ஏழேழ் பிறவிக்கும்

“அந்தப் பொண்ணு ஜானுகிட்டே என்ன சொல்லித் தொலைச்சே.. ஓ….ன்னு பாத்ரூம்லே அழுதுண்டுருக்கா?”

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் ஒரு அழகிய பெண் என் சென்னை ஆபிஸ் Cube முன் வந்து கோபம் கொப்பளிக்க கேட்டதுக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று சொல்வதற்கு முன், என் பிரதாபங்களை கேட்டு விடுங்கள்.

அமெரிக்காவில் ஒரு நல்ல கல்லூரியில் MBA படித்து விட்டு நான் சேர்ந்த கம்பனியில் உடனேயே ஒரு டீம் மானேஜராக பதவி கிடைத்தது.

நிறைய புத்திமதிகள் சொல்லப்பட்டன. முக்கியமாக வேலைக்கு ஆள் எடுக்கும் போதும், நமது டீமில் வேலை செய்பவர்களிடமும் எதைக் கேட்கக் கூடாது, எதைப் பேசலாம் என்று பல விதிகள்.

முக்கியமாக பெண்களிடம் அவர்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா?, குழந்தைகள் உண்டா என்ற கேள்விகள் கண்டிப்பாக கேட்க கூடாது என்று பல முறை வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த போதே, இந்தியாவில் அதன் கிளை ஒன்றில் ஒரு டீம் லீடராக நான் ஒரு ஆறு மாத காலத்துக்கு அனுப்பப்பட்டேன்.

அதே போல் மற்றொரு டீமுக்கு என்னைக் கேள்வி கேட்ட அந்தப் பெண்ணும்.

******

“யாரு ஜானு?.. நான் பொண்ணுங்க பேரல்லாம் ஞாபகம் வெச்சுக்கறதில்ல”

முறைப்பு பல மடங்கு அதிகரித்தது.

“ம்ம்.. நல்ல நடி…அண்ணா நகர்லேந்து புடவை மட்டுமே தினசரி கட்டிண்டு வராளே.. அந்த ஜானகி. ”

“ஓ.. அவங்களா.. ஒன்னும் பெரிசா சொல்லலே. ரெண்டு மூணு நாளா வேலைக்கு லேட்டா வந்துட்டு, சீக்கிரம் போனா.. சனி, ஞாயிறு டீம் வேலை செஞ்சுது. அவ வரல. “How was your weekend? Did you enjoy the weather. “ அப்படின்னு நல்லபடியா கேட்டுட்டு நிறைய உங்க வேலை பாக்கி இருக்கு. Rest of the team is complaining. எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து முடிச்சு கொடுத்துட்டு போங்கன்னு மரியாதையாவே சொன்னேன்”

“ஏன் லேட்டா வந்தான்னு கேட்டியா?.. அவளுக்கு கல்யாணம் ஆயி கொஞ்ச நாள்தான் ஆகியிருக்கு. அவ husband ஹாஸ்பிடல்ல இருக்காருன்னு தெரியுமா?

எனக்கு தெரியாது என்பதை விட எனக்கு ஏன் இதெல்லாம் தெரியனும். அவங்க தானே சொல்லி இருக்கணும் என்று கோபம் ஜானகி மேலேயே வந்தது.

“ஏய்.. லூசா நீ.. நான் எப்படி அவகிட்ட இதெல்லாம் பத்தி பேச முடியும்.. அவ சொல்லி இருக்கலாம் தானே.. அத விட்டுட்டு லேடீஸ் பாத்ரூம்லே அழுதா நான் அங்க உள்ள போயா சமாதானம் பண்ண முடியும்? “

இதுவரை நின்று பேசியவள், என் சேரை பின்னுக்கு தள்ளி விட்டு, மேஜையில் ஏறி அமர்ந்தாள்.

கோபம்.. ஏறி அமர்ந்த வேகம். மேஜைக்கு வலித்திருக்கும்.

“உன் அமெரிக்கா ட்ரைனிங் எல்லாம் தப்பா புரிஞ்சுண்டு இருக்கே.. எப்போதும் இந்த கம்பனியே உன் தலைலே தான் நடக்கறதுன்னு முறைப்பா சுத்திண்டு இருந்தா, யார் உங்கிட்ட வந்து வேலையைத் தவிர ஏதேனும் பேசுவா?.. நான் சொல்றத கேளு.. இங்க இருக்கற வரைக்கும் எல்லார்கிட்டயும் அவங்க யாரு, அப்பா அம்மா நல்லா இருக்காங்களா? எத்தனை குழந்தைங்கன்னு கேளு.. சும்மா weather, கிரிக்கெட்ன்னு வெட்டிப் பேசு பேசாதே.. அப்புறம் பாரு எப்படி மாஞ்சு மாஞ்சு வேலை செய்யறாங்கன்னு?”

நான் எக்க்ச்சக்க பீஸ் கட்டி international finance, business, swap, call, put அப்படின்னு படிச்சப்போ கிடைக்காத பாடம் அன்று கிடைத்தது.

அதன் பின், முடிந்த வரை நான் வேலை செய்ய எல்லா இடங்களிலும் (அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ) இதைக் கடைபிடித்தேன்.

*******

கம்ப ராமாயணம் சமீபத்தில் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

அதில் கம்பர் ராமனின் ஆளுமையை பற்றிச் சொல்லும்போது

எதிர்வரும் அவர்களை, எமையுடை இறைவன்,

முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிர

எதுவினை? இடர் இலை ? இனிது தும் மனையும்?

மதிதரு குமரரும் வலியர்கொல்?

இராமர் தான் பார்த்தவரிடத்தில் எல்லாம் உண்மையான கருணையுடனும், மலர்ந்த முகத்துடனும் “நல்லா இருக்கீங்களா? என்ன வேலையா வந்தீங்க? பிரச்சினை ஒன்னும் இல்லையே? வீட்டுலே மனைவி/கணவன் நல்லா இருக்காங்களா? பையங்க நல்லா படிக்கறாங்களா” என்று கேட்பார் என்கிறார்.

நல்ல தலைவனுக்கு, மன்னனுக்கு அழகு என்ன என்பதை ஆயிரம் ஆண்டுகள் முன்பே சொல்லி விட்டது தமிழ்.

ஒழுங்கா கம்ப ராமாயணம் படிச்சு இருந்தா ஒரு பொண்ணை தனியா அழ விட்ட பாவம் கிடைச்சு இருக்காது.

ஒரு அழகான பொண்ணுகிட்ட திட்டு வாங்கி இருக்க மாட்டேன்.

*******

பி. கு. அன்னிக்கு மட்டும் இல்லாம, ஏழேழ் ஏழேழ் பிறவிக்கும் அந்த பொண்ணுக்கிட்ட திட்டு வாங்கப் போறேன்னு அப்ப தெரியல..

அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பிறகுதான் தெரிஞ்சுது.

 

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள