சாதிகள் இல்லையடி பாப்பா

சென்னையில் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம்

பெற்றோர் சம்மதத்துடன் உற்றார் உறவினர் எல்லோரும் வந்து வாழ்த்த நடந்த கலப்பு மணம்.

எங்கும் மகிழ்ச்சி.

பந்தியில் சாப்பிடும் போது நல்ல உடை அணிந்த நான்கு ஐந்து பெண்கள் குறுக்கும் நெடுக்கும்  நடந்து “வேற எதாவது வேணுமா சார்” என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவரைக் கேட்டேன்.

“அண்ணாச்சி.. யாரு இந்தப் பொண்ணுக? நம்ம ஊரு பக்கம் மாதிரி தெரியலயே. மாப்பிள்ளை வீடோ?”

பெண் வீட்டார் தெக்கே சைவப் பிள்ளைமார் வகை.

“என்னத்த…..ச் சொல்ல”.. என்று அலுத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

“ஏன் அண்ணாச்சி! ஏதேன் தப்பாக் கேட்டுட்டேனா?”

“எல்லாம் Contract தம்பி. பந்தியிலே பரிமாறுத  பயலுவளப் பாருங்க. தொப்பியும், கழுத்துலே சிவப்பு கலர் கோவணமும்”

“அது Tie லா”

“இந்தப் பொண்ணுக பந்தி உபசாரத்துக்கு. நல்ல ஏற்பாடு தான். என்ன வேணும்னு கேட்கவாவது நாலு பேர் வாராக. என்ன.. எல்லாரும் RMKV சௌளி கட கணக்கா, சார் வேற என்ன வேணும், மேடம் என்ன வேணும்னு கேட்குதுக.  மாமா சாப்டியளா. சுகர் ஏதும் இல்லேல்லா..இன்னும் கொஞ்சம் கேசரி போட்டுக்கிடுங்க. அப்படின்னு சொல்லவாவது கத்துக் கொடுத்திருக்கலாம்”.

அப்போதுதான் கவனித்தேன். எல்லா பெண்களும் ஒரே மாதிரி புடவை அணிந்திருந்தனர். அத்தை மதினி மாமா மாமி எல்லாம் இல்லை. எல்லோரும் சார் மேடம் தான்.

சாப்பிட்டு விட்டு கை கழுவி வெளியே வந்தால் தாம்பூலப் பைக்கு பதில் மல்லிகைப் பூ, நந்தியா வட்டை, துளசி செடி வகைகளை ஒரு துணிப் பையில் போட்டு கொடுத்தனர்.

அங்கு இருந்த பெண் “மாமா.. வீட்டுலே கூட்டிட்டு வரலையா. நம்ம ஊர் மண்ணுலே  கொண்டு வைங்க. தாமிரபரணித் தண்ணிக்கு சட்டுனு வளந்துரும்” என்றார்.

அண்ணாச்சி அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்து கண் கலங்க  சிரித்து பின் முகம் திருப்பி துண்டை எடுத்து கண்ணைத் துடைத்துக்  கொண்டார்.

“நான் ஒரு காட்டுப் பய. அவசரப்பட்டு குத்தம் சொல்லிட்டேன் தம்பி. தப்பா நினைக்காதிய.  பொண்ணும் பையனும் சந்தோசமா  இருக்கணும் பேராச்சி” என்று இங்கிருந்தே கன்னத்தில் போட்டுக்  கொண்டார்.

“தாயி… ஊர் பக்கம் வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும்”

“அதுக்கென்ன மாமா.. கண்டிப்பா வாரேன்”

மறு நாள் இன்னொரு விசேஷம் நான் தங்கியிருந்த ஹோட்டலில்.

பிராமணாள் வீட்டு விசேஷம்.

அங்கேயும் அதே பெண்  தாம்பூலப் பை கொடுத்துக்  கொண்டிருந்தார்.

“என்ன மாமி தனியா வநதிருக்கேளா!.  மாமாவை அழச்சுண்டு வரலையா?. பட்சணம் தனியா பைலே தரேன். எண்ணை ஆயிடுமோன்னோ”

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply