குமுதவல்லி

அல்லியின் அழகிய முகம் கோபத்தில் சிவந்து பொரித்தது. .

பேயாழ்வாரின் பாசுரங்களை வாய்தான் முனுமுனுத்து கொண்டிருந்தது.

தான் நின்று கொண்டிருப்பது, பெருமாளின் முன்னால் என்பது கூட அவளை சாந்தப்படுத்த முடியவில்லை.

தினமும் உச்சி கால பூஜைக்கு அவளும். உண்டக்கட்டி வாங்க வரும் சிலருமே இருப்பார்கள்.

இன்று ஏதோ படைத் தளபதி வருகிறார் என்று பூஜையை பட்டர் தாமதப்படுத்திக் கொண்டிருந்தார்.

“விஜயாலயச் சோழ மகராஜாவுக்கு வயசாகி விட்டது. அவர் கட்டுபாட்டில் நாடு இருந்தால் இப்படி இருக்குமா?” என்று வாய் விட்டே சொல்லி விட்டு அக்கம் பக்கம் ஒற்றர் போல் யாரும் இல்லையே என்று பார்த்துக் கொண்டாள்.

விஜயாலயச் சோழன் தஞ்சை முத்தரையர்களை வென்று சோழ சிற்றரசை சற்றே பெரிதாக்கி இருந்தார்.

அதன் பின் பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடுவில் சோழ நாடு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

சோழர்கள் பல்லவருக்கு போர்களில் உதவினார்.

ஒரு தடவை பாண்டியர் வெற்றி. இன்னொரு தடவை பல்லவர்.

இதில் சோழ நாட்டின் வளம் குன்றித்தான் போய் விட்டது.

“யாரையா வருகிறார்?” தன் பக்கத்தில் இருந்த பெரிசைக் கேட்டாள் அல்லி.

“உனக்கு விஷயமே தெரியாதா?. மண்ணியாற்றங்கரை திருப்புறம்பயம் போரில் நமது நண்பர் பல்லவ மகாராஜாவுக்கு பெரிய வெற்றி கிட்டி விட்டது. அவரும், கங்க மன்னர் ப்ரித்விபதியும், ஆதித்ய சோழ மகாராஜாவும் சேர்ந்து பாண்டிய வரகுணனை ஓட ஓட தோற்கடித்து விட்டனர்.”

“அப்படியா.. அதனால் சோழ நாட்டுக்கு என்ன லாபம்?”

“இதில நஷ்டம் பல்லவ சாம்ராஜ்யத்துக்குதான். வெற்றிக்கு உதவியதற்கு விலையாக. சோழ நாட்டுக்கு பல்லவ சாம்ராஜ்யத்தின் பாதி கிடைத்து விட்டது”

“அது கிடக்கட்டும். இங்கு யார் வருகிறார்கள்.. ?“

“சோழ நாட்டு படை தளபதி முத்தரையன் வருகிறார். இந்தப் பக்கத்து கிராமங்களை அவர் போரில் காட்டிய வீரத்துக்கு பரிசாகக் கொடுத்து அவரைக் குறுநில மன்னனாக ஆக்கி விட்டார் ஆதித்ய மகாராஜா..”

பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் போய்க் கொண்டே இருந்தது.

அல்லி உணவுக்காக தன் வீட்டில் காத்துக் கிடக்கும் வயோதிகர்களை நினைத்து கவலை கொண்டாள்.

*

அல்லி அழகிய அறிவுக் குவியல்.

தமிழ் சங்க இலக்கியம் முழுவதும் கரைத்துக் குடித்திருந்தாள்.

அதை விட முக்கியம் அவளிடம் இருந்த சமுதாய அக்கறை.

சண்டைகளினால் கால் இழந்த, கை இழந்த வயதான வீரர்கள், சண்டையில் எல்லவற்றையும் பறி கொடுத்து வயோதிகத்தினால் வேலை செய்ய இயலாத முதியவர்கள் பலருக்கு தினமும் ஒரு வேளை உணவு தன் வீட்டிலேயே அளித்து வந்தாள்.

அவள் தந்தையரின் நிலம், வருமானம், அவள் தமிழ் சொல்லிக் கொடுத்து வரும் பணம் – எல்லாவற்றையும் இந்த கைங்கர்யத்திலேயே செலவழித்தாலும், தினம் ஐம்பது பேருக்கு மேல் உணவு கொடுக்கவே சிரமப்பட்டது.

இங்கு உச்சி கால பூஜை முடிந்து பெருமாள் பிரசாதம் வாங்கிய பின்தான் அங்கு போஜனம்.

***

கோயிலுக்குள் ஆரவாரமாய் நுழைந்தனர். வீரர்கள்.

அவர்களின் சத்தம் அல்லியை முகம் சுளிக்க வைத்தது.

அந்தக் கூட்டத்தின் நடுவில் கம்பீர மீசையுடன், கண்களில் குறும்பு கொப்பளிக்க, கன்னத்தில் குழி விழ வந்தவன்தான் முத்தரையன் என்று புரிய அல்லிக்கு நொடிகளே தேவைப்பட்டன.

இதுவரை எந்த ஆண் மகனிடமும் அசையாத தன் மனம் சற்றே ஆடியது அல்லிக்கு நடுக்கத்தை உண்டாக்கியது.

அவனும் அவளைப் பார்த்து விட்டான். வைத்த கண்ணை எடுக்கவில்லை. பக்கத்திலேயே வந்து நின்று கொண்டான்.

அல்லிக்கு அங்கிருந்து சீக்கிரம் அகன்று விட வேண்டும் என்று தோன்றியது.

“பட்டரே.. இன்னும் ஏன் தாமதம்.. என் வழிபாட்டை முதலில் முடித்து பிரசாதம் கொடுத்து அனுப்புங்கள்.”

அவனுக்கோ அவளைப் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.

“பட்டரே.. நான் சில நிவந்தங்கள் அளிக்க வேண்டியிருகிறது. அதை முடித்த பின் ஒரே வழிபாட்டாகச் செய்யுங்கள்.”

அல்லியின் குரல் உயர்ந்தது

“பட்டரே.. நான் ஒரு பாடலைப் பாடப் போகிறேன். அது முடிந்ததும் அதோ உற்சவரின் பாதத்தில் இருக்கும் தாமரை கீழே விழும். அதை எனக்கு கொடுத்து விடுங்கள். நான் போக வேண்டும்”

அல்லி தன் இனிய குரலில் பாட ஆரம்பித்தாள்.

வீங்கு நீரருவி வேங்கட மென்னும்

ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை

விரி கதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி

இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து

மின்னுக் கோடியுடுத்து விளங்கு விற் பூண்டு

நன்னிற மேகம் நின்றது போலப்

பகையணங் காழியும் பால் வெண் சங்கமும்

தகை பெறு தாமரைக் கையினேந்தி

நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு

பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய

செங்கண் நெடியோன் … சிலப்பதிகாரம்.

 

கோயிலே அமைதியாகிப் போனது.

பாட்டு முடிந்ததையோ, தாமரை விழுந்ததையோ, அவள் விரைந்து சென்றதையோ, அதன் பின் நடந்த பூஜைகளையோ, முத்தரையன் பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர, அவன் மனம் அதிலெல்லாம் இல்லை.

அல்லி தாமரையோடு அதைக் கொண்டு போய் விட்டாள்.

*

அல்லி சமையல் கூடத்துக்கும் உணவு கூடத்துக்கும் இடையே ஓடிக் கொண்டிருந்தாள்.

இருபது-இருப்பத்தைந்து பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இன்னும் அதே எண்ணிக்கையில் வெளியே அடுத்த பந்திக்கு காத்துக் கொண்டிருந்தனர்.

இன்று எதிர்பாராமல் கூட்டம் அதிகம்.

அதோடு அவளுக்கு தினமும் வந்து உதவும் தோழியையும் காணவில்லை. அந்த படை தலைவன் வருகையால் தாமதம் வேறு.

சாற்றமுதும், ததியோனமும்தான். கொஞ்சம் ஊறுகாய்.

ஒரு பக்கம் அரிசி கொதித்துக் கொண்டிருக்கிறது. தயிர் சாதமும், ஊறுகாயும் கேட்டு வந்து கொண்டிருந்தன குரல்கள். .

சாதம் வடித்து விட்டு வெளியே வந்த அல்லியை பார்த்து தலை தாழ்த்தி சிரித்த முத்தரையனின் ஒரு கையில் ததியோன்ன கூடை. மறு கையில் ஊறுகாய் ஜாடி. பந்தி பரிமாறிக் கொண்டிருந்தான்.

கோயிலிலேயே அவளைப் பற்றி விசாரித்து விட்டு தனியாய் குதிரை ஏறி வந்து விட்டான் போலும்.

இருவரின். கண்களும் சிரித்துக் கொண்டன.

ஏழேழ் பிறவிக்கும் தொடரும் உறவு போல் முதல் சந்திப்பிலேயே புரிதல்..

“இன்னும் ஒரு பந்தி போட வேண்டும். சீக்கிரம் பரிமாறிவிட்டு, இலை எடுத்து சுத்தம் செய்யுங்கள் படைத் தலைவரே.. வாள் ஏந்திய விரோதியைவிட பசி கொடியது”

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே வேலை நடந்தது.

*

எல்லோரும் சாப்பிட்டு விட்டு சென்ற பின் இரண்டு இலைகளில் உணவு எடுத்துக் கொண்டு ஒரு மர நிழலில் உட்கார்ந்து கொண்டனர்.

“அல்லி…. நான் யார் என்று உனக்கு தெரிந்திருக்கும். வாள் ஏந்தி தலை கொய்ததும், வளையல் அணிந்த பெண்கள் பின்னால் ஓடியதும்  தான் நான் இது வரை செய்தவை. உன்னிடம் என்னைக் கொடுத்து விடும் படி உள்ளுணர்வோ, பெருமாளின் குரலோ – சொல்லிக் கொண்டே இருக்கிறது. என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா””

அல்லி சிரித்து விட்டாள்.

“நாடாள சிறு ராஜ்ஜியம் கிடைத்து விட்டது. அடுத்து பார்த்த முதல் பெண்ணையே ராணியாக்க விருப்பம் வந்து விட்டது உங்களுக்கு “

“இல்லை. அந்த ராஜ்ஜியம் பெரிதென்று இப்போது தோன்றவில்லை. உன்னுடன் இப்படியே வருபவருக்கு உணவளித்து இந்த தோட்டத்திலேயே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது. நீ பாடினாயே ஒரு பாட்டு, அதையெல்லாம் உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை வந்து விட்டது” அவன் கைகள் அவளின் கைகளைப் பற்றிக் கொண்டன.

அல்லி தலை குனிந்து கொண்டாள்.

“நீங்களும், நானும் வேறு குலம். எனக்கு அது பொருட்டல்ல அந்தக் குல வேற்றுமைகளை குப்பையில் போட வேண்டும்…”

அவன் இன்னும் நெருங்கி அவள் கண்களை நோக்கினான்..

“பிறகு என்ன தயக்கம் இன்னும்?”

“எனக்கு ஒரு கனவு. பெரிய கனவு. இன்று நான் செய்வதை பெரிதாகச் செய்ய வேண்டும். தினமும் ஆயிரம் பேருக்கு அன்ன தானம். பசி என்பதே இந்த கோட்டத்தில் இல்லாமால் செய்ய வேண்டும்.. அதற்கு உதவ மனமும், பொருளும் உள்ளவரையே நான் திருமணம் செய்து கொள்வேன்”

முத்தரையன் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.

தன் வாளை உருவி அவள் கையில் வைத்தான்.

“என் வாளின் துணை கொண்டு பகைவர்களும், பணம் கொழுத்தவர்களும் பதுக்கி வைத்த செல்வங்கள் அனைத்தும் உன் காலடியில் கொட்டுவேன். என் வாள் தவழும் உனது இந்த கரங்களே,  இனி ஏழேழ் பிறவிக்கும் நான் தீண்டும் வளையல் அணிந்த கரங்கள் ஆகட்டும்.”

மாலை நேர பூஜைக்கு மாலனின் கோயில் மணி அடிக்க தொடங்கியது. என்றைக்கும் இல்லாமல் ஓங்கி ஓங்கி ஒலித்தது.

பெருமாளின் முகத்தில் மந்தகாசம்..

“உடம்பில் சங்கு சக்கரம் குத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அப்பா சொல்லப் போகிறாரே.!.. அதை நீலனிடம்  சொல்லவில்லையே குமுதவல்லி “

*

திருமங்கை ஆழ்வார்.

வாழ்வை முழுவதுமாய் அனுபவித்து வாழ்ந்த, பன்முக ஆளுமை கொண்ட இந்த மகா மனிதரைப் பற்றி பல கதைகள் உண்டு.

இது எனக்கு தெரிந்த, பிடித்த குமுதவல்லியின் கணவன் கதை.

சோழ  படைத்தலைவன் நீலன் முத்தரையன், கலியனாகி, ஆழ்வாராக உயர்ந்ததன் பின்னால் ஒரு பெண் இருந்திருக்கிறாள்.

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், (ராமானுஜர் இன்னும் வரவில்லை), குலம் தாண்டி மணந்து கொண்டு, ஒரு பெரிய சமுதாயப் பொறுப்புணர்வோடு வாழ்ந்த ஒரு பெண்ணால்தான் நமக்கு ஒரு ஆழ்வார் கிடைத்தார்.

நீலன் அரசு சொத்தை கையாடி, வழிப்பறி செய்து, பெருமாளின் கட்டை விரலையே கடித்து கலியனாகி, பின் பாடிப் பாடி ஆழ்வாரானர்.

திருமங்கை என்ற ஊரின் ஆள்வார் அல்ல; குமுதவல்லி என்னும் திருமங்கையின் கணவர் இந்த ஆழ்வார்.

*

திருமங்கை ஆழ்வார் ஒரு அற்புதமான எழுத்தாளர்.

பிரபந்தத்தில் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் இவருடையது.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா என்று எல்லா வகைகளிலும் பாடல் எழுதி இருக்கிறார். அபார இலக்கண ஞானம்.

அவர் பாடல்களில் தெரியும் சங்க இலக்கிய தாக்கம் ரசிக்க வேண்டியது. .

இந்தப் பாடலில் வரும் தூக்கம் வராத தலைவியும், அதற்கு காரணமான மாட்டின் கழுத்தில் வரும் மணி ஓசையும்  சங்க இலக்கியத்திலும் இருக்கிறது.

கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து
கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள
ஓர் இரவும் உறங்காதிருப்பேன்-
பெரு மணி வானவர் உச்சி வைத்த
பேர் அருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்

இதே போல் எனக்கு தெரிந்த வரை பல  பாடல்கள் குறுந்தொகை கவிதைகளின் தழுவல். அதைப் பற்றி தனியாக ஆராய வேண்டும்

ஆண்கள் மடல் ஏறுதல் என்ற ஒரு concept சங்க இலக்கியத்தில் உண்டு. பெருமாளை தலைவனாகக் கொண்டு பெண்கள் மடலேறுவதாக புரட்சி செய்து அவர் எழுதியவை பெரிய திரு மடல், சிறிய திரு மடல்.

சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல்

அவரே புலம்பியபடி..

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமா  ருருவமே மருவி,

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்,

ஊமை கண்ட கனவு போல பழுதாய் – உருப்படியாய் ஒன்றுமே செய்யாமல் தன் இளம் பருவம் வயது வரை வாழ்க்கையை வீணடித்தவருக்கு எப்படி சங்க இலக்கியமும் இலக்கணமும் தெரிந்து இருக்க முடியும் என்று கேள்விக்கு என் பதில்தான் – குமுதவல்லி.

*

கலியனின் பெரிய திரு மொழியில் பயமுறுத்தும், அறிவுறுத்தும்  பாடல்கள் ஏராளம்.

படிக்கும் போதே அலற விடும் இந்தப் பாசுரத்தை பாருங்கள்

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய்

அடுத்தவரின் பொருளுக்கும், மனைவிக்கும் ஆசைப்பட்டால், நெருப்புத் கற்கும் செப்பினால் செய்த பெண் சிலையை தழுவி நிற்க வேண்டுமாம் நரகத்தில்!!.

*

இருந்தாலும் கலியன், காதல் மன்னன்.

கண்ணன் செய்யும் காதல் சேட்டைகள் பாடும் ஏழாம் திருமொழியில் இந்தப் பத்தின் முதல் பாடலை இங்கு எழுத முடியாது தேடிப் படித்து விடுங்கள். (மானமுடைத்தது உங்கள் ஆயர் குலம்.. என்று தொடங்கும் 1908 வது பாசுரம்). அந்தப் பத்தின் மூன்றாவது பாடல் இது.

தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் தோழிமா ராரு மில்லை,

சந்த மலர்க்குழலாள் தனியே விளையாடு மிடம் குறுகி,

பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்,

நந்தன் மதலைக்கிங் கென்கடவோம்?

நங்காய் என்செய்கேன் என்செய் கேனோ

 

கண்ணனை பார்த்து பெண்கள் கேட்பதாக அவர் எழுதிய பத்து பாடல்கள் இன்னொரு லெவல்.

.நாமம் பலவும் உடை நாரண நம்பீ 

தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப் பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து-இது என்? இது என்? இது என்னோ?

மணக்கும் மாலை அணிந்து, மன்மதன் போல் பாடிக் கொண்டு ஏன், ஏன் என் இல்லம் புகுந்தீர் என்பதில் ஆழ்வாரின்  சொந்த அனுபவுமும், விசிஷ்டாத்வைதமும் மறைந்து கொண்டிருக்கிறது

*

அவரின் காதல் பாடல்களை விட, அறிவுறுத்தும், பயமுறுத்தும் பாடல்களை விட,  எல்லோருக்கும்  பிடித்த திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இது

குலம்தரும் செல்வம் தந்திடும்

அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந் தரஞ் செய்யும்

நீள் விசும்பருளும் அருளொடு பெரு நிலமளிக்கும்,

வலந் தரும் மற்றுந்தந்திடும்

பெற்ற தாயினுமாயின செய்யும்,

நலந் தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்

இந்த பாசுரம் எல்லோரும் தினமும் சொல்ல வேண்டிய ஓன்று.

வயதாகி எல்லாமும் மறந்து போனாலும், இந்த ஒரு பாசுரம் மட்டும் மூச்சு நிற்கும் வரை நினைவில் இருக்க வேண்டும் என்று நான் தினசரி வேண்டிக் கொள்வேன்.

திருமங்கையின், அவர் கணவர் கலியனின் திருவடிகளே சரணம்.

எம் பெருமானார் திருவடிகளே சரணம்.

 

நன்றி

பிற்கால சோழர்கள் – சதாசிவ பண்டாரத்தார்

திருமங்கை ஆழ்வாரின் காலம் எட்டு – ஒன்பதாம் நூற்றாண்டு என்று கருத்துக்கள் வேறு படுகிறது. அவர் பாடல்களில் வரும் பல்லவ மன்னர்களின் பெயர்  கொண்டும், அவர் முத்தரையர் குலம், சோழர் படை தலைவரில் ஒருவர், ஒரு குறு நில மன்னன் என்பதாலும் – நான் இதை பொன்னியின் செல்வன் படித்தவர்கள் எல்லோருக்கும் தெரிந்த திருப்புறம்பயம் போரோடு இணைத்தேன்.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள