சங்க காலத்தில் பெண்ணுரிமை

பல விஷயங்களில் நம்மை பெருமைப் பட வைக்கும் மனித நெறிகளை, மென்மையான உணர்வுகளை கொண்ட நமது சங்க கால நாகரிகத்தில் சில ஓட்டைகளும் இருந்தன.

ஒரு பெண்ணை மணந்த கணவன் அவளை விட்டு விலகி வேறு மகளிருடன் உறவு கொள்ளுதல் பல பாடல்களில் பேசப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் பத்து பாட்டுக்கு ஒன்றாய் 6ல் (6,16,26,36.. ) முடியும் எண்ணிக்கையில் உள்ள பாடல்கள் நாற்பதும் இவ்வகை.

கணவனை விட்டு பிரிந்து வேறு உறவு கொள்ளும் மனைவியை எங்கும் காண முடிவதிவில்லை.

இப் பாடல்களில் ஒரு ஆறுதல் – வேறு மகளிருடன் உறவு கொண்டு விட்டு பின் வீடு திரும்பும் ஆணை ஏற்றுக் கொண்ட பெண் பற்றிய பாடல் எங்கும் இல்லை.

கண்ணகிக்கு முந்திய சமூக நிலை.

சில பாடல்களில் அப்படிப்பட்ட பரத்தை தொடர்பு உடைய ஆணுக்கு  சேற்றில் புரளும் எருமை மாடு உவமையாக சொல்லப் படுகிறது.

இது சமூகத்தின் உண்மை நிலையா அல்லது தொகுத்தவனின் செயலா என்பது ஆராய்ச்சிக்கு உரியது.

நான் கண்ட சங்க காலப் பெண் கண்ணகி அல்ல. என் முண்டாசுக் கவிஞன் விரும்பிய புதுமைப் பெண்.

*******

திருச்செந்தூர்1. திருஅலைவாய் என்று சங்க காலத்தில் பெயர்.

செருமிகு சேயோன்,  வெற்றி வேல் முருகன் கோயில்.

தாமிரபரணி பாய்ந்து வளம் பெருக்கும் வயல்கள் கடலில் இருந்து வெகு அருகில்.

வயல்களில் வேலை செய்யும் உழவர்கள் எழுப்பும் மகிழ்ச்சி ஆரவாரம். அதனால் மயில்கள் பயந்து கோயிலில் வந்து தங்குகின்றன.

அழகிய விளக்குகளின் அணி வரிசையில் மின்னுகிறது கோயில்.

முருகனின் முன்னால் புதிதாய் திருமணம் ஆன கணவனும் மனைவியும். பெண்ணின் காலில் சமீபத்தில் அகற்றிய சலங்கையின் தடம்2.

“கற்போடு இருங்கள்” என்று மங்கள மகளிர் மண நாளில் வாழ்த்தியதை நினைவு கொண்டு மனைவியின் கை பிடித்து மனம் பிறள மாட்டேன் என்று  சூள் உரைக்கிறான் கணவன்.

கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொடு உற்ற சூளே – 266

வருடங்கள் உருண்டோடுகின்றன. அவனுக்கு வேற்று மகளிர் தொடர்பு இருக்கிறது என்ற வதந்தி வலுக்கிறது ஊரில்.

உழவரின் இசைக்கு பயந்து கோயிலில் வந்து தங்கும் மயில் போல்3, ஊராரின் அலருக்கு (வதந்தி) அஞ்சி வீட்டில் விருப்பமின்றி தங்குகிறான் கணவன்.

*******

ஒரு நாள் மனைவியின் ஊரில் ஒரே சத்தம்.

மரத்தில் ஒருவனை கட்டி வைத்து இருகின்றனர். எழுபதுகளில் வந்த தமிழ் படங்களின் நாட்டாமை காட்சி போல ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி இருக்கிறார்கள்.

கட்டிய மனைவி வேறு ஊரில் இருக்க, அதை மறைத்து இங்கு வந்து வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டுள்ளான் ஒருவன். அந்தப் பெண் விஷயம் அறிந்து நீதி கேட்கிறாள். கேட்பவள் யார் என்றே தெரியாது என்று ஊர் மன்றத்தில் கூசாமல் பொய் சொல்லுகிறான்.

தீர விசாரித்ததில் உண்மை வெளி வருகிறது. அவன் தலையில் சாம்பல் புழுதி வாரி இறைத்தனர் ஊர் மக்கள்.

திருநுதல் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறி ஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறு தலைப் பெய்த4 ஞான்றை
வீறு சால் அவையத்து – 256

மனைவி இதை பார்க்கிறாள். தன் கணவன் எங்கு சென்றானோ என்ற கவலை வருகிறது அவளுக்கு.

*******

கணவனுக்கு வேறு பெண்ணிடம் உள்ள தொடர்பு தெரிந்து விடுகிறது. அவனை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறாள் மனைவி.

“வராதே. என் பக்கத்திலேயே வராதே. உன்னை தொடவே எனக்கு அருவருப்பா இருக்கு. வேற வாசனை வருது உங்கிட்ட. அவ மார்பு பட்ட உன் நெஞ்சு எனக்கு வேண்டாம்”

தொடுகலம்…. குறுக வாரல்

நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.- 196

*******

அவள் சிநேகிதி புத்திமதி சொல்கிறாள்.

“கொஞ்சம் பொறுத்துப் போயிடேன். உனக்கு இப்பதான் குழந்தை பிறந்திருக்கு. அவன் அவளை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவே? தனியா சாப்பாட்டுக்கு வழி? பையனுக்கு பால் கொடுக்கவாது சாப்பிட வேண்டாம்? சத்தின்றி வறண்ட முலைலே பால் எப்படி வரும்?”

புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்கச் சில் பதங்கொழித்துத்
தா மட்டு உண்டு தமியர் ஆகித்
தேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப5 – 316

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவள் வீட்டு எருமை மாடு தெருவில் நுழைகிறது. இரவு முழுவதும் அதை வீட்டில் காணவில்லை.

எங்கேயோ குளத்தில் ஊறி, சேற்றில் புரண்டு எழுந்து காலையில் வருகிறது. குளத்து மீனை எல்லாம் மிதித்து கொன்று எழுந்த குதி காலில் இரத்தம். ஆம்பல் மலரை உதிர்த்து தின்று கடை வாயில் வழிகிறது. பிய்த்து எரிந்த பகன்றை கொடி கழுத்தில். தெருவெல்லாம் சேறாக்கி போரில் வென்ற வீரனைப் போல் வீடு தேடி மிதப்புடன் வருகிறது.

கம்பை எடுத்து முழு ஆத்திரத்துடன் அதன் மேல் சாத்துகிறாள் மனைவி. அலறிக் கொண்டு ஓடுகிறது எருமை.

தோழிக்கு தான் கேட்ட கேள்விக்கு விடை புரிந்து விட்டது.

துறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந் நிண வராஅல் குறையப் பெயர் தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் – 316

*******

கணவன் முதல் மனைவியை பிரிந்து இன்னொரு திருமணம் செய்யப் போகிறான். திருமண நாளில் அவன் தேர் இவளின் வீதி வழியே செல்கிறது.

வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்  – 66

தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் பையனை கண்டவுடன் தேரை நிறுத்த சொல்லி அது நிற்கும் முன் குதித்து அவனை தூக்கி மார்போடு அனைத்துக் கொள்கிறான்.

காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – 66

குழந்தையின் சிவந்த வாய் அழுகையில் மேலும் சிவந்து, அவன் கண்ணீர் தந்தையின் மார்பை நனைக்கிறது.

பையனை பிரித்து எடுத்து “வீட்டுக்குள்ளே போங்க அய்யா” என்று இறக்கி விட முயல்கிறான். கேட்கவில்லை. மகனின் அழுகை வலுக்கிறது.

மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும செல் இனி அகத்து எனக்
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த – 66

பையனுடன் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறான் கணவன். மனைவிக்கு அழுகையும் கோபமும் தொண்டையை அடைக்கிறது. தன் ஆற்றாமை  உந்தித் தள்ள பையனை அடிக்க கம்பு எடுத்து அவன் அருகில் செல்கிறாள். தன் மகனையே “கொடியோன்” என்று சொல்ல வைத்த அவள் அவல நிலை.

படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இக்கொடியோன்6 எனச்சென்று
அலைக்கும் கோலொடு குறுகத் தலைக்கொண்டு – 66

திருமண வீட்டில் இருந்து முழவின் இசை தந்தையை அழைக்கிறது. குடும்பத்தைக் கழட்டி விட்டு வேறு மணம் முடிக்கச் செல்கிறான் கணவன்.

இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும்  – 66

தேர் வீதி வழி சென்று மறைகிறது.

தன் தோழியரோடு விளையாடிக் கொண்டிருந்த போது இதே மாதிரி தேரில் வந்த அவனை முதல் முதல் பார்த்த  நாள் மனைவிக்கு நினைவுக்கு வருகிறது.

அடிக்க வந்த கம்பை கீழே போட்டு விட்டு மகனை அணைத்துக் கொண்டு ஓவென்று அழுகிறாள்.

தன்னை மணம் செய்யும் வரும் வழியில் மகனை தூக்கி அணைத்து முதல் மனைவியின் வீட்டுக்குள் நுழைந்த விஷயம் தெரிந்து திருமணத்தை நிறுத்தி விடுகிறாள் புதுப்பெண்.

*******

வீதியில் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

மலர்ந்த தாமரையின் உட்புறம் போல் சிவந்த உள்ளங்கை.

மணி போல் வாய்.

நாவினால் பேச இன்னும் வரவில்லை. கேட்டவுடன் சிரிப்பு வரும் மழலை மொழி.

பார்த்தவுடன் எவருக்கும் தூக்கி கொஞ்ச தோன்றும் புதல்வன்.

தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை மணி மருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகை படு6 தீஞ்சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே – 16

ஒரு இளம் பெண் குழந்தையின் அருகில் வருகிறாள்.

அழகிய இள மார்பில் பொன் நகை. வரிசையான கூரிய பற்கள். முகத்தில் மகிழ்ச்சி.

சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.

“என் உயிரே வா” என்று பையனை தூக்கிக் கொள்கிறாள்.

கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
வருக மாள என் உயிர் எனப் பெரிது உவந்து
கொண்டனள் நின்றோள் கண்டு நிலைச் செல்லேன – 16

பையனின் தாய், தந்தையின் முதல் மனைவி வெளியே வர, இந்தப் பெண் நாணித் தலை குனிகிறாள்.

அப் பெண்ணின் காலில் சலங்கை இருக்கிறது. ஆனால் சமீபத்தில் கழட்டி மீண்டும் மாட்டிய தடமும் தெரிகிறது. திருமணம் தடை பட்டிருக்க வேண்டும். மனைவிக்கு வந்தது யார் என்று புரிகிறது.

“வானத்து தேவதை மாதிரி இருக்கே” பக்கத்தில் வந்து தலையை வருடுகிறாள் மனைவி. பெண்ணின் கண்கள் கலங்குகின்றன.

“நீ ஏன் வருத்தப்படரே?” கண்ணை துடைக்கிறாள்.

“என் மகனுக்கு நீயும் ஒரு அம்மாதான்”.

மகனுடன் அவளையும் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள்.

பேணினென் அல்லெனோ7 மகிழ்ந வானத்து
அணங்கு அருங்கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே. – 16

*******

மாதங்கள் உருண்டோடுகின்றன. விட்டுச் சென்ற கணவன் ஒரு நாள் வீட்டுக்கு வருகிறான். கையில் அவளுக்குப் பிடித்த ஆம்பல் மலர்.

மனைவி கதவைப் பிடித்து கொண்டு முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவனை வெறித்து பார்க்கிறாள்.

“உன் கோபம் எனக்குப் புரியுது. நான் ஒரு மடையன். பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னையும் பையனையும் விட்டுட்டு போயிட்டேன். என்னை மன்னிச்சிடுன்னு கேட்க கூட எனக்கு வெட்கமா இருக்கு”

அவள் பார்வை அவனைத் தாண்டி தெருவில் நுழையும் நீர் நாயிடம் சென்றது.

கண் பார்த்து பேசத் துணிவின்றி அவன் கண்கள் அவள் மேனியில் அலைந்தன.

அருகில் வந்து தொடர்கிறான்.

“நீ கொஞ்சம் கூட மாறலே. முத முதல்லே தோழிகள்க கூட கலங்கு விளையாடிட்டு இருந்தப்ப பார்த்த மாதிரியே இருக்கே. பையனுக்கு நாலு வயசானாலும் நீ இன்னும் அதே அழகு. என்னாலே உன்னை பிரிஞ்சு இனிமே இருக்க முடியாது”

இன்று வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
மாயப் பொய்ம் மொழி சாயினை பயிற்றி எம்
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல – 6

அவள் கண்கள் வீட்டின் அருகில் வரும் நீர் நாயைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. அருவருப்பு மண்டிய கண்கள். திரும்பி கணவனைப் பார்க்கிறாள்.

“பொய். எனக்கு வயசாயிடுச்சுன்னு உன் கண்ணு சொல்லுது. என் சுருங்கிச் சரிஞ்ச மார்புல அது மேஞ்சு நிமிரும் போது உன் ஏமாற்றத்தை காட்டுது”

வார்ததைகளை வாய் சொல்லாமல் கத்திகளாய் கண்கள் சுழட்டின.

சட்டென்று தெருவில் வந்து பெரிய கல் ஒன்றை எடுத்து வீட்டின் அருகின் மூங்கில் புதரின் அருகில் படுக்க வந்த நீர் நாய் மீது வீசினாள். குறி தவறவில்லை.

“நாய்யி.. தாமரையை விட்டுட்டு வாளை மீனைத் தின்னு ஒரே நாத்தம். உடம்பு பூரா சேறு. நாள் முழுக்க குளத்துலே கும்மாளம் அடிக்குது தூங்கவும் கழிக்கவும் மட்டும் வீட்டு மூங்கில் நிழல் கேட்குது”

சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்8 – 6

நாய் பட்ட அடித் தாங்காமல் அலறி ஓடியது.

கணவன் பக்கம் திரும்பாமல் உள்ளே சென்று கதவை சாத்தினாள்.

ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.பாரதி

*******

மேற்கோள் விளக்கம்.

 1. அலைவாய்ச் செருமிகு சேஎயொடு – வேலன் பழந்தமிழ் கடவுள். திருமணம் முடிந்த உடன் எங்களையும் என் மனைவியின் உறவினர் திருச்செந்தூர் கூட்டிச் சென்ற காரணம் இப்போது புரிகிறது.
 2.  சிலம்பு கழி நோன்பு – திருமணத்துக்கு முன் காலில் அணிந்த சிலம்பை பெண் அகற்றுவாள். இது சங்க காலப் பழக்கம். இது தொடர்ந்திருந்தால் சிலப்பதிகாரம் இல்லை.
 3. பறந்த தோகை அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் – உவமையின் உள்ளுறை புரிந்தால் பிரமிப்பு. மயிலுக்கும் கணவனுக்கும் இருக்கும் தொடர்பு உரை ஆசிரியர் சொல்லாமல் புரியாது
 4. முறி ஆர் பெருங்கிளை செறியப் பற்றி நீறு தலைப் பெய்த – புழுதி வாரி இறைத்தல் என்பது இதுதானோ? வேறு மகளிருடன் கொண்ட தொடர்புக்கு தண்டனையில்லை. அதை மறுத்து பெண்ணை இழிவு படுத்தினால் தண்டனை உண்டு போலிருக்கிறது.
 5. தேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப – மழழை மொழி பேசும் மகன் வறண்ட முலை அருந்தும் நிலை. கணவன் கை விட்ட பெண்கள் படும் துயரம் இன்று போல் அன்றும்.
 6. இவன் கலக்கினன் போலும் இக்கொடியோன்
  இந்தப் பாடல் அற்புதமானது. ஒரு கை தேர்ந்த இயக்குனரின் காட்சி வடிவம் போல் விரிகிறது.பெற்ற குழந்தையை கொடியோன் என்று சொல்ல வைக்கும் தாயின் நிலை. காதலித்து மணந்த கணவன் வேறொரு பெண்ணை மணம் செய்ய போகும் நாளில் அவனை பார்க்க நேர்ந்த அவலம் அவளைப் அப்படி பேச வைக்கிறது. இதை கொஞ்சம் காட்சி படுத்தி பாருங்கள். கவிதையின் வீரியம் வியக்க வைக்கும். இறப்புக்கு பின் ஒரு உலகம் இருக்கிறது என்ற நம்பிக்கை சொல்லும் கவிதை,  எதிரிகளும் விரும்பும் குழந்தைகள் – மகட் பேறு கொண்டாடுகிறது.

  இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
  மறுமை உலகமும் மறு இன்று எய்துப
  செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
  சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
  பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

  மகன் ஓடும் அழகை –  தளர்பு தளர்பு ஓடும் பூங்கண் புதல்வனை – கொண்டாடும் தாய் அவனை கொடியோன் என்று சொல்லி கம்பு எடுத்து அடிக்கப் போகும் காட்சி வரையும் கவிஞர் செல்லூர் கோசிகன் கண்ணனார்

 7. பேணினென் அல்லெனோ – தன் கணவனை தன்னிடம் இருந்து பிரித்தவள் என்று தெரிந்தும் அவள் நல்ல உள்ளம் அறிந்து அவளை மன்னிக்கும் பெண்.
 8. முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும் – நீர் நாயைக் உவமையாய் காட்டி கணவனை மறுக்கும் புதுமைப் பெண்ணை எழுதியவர் பரணர்.
Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply