சம்பந்தி

ஒரு அழகிய கிராமம்.

அங்கு ஒரு தமிழ் ஆசிரியர்.  அவருக்கு ஊர்க் கோயில் கைங்கர்யமும் உண்டு.

தமிழாசிரியருக்கு ஒரே மகள்.

அவள் அவ்வளவு அழகு.

அழகு மட்டும் அல்ல அறிவும் கொட்டிக் கிடந்தது அவளிடம்.

யாரையும் வசீகரிக்கும் முகம்.

அவள் வளர வளர, ஊருக்கே செல்லப் பெண்ணாய் ஆகிப் போனாள்.

அவளைச் சுற்றி எப்போதும் தோழியர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

அப்பாவுக்கு செல்ல மகள். இட்டதுதான் சட்டம்.

தமிழ் படித்து வளர்ந்தாள்.

*

பக்கத்தில் இன்னொரு கிராமம். சமதளம்.. கொஞ்சம் செழிப்புதான்.

அங்கு ஒரு பண்ணையார். நல்லவர். அவர் மனைவி தங்கமானவள்.

அவருக்கும் ஒரே மகன். அம்மா செல்லம்.

கருப்பு என்றாலும் அழகன்.

நன்கு  டிரஸ் பண்ணிக்கொண்டு, நண்பர்களை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றுவதுதான் அவன் பொழுது போக்கு.

ஊரின் வம்புச் சண்டைகள் எல்லாம் அவனைத்  தேடி வந்தன.

தினம் ஒரு சண்டை.

நல்லவன்தான்.. ஆனால் ஊர்ப் பிரச்சினை முழுவதும் அவன் தலையில்.

பல பெண்களுக்கு ஏனோ அவனைக் கண்டவுடன் பிடித்து .விடும்.

வாத்தியார் மகளுக்கும் அவன் மேல் வந்தது – வேறு என்ன காதல்தான்.

*

“அப்பா.. நான் அவரைத்தான் கல்யாணம் செய்யப் போறேன்” செல்லமாய் வளர்த்த மகளின் பிடிவாதம்.

நல்ல விதமாய் சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை.

சரி அவள் விருப்பம் என்று அவனிடம் சென்று பேசினார்.

“நானே உங்ககிட்ட வந்து எங்க அம்மாவை கேட்கச் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே வந்து கேட்டுட்டிங்க”..

“எனக்கு ஒரே பொண்ணு. வெளிப்படையாவே பேசிறேன். உனக்கு ஒரு நிரந்தர வேலை இல்ல. வம்பு தும்பு வேற அதிகம்..அப்பாவா என் நிலைமை புரியுதா?”

அவர் கைகளை பிடித்துக் கொண்டான்.

“ஐயா.. நான் உங்க மகளை தாங்கு தாங்குன்னு தாங்குவேன். என் நெஞ்சுக்குள்ளேயே வச்சுக்கிறேன். ஆனா.. நான் இந்த ஊர்லே நிறைய நாள் இருக்க மாட்டேன். என் கூட அவளையும் கூட்டிக் கொண்டுதான் போவேன்”

மகள் சந்தோஷமாக இருந்தாள் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

“இன்னொரு முக்கியமான விஷயம்… எனக்கு ஊர் வேலைகள் ஜாஸ்தி. எனக்குன்னு குழந்தை குட்டிகள் பெத்துக்கனும்னு ஆசை இல்ல.. உங்க மகள்கிட்டே சொல்லிடுங்க”..

*

இவர்களின் பேச்சை உள்ளில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அவன் அம்மா கண்ணை துடைத்துக் கொண்டாள்.

ஊரே கொண்டாடும் அந்தப் பெண் தன் வீட்டு மருமகளாய் வரப் போகிறாள் என்ற சந்தோஷம் ஒரு புறம்.

ஆனால் அவள் தன்னுடன் இருக்க போவதில்லை. நமக்கும் பேரன், பேத்தி பார்க்கும் யோகம் இல்லை என்ற வருத்தம் கண்ணீராய் வழிந்தது.

ஒரு கால் கட்டு போட்டாலாவது தன் மகன் ஊர்ப் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பான் என்று எண்ணி சமாதானம் செய்து கொண்டாள்.

*

பெண், அப்பா சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பிறகும் உறுதியாய் இருந்தாள்.

அவள் எப்படியெல்லாம் ஆசைப்பட்டாளோ, அப்படியே விமரிசையாக திருமணம் நடந்து.

மறு நாளே பொண்ணும், மாப்பிள்ளையும் ஊரை விட்டு சென்று விட்டனர்.

*

நாட்கள் உருண்டோடின.

பெண்ணின் அப்பாவுக்கும், மகனின் தாய்க்கும் தனிமை வாட்டியது.

சம்பந்திகள் இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்து மனதை ஆற்றிக் கொண்டனர்.

பேரன் இல்லாத சோகம் அவரை வாட்டியது.

அவன் அம்மாவுக்கோ, அவன்  தன்னுடன் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அடுத்து என்ன நடக்குமோ என்று பரபரவென இருந்த, மகிழ்ச்சி நிறைந்த கடந்த நாட்களை எண்ணி தினமும் அழுகை வந்தது.

அவள் இவரிடம் வந்து அவன் கதைகளை சொல்லிப் புலம்புவாள்.

தமிழாசிரியாரால் வேறு என்ன செய்ய முடியும்.

அந்தக் கதையெல்லாம் பாட்டாக எழுதி வைத்தார்.

*****

ஆண்டாளின் அப்பா விஷ்ணு சித்தரைப் பற்றி பல கதைகள் இருக்கலாம்.

எனக்கு தெரிந்த, பிடித்த விஷ்ணு சித்தரின் கதை இதுதான்.

தவறிருந்தால் மன்னியுங்கள்.

*

நிறைய பேருக்கு நம்மாழ்வாரைப் பிடிக்கும்.

எனக்கு பெரியாழ்வார்.

என்னைப் போல் ஒரே மகளைப் பெற்ற அப்பாவாக இருந்தால், உங்களுக்கும் அவரின் இந்த அருமையான பாசுரம் பிடிக்க வேண்டும்.

ஒரு மகள் தன்னை யுடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்

செங்கண் மால் தான் கொண்டு போனான்

பெருமகளாய்க் குடி வாழ்ந்து

பெரும் பிள்ளை பெற்ற அசோதை

மருமகளைக் கண்டு (உ)கந்து

மணாட்டுப் புறம் செய்யுங் கொலோ.

அவளே காதலித்து கல்யாணம் செய்து கொண்ட தன் ஒரே மகள், போகிற இடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டுமே, மாமியார் அவளை நன்றாக நடத்த வேண்டுமே என்ற கவலை நிறைய தந்தையருக்கு வந்திருக்கலாம்.

எல்லோருக்கும் வரும். .

****************

தன் மகள் ஆண்டாளுக்கு, கண்ணன் காதலன் என்பதை அவர் அறிந்து கொண்டதை எப்படி சொல்கிறார் பாருங்கள்.

சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார் கொண்டோட

ஒருகையால் ஒருவன் தன் தோளை யூன்ற ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்

அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அதுகண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே.

 

கண்ணன் அவன் நண்பர்களுடன் ஊர் வலம் வருகிறான்.

ஒரு கை தன் தோழன் மேல். மற்றொரு கையில் ஆவினங்களை கூப்பிட உதவும் சங்கு.

தன் அருகில் நின்று கொண்டு என் மகள் அவனையே பார்க்கிறாள்.

அவள் முகத்தில் வாட்டம். உடலில் மஞ்சள் பூசி இருக்கிறது.

அதைப் பார்த்து இந்த ஊர் அவனையும் என் மகளையும் சேர்த்து புறம் பேசுகிறது.

 

கண்ணன் மீது அவருக்கு இருக்கும் சந்தேகம்.  ஊர் வம்பு இழுத்துக் கொண்டு சுற்றுகிறானே. இவனுக்கு என் மகளை எப்படி கல்யாணம் செய்து கொடுப்பேன்?

குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ

நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்த கோபன் மகன் கண்ணன்

இடையிரு பாலும் வணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி

கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ.

நாள் முழுவதும் அவன் வீட்டில் தயிரைக் கடைந்து கடைந்து, கை தழும்பேறி, தன் மகள் என்ன பாடு படப் போகிறாளோ என்ற அச்சம்.

*********

மகளை பெருமாளுக்கு கொடுத்து விட்டு பேரனுக்காக ஏங்கிய விஷ்ணு சித்தர், தன் மருமகன் மீது பாடிய பாடல்கள் அனைத்தும் பாசம் சொட்டும் வரிகள்.

அவனின் தாயாய் தன்னை எண்ணி அவர் உருகி உருகி எழுதிய வரிகள்.

அவனை தொட்டிலிட்டு, தாலாட்டி, குளிப்பாட்டி, பூச்சூட்டி, காப்பிட்டு, அவனுக்கு , நிலாவைக் காட்டி, காக்காயை காட்டி, அவனை ஆட விட்டு அழகு பார்த்து, அவன் சப்பாணி கொட்டி, அப்பூச்சி காட்டுவதில் மயங்கி, தளர் நடையை ரசித்து, அச்சச்சோ கொட்டி, முதுகை கட்டிக் கொள்வதில்  நெகிழ்ந்து…

மனதால் எழுதிய வரிகள்.

அந்தத் தாயே சொல்ல சொல்ல எழுதியிருக்காவிட்டால் இப்படி உணர்வு பூர்வமாக இருக்காது என்பதுதான் என் கற்பனை கதை.

ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.

தாய் தன் மகனை தாய்ப்பால் அருந்த அழைக்கும் பாடல்

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிரும் நறு வெண்ணெயும்

இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்! நீ பிறந்த பின்னை

எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே

முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.

“நீ பிறந்த பின் எனக்கு பால், தயிர், வெண்ணை, நெய் எதுவுமே கிடைக்கல. அப்படியும் என் தாய்ப் பால் சுரக்கிறது.

நீ என்ன சேட்டை பண்ணினாலும் நான் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டேன்.

அழாக சிரிச்சுண்டே, மூக்கை உறிஞ்சி உறிஞ்சி பால் குடிக்க வாடா என் கண்ணே!”

என்று கொஞ்சுவதை,

இருக்கும் உணவை தன் குழந்தைகளுக்கும், அவன் கூட்டிக் கொண்டு வந்த நண்பர்களுக்கும் கொடுத்து விட்டு, மீதியதை உண்டு, அரைப் பசியிலும் சுரக்கும் தாய்ப்பாலை, குழந்தைக்கு மீண்டும் பசிக்குமே என்று அருந்த கொடுக்கும் எந்த தாயும் சொல்லுவதாக பொருத்திப் பார்க்க முடியும்.

அவர் எழுதிய அமுத தமிழ் வரிகளை ரசிக்க வைஷ்ணவராக இருக்க வேண்டியதில்லை. தாயாக கூட வேண்டியதில்லை.

தந்தையாய், தாத்தாவாய் இருந்தால் போதும்.

*

அதையெல்லாம் சொல்லி முடித்த பின் அவனை இராமனாய், கிருஷ்ணனாய் அவன் அருமை பெருமைகளை பல பாடல்களில் சொல்லி அவரைத் தேற்றிக் கொள்கிறார்.

இறுதியாய் தானும் அந்த பரமாத்மாவிடம் சேர்ந்து கொண்டதை பாடும் ஒரு அற்புதமான பாசுரம்..

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்

பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்

அற்றம் உரைகின்றேன் இன்னம்  ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர்

பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே

மாடு மேய்த்து என் மகளை கவர்ந்த மதுரன் தன்னையும் ஆட் கொண்டு விட்டான்.

இனி தனக்கு தனிமைப் பிணி இல்லை. எந்தப் பிணியும் இல்லை.

******

நல்ல திருப்பல்லாண்டு நான் மூன்றோன் வாழியே

நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரியலானி தனிற் சோதி வந்தான் வாழியே

தொடை சூடிக் கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே

செல்வநம்பி தனைப் போலச் சிறப்புற்றான் வாழியே

சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே

வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள