அமெரிக்கா – ஒரு தேடல் – பாகம் 1 

பகலா இரவா என்று தெரியாமல் இருக்கும் விமான வெளிச்சம்.

துபாயிலிருந்து பதினாலு நேர நியூயார்க் பயணம் பாதிதான் முடிந்திருந்தது.

என்னவோ இந்த முறை அமெரிக்கா வருவது பரபரவென்றிருந்தது.

அமெரிக்கா, என்னைப் போல் பல பேர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாடு.

முதல் கார், முதல் முத்தம், என பல முதல் அனுபவங்கள் இங்குதான் பலருக்கும்.

வாழ்வில் தொட்ட உயரங்களுக்கெல்லாம்  ஏணிகள் இங்குதான் கிடைத்தன.

இந்தியாவில் இருக்கும் கடந்த பதினைந்து வருடங்களில், மூணு மாதத்திற்கு ஒரு முறை வந்து கொண்டிருந்தேன்.

மனைவியின் முகத்தை விட ஜெட்-ஏர்லைன்ஸ் ஏர்-ஹோஸ்டஸ் முகங்கள் தூக்கத்தில் வர ஆரம்பித்தன.

கடைசியாய் வந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. வேலை ஐரோப்பாவுக்கும், சீனாவுக்கும் இழுத்து சென்றது.

இந்த நீண்ட இடைவெளி ஏதோ ஒரு முதல் முறை வருவதைப் போல் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

நிறைய மாறி இருக்க வேண்டும் என்று தோன்றியது.

ட்ரம்பில் ஆரம்பித்து Uber வரை பலவற்றையும் புரிந்து கொள்ள ஆசை.

மனைவிக்கும், மகளுக்கும் என் நிலை புதிதாய் இருந்தது – “என்ன கடை கடையாய் ஏறி Gadgets வாங்கணும், Starbucks காப்பி, banana பிரட் – அதானே இந்த பரபரப்பு” மனைவி கலாய்த்தாள்.

எழுந்து விமானத்தின் பின்னால் இருந்த பாருக்கு சென்றேன். ஒரு சிறிய குழந்தையுடன் ஒரு அம்மா முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தாள். பல தூக்கம் கலைந்த முகங்கள், சிவப்பாய் ஒயின் குடித்தன.

நான் ஒரு டபுள் Espresso கேட்டு குடிக்க ஆரம்பித்தேன்.

பக்கத்தில் ஒரு இந்தியர். அறுபது வயது இருக்கலாம். ஆங்கிலத்தில் பேச்சு கொடுத்தார். முப்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்து விட்டேன் என்றார்.

“குட் மார்னிங்.. நியூயார்க் தான் வீடா? இல்ல வேற ஊரா?” என்று குடைய ஆரம்பித்தார்.

“நான் இப்ப பெங்களூர். இங்க பத்து நாள் ட்ரிப்”

அவர் முகம் சுருங்கியது.

“இரண்டு தடவை போயிருக்கேன். இப்பல்லாம் ரொம்ப traffic மோசமாமே”

ஆயாசமாய் வந்தது.

“ம்.. ஒரே மழை. இப்பல்லாம் போட் சர்வீஸ் வந்து விட்டது” என்றேன். என் நக்கல் அவருக்கு புரியவில்லை.

அவர் மகன், மகள். அவர்களின் மான்ஹட்டன் வாழ்க்கை என்று பேச்சு நீண்டது.

“நீங்க எந்த ஊர்”?

“நான் திருநெல்வேலி. தமிழ்” அவர் முகம் பளிச்சிட்டது.

“என் மருமகள் தமிழ் தான். நாங்க பெங்காலி. அவ இவனை ஒரு conferenceல பார்த்து பிடிச்சு போய் கல்யாணம். இங்கதான் கல்யாணம். பெங்காலி முறைதான். அவங்க Brahmins. இருந்தாலும் எங்க வழிப்படியே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க”

“ரொம்ப சந்தோசம்” என்றேன்.

மான்ஹட்டன் apartment ஒன்றில் மடிசாருடன் மாமியும், ஒரு பெங்காலி மாமாவும் பொங்கல் கொத்சுவுடன்,  ரசகுல்லா சாப்பிடுவதாக காட்சி மனதில் ஓடியது.

“நீங்க பாக்க Brahmin மாதிரி தான் இருக்கீங்க” என்றார்.

நான் பதில் சொல்லும் முன்

“Iyerஆ. Iyengaarஆ. I heard Iyengaars are more orthodox and considered higher than Iyer? Is that true? My Daughter-in-law is Iyengaar” என்று முடித்தார்.

“ரொம்ப சந்தோசம். அவங்க அக்கார வடிசல் செஞ்சு கொடுத்து இருக்காங்களா?” என்றேன்.

சில விஷயங்கள் அமெரிக்காவில் மாறவில்லை என்று தோன்றியது.

விமானம் கீழ் இறங்க, நியூயார்க் நகரம் பனிக் கால வெயிலில் பளீர் என்று விரிந்து “தேடலா?.. வா! வா!  எவ்வளவு இருக்கு இங்கே” என்று வரவேற்றது

Print Friendly
பகிர்ந்து கொள்ள