ஒரு மரணமும் பனங் கற்கண்டு பாலும்

ஒரு நெருங்கிய உறவினரின் மரணம்.

எட்டு மணி நேர கார் பயணம். மதுரைக்கும் தெற்கே ஒரு கிராமத்துக்கு போய் சேர்ந்தேன்.

அனுபவித்து வாழ்ந்து முடித்த வயதானவரின் மரணம்தான்.

இருந்தாலும் அவர்,

விட்டுச் செல்லும் துயரம் தோய்ந்த ஒரு அக்காவுக்கும் அண்ணனுக்கும் தம்பி, மகனுக்கும் மகளுக்கும் தந்தை, மனைவியின் கணவன், தம்பியின் அண்ணன்.

ஐஸ் பெட்டிக்குள் உடம்பு

பெட்டியின் உள்ளே வெண்மையான பூவால் ஆன மாலை போல்  தண்ணீர் காலின் கீழ் பனியாய் உறைந்து கிடந்தது.

ஒடுங்கிய தேகம் பத்து சதவிகித இடத்தை நிரப்ப, மீதிப் பெட்டியில் வெற்றிடம்.

நகரம் போல் இல்லாமல் கிராமத்து வீட்டில் ஏகப்பட்ட மனிதர்கள்.

இரவு முழுவதும் தூங்காமல் முழித்திருந்தனர்.

கூடப் பிறந்த முகங்களில் தம்மில் முதலாய் ஒருவரை இழந்த வலி.

காபியும் டீயும் கொடுத்துக் கொண்டே இருந்த ஒரு இளம் பெண். லேசாய் மேடிட்ட வயிறு. மரணத்தின் அருகில் பிறப்பின் நினைப்பு.

வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பெரிசுகள். இன்றைய அரசியலும் விவசாய பிரச்சினைகளும் அலசப்பட்டன.

“ கிடந்து கஷ்ட படப் போறாரோன்னு பயந்தோம்….”

மரணம் தான் ஒரு பலம் மிக்க ctrl+alt+del. சர்வ ரோக நிவாரணி.

பெட்டியை சுற்றி பெண்கள். சில கலங்கிய கண்கள்.

துக்கம் மறைந்து  சில முகங்கள் தூக்கத்தை தேடின.

வீட்டின் வெளியே வேலைக்கு வந்திருந்த ஆட்கள், உள்ளூர் மனிதர்களுடன் சேர்ந்து ரம்மி ஆடிக் கொண்டிருந்தனர்.

“என்னப்பா சீக்கிரம் தூக்கிருவாங்கல்லே.. அமெரிக்கா மக வர வரைக்கும் வைக்க மாட்டாங்களே?”

இவ்வளவுதான் வாழ்க்கையா?

காலி ஐஸ் பெட்டியும், ரம்மியும், டீ, காபியும்,  வைத்து எரிக்க அவசரமும்..

இறுதியில் மரணம், வாழ்வின் வலியின் அறுதி மருந்தா?

அதுதான் உண்மை என்றால் வாழ்வது அர்த்தம் இழந்து விடாதா?

திரும்பி காரில் தனியாய் பயணம்.

பயணம் முழுவதும் மனம் வெறித்து அரற்றியது – “இவ்வளவுதானா.. இவ்வளவுதானா?”

இரவு முழுவதும் கண் முழித்தும் பகலில் தூக்கம் வரவில்லை.

சேலம் தாண்டி தொப்பூர்.

உச்சி வெயில்.

கோடையின் வெப்பத்தில் வழியெங்கும் சாலையில் கானல் குளங்கள் நிரம்பி வழிந்தன.

“சார் சாப்பிடலாம் சார்” என்றார் டிரைவர்..

முந்திய இரவு சாப்பிட்டது. பசியின் நினைவு இப்போதுதான் வந்தது.

ஹைவே ஹோட்டல். இது வரை சாப்பிட்டிராத ஏதோ ஒன்று.

“என்னப்பா இருக்கு?”

“ராகி பூரி, கம்பு பூரி, அப்புறம் பல வகை millet தோசை இருக்கு சார்”

ஒரு ராகி பூரியும், ஒரு கம்பு தோசையும் சாப்பிட்டேன். இதுவரை அறியாத சுவையாய் உள் இறங்கியது.

“குடிக்க என்ன இருக்குப்பா?”

“பனங்கற்கண்டு பால் சாப்பிடுங்க சார். நிறய travel பண்ணியிருப்பிங்க போல. சூட்டுக்கு நல்லது” எஙகோ ஒரு ஊரில் முகம் தெரியாதவனின் கரிசனம். வியாபாரமாய் தோன்றவில்லை.

கொஞ்சமாய் மிளகும், மஞ்சளும், சரியான அளவில் திகட்டாதா இனிப்பும் கலந்து, கட்டியான நல்ல பால்.

நடுத் தமிழ் நாட்டில் ஒரு சிறிய ஊரில் இருந்த இந்த ஹோட்டலில் வடக்கத்திய இசை.

நஸ்ரத் படே அலி கான் பாடிக் கொண்டிருந்தார். எல்லா சுருதியிலும் பிசிறின்றி சஞ்சாரித்த குரல்.

இனிய இசையும், ருசியான உணவும், பருகிய பாலும் மனதை கொஞ்சம் ஆற்றின.

பில் கொடுக்கும் போது கேட்டேன் “இது யார் பாடறா தெரியுமா?”

நெற்றியில் சந்தனம். ஏதோ ஒரு கோயிலுக்கு மாலை போட்டிருந்தான்.

“தெரியாது சார். ஆனா sufi சாங்ஸ் collection எனக்குப் பிடிக்கும்”.

வெளியே வரும் போது என் மனைவியிடம் இருந்து போன்.

“Did you eat something? A2Bலே ஏதாவது சாப்பிடறதுதானே? Did you get some rest இல்ல போக வர Phone ஆ?”

இருபது வருட உறவில் கிடைக்கும் புரிதல்.

வெளிப்படையாய் தெரியும் கண்டிப்பில் மறைந்து இருக்கும் கனிவு.

போன் வாங்கி என் மகள் “எப்பப்பா வரீங்க “ என்று அதிசயமாய் தமிழில் கேட்டாள். உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது.

காரில் ஏறியவுடன் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் .” சின்ன வயது சௌம்யாவின் குரலில் பாரதி.

வாழ்க்கையின் அர்த்தம் பெரும் பகுதி காலியாய் கிடக்கும் ஐஸ் பெட்டியில் இல்லை என்று தோன்றியது. .

கூடி மகிழ்ந்து வாழ்ந்து, பின்  விட்டு செல்லும் உறவின் நினைவுகளும், ரசித்து புசித்த உணவும், கேட்டு மகிழ்ந்த இசையும், கண்டு களித்த இயற்கையும், சேர்ந்து சிரித்த நட்பும், எழுதியதை, படித்ததை share செய்து ரசித்த தமிழும்…

பகிர்ந்து கொடுத்து விட்டு குறையாமல் நாமும் எடுத்துக் கொண்டு போகும் நம் பங்கு நினைவுகளும், அனுபவங்களும் நிரப்பியது தான் அந்த பெட்டியோ?

அதை நிரப்புவதோ, இல்லை தனியாய் பெட்டியில் உறைந்து மறைவதோ நம் கையில் தானோ?

“காலா உன்னை நான் சிறு புல் என மதிக்கிறேன்” சௌம்யாவின்  குரலில் பாரதி வாழ்வின் பிடிப்பை உணர்த்தினார்.

பாடல் முழுவதும் கேட்டு முடிந்ததும் வயிறும், மனமும் நிரம்பி இருந்தது.

கண் சொருகியது.

கனவில் சிவாஜி வடிவில் இருந்த பாரதியுடன் “சிந்து நதியின் மிசை நிலவினில்” படகில் போய்க் கொண்டே பனங்கற்கண்டு பால் குடித்தேன்.

“பெரிதினும் பெரிது கேளடா.

பராசக்தி எல்லா சுவையும் கொடுப்பாள்.

நேசங்களுடன் ரசித்து வாழ்ந்திடு.

மரணத்தை எளிதாய் கடப்பாய்”. என்றான் பாரதி.

பெங்களூர் வந்து தான் கண் முழித்தேன்.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

1 thought on “ஒரு மரணமும் பனங் கற்கண்டு பாலும்”

  1. துயில்எழுவது போல் பிறப்பு,துயில்வது போல் இறப்பு –இது ஒரு கவிஞரின் கூற்று. அன்று என் உடன் பிறப்பின் எறியூட்டுதல் நிகழ்ச்சி மயானத்தில் நடைபெறுகிறது
    அதில் ஒன்று வாய்க்கரிசி போடுவது.நான் அவரின் ஒளி இழந்த முகத்தைபார்க்கிறேன்.சில நினைவுகள் என் மனதில் சிறகடித்தது.சிறுவர்களாய் நாங்கள் ஆடி மகிழ்ந்தது,பள்ளிக்கு என்னை சைக்கிளில் அழைத்து சென்றது இனிவரும் ஒரே அறையில் தங்கி பயின்றது நான் தூங்கிவிட்டால்
    என்னை எழுப்பி பால் ஆற்றிகொடுப்பது,பின்னர் தொழிற்படிப்பை முடித்து அவர் விவசாயஅதிகாரியாகி நான்மருத்துவராகி இருவரும் ஒரே வீட்டில்தங்கி என்னை scooter ல் தினம்என் கிளினிக்கில் drop செய்தது,பின் நான் கோவை சென்றபின் என்னை பார்க்க வரும்போது கடலை மிட்டாய் வாங்கி வருவது என எண்ணங்களுடன் நான் அந்த அரிசியை அவர் வாயில் போட்ட போது கதறி அழுதேன்.சுற்றி இருந்த கூட்டம் , தினம் மரணத்தை காணும் மருத்துவர்கூட இப்படி அழலாமா என்று கூட எண்ணியிருக்கலாம்.அதுதான் உடன்பிறந்த இரத்தபாசம்!! மரணத்தை யாராலும் வெல்லமுடியாது , அது தானே வாழ்வியலின் தத்துவம்

Leave a Reply