில் இருக்கிறேன் என்றார்.

கல்லூரி செல்லும் ஒரு மகன், ஒரு மகள்.

போனில் இருவருடன், Hally Berry சாயலில் மனைவி போட்டோ.

“பெங்களூர்!. இரண்டு முறை வந்திருக்கிறேன். என்ன ஒரு வளர்ச்சி!!. Energetic, young crowd. அடுத்த வாய்ப்புக்காக காத்து இருக்கிறேன்” என்றார்.

“Uber எப்படி போகிறது?”

“Oh it is fun. இரண்டு குழந்தைகளும் கல்லூரியில். மகன் UT- ஆஸ்டினில் படிக்கிறான். பெண் நியூயார்க்கில். பீஸ் கட்ட இந்த வேலை கொஞ்சம் உதவுகிறது. மேலும் புதிது புதிதாய் மனிதர்களை பார்க்க முடிகிறது. தினசரி இரண்டு மணி நேரம், வார இறுதி நாட்களில் கூட கொஞ்சம் ஓட்டுவேன்.”

புதிய தொழில்நுட்பங்களை பற்றி ஆர்வமுடன் பேசினார். அமேசான் WholeFoods ஏன் வாங்கியது என்று விவாதித்தோம்.

ட்ரம்ப் பற்றி பேசி அவரை அவமதிக்க மனம் வரவில்லை.

********************

ப்ளேனோ (Plano), டெக்ஸாஸ்.

இருபது வருடங்களுக்கு முன் இங்கு வந்த போது ஓரிரு கட்டிடங்களும், சில குதிரைகளும், பரந்து விரிந்த மேய்ச்சல் நிலங்களும், நிறைய ஆநிரைகளும்* இருந்த ஞாபகம்.

இப்போது வளர்ந்து நீண்டு கொண்டே போகும் சாலைகளும், புதிது புதிதாய் அலுவலகங்களும், அவற்றுக்கு நடுவில் ஒரே ஒரு குதிரையும் .

மாதத்துக்கு ஒரு கம்பனி இங்கு வருவதாக சொன்னார்கள். தொழில் நுட்பம் சார்ந்த கம்பனிகளே அதிகம். நவீன திறன்கள் தேவைப்படும் வேலைகளே ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.

எங்கும் வளர்ச்சியின் தாண்டவம். வளர்ச்சியில் எல்லா நிறத்தவருக்கும் பங்கு இருப்பது தெரிகிறது. நிறைய இந்திய முகங்கள் தெரிந்தன.

ஒரு குட்டி சிலிகான் பள்ளத்தாக்கு.

“முற்போக்கு (liberals)” வர்க்கத்தின் இன்னொரு சொர்க்கம் சிருஷ்டிக்க  படுகிறது.

********************

யேல் பல்கலைக்கழகம்.

ரிஷி மூலம், நதி மூலம் போல் இதற்கும் ஆரம்பம் தேடினால் அது கொஞ்சம் வி(வ)காரமாய் சென்னையில் தொடங்கும்.

எலிஹு யேல். (Elihu Yale)

பாஸ்டனில் பிறந்து, லண்டனில் வளர்ந்து, கிழக்கு இந்திய கும்பனியார் இந்தியாவுக்கு வந்த புதிதில், சென்னையில் கும்பனியின் தலைவர்.

பறங்கி மலையை தந்திரமாய் வாங்கி (1687), ஆங்கில நகரை விஸ்தரித்தார்.

லஞ்சக் குற்றத்துக்காக, அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த சென்னையில் பதவி இழந்த முதல் அதிகாரி என்ற பெருமையும் உண்டு

லஞ்சம் வாங்கியும், இந்தியர்களை சிறைப் பிடித்து அடிமைகளாய் விற்றும் சேர்த்த பணத்தில் ஒரு பெரிய பங்கை கொடுத்து, தன் பெயரை இப் பல்கலைக்கழகத்துக்கு வாங்கி வைத்து விட்டு மறைந்தார்.

மீன் விற்ற காசு நாறவில்லை.

இப்போது அதற்கு விலையாக வருடத்தில் சீனா, கனாடாவுக்கு அடுத்து இருபது சதவிகித மாணவர்கள் இந்தியாவில் இருந்து வந்து படிக்கிறார்கள்.

உறையும் குளிரிலும் சளைக்காமல் ஓடும் உயரிய அடைவுத்திறன் (High achiever) படைத்த பெண்கள், புத்தகமே இல்லாமல் டிஜிட்டல் வடிவில் மேலாண்மை பள்ளியின் நூலகம், முழுவதும் பழைய புத்தகங்களால் நிறைந்த Beinecke  நூலகம்.

இந்த இடம் பிரமிக்க வைக்கும்.

ஹாப்பர் ஹால். – ஹாஸ்டலும், மெஸ்சும் சேர்ந்த இடம்.

அதன் உணவகத்தில், கையில் புத்தகத்துடன் பக்கத்தில் இருந்த பெண் – மார்த்தா Xiang.

சொந்த ஊர் ஹூஸ்டன். பெற்றோர் சீனாவில் இருந்து இங்கு வர, இவர் இங்கேயே பிறந்து வளர்ந்த அமெரிக்க பெண்.

யேல் கல்லூரியில் முதல் வருடம் உயிரியல் படிக்கிறார்.

டென்னிஸ் விளையாடத் தெரியும். பியானோ வாசிப்பார். பள்ளியின் கடைசி நாலு வருடங்களில் எல்லா பாடங்களிலும் முழு மதிப்பெண். பள்ளியில் பதிப்பித்த பத்திரிகையின் ஆசிரியர். புற்று நோயில் கஷ்டப்படும் குழந்தைகள் காப்பகத்தில் பள்ளி விடுமுறையில் வேலை.

Trump எப்படி என்றால் ஒரு மென்மையான சிரிப்பு.

“எனக்கு கல்லூரி வேலையை முடிக்கவே நேரம் போதவில்லை. அவரைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை. அமெரிக்கா ட்ரம்ப்பை விடப் பெரியது. மிக மிகப் பெரியது” என்றார்.

Yale மேலாண்மை கல்லூரியில் மார்க்கெட்டிங் பிரிவு பேராசிரியராய் இருக்கும் கல்லூரி நண்பர், நாலு வருடப் படிப்பை மூன்றே வருடங்களில் முடித்த ஒரு பெண்ணைப் பற்றி பெருமையாய் சொன்னார்.

அவர் எங்களுடன் கல்லூரியில் படித்த ஒரு நல்ல தமிழ் பெயர் கொண்ட பெண்ணின் மகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

********************

இந்த இரண்டு வார பயணத்தில் நான் தெரிந்து கொண்டது இது முழுதான ஒரே அமெரிக்காவாக  இல்லை என்பதுதான்.

இரண்டாய் பிளவு பட்டு, அப் பிளவும் விரிந்து கொண்டே போகிறது என்று தோன்றுகிறது.

  1. புதிய தொழில் நுட்பங்களை சார்ந்த பொருளாதாரமும், வந்தேறிகளை (immigrants) வரவேற்கும் மனப்பாங்கும், தீவீர சமைய உணர்வு விலக்கும், வித்தியாசமான பண்பாட்டுகளில் பொறையும், துப்பாக்கி எதிர்ப்பும், கருத்தடை உரிமைக்கு ஆதரவும் கொண்டு, வாழ்வின் ஆதாரங்களை பெருக்கிக் கொண்டே போகும் ஒரு பகுதி.

  2. பழைய உற்பத்தி பொருளாதாரத்தை சார்ந்து, நவீன தொழில் நுட்ப திறன்கள் குறைந்து, வெள்ளை  இன உயர்வை  தூக்கிப் பிடித்து,  பழமைப் பற்றுள்ள சமையக் கொள்கைகளை தாங்கி, தங்களின் கடின உழைப்பில் உருவான செழிப்பும்,    வளமும் பின்னால் வந்தவர்களின் கைகளுக்கு போய் விட்ட வெறுப்பு உணர்வுடன் வறுமை சேர்ந்து வயதாகிக்  கொண்டே போகும் மற்றொரு பகுதி.

இந்த இரு பிரிவுகளும் பூகோள ரீதியாகவும் பிளவுண்டு இருப்பது ஆபத்தானது.

“A House Divided against itself cannot stand” என்றார் ஆப்பிரகாம் லிங்கன்.

இப்படியான ஒரு நிலையில் தான் அமெரிக்க உள் நாட்டு போர் நிகழ்ந்தது.

அப்படி ஆகி விடுமோ என்று  பயப்படும் நிலை இன்னும் வரவில்லை என்பது ஒரு ஆறுதல்.

எந்த தொழிலையும் மதித்து செய்யும் மன முதிர்ச்சியும், தனி மனித சுதந்திரமும், குறைகள் இருந்தாலும், முடிந்த வரை பொது நலத்தை சிதைக்காத சுயநலத்தை ஊக்குவிக்கும் காபிடலிசமும், பல நிலைகளில் பரவி கிடக்கும் ஜனநாயக செயல் முனைவும் இருக்கும் வரை அமெரிக்காவின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

அவை எல்லாவற்றையும் தவிர்த்து பார்த்தாலும், நாலு வருட படிப்பை மூன்று வருடத்தில் முடித்து முன்னேறும் அனாமிகாக்களும், Xiangகளும் இருக்கும் வரை கவலையில்லை.

காவிரியில் முழு வருடமும் பொங்கி ஓடும் தண்ணீரும், தாவணி அணிந்த இளம் பெண்களின் கோலாட்ட குதுகாலங்கள் நிறைந்த அக்கிரகாரங்களும் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் அங்கு வசித்த குடும்பங்களின் பல வாரிசுகள், இன்று ஹட்சன் நதிக் கரையில் விநாயக சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே சுபிட்ஷம், இடிந்து விழுந்த கண்ணாடிக் கட்டிடங்கள் மட்டுமே உள்ள டெர்பி, கன்னேடிகட் போன்ற ஊர்களில் வாழும் வயாதனவர்களின் வாரிசுகளுக்கும் வர, பெரிய பெருமாளோ, மேரி அம்மையோ ஆசிர்வதிக்கட்டும்.

* ஆநிரை – மாடுகள்

நல்ல தமிழ் சொற்களைப் புரிந்து கொள்ள அருமையான ஒரு இணைய பக்கம் http://www.karky.in/karefo/. வைரமுத்துவின் மகன் கார்க்கியின் வணக்கத்துக்குரிய முயற்சி.

Print Friendly
பகிர்ந்து கொள்ள