என் மகளை பார்த்ததுண்டா?

என் மகளை பார்த்ததுண்டா ? 

ந்தும் கழங்கும் சிறிது நேரமே விளையாடிய போதும்

அடிக்கடி வந்து வியர்வை முத்துக்கள் ஒளிர்ந்த நெற்றியோடு

“வலிக்குதும்மா” என்று என்னை இடுப்போடு கட்டிக்கொண்ட

என் மகளை பார்த்ததுண்டா? (அகநானூறு 17)

 

கிளியும், பந்தும், கழங்கும் ரசித்தவள், மாசிலா அன்புடையவள்

மலர்கள் அணிந்த தோழிகளோடு கொலுசு சப்திக்க ஆடியவள்

பசுவும் கன்றும் போல மடியில் சாய்த்து வருடிக் கொடுத்த

என் மகளை பார்த்ததுண்டா?  (அகநானூறு 49)

 

காலில் அணிந்த கொலுசு அதிர பந்து விளையாடிய பின்

பொன் கிண்ணத்தில் பகன்றை மலர் போன்ற வெண்மையான பாலை

“எனக்கு ஒரு வாய், தந்தைக்கு ஒரு வாய்” என்று நான் ஊட்டிய

என் மகளை பார்த்ததுண்டா? ( அகநானூறு 219)

 

******************

தன் முன்னால் இருந்த சீரியல் (cereal) மிதந்த பால் பாத்திரத்தை வெறித்து பார்த்தபடி, கால் இரண்டையும் வயிற்றோடு அழுத்தி கையால் கட்டிக்கொண்டு சேரில் உட்கார்ந்திருந்தாள் ஹரிதா.

மணி ஆறு கூட ஆகவில்லை. ஆனால் இருள் கவிழ்ந்து இரண்டு மணி நேரம் ஆகிறது.

வெளியே பனி விழுந்து கொண்டிருப்பது தெரு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. மஞ்ச நிற ஒளியில், அவை தங்க பொட்டுகளாய் உதிர்ந்து காற்றில் அங்கும் இங்கும் அலை பாய்ந்து தரையில் விழுந்ததன.

குளிர்.

வீட்டின் உள்ளேயும் காலை தரையில் வைக்க முடியாதபடி சிலிரேன்றது.

மாதத்தின் மூன்று நாளில் வரும் வயிற்று வலியும் சேர்ந்து கொண்டது.

காலையிலும் இதே சீரியலை சாப்பிட்டு விட்டு படுத்தவள் தூக்கமும் வலியுமாய் மாலை வரை அழுந்திக் கிடந்தாள்.

தூக்கம் முடித்து படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளை, பசி எழுப்பி சமையல் அறைக்கு துரத்தி விட்டது.

அமெரிக்காவுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும், இன்னும் தனியே சமைக்க கை வரவில்லை.

உணவு எதுவும் இல்லாத மேஜை, வீட்டில் கூட வசிக்கும் பெண்கள் யாரும்  இன்னும் வரவில்லை என்பதை காட்டியது.

வந்த புதிதில் எல்லாம் மலைப்பாய்  இருக்க, முதல் முதலாய் வீட்டை விட்டு வெளியே வசிக்கும் சுதந்திரம் இனிக்க, முதல் முப்பது நாட்கள் ஓடிப் போயின.

பின் பனிக் காலம் தொடங்கியது.

சூரியன் எட்டு மணிக்கு தலை காட்டி விட்டு, நாலு மணிக்கே ஒளிந்து கொள்ள தொடங்கினான். வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிக்கு நடந்து செல்வதே கஷ்டமாகிவிட,  சுருண்டு படுத்துக் கொள்ள மட்டுமே ஞாயிறு என்றாகி விட்டது.

வலி சற்று குறைந்தது போல் இருந்தது. மீண்டும் பசி தூண்ட சாப்பிட ஆரம்பித்தாள்.

முதல் வாய் வாய்க்குள் சென்றதும் தொண்டையில் அடைத்துக் கொண்டது. பழைய பால் வாடை வேறு மூக்கை துளைக்க, சாப்பிடுவதை நிறுத்தி விட்டு போனைக் கையில் எடுத்தாள்.

திரையில் அம்மாவும் அவளும் முறைத்துக் கொண்டு நின்ற படம் மிளிர்ந்தது.

*************

“ஹரிதா.. டின்னெர் ரெடி. கீழே வா.. எத்தனை தடவ கூப்பிடறது.” மூன்றாவது முறை உயர்ந்த லலிதாவின் குரலுக்கும் பதில் வரவில்லை.

பெங்களுரின் ஏழு மணி இரவு சத்தமாய் இயங்கிக் கொண்டிருந்தது.

பக்கத்து கோயிலின் ஸ்பீக்கர் சிவனைத் துதிக்க, வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் கூச்சல் பலத்து ஒலித்தது. தெரு நாய்கள் ஒரே நேரத்தில் பசியில் குரைத்தன.

காதில் ஹெட்செட் மாட்டியபடி இறங்கிய ஹரிதா “ஏன் இப்படி சத்தம் போடறிங்கம்மா? படிக்க வேண்டாமா?”

“காதுக்குள்ளே அடைச்சுக்கிட்டு பாட்டு கேட்டுட்டே என்ன படிப்பு?..சாப்பிட்டு போய் என்னவும் பண்ணு”

மேஜையில் அவளுடைய வெள்ளி ப்ளேட்டில், மூன்று வெள்ளிக் கிண்ணங்கள்.

ராகியில் செய்த சேவை, இஞ்சி, மிளகாய் தாளித்து மாதுளமும், முந்திரியும் மிதந்த தயிர் சாதம், பருப்பும் தேங்காயும் கலந்து செய்த கீரைச் சுண்டல்.

“அம்மா.. எனக்கு இதெல்லாம் வேண்டாம். தோசை போடு. இல்லாட்டா நான் cereal சாப்பிட்டப் போறேன்”

“விளையாடறயா.. மூணு நேரமும் தோசை சாப்பிட முடியாது. மாவெல்லாம் இல்ல. இந்த மூணு நாளும் ராகியும், கீரையும் சாப்பிட்டாதான் நல்லது. பேசாம சாப்பிடு”

“முடியாது..எப்போதும் நீங்க சொல்றதயே நான் ஏன் கேட்கணும்?” ஹரிதா அழுகையின் ஆரம்பத்தில் குரல் உயர்த்தினாள்.

“இன்னும் ஆறு மாசம். அப்புறம் படிக்க எந்த ஊர்லேயோ போயி குளிர்லே தனியா கிடந்து மூணு நேரமும் cereal சாப்பிட்டுக்கோ. இப்ப இதுதான்” தன் அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள் லலிதா.

ஹரிதாவும் தரை அதிர மாடிக்கு ஓடியது கேட்டது.

இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்த லலிதா, டேபிளில் அப்படியே இருந்த உணவை பிரிட்ஜ்க்குள் வைத்து மூடினாள்.

ஹரிதா  cereal சாப்பிட்ட கிண்ணம், சமையல் அறையின் அங்கணத்தில் (kitchen sink) கழுவி வைக்கப் பட்டிருந்தது. .

************

ஐந்து மணிக்கெல்லாம் துணையைத் தேடும் பூனையின் அழு குரலில் எழுந்து விட்டாள் லலிதா.

எல்லோருமே ஊரைக் காலி செய்து விட்டு போய் விட்டது போல் கல்லென்று அமைதியாய் இருந்தது.

இருளும் பனியும் இன்னும் விலகாமல், புகை படர்ந்து இருந்தது. வெளியில். பறவைகளின் குரல்கள் கூட இன்னும் ஒலிக்க ஆரம்பிக்கவில்லை.

பழகிய கால்கள், அவளை ஹரிதாவின் அறைக்குள் இழுத்துச் சென்றன.

அவளுக்குமே மட்டுமே தெரிந்த மகளின் மணம் நாசியை நிறைத்தது.  எல்லாம் அந்த அந்த இடத்தில் இருக்க, துடைத்து விட்டது போல் இருந்தது அவள் படிக்க பயன்படுத்திய மேஜை.

பல வருடங்கள் ஹரிதாவுடனேயே படுத்து தூங்கிய ஒரு பெண் குழந்தை பொம்மை, வெகு நாள்கள் கழித்து வாஷிங் இயந்திரத்தில் குளிப்பாட்டப்பட்டு புது மணத்துடன் படுக்கையில் கிடந்தது.

அதனுடைய உடையும் கூட  சமீபத்தில் புதிதாய் மாற்றப்பட்டு இருக்க வேண்டும்.

அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு, அதை மடியில் போட்டு படுக்கையின் கீழே சாய்ந்து உட்கார்ந்தாள்.

கை பேசியை எடுத்தவுடன் அவளும் மகளும் முறைத்துக் கொண்டு நிற்கும் படம் திரையில் ஒளிர்ந்தது.

***********

கடையில் இருந்து வாங்கி வந்த பொருட்கள் இரண்டு கையிலும் அழுத்த, கதவை திறக்க முடியாமல் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் லலிதா.

டிவியில் மூழ்கி இருந்த ஹரிதா கண்ணை அகற்றவில்லை.

“ஏய்ய்..  அம்மா கஷ்டப்பட்டு தூக்கிட்டு வரேன் இல்ல. எழுந்து வாங்கினா என்ன” என்று குரல் கொடுக்க

“ஓ.. சாரிம்மா. பாக்கலே” என்று வந்து வாங்கினாள் ஹரிதா.

மேலே சென்று ஹரிதா அறைக்குள் அவளுக்கு வாங்கிய உடையை வைக்க சென்றவள் “ஹரிதா… இங்க உடனே வா”

“என்னம்மா.. “ என்று எரிச்சலுடன் மேலே சென்ற ஹரிதாவுக்கு அர்ச்சனை ஆரம்பித்தது.

“ஸ்கூல்லேந்து வந்த உடனே uniform கூட கழட்டாம, டிவியா?. ரூம் எப்படி கிடக்கு பாரு!. பை ஒரு பக்கம். புஸ்தகம் எல்லாம் இன்னொரு பக்கம். காலைலே குளிச்சுட்டு போனியான்னு கூட தெரியல. துண்டு சுருட்டி ஒரு மூலைலே. அழுக்கு துணி தரையிலே!. ஒரு மணி நேரத்திலே ரூமைக் சுத்தம் பண்ணி, குளிச்சுட்டு கீழே வரணும்”

பாதி பேச்சைக் கூட காதில் வாங்கவில்லை ஹரிதா.

“சரியான லேடி ஹிட்லர்.” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.

“என்ன சொன்ன?”

“ஒன்னும் இல்லம்மா. Missed you Too”

துண்டால் அடிக்க வந்த அம்மாவிடமிருந்து விலகி குளியறைக்குள் ஓடினாள்.

“இந்த சுத்தத்துக்கு, நீ படிக்க போகும் போது உன்னை ஒருத்தரும் ரூம் மேட்டா சேர்த்துக்க மாட்டாங்க பாரு”

*******

“அம்மா இன்னும் தூங்கிட்டு இருப்பாங்க” என்று மகளும், “ஞாயிற்றுக் கிழமை, பிரண்ட்ஸ் கூட எங்கேயாவது போயிருப்பா என்று தாயும் போனைக் கையில் வைத்த படி மணித்துளிகள் கடந்தன.

ஹரிதா facetimeல், அம்மாவை அழைத்தாள்.

முதல் மணி அழைப்பிலேயே, தொடர்பு ஏற்பட்டது.

“எப்படி இருக்கே ஹரிது குட்டி” என்று முகம் மலர்ந்த அம்மாவை பார்த்ததும் குரல் அடைத்தது.

“ரொம்ப பசிக்குதுமா. ஒரே குளிரு. வயித்து வலி வேற. உன் மடியிலே கொஞ்ச நேரம் படுத்துக்கறேன். எனக்கு கொஞ்சம் தயிர் சாதம் ஊட்டி விடறயா?” என்று கண்கள் மட்டும் பேசின.

“நான் ரொம்ப நல்ல இருக்கேம்மா” என்றது வாய்.

மகளின் கண்களிலேயே வலியும், பசியும் தெரிந்து விட்டது அம்மாவுக்கு.

“அதுக்குள்ளே வந்துடுத்தாடா?. ரொம்ப வலிக்குதா? தண்ணி நிறைய குடிக்கறயா?”

தன் கண்கள் கலங்கியிருப்பது தெரியாமல் இருக்க, கமராவைத் திருப்பி “உன் ரூம் எப்படி கிளீனா இருக்கு பாத்தியா” என்று காட்டினாள்.

“ஏய் not fair.. அது என்னோட பொம்மை” என்று மகளும் விம்மலை அடக்கி சிரிக்க முயன்று கமராவைத் திருப்பினாள்.

*******

மகள் இருக்கும் ஊருக்கே அவளுடன் படித்த பையன் ஒருவன் போகிறான் என்று தெரிந்து கொண்டு, அடுத்த வாரம் முழுவதும்  ஊறுகாயும், முறுக்கும், பொடியும் செய்து, ஒரு பெட்டி முழுவதும் அடைத்து அனுப்பினாள் லலிதா.

“ரொம்ப தேங்க்ஸ் பா. இந்தா. உனக்கு தனியா ஒரு கவர்ல போட்டு வச்சுருக்கேன்” என்று கொடுத்தாள்.

சில வருடங்களுக்குப் பின் அந்த பையனும், அவள் பெண்ணும் நட்பாகி, பின் காதலித்து, ஊர் கூடி கல்யாணம் செய்து கொண்டது ஒரு தனிக் கதை.

*******

இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய சங்க கால தமிழ் நாகரிகத்தில் இருந்து எல்லாமும் மாறி விட்டாலும், தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவு மட்டும் மாறவே இல்லை.

மகளை தன் கண்ணுக்குள்ளேயே வைத்து வளர்க்கும் அம்மாக்கள் இன்று போல் அன்றும் இருந்திருக்கிறார்கள்.

பிரிந்து செல்லும் மகளை நினைத்து வருந்தும் அற்புதமான பாடல்கள் சங்க இலக்கியத்தில் நிறைந்து கிடைக்கின்றன.

***********

அம்மா, அப்பா ஒரு செல்ல மகள்.

யாயே கண்ணினும் கடுங்காதலளே
எந்தையும் நிலன் உரப் பொறாஅன் சீறடி சிவப்ப
எவன் இல குறுமகள் இயங்குதி என்னும்
(அகநானூறு 12)

தன் கண்ணை விட மகளை காதலிப்பாள் தாய்.

“எங்கே போறேம்மா! கால் சிவந்து போச்சு பாரு” என்று

தன் மகளின் கால் தரையில் பட பொறுக்காதவன் தந்தை

*********

மகள் வளர்ந்து பெரியவளாகிறாள். தாயின் கண்டிப்பு இப்போது கடுமையாகிறது.

முலை முகம் செய்தன முள் எயிறு இலங்கின
தலை முடி சான்று தண் தழை உடையை
பேதை அல்லை மேதை அம் குறுமகள்
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து என

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் (அகநானூறு 7)

நீ வளர்ந்து விட்டாய் என் மகளே

உன் மார்பகங்கள் பெரிதாகி விட்டன

உன் பற்கள் ஒளி பெற்று மிளிர்கின்றன

உன் முடி நீண்டு வளர்ந்து விட்டது.

குழந்தை அல்ல நீ இனி குமரி

சொல்லாமல் தோழிகளோடு ஊர் சுற்றாதே..

****************

வளர்ந்த மகள் வீட்டை விட்டு பிரிந்து செல்கிறாள். அவள் என்ன சாப்பிடுவாள் என்று கவலைப்படுகிறாள் தாய்.

யாங்கு வல்லுநள் கொல் தானே ஏந்திய
செம்பொன் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்

அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய (குறுந்தொகை 356)

அவளுக்கு எப்படி எவ்வளவு தைரியம் வந்தது?

பொன் கிண்ணத்தில் சுவையான பொரி கலந்த பாலை

நானே ஊட்டி விட்டாலும் “போதும்மா” என்று பிகு செய்பவள்

கோடையின் வெய்யிலில் காய்ந்து போன குளத்தின் ஓரத்தில்

சூடான மண் கலங்கிய தண்ணிரைக் குடிக்கிறாள்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே Cereal சாப்பிட்டு வளர்ந்த மகள் 😊

************

அவள் இல்லாத வீடு வெறிச்சென்று இருக்கிறது.

இது என் பாவை பாவை

இது என் அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்

பைங்கிளி எடுத்த பைங்கிளி

என்றிவை காண்தொறும் காண்தொறும் கலங்க

நீங்கினளோ என் பூங்கணோளே (ஐந்குறுனூறு 375)

 

இது என் பொம்மிக் குட்டி வைத்து விளையாடிய பொம்மை

இதோ என் அழகிய நெற்றி உடைய பைங்கிளி வளர்த்த கிளி

பார்க்க பார்க்க என் கண் கலங்குகிறது

பூப் போன்ற கண் உடைய மகள் என்னோடு இல்லை

 ***************

மகளுடன் போய் இருந்து அவளுக்கு சமைத்து போடப் போகிறேன் என்று புறப்பட்டு போகிறாள்.

விலங்குகள் கூட குழம்பிப் போகும் சிறு பாதையில் சென்று, மலையின் நடுவே உள்ள சிறிய ஊரில், நொச்சி மரம் அருகே வளர்ந்து இருக்கும் வீட்டில் மகளுடன் இருந்து உணவு படைக்கும் இந்த அம்மாக்களை நாம் இப்போதும் பார்க்கலாம்.

 மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே. (அகநானூறு 203)

 ஏர் இந்தியாவின் கால் நீட்ட முடியாத இருக்கையில்

இருபத்து நாலு மணி நேர பயணம் என்றாலும் செல்வேன்.

இலை உதிர்ந்த மரங்கள் சூழ்ந்து பனி படர்ந்த ஊரில்

தனியே வீட்டில் குளிர் உருக்கும் என்றாலும் பரவாயில்லை

மகளுக்கும் அவள் மகளுக்கும், சுவையான உணவு செய்து ஊட்டுவேன்

*******************

இரண்டாயிரம் வருடங்களில் இன்னொன்றும் மாறவில்லை.

மேல் படிப்புக்கோ, திருமணம் செய்து கொண்ட பின்போ, வீட்டை விட்டு பிரிந்து செல்லும் மகளை எண்ணி உருகும் அப்பாக்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

அப்போது போல் இப்போதும் அவர்கள் அதை அதிகமாய் காட்டிக் கொள்வதில்லை.

அதனால் சங்க காலம் போல் தற்கால இலக்கியங்களிலும் அவை பதிவு பெறுவதில்லை.

ஏர் இந்தியாவின் அதே விமானங்களில் அவர்களையும் நீங்கள் பார்க்கலாம்.

 

Print Friendly
பகிர்ந்து கொள்ள