சிறு கால் கொன்றை

இன்று வீட்டில் கொன்றைப் பூ பூத்துக் குலுங்கத் தொடங்கி விட்டது. 

மனைவி சில வருடங்களுக்கு முன் நட்டு வைத்த மரத்தின் முதல் சரங்கள்.

வைத்த முதல் வருடத்தில் இருந்து அவள் ஏக்கத்துடன் பார்த்து பேசிக் கொண்டே இருந்த மரம்.

மூன்று வருடங்களாய் பூக்காமல், இந்த வருடம் பூத்துக் குலுங்குகிறது.

கொன்றை என் மனைவிக்கு பிடித்த மரம்.

சரம் சரமாய் பொன் நிறத்தில் பூத்துத் தொங்கும் மரத்தை எங்கு பார்த்தாலும் நின்று ரசிக்காமல் அவள் போவதில்லை.

எனக்கும் கொன்றையின் மீது பிரியம் வரக் காரணம், அந்த மலருக்கு சங்க இலக்கியத்தில் கொடுக்கபட்டிருக்கும் முக்கியத்துவம்தான்.

சங்க இலக்கியத்தில் எல்லா அகப்பாடல் தொகுப்புகளிலும் கொன்றை விரவித் தொங்குகிறது.

“பொன் என மலர்ந்த கொன்றை”, “சுடு பொன் அன்ன கொன்றை”, “பொலன் அணி கொன்றை” என்று கொன்றை, தங்க அணிகலன்களுக்கு உவமையாகச் சொல்லபட்டிருக்கிறது.

கொன்றையில் சரக் கொன்றை அல்லது சிறு கால் கொன்றை என்று ஒரு வகையும் (cassia fistula), புலி நகக் கொன்றை  (cassia sophera) என்று மற்றொரு வகையும் பாடப் படுகின்றன.

என் வீட்டில் உள்ளது சரக் கொன்றை.

பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் நீண்டு தொங்கும் பொன் மொட்டுக்கள்.

கொன்றை மலர்ந்தால், காதலனும் காதலியும் சேரும் காலம் என்பது சங்கப் பொருள் இலக்கணம்.

கொன்றைப் பூ மலர்ந்ததால் விரைவில் திருமணம் வரும் என்ற பொருளில் பல பாடல்கள் இருக்கின்றன.

கொன்றை மலர்ந்தும் காதலர் இணையாத பாடல்களில், கொன்றை காலம்மாறிப் பூத்து விட்டது என்று தோழி, தலைவியை தேற்றும் பொருளிலும் சில பாடல்கள் இருக்கின்றன.

******************

படித்ததும் முகத்தில் புன்னகை வரவழைக்கும் அருமையான பாடல்கள் இரண்டு குறுந்தொகையில் இருக்கின்றன

குறுந்தொகை 233, பேயனார்முல்லைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது

கவலை கெண்டிய அகல் வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ  தாஅய்ச் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன,
கார் எதிர் புறவினதுவே 

(கவலை  – கிழங்கு, ஒள் வீ – ஒளிரும் பூக்கள், மூய் – மூடி; கார் – மழை காலம், புறவு – காடு).

நிலத்தில் கிழங்கு தோண்டி எடுத்த பின் விட்டுச் சென்ற பெரிய வாயை உடைய சிறு குழிகள்.

அதில் வீழ்ந்து சொரிந்த கொன்றைப் பூக்கள்.

பொன் நிறைந்து வாய் திறந்து இருக்கும் பேழை போல் இருக்கிறது, கொன்றை பூக்கள் நிறைந்து வழியும் கிழங்கு தோண்டிய குழிகள்.

இது போல பொன் நிறைந்த தன் துணைவி குடும்பத்தின்  செல்வச் செழிப்பை தலைவன் சொல்வதாக விளக்கம்.

எனக்கு என்னவோ, தன் மனைவிக்கு பிடித்த பூக்களை அவளுடன் சேர்ந்து பார்க்க விரும்பி சீக்கிரம் வீடு தேடிச் செல்கிற ஆசை கணவனுக்கு நிரம்பி வழிவதாகத் தான் தெரிகிறது.

அழகிய பூக்கள் பூத்திருக்கும் காடுகளைக் கடந்து , தன் மனைவியைத் தேடிச் செல்லும் கணவன், அவற்றை ரசித்துக் கொண்டு நில்லாமல் அவளுடன் திரும்பி வருகிறேன் என்று மரங்களிடம் சொல்லி விட்டு விட்டு போய் விடுகிறான்.

ஐங்குறுநூறு 420பேயனார்முல்லைத் திணை தலைவன்சொன்னது

பொன் என மலர்ந்த கொன்றை, 

மணி எனத் தேம்படு காயா, மலர்ந்த தோன்றியொடு,

நன்னலம் எய்தினை புறவே,

நின்னைக் காணிய வருதும் யாமே

வாணுதல் அரிவையொடு, ஆய் நலம் படர்ந்தே.

(வாண் – ஒளி பொருந்திய, நுதல் – நெற்றி, அரிவை – பெண்; )

கொன்றையில் தன் மனைவியின் பொன் நிறத்தையும்;

காயா மலரில் தன் மனைவியின் கூந்தலையும்;

மலர்ந்த பூக்களில் அவள் சிரிப்பின் நிறைவையும்;

கண்ட கணவன் , அவற்றை நின்று ரசித்து காலம் கடத்தவில்லை.  

அவளைக் கண்டு, முயங்கி, அவள் நலம் அடைந்து பின் காட்டின்  நலத்தை காண அவளுடன் தான் வருவேன் என்று சொல்லிச் செல்வதாகப் பாடல்.

இந்த பாடலை சில வருடங்களுக்கு முன்னால் புரிந்து படித்து இருந்தால் காலாகாலத்தில் திருந்தி இருக்கலாம்.

நாடு விட்டு நாடு சென்று, நாள் கழித்து வீடு திரும்பிய பின்,  அடித்துப் பிடித்து ஆபீசுக்கோ, conference call எடுக்கவோ போகாமல். கை பேசியைத் தவிர்த்து மனைவியை அவளுக்கு பிடித்த பூக்கடைக்கு கூட்டிப் போயிருக்கலாம்.

************

இயற்கையை கொண்டாடிய சங்க கால நாகரீகம், கொன்றைப் பூவை பாடி மகிழ்ந்து இருக்க வேண்டும்.

கொன்றைப் பூவை மையமாக வைத்து தொடர்ச்சியாக பாடல்கள். ஞாழல் பத்து என்று ஐங்குறுநூறு தொகுப்பில் வருகின்றன.

ஞாழல் என்பது புலி நகக் கொன்றை.

அந்தப் பூக்களையும் மரத்தையும் வைத்து ஒரு அழகிய காதலைச் சொல்லுகின்றன பத்துப் பாடல்களும்.

மூன்று வரிகளில் மேலோட்டமாக ஒரு ஹைக்கூ போலத் தோன்றினாலும், பத்து பாடல்களையும் உரையுடன் படிக்கும் போது, அர்த்தம் புரிய, வியப்பு விரியும் வரிகள்.

ஒரு செல்வக் குடியில் பிறந்த செல்ல மகள்.

அவளுக்கும் காதல்.

காதலுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

காதலன் பணக்காரன் இல்லை போலும். அவனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க குடும்பத்து பெரியவர்கள் சிலர் விரும்பவில்லை.

பொருள் சேர்க்க காதலன் விலகிச் சென்று விட்டான்.

அந்த கொன்றைக் காதலைப் பார்க்கலாம்.  

ஐங்குறுநூறு 142, அம்மூவனார்நெய்தல் திணை 

எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப்படு சினைப்
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி, படீஇயர் என் கண்ணே

(ஏக்கர் – நீர்த்துறை ; இறங்கு – தாழ்ந்த; இனர்ப்படு   – பூ நிறைந்த; சினை – கிளை;  புள் – பறவை; இறை கூறும் – வந்து தங்கும் – உள்ளேன் – நினைக்க மாட்டேன்; படீஇயர் – உறங்கட்டும்)

காதலன் இன்னும் தன்னை மணம் செய்ய வரவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் தலைவியின் உரை.

பூ நிறைந்த கிளைகளில் பறவைகள் வந்து தங்கும். கொன்றை மரங்கள் நிறைந்த கடற்கரை தலைவனை நான் நினைக்க மாட்டேன். என் கண்கள் உறங்கட்டும்.

பறவைகள் நேரம் அறிந்து தங்கள் உறைவிடம் வந்து விட்டன. இவனுக்கு நேரம் வந்தது தெரியவில்லை. என் மீது படுத்து உறங்க மனம் வரவில்லை. அவனை நான் ஏன் நினைக்க வேண்டும்?  

இங்கு “இறங்கு சினை” என்று மரத்தை வர்ணிக்கிறார் அம்மூவனார் . மாடு குட்டி போட்டு கிளை விரிப்பதும் “சினை”, மரங்கள் வளர்ந்து கிளை பரப்புவதும் “சினை”.

பறவைகள் வந்து தங்கட்டும் என்று தாழ்ந்து கொடுக்கும் மரம்.

காதலன் வந்து தலை சாய்த்துக் கொள்ள காத்திருக்கும் காதலி.

பறவைகள் வந்து மரங்களில் உறங்கின. ஆனால்….

*************

எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்,
மாயோள் பசலை நீக்கினன் இனியே

(பெருஞ்சினை – வளர்ந்த கிளைகள்; ஓதம் வாங்கும் – கடல் நீர் அரிக்கும், மாயோள் – பெண்)

வளர்ந்த கிளைகள் இடையே சிறிய இலைகள் உள்ள மரத்தினை கடல் நீர் அரிக்கும் கடற்கரை தலைவன்; என்னுடைய பசலை நோயை நீக்கினான்.

மறுபடியும் ஒரு ஹைக்குவின் முன்னோடி.

வளர்ந்த மரம் ஆனால் சிறிய இலை.

அந்த வளர்ந்த மரத்தையும் கடல் நீர் மீண்டும் மீண்டும் வந்து மோதி  அரித்து விடுக்கிறது.

இதைப் புரிந்து கொள்ள உரை ஆசிரியர்கள் துணை தேவைப்படுகிறது.

பெரிய குடும்பம் அவளுடையது. ஆனாலும், அவன் பணக்காரன் இல்லை என்பதால் அவனுக்கு தன்னை மணம் செய்து கொடுக்க மறுத்து விடும் சிறிய மனதுடைய பெரியவர்கள் இருக்கிறார்கள். – பெரிய மரம் சிறிய இலைகள். .

அவன் சளைத்தவனில்லை.

மீண்டும், மீண்டும் முயற்சி செய்து அவர்கள் மனத்தை மாற்றி விடுகிறான் – கடல் நீர் மோதி மோதி அரித்து விடும் பெரிய மரம்.

மாற்ற என்ன செய்தான் என்பதை அடுத்த பாடலில் பார்க்கலாம்.

பெரியவர்கள் மனம் மாறியதும், அவர்கள் திருமணமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

அதனால் அவள் மேல் படர்ந்திருந்த பசலை நீங்கி விடுகிறது.

இனிமை நிறைந்தது.

இந்த மரம் “சிறி இலை பெருஞ்சினை” உடைய மரம்.

****************

எக்கர் ஞாழல் மலர் இன் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்,
தண் தழை விலையென நல்கினன், நாடே.

(தழை – ஆடை; அயரும் – அணியும்; ஒண் – அழகு, ஒழுங்கு, மிகுதி, தண் – குளிர்ச்சி; நல்கினன் – கொடுத்தான்)

இந்த மரம் பூக்கள் இல்லாத மரம். இலைகள் நிரம்பியது. அந்த மரத்தில் இலைகளை தைத்து ஆடையாக அணியும் ஊரின் தலைவன், இந்த திருமணத்துக்கு விலையாக தன் நாட்டைக் கொடுத்தான்.

நாட்டை கொடுத்து திருமணம் செய்து கொண்டான். அவளை பட்டத்து அரசி ஆக்கினான் என்று வைத்துக் கொள்ளலாம்.

பாடலின் அருமை அதில் இல்லை.

காதலை மேலும் உயர்த்துவது பூக்கள் இல்லாத கொன்றை மரம்.

பூக்கள் இல்லாததால், இலையை ஆடையாகக் உடுத்திக் கொண்டனர்.

பெரியவர்களை சம்மதிக்க வைக்க பூ இன்றி இலைகள் உள்ள மரம் போல, தன் நாட்டை மட்டுமே மண விலையாக கொடுத்தான்.  

மணந்து சொரியப் போகும் பூக்கள் போன்றது அவன் அன்பு. அதை தன் வருங்கால  மனைவிக்கு கொடுப்பான். 

இந்த மரம் மலர்கள் இல்லாமல் இலைகள் அடர்ந்து வளர்ந்திருக்கும் மரம்.

************

எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீ இனிது கமழும் துறைவனை,
நீ இனிது முயங்குமதி, காதலோயே

(இகந்து படு – வரம்பின்றி வவளர்ந்த; வீ – மலர்; கமழும் – மணக்கும்)

வரம்பின்றி செழித்து வளர்ந்த கிளைகளில், மலர்ந்து நல்ல மணம் பரப்பும் பூக்களையுடைய கொன்றை மரங்கள் நிறைந்த கடற்கரை உடைய நாட்டின் தலைவனுடன் நீ மகிழ்ச்சியாக முயங்கு தோழியே.

திருமணம் முடிந்து முதல் இரவுக்கு அனுப்பி வைக்கும் தோழி சொல்வதாகப் பாடல்.

பெரிய கிளைகள் வரம்பின்றி வளர்ந்து இருப்பது போல உன் கணவனின் அன்பும் அளவு இல்லாதது.

பூக்கள் மலர்ந்து மணம் வீசுவது போல உங்கள் வாழ்க்கை மலரட்டும்.

நீ இன்று இரவு உன் கணவனோடு மகிழ்ச்சியாக உறவைத் தொடங்கு.

முயங்குதல் என்பதற்கு புணர்தல் என்பது பொருள்.

இனிது முயங்கு மதி காதலோயே – அருமையான தமிழ் சொல்லாடல்.

இதை ஆங்கிலத்தில் கொச்சையாகச் சொல்ல வேண்டும் என்றால் – “make sweet love.. my friend” என்று தான் எழுத வேண்டும்.

இகந்து படு பெருஞ்சினை – வரம்பின்றி வளர்ந்த கிளைகள் உடைய மரம் இந்த மரம்.

**********

ஒரே மரத்தைக் கொண்டு, அதன் கிளைகளை பல விதமாக உவமைப்படுத்தி ஒரு அற்புதமான உறவை வர்ணிக்கும் பாடல்கள்.

இவை ஒரு நாடகத்துக்கு எழுதப்பட்ட பாடல்களாக இருக்கலாம்.

திணை, துறை என்று சொல்லி நம்மை பயமுறுத்தி விட்டனர் சில தமிழாசிரியர்கள்.

ஒரு நாடகச் சூழல் என்று எடுத்துக் கொண்டாலோ, அல்லது தன் காதலை நினைத்துப் பார்க்கும் ஒரு பெண் அல்லது ஆணின் வரிகள் என்றாலோ, பொருள் புரிவது எளிதாகி விடுகிறது.

இப்போதைய நடையில் எழுத வேண்டும் என்றால் பின் வருமாறு எழுதலாம்.

கடற்கரை எங்கும் கொன்றை மரங்கள்.

காட்சி அமைப்பு

நேரம் –  மாலை நேரம்.

இடம் – பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்  நிறைந்த ஒரு கடற்கரை.

பாத்திரங்கள் – கணவன் மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகள், நண்பர்கள்.

காதலில் விழுந்து, உறவினரின் சம்மதம் கிடைக்க பாடு பட்டு, அது கிடைத்த பின் தொடங்கிய அழகிய மண வாழ்வை நினைத்துப் பாடும் மனைவியின்  வரிகள்.

தாழ்ந்து விரிந்த கிளைகளுடன் சில மரங்கள்.

அதில் நேரம் தவறமால் வந்து உறங்கும் பறவைகள்.

அவனை நினையேன், என் கண்கள் உறங்கட்டும்.

 

சிறிய இலைகள், பெரிய கிளைகளுடன் சில மரங்கள்.

அலைகள் வந்து அடித்து அடித்து மோதின

அரித்து போனது அடி மரம்.

 

பூக்கள் இன்றி இலைகள் நிறைந்த சில மரங்கள்.

பூக்கள் இல்லாத மரங்களின் இலைகளே ஆடைகளாயின

எனக்கும் கிடைத்ததொரு அழகிய ஆடை.

 

வரை இன்றி வளர்ந்து பரவியது ஒரு மரம்.

அதில் பூக்கள் மலர்ந்து சொரிந்து மணந்தன

இனித்து தொடங்கியது புது உறவு.  

***********

எங்கள் தோட்டத்தில் நட்டு வைத்த மரமும் பரந்து வளர்ந்து, இலைகள் தோன்றி உதிர்ந்து, அஞ்சிறைத் தும்பிகள்  மொய்க்க பூக்கத் தொடங்கி விட்டது.  

*

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள