சங்க காலத்தில் மது வகைகளும், கடைகளும்-பாகம் 1

தனியாய் தண்ணி அடித்துக் கொண்டிருந்தார் கைப்புள்ள வேலு.

சென்னை முழுவதும் பரவிக் கிடக்கும் டாஸ்மாக் கடைகளில் ஓன்று. பக்கத்திலேயே மங்கிய வெளிச்சத்தில் பார்.

ஒரு quarter கட்டிங், தண்ணி பாக்கெட், தமிழ்க் குடி மக்களின் பிரதான உணவாகிப் போன ஏதோ ஒரு சைடு டிஷ்.

பக்கத்து சேரில் வந்து உட்கார்ந்தார் சற்று வயதான ஒருவர்.

பார்த்த உடனே தெரிந்து விடும் – சென்னை வாசி இல்லை என்று.

என்ன வாங்குவது என்று தெரியாமல் முன்னால் நின்று வாங்கியவரைப் பார்த்து வாங்கிய அதே சரக்கு, சைட் டிஷ், தண்ணீர்.

வேலு மிக்ஸ் பண்ணியதைப் பார்த்து அப்படியே செய்து, வாயில் கவிழ்த்தார்.

உடனே ஒரு ஓங்காரம். தூ என்று துப்பிய சரக்கு வேலுவையும் நனைத்தது.

“ஏன்டா!! எண்டா!!.. புதுசா தண்ணி அடிக்கறவன் எல்லாம் ஏன் என் பக்கத்திலேயே வந்து உட்கார்றீங்க?..ஏன் என் நிம்மதிய கெடுக்கரிங்க?”

அலங்க மலங்க விரித்தவரை பார்த்து பரிதாபம் வருகிறது வேலுக்கு.

 “ஊருக்கு புதுசா?. எந்த ஊரு?”

பறந்தலை.. வெண்ணிப் பறந்தலை” தமிழ் திருவிளையாடல்  சிவாஜியின் குரலில் இருந்தது.

“என்ன ஓம் பேரு…….? தருமியா?”

“இல்லை ஐயா. அது எங்கள் ஊரில் உள்ள ஒரு புலவர் பெயர். என் பெயர் நக்கன்”

“உங்க ஊர்லே டாஸ்மாக் இல்லையா? ஹைவேலே இருக்குன்னு மூடிட்டாய்ங்களா? இல்ல இதான் முதல் தடவையா?”

“எங்கள் ஊர் கள் இப்படி கசக்காது. இனிக்கும் ஐயா”

“என்னாது கள்ளா? இனிக்குமா?… எல்லா ஊர்லேயும் மிடாஸ் சரக்குதான்டா என் வெண்ணை”

“இல்லை ஐயா. ஊரிலேயே தயார் செய்கிறார்கள்”

“யாருகிட்டே.. யாருகிட்டேன்னே இந்த டுபாக்கூரு? இப்போவே போறோம்டா உங்க ஊருக்கு.. கிளம்புடா. இனிக்குமாம்ல. அதையும் பார்த்திருவோம்.”

“வாருங்கள் ஐயா. நான் என் வாகனத்திலேயே கூட்டிக் கொண்டு போகிறேன்”

“என்ன…வாகனம். எருமை வாகனமா? வரதெல்லாம் எமனாவே வருது” என்று கேட்டு முடிக்கும் முன் தடியால் ஓங்கி ஒரு அடி.

மயங்கி விழுந்தவரை கைத்தங்கலா இழுத்து போனார்.

“என்ன கைப்புள்ள!! ஒரு கட்டிங்கிலேயே மட்டையா?”

மரத்தடியில் மறைத்து வைத்து இருந்த கால இயந்திரத்தில் (டைம் Machine) தூக்கி உட்கார வைத்தார்.

மூவாயிரம் வருடங்கள் பின்னோக்கி சென்றனர்.

**************

சிலு சிலுவென மருத மரக் காத்து. சல சலவென ஓடும் கால்வாய் நீர் சத்தம்.

வேலு கண் விழித்த போது பக்கத்திலேயே கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார் நக்கன்.

“ஷப்பா.. என்னா காத்து. பார்லே AC கிடையாதே. எங்கேந்து வருது?” திடுக்கிட்டு எழுந்தார்

ஏய்.. நீ அவன் இல்லே.. எங்கடா கூட்டிட்டு வந்துருக்க?”

“பறந்தலை ஐயா. நீங்கள் தானே போக வேண்டும் என்று சொன்னீர்கள்.”

“அவ்வ்வ். .இவ்வளவு மரமும் தண்ணியும் தமிழ் நாட்டுலே எங்கேயுமே      கிடையாதேடா..”

“காவிரி கால்வாய் ஐயா. இப்போது தானே கார் காலம் முடிந்திருக்கிறது. காவிரி நதி பாய்ந்து குளங்களும், கால்வாய்களும் நிரம்பியிருக்கின்றன”

‘இவன் பேசறது தமிழ் மாதிரியே இல்லையே. இது சத்தியமா மறை கழண்ட கேசுதான். நம்மளை மட்டும் எப்படி தேடி வந்து பிடிக்காரய்ங்க. அடுத்தாப்லே குண்டக்க மண்டக்க ஒபாமா வீட்டுக்கு வழி கேட்கப் போறான்’ வேலு வாடினார்.

***************

சற்று தூரத்தில் “தள்ளு தள்ளு” என்ற சத்தம் கேட்டது. வேலுவும் நக்கனும் எழுந்து ஓடினர்.

சிறு கால்வாய் பிரிந்து ஓடிக் கொண்டிருந்தது. வண்டிப் பாதை எது கால்வாய் எது என்று தெரியாமல் வண்டி கால்வாயில் இறங்கி   அங்கு சேற்றில் மாட்டிக் கொண்டது போலும்.

நக்கன் “வாருங்கள் ஐயா. நாமும் கொஞ்சம் உதவி செய்யலாம்” என்றார்.

“ஆஹா.. நமக்கு பில்டிங் strong. Basement வீக்ன்னு இவனுக்கு தெரிஞ்சிரப் போகுதே. சரி சமாளிப்போம்”

கால்வாயில் நெருப்பின் சுடர் போல் தாமரை பூக்கள் வளர்ந்திருந்தன.

 

கால்வாயை வண்டி கடக்க கரும்புகளை இருக்க சேர்த்துக் கட்டி பாலம் அமைத்து இருந்தனர். “என்னடா இது! கரும்ப கீழே போட்டு மேலே வண்டியை ஏத்தரிங்க”

“ஆமாம் ஐயா. இதெல்லாம் பெரும்பாலும் யானைகள் உண்ணத்தானே பயன்படும்”

“ஆட்டுக்கு புல்லு போடற மாதிரி யானைக்கு கரும்பு போடறிங்களா. செழிப்புக் கொழுப்பு”

வண்டியின் மேல் பீப்பாய் வடிவில் ஒரு பானை இருந்தது. 

“என்னடா இருக்கு வண்டியிலே?

ஐயா.. அங்கே வயலில் சிவப்பு நெல்லை அறுத்து அறுத்து உழவர்கள்    களைத்து போய் இருப்பார்கள். அவர்களுக்கு மாம்பழக் கள் கொண்டு  போகிறார்கள். வாருங்கள் நாமும் சென்று கொஞசம் அருந்துவோம்”

“என்னது விவசாயிக்கு கள்ளா? நாங்க சாப்பாடே போட மாட்டோம்..அவனவன் தற்கொலை பண்ணிக்கறானுங்க. இங்க கள்ளு!!” சரி சரி நம்மளும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோம். வாசனை நல்லாதான் இருக்கு – வேலு சிரமப்பட்டு தள்ளுவது போல் நடித்தார். 

வண்டி வயல் களத்துக்கு வந்து சேர்ந்தது. உழவர்கள் எல்லாம் கூடி இருந்தனர்.

“என்ன நக்கரே… உமது நண்பரோ?. கூத்து கட்டுபவர் போல் தெரிகிறாரே. அவரும் நம்முடன் உணவு அருந்தட்டும்”

பீப்பாய் திறந்தவுடன் புளித்த மாம்பழ வாசம்.

கிளையிலேயே பழுத்த கிளி போல் இருக்கும் மாம்பழத்தில் சாறு பிழிந்து, அதை மண் பானையில் ஊற்றி, மூடிக் கவிழ்த்து, வெய்யில் பட மண்ணில் புதைத்து புளிக்க வைத்து வடித்த கள்.

“நண்பரே நீங்கள் அருந்துங்கள் முதலில்”.

“ஆகா பாசக்காரப் பயலுவ.. குடுங்க”. நாக்கில் தேள் கொட்டினால் போல் சுர்ரென்று ஒரு நொடி வலித்து உடனையே வலி மறைய இனித்த கள்.

“ஆமாண்டா இனிக்குதுடா” சப்புக் கொட்டினார். “சைடு டிஷ் காரமா இருந்தா நல்லாருக்கும்” மனதுக்குள் நினைத்து கொண்டார்.

உழவர்கள் எல்லாரும் மெதுவாக ரசித்து நீண்ட நேரம் எடுத்து குடித்தனர். வேலுவுக்கோ நல்ல பசி.

“இவிங்க சைடு டிஷ் கொடுக்க மாட்டய்ங்க போல. மதியமே கடையப் போட்டுட்டானுங்க. விடிய விடிய குடிப்பாய்ங்களோ?”

“நண்பருக்கு பசி போல நக்கரே. அந்த மீன் குழம்பும் அரிசிச் சோறும் சாப்பிட கொடும். என் மகள் தானே செய்தது”

வேலைக்கு போகும் தந்தைக்கு மகள் பாசமாய் செய்து அனுப்பி இருந்தாள்.

உப்பைக் கொடுத்து பண்ட மாற்றாய் வாங்கிய அரிசி. அதை மென்மையாய் சமைத்து அதில் மீன் புளிக்குழம்பு ஊற்றி பிசைந்து, மேலே சிறிய அயிரை மீனின் பெரிய துண்டுகளை அடுக்கி வைத்து இருந்தாள். வேலுக்கு கண்ணீரை வர வைத்தது. காரமா, பாசமா தெரியவில்லை.

“ஆகா காரம் அதிகம் போட்டு விட்டாளோ? நக்கரே தயிர் சோறு சாப்பிடட்டும்”

வடிவேலுவின் கையில் ஒரு பெரிய தேக்கிலையை வைத்தார்கள். அதில் நன்கு குழைந்து வடித்த மூங்கில் அரிசிச் சோறு. அதன் மேல் ஆயர் வீட்டில் இருந்து வந்த புளிக்காத பசும் தயிர். பக்கத்தில் மென்மையாய் புழுக்கிய மாமிசம். வெள்ளை நிறம் – கோழியாய் இருக்க வேண்டும். காரம் அதிகம் இல்லாமல் உப்பும் மிளகும் சேர்த்து புரட்டி இருந்தது.

“நீங்கள்லாம் சாப்பிடலையா?” மதுரை விருந்தோம்பல் எட்டிப் பார்த்தது.

“ஐந்து கலயமாவது அருந்திய பின்தான் உணவு நண்பரே”..

“அஞ்சா!!. ஒன்னுக்கே நமக்கு கண்ணைக் கட்டுதே”

 

பக்கத்தில் நெருப்பு மூட்டினார்கள். அதில் மிளகும், உப்பும், மஞ்சளும், தயிரும் கலந்து தடவிய வெள்ளை மாமிச துண்டுகளை நன்கு சமைத்து எடுத்தனர். அதை முதலில் எல்லாரும் உண்டனர். 

பின் மீன் குழம்புடன் அரிசி சோறு.    

தினை உணவு பின்பு பகுத்துக் கொடுக்கபட்டது.

இறுதியாய், வேலு சாப்பிட்ட அதே தயிர் உணவுடன் முடித்தனர்.

“இனிப்பு உண்டா இன்றைக்கு? விருந்தினர் வேறு வந்திருக்கிறாரே?”

அவலில் பாலை ஊற்றி சமைத்து அதனுடன் தூய கரும்பு சாறு பிழிந்து செய்த இனிப்பு.

கலயத்தில் இருந்து நேரே கையில் ஊற்றி உறிஞ்சினார்கள்.

“கலப்படம் இல்லாத பால். தனி டேஸ்ட்டாதான் இருக்கு.” உறிஞ்சும் கை வலிக்கும் வரை குடித்தார் கைப்புள்ள.

பின்பு சிறிது நேரம் பாட்டு, ஆட்டம். வேலு பாடிய வாத்தியார் பாடல்கள் புரியாவிட்டாலும் ரசித்து மகிழ்ந்தார்கள்.

“ஆத்தா.. பொழுது போக்குக்கு பொறந்த பயன்னு என்னை திட்டுனீலே. இங்க எனக்கு என்ன மரியாதை பாரு”

கள்ளும் உணவும் கண்களை சுழற்றியது. மருத மர நிழலும், கால்வாய் காற்றும் தாலாட்ட தூங்கிப் போனார்கள்.

*************************

வேலு எவ்வளவு நேரம் தூங்கினாரோ தெரியவில்லை. கல்லோ கம்போ மூக்கில் தட்டி மரண வலி தெறிக்க “எவன்டா அது?” என்று எழுந்து உட்கார்ந்தார். கையை வைத்து பார்த்தால் இரத்தம்.

மாலை நேரம். எங்கும் ஒரே சத்தம். உழவர்களுக்கும் எங்கேயோ இருந்து வந்திருந்த இன்னொரு கூட்டத்துக்கும் தள்ளு முள்ளு.

சிலர் கையில் பெரிய வாள், ஈட்டி. இன்னும் என்னென்னவோ ஆயுதங்கள்.

சிலர் கையில் கம்பு. கம்புகள் மோதத் தொடங்கி இருந்தன.

சிலர் வாளும் உருவினார்கள்.

சத்தம் அதிகம். சண்டை குறைவு.

நக்கன் வந்து “ஐயா உங்களுக்கு வாள் வீசத் தெரியுமா?”

“அவ்வ்.. வாத்தியார் தாண்டா வாளெல்லாம் வீசுவாரு. நான் கைப் பிள்ளைடா”

“அப்படியானால் இந்த மரத்துக்கு பின்னால் மறைந்து கொள்ளுங்கள்”

ஓரிரு வாள்கள் மோதும் சத்தம்.

இருட்டு கவிழத் தொடங்கியது. வேலு இதுவரை கேட்டே இருக்காத மிருகங்களின் ஒலி. பறவைகள் அடைய தொடங்கும் சத்தம்.

ஒரு சிறிய போர் தொடங்கியிருந்தது.

“ஏண்டா நமக்கு மட்டும் இப்படியே நடக்குது.

“இதுவரைக்கும் நல்லாதானே போய்கிட்டுருந்தது”.

                               

 (தொடரும்)

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply