சுகாவின் உபசாரம்

நீண்ட நாட்களுக்கு பின் என் அண்ணா பெங்களூர் வந்திருந்தான். பேசிய நேரம் குறைவு. கைபேசியில் நோண்டிக் கொண்டே இருந்தான்.

“அப்படி என்னதான் இருக்குண்ணா facebookல” ஏர்போர்ட் selfie, வடிவேல் mms, தவிர?”

சில நல்ல எழுத்துக்களை காண்பித்தான். அனன்யா மகாதேவன்,  ரோகிணி கிருஷ்ணா.

நடுவே சுகாவின் பதிவுகள். “சுகா கூட என் facebook friend தாண்டே” திருநெல்வேலி எட்டிப் பார்த்தது.

சுகாவை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது என் அண்ணாதான்.

“கணேஷ் உனக்கு Schaffter ல சுகான்னு classmate உண்டா?. ஆனந்த விகடன்லே உன் பேர்லாம் போட்டு எழுதிருக்கான்”.

பள்ளியில் என் பெயர் கணபதி சுப்ரமணியன். என் வகுப்பிலும் தெப்பக் குளத் தெரு ராம சுப்ரமணியமும் குஞ்சுவும் உண்டு. சுகா என் பள்ளி தான். ஆனால் அவர் எனக்கு ஜூனியர்.

எல்லா வருடமும் ஒரு கணபதி சுப்ரமணியன், ராம சுப்ரமணியன், குஞ்சு (சங்கர நாராயணன்) இருந்திருக்க வேண்டும்.

பிறகு அவரது மூங்கில் மூச்சு படித்தேன். ரவி எனக்கு தாயார் சந்நிதியும், சொல் வனமும் அறிமுகப்படுதினார். அதே சந்திப்பில் தான் ரவி எனக்கு புலி நகக் கொன்றையையும், நான் அவருக்கு கி.ரா. வின் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” புத்தகத்தையும் பரிமாறிக் கொண்டோம்.

காவேரி நதி வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த ரவிக்கும் சுகாவைப் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை. 

பாசாங்கு இல்லாத நல்ல தமிழ் வாசிக்கும் எல்லோருக்கும் சுகாவைப் பிடிக்கும்.

சுகாவின் பழைய கட்டுரையில் வரும் ஜென்சியும், செண்பகத்தக்காவும் மறக்க முடியாதவர்கள். அதைப் படித்ததினால் ஜென்சியின் அறியப்படாத பாடல் எனக்கு கேட்க கிடைத்தது.  “ஞான் ஞான் பாடனும்”.

ஜென்சி பாட்டு கேட்கும் நாட்களில் எல்லாம் சுகாவும் நினைவில் வருவார். ஏழு நாட்களும் ஜென்சி பாட்டு கேட்கும் வாரங்கள் அதிகம்.

உபசாரம் சுகாவின் புதிய புத்தகம்.

kindleல் வாங்கி flightல் செல்பி எடுக்கும் கும்பலுக்கு நடுவில் படித்து முடித்து விட்டேன்.

ஏற்கனவே சொல்வனத்தில் படித்த கட்டுரைகள் பல.

எனக்கும் சுகாவின் மீனாட்சி போலவே திருநெல்வேலி நாக்கு.

சங்கர் கபே முந்திரி ராவா தோசை, பன்னீர்  டீ, புட்டாரத்தி அம்மன் கோவில் முக்கு சுக்கு காப்பி, சதன் டீ ஸ்டால் விவா டீ.

பத்து கோடி மைல்கள் சேர்த்து உலகம் சுற்றி பல ஊர் உணவெல்லாம் சாப்பிட்டு முடித்த பின்னும் நாவில் நிற்கும் ருசி.

லண்டனில் ஒரு குளிரான மாலையில் நடந்து களைத்து St. James Court தாஜ் ஹோட்டல் Quilon restaurant ல் சாப்பிட்ட போனால் Welcome Drink மிளகு ரசம்.

அதை கொண்டு வந்து வைத்த பையன் திருநேல்வேலி சாயல். சிறிது நேரம் குசலம் விசாரித்ததில்   “எங்க அம்மாவுக்கு சொந்த ஊர் கல்லிடை குறிச்சி”. என்றான்.

இன்னும் ரெண்டு கிளாஸ் கொண்டு வந்து “குடிங்க சார். குளிருக்கு இதமா இருக்கும்”. சுகா தான் உடன் நினைவுக்கு வந்தார்.

சுகாவின் குசும்பு தாமிரபரணிக்கே உரியது. முப்பாட்டன் புதுமைப்பித்தன் விட்டுச் சென்றது. கடவுளையே கலாய்த்த கந்தசாமிப் பிள்ளையின் வாரிசு.

தஞ்சாவூர் எத்து ஊசி போல் குத்தும். எங்கள் ஊர் குசும்பு அல்வா சாப்பிட்டு அதன் பின் உள்ளே தள்ளும் நாட்டு வாழைப் பழம் போன்றது.

“என்னாச்சு கண்ணுலே தண்ணி?”

“ஒரு கதை சொன்னார். அழுதுட்டேன்”

“அது சரி. அதென்ன ஒரு கண்ணிலே மட்டும் தண்ணி?”

“இண்டர்வல் வரைக்கும்தான் சொன்னார்”

“(போன்ற) கவிதைகள் மூலம் facebookல் அவரது முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மத்தியில் உலகப் பெயர் பெற்ற ஒரு கவிஞர். தோராயமாய் ஒரு ஆகாயம் (அவரது வெளி வராத கவிதை தொகுப்பு)”

“என்ன சார் சொல்றிங்க. (அவர்) கவிஞரா?”

ய்யோவ். குசும்பன்யா நீர்

சொந்த ஊர் இலக்கியம் என்று ஒரு வகை வரையறுத்து இலக்கணம் எழுதப்படும் போது சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளை அடுத்து சுகாவின் புத்தகங்கள் தான் சூத்திரத்துக்கு மேற்கோள் காட்டப்படும்.

சுஜாதா தன் தந்தையின் மறைவைப் பற்றி எழுதிய கட்டுரை பலரைப் பொறுத்த வரை நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு முத்து.

அதே தரத்தில்  சுகாவின் “தி. க. சி இல்லாத திருநெல்வேலி”.

படித்து விட்டு யாரும் பார்த்து விடுவதற்கு முன் கண்ணை துடைத்துக் கொள்ளுவதற்கு திருநெல்வேலிக்காரனாய் இருக்க வேண்டியதில்லை.

பாலு மகேந்திராவை பெருமைப்படுத்தும் பல படங்களும், ஜெயகாந்தனும் சாமிநாதனும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தகங்களும் அவர் படைப்பார்.

எங்கள் ஊர் காந்தி அம்மையும் நெல்லை கோவிந்தனும் அருள் புரிவார்கள்.

******************

இருட்டு கடை முன் சாரம் கட்டிக் கொண்டு சைக்கிளை நிறுத்தி விட்டு நானும் என் நண்பன் சங்கானியும் (சங்கர நாராயணன்) அல்வா சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.

சாப்பிட்டு முடித்து அங்கு தொங்கும் குமுதம் தாளில் சிரிக்கும் ரம்பா தொடையில் கை தொடைத்து விட்டு காரத்துக்கு (mixture) கை நீட்டும் போது இன்னொரு கையும் நடுவில் நுழைகிறது.

“யாருலே அது நடுவுல.  செத்த பொறுலே..” என்று திரும்பினால் சுகா

“ஏய் நீ சுகா இல்லே”

“நீ கணவதி தானே. schaffter லே படிச்செல்லா? சுதந்திரம் வாத்தியார் கிளாஸ். இங்கிலீஷ் மீடியம் 6A?”

“கமலஹாசன் கூட வந்திருக்க போல. குஞ்சு வரலையா?”

“இல்லே சப்பாணி தான் வந்திருக்கேன்” என்ற கமலுக்கு கொடுக்க கை இரண்டையும் நீட்டினேன்.

பெங்களூர் வந்திறங்கியது விமானம்.

கைபேசி எல்லாம் உயிர்பெற்று நான் கமலின் கை தொடும் முன் கனவை கலைத்தன.

காரில் ஏறிய உடன் facebookல் நானும் நண்பனாக சுகாவுக்கு அழைப்பு அனுப்பினேன்.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply