சுருதி மூலம்.

லட்சுமி வீட்டை விட்டு ஓடிப் போவதென்று முடிவெடுத்தாள்.

அன்று இரவே சென்று விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

அவளுக்கு அப்போது வயது பதினேழு, பதினெட்டு இருக்கும்.

அவள் தன் பிறந்த ஊரான மதுரையை விட்டு விலகிச் சென்று விட வேண்டும் என்று முடிவு செய்த வருடம் 1920

****

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பணம் என்பது சிலரிடம் மட்டுமே இருந்தது.

மிட்டா, மிராசுதார்கள், வக்கீல்கள், பிரிட்டிஷ்காரர்களை அடி வருடி அவர்களிடம் பணி செய்த அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை அண்டித்தான் மற்றவர்கள் பிழைத்தனர்.

பெண்களின் நிலையோ சொல்ல வேண்டியதில்லை.

அதுவும் தாசி குலத்தில் பிறந்த பெண்களின் வாழ்க்கை இளமையும், உடல் கட்டும் இருக்கும் வரையே வளமானதாக இருக்கும்.

வயதுக்கு மீறிய முதுமையும், தளர்வும்  சீக்கிரமே வந்து சேர்ந்து கொள்ள, அவர்கள் தங்கள் வாரிசுகளை அதே வாழ்க்கைக்கு தயார் செய்தால்தான் பசியின்றி வாழ முடியும்.

லட்சுமியின் அம்மா வடிவாம்பாள் இளமையாக இருந்த காலத்தில், ஆனி வீதியில் இருந்த அவள் வீட்டுக்கு வராத பெரிய மனிதர்கள் குறைவு.

வடிவாம்பாளின் வீணை வாசிப்பின் திறமையை அறிந்து அந்தக் காலத்து பிரபல இசை வித்வான்கள் சிலரும் அவள் வீட்டுக்கு படை எடுத்தனர்.

இசையை மட்டுமே தேடி வந்தவர் சிலர். மற்ற சுகங்களையும் தேடி வந்தவர் பலர்.

லட்சுமிக்கும் இசையின் மேல் காதல் சிறு வயதிலேயே வந்து விட்டது. பெரிய விஷய ஞானம் இல்லா விட்டாலும், அற்புதமான குரல் அவளுக்கு. அவள் குரலை வைத்து தம்புராவை மீட்டி சுருதி சேர்க்கலாம்.

எந்த ஸ்தாயிலும் பிசிறடிக்காத குரல்.

மனோ பாவம் உருகி வழியும் குரல்.

****

குறைகள் இல்லாத வாழ்க்கை என்றாலும் வயது ஏற ஏற, லட்சுமியிடம் கேள்விகள் தோன்றின.

ஆண்கள் பல பேர் வந்து போனாலும், சிலர் இரவில் தங்கி விடிந்த பின்னே சென்றாலும், தந்தை என்று ஒருவர் வீட்டில் இல்லை என்பது அவளுக்கு புரிந்து போய் விட்டது.

அவள் வீட்டுக்கு வரும் சிலர் மரியாதையுடன் நடந்து கொண்டாலும், பல பேரின் பார்வைகள் அவளின் உடம்பை துளைத்து எடுத்தன.

கோயிலுக்கோ, அம்மா கச்சேரி செய்யப் போகும் போது உடன் சென்ற போதோ வெளியில் அவர்களை சுட்டிக் காட்டி குசு குசுவென்று பேசிய குரல்கள், கண்களில் வெறுப்பையும், அருவருப்பையும் உதிர்த்த பெண்கள், வக்கிரப் பார்வைகள், வரம்பு மீறிய தீண்டல்கள்.. தங்கள் கலைத் திறமைக்கு கிடைத்த மரியாதை மிகக் குறைவே என்பது அவளை தாக்கி வருத்தத் தொடங்கியன.

அதே சமயத்தில் கச்சேரி செய்ய வந்த ஆண்களுக்கு  கிடைத்த மரியாதையும், வரவேற்பும், மக்கள் அவர்களிடம் நடந்து கொண்ட விதமும் முற்றிலும் மாறு பட்டு இருந்தது.

அதில் சில வித்வான்கள் அவள் வீட்டுக்கு வந்து தங்கி சென்றதும் நடந்தது.

இதையெல்லாம் மறக்க, லட்சுமி பாட்டில் தன்னை அடக்கிக் கொண்டாள்.

பாடிப் பாடி தன் குரலை மெருகேற்றினாள்.

கேள்வி ஞானத்திலேயே பல பாடல்களை கற்றுத் தேர்ந்தாள்.

****

வடிவாம்பாளின் வீட்டுக்கு வரும் வண்டிகளின் எண்ணிக்கை குறையைத் தொடங்கியது. வந்த சிலரும் லட்சுமி இல்லையா என்று கேட்க ஆரம்பித்தனர்.

அப்படித்தான் ஒரு முறை சென்னையில் இருந்து ஒரு பெரிய மனிதர் வந்து இருந்தார்.

நல்ல உயரம். சிவப்பு நிறம்.

அங்க வஸ்திரமும், கடுக்கனும், வெற்றிலையால் சிவந்த உதடும், கண்டிப்பு நிறைந்த கண்களும், கனிவான குரலும் லட்சுமியையும் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச வைத்து விட்டன.

“லட்சுமி.. இங்க வா.. இந்த பாலைக் கொண்டு போய் அவருக்கிட்ட மாடிலே போய் கொடுத்துட்டு வா. உடனே வந்துடாதே. இரண்டு பாட்டு பாடிக் காமி”

வடிவாம்பாளின் குரலில் கழிவிரக்கம் இருந்தது. ஆனாலும் இதுதான் தங்களுக்கான வழி என்பதால் அவளுக்கு இது குற்றமாக தோன்றவில்லை.

பால் கொண்டு வந்த பெண்ணை அவருக்கு பார்த்தவுடன் பிடித்துப் போய் விட்டது.

சற்றே மங்கிய நிறம் என்றாலும் பெரிய மூக்கு, கிறக்கம் நிறைந்த கண்கள், அழகிய சிறிய உதடுகள் என்று அளவெடுக்க ஆரம்பித்தார்.

தன் உடலின் மேல் விழுந்த கவனத்தை மாற்ற உடனேயே பாட ஆரம்பித்து விட்டாள் லட்சுமி.

“நிதி சால சுகமா…” கல்யாணி ராகம் சுத்தமாய் ஒலித்தது.

“தம சம மணு கங்கா ஸ்நானமு சுகமா? கர்தம துர்விஷய குப ஸ்நானமு சுகமா?”

கங்கையில் நிர்சலமான புத்தியுடன் குளிப்பது சுகமா? அல்லது குப்பை நிறைந்த கிணற்றில் கலங்கிக்  குளிப்பது சுகமா? என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வந்து விழுந்தன.

உள்ளத்தின் உணர்வுகள் பொங்கித் ததும்பிய குரலின் பாவம் உருக்கியது.

வந்தவருக்கும் அவள் சொல்ல வந்தது விளங்கி விட்டது.

“லட்சுமி.. சென்னைப் பட்டணத்துக்கு வந்துடேன். புதுசா டாக்கீஸ் வந்துருக்கு. உன்ன மாதிரி குரல் இருந்தா எங்கயோ போய்டலாம். சினிமால நடிக்க வைக்கறேன். என்னோடவே வச்சுக்கறேன்” என்றார்.

“எனக்குப்  பாடனும். அரியக்குடி அய்யங்கார் மாதிரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர் மாதிரி மேடைலே பாடனும். என் குரல் மட்டும் எல்லோரையும் எழுந்து நிக்க வைக்கணும். கோயில்லே மட்டும் இல்ல.. எல்லா மேடைகளிலும் நான் ஏறனும்”

பெண்கள் பாடுவது அரிதாக இருந்த காலம். ஒரு சில பிராமண குடும்ப பெண்களே கஷ்டப்பட்டு மேடை ஏறிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதற்கு பிரபல வித்வான்கள் முன் வர வில்லை.

தாசி குலப் பெண்கள் கர்நாடக இசைக் கச்சேரி செய்வது சுலபமான விஷயமில்லை.

“பலே பலே. ஆசை பிரமாதமா இருக்கே. எங்க குடும்பத்து பெண்களே கஷ்டப்படறா.”

லட்சுமியின் வைராக்கியம் மேலும் இறுகியது.

“சரி பாட்டு மட்டும்தான் இன்னிக்குன்னு ஆயிடுத்து. இரண்டு பாட்டு பாடிட்டு போ. தூங்க முடியுமான்னு பார்க்கறேன்”

லட்சுமி பாடாமல் இறங்கிச் சென்று விட்டாள்.

****

இது நடந்து சில மாதங்கள் ஓடியது.

வடிவாம்பாளின் உடல் நலம் குறையத் தொடங்க, வீட்டில் இருந்து நகைகளும், பாத்திரங்களும் அடகு போக ஆரம்பித்தன.

“லட்சுமி.. நாளைக்கு கோயம்புத்தூர்லே இருந்து ஒரு பெரிய மனுஷர் வரார். பெரிய மில் ஒனராம். உனக்கு ஒரு வீடும், காரும் கொடுத்து நல்லபடியா ஆயுசு முழுக்க வச்சுக்கறேன்னு சொல்லி இருக்காங்க. உன் குரல் மேலே அவ்வளவு உசிரா இருக்காரு – ஒன்னை வெளிலே எங்கேயும் பாட வேண்டாம், தான் மட்டுமே  கேட்கனும்னு முடிவா இருக்காராம்”

லட்சுமி நிமிர்ந்து முறைத்தாள். எதுவும் பதில் சொல்லாமல் கூடத்துக்கு ஓடினாள்.

கூடத்தில் அமர்ந்து தம்பூராவில் சுருதி சேர்த்தாள்.

மத்திம சுருதி ஒலித்தது.

“சா.. பா சா” மீண்டும் மீண்டும் அதே சுரங்களைப் பாடினாள்.

இசை கூடத்தை நிரப்பியது

“லட்சுமி… நான் என்ன செய்வேன் சொல்லு.. உனக்கு அப்புறம் ஒரு தங்கை வேற இருக்கா..உன் நல்லதுக்கு தானே சொல்றேன்” வேறு வழி தெரியாத தாயின் துக்கம் வடிவாம்பாளின் குரலை அடைத்தது.

“நாளை மறு நாள் காலேல மீனாட்சி அம்மன் கோயில்லே மாலை மாத்திட்டு, ராத்திரி ரயில் வண்டியிலே கூட்டிட்டு போயிடுவாராம்.”

அன்று தான் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி விடுவது என்று முடிவெடுத்தாள். அன்று இரவே சென்று விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

மனம் லேசாகி விட, பாட ஆரம்பித்தாள்.

“மோட்ஷமூ கலதா.??.” சாரமதி ராகம் அலை அலையாய் எழுந்தது.

சாக்ஷாத் காரணி!! சத் பக்தி, சங்கீத ஞான விஹினுலக்கு மோட்ஷமூ கலதா?

முழுமையான பக்தி கலந்த இசையை ரசிக்கும் ஞானத்தை அடையாதவர்களுக்கு மோஷம் எப்படி கிட்டும்?

சிவனை துதிக்கும் தியாகராஜ சுவாமிகளின் பாடல்.

மதுரை சுந்தரேஸ்வரர் வரை கேட்கட்டும் என்று பாடினாள் லட்சுமி.

****

அன்று இரவே, வீட்டில் வேலை செய்த ஒரு நம்பிக்கையான பையனுடன் இரயில் ஏறி சென்னைக்கு சென்று விட்டாள்.

நகைகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், ஒரு சில புடவைகளை மூட்டை கட்டிக் கொண்டு சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கிய லட்சுமிக்கு போகும் இடம் என்று சென்னையில் எதுவும் இல்லை.

சென்னையில் இருந்து வந்து தன்னை சினிமாவுக்கு நடிக்க கூப்பிட்ட பெரிய மனிதரின் பெயர் மட்டுமே இருந்தது.

அன்றைய சென்னையில் அவர் வீட்டை தேடிக் கண்டு பிடிப்பது ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை.

மவுண்ட் ரோட்டில் இருந்து விலகி, புதிதாய் வளர்ந்து கொண்டிருந்த நகரின் ஒரு புதிய பகுதியில், புழுதி படிந்த தெருக்களில் இருந்து உள் ஒதுங்கி, மரங்கள் அடர்ந்து மறைத்து இருக்க, புதிதாய் தோன்றிய ஒரு பங்களாவின் முன் வந்து நின்றாள்.

“யாரு வேணும்?” என்று கதவைத் திறந்த பெண்ணின் மூக்கிலும் கழுத்திலும் வைரங்கள் மின்னின. மடிசார் புடவை அழுக்கின்றி பளிச்சிட்டது.  சிவப்பு நிறம். குள்ளமான உருவம்.

தன் கணவரின் வெளித் தொடர்புகள் தெரிந்தே இருந்தாலும், ஒரு பெண் வீட்டுக்கே வருவது இதுவே முதல் முறை.

“என்ன விஷயம்? எங்கிருந்து வரேள்?” நிற்க வைத்தே பேசினாள்.

“என் பேர் லட்சுமி. மதுரைலேந்து வரேன். ஐயாவை பார்க்க முடியுமா?”

அளவெடுத்த கண்கள் அருவெறுப்பை உமிழ்ந்தன.

“அப்பா பேர் உண்டா?”

லட்சுமியின் கண்களில் கண்ணீர் ததும்பி நிறைந்தது.

“யாரு வந்திருக்கா?”.. பஞ்சகச்சம் அணிந்து , மார்பை மறைத்த பெரிய அங்க வஸ்திரத்துடனும் வந்து நின்றவரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“நீ வடிவு பொண்ணு லட்சுமிதானே?”

புத்திசாலியான அவருக்கு, ஒரு மூட்டையை கையில் சுமந்து, தனியாய் வந்து நிற்கும் பெண்ணின் நிலையை புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை.

மாடியில் இருந்த தன் தனி அறைக்கு அழைத்து போய், அழுகையின் இடையில் அவள் வந்த காரணத்தை தெரிந்து கொண்டார்.

“நான் சினிமாலயும் நடிக்கறேன். ஆனா எனக்கு பாடனும். மேடை ஏறி பாடனும். சாகும் வரை பாடிண்டே தான் இருக்கணும்”

அவளின் தோளை அணைத்து பக்கத்தில் இருந்த சேரில் உட்கார வைத்தார்.

“பாடலாம். நான் ஏற்பாடு பண்றேன். ஒன்ன பெரிய பாடகியா ஆக்கறேன். போற இடத்துலே எல்லாம் உனக்கு மரியாதையும் பணமும் உண்டு பண்றேன். உன்னை என் காவல்லேயே வச்சுக்கறேன். ஆனா நீ எனக்கு சத்தியம் பண்ணனும். நான் சொல்றதெல்லாம் செய்வேன்னு. அத மட்டும்தான் செய்வேன்னு”

லட்சுமி சிறிதும் யோசிக்காமல் சத்தியம் செய்தாள்.

தன் கணவர் அந்தப் பெண்ணை தோளோடு அணைத்து, கை பிடித்து சத்தியம் வாங்கி நின்ற காட்சியை பாதி மூடிய கதவின் வழியே கவலையோடு பார்த்து, வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கீழ் இறங்கினார் அவர் மனைவி.

****

இப்படித்தான் ஆரம்பித்தது மதுரை சண்முக வடிவு சுப்பு லட்சுமி என்ற M.S. சுப்புலட்சுமியின் இசைப் பயணம்.

ஒரு பெரிய வித்வானிடம் மேலும் சங்கீதம் கற்றுக் கொண்டார் லட்சுமி.

சில படங்களில் நடித்தார்.

சதாசிவம் என்ற மனிதரால் தான் M.S. இசை உலகின் ராணியாக வலம் வந்தார் என்று சொல்பவர் பலர்.

ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அந்த மகத்தான இசை ஆளுமையின் பின்னால், தான் செய்ய விரும்பிய காரியத்தில் உறுதியாக இருந்த பெண் ஒருவர் இருந்தார்

தான் பிறந்த குலத்தின் தளைகளை அறுத்து எறிந்து விட்டு தனியாய் ரயில் ஏறிய ஒரு வைராக்கியமான, சுய மரியாதையை விட விரும்பாத பெண் இருந்தார்.

தன்னை முற்றிலுமாய் வெறுத்த முதல் மனைவியின் மரணத்துக்கு பின் சதாசிவத்தை மணந்து, அவர்களின்  குழந்தைகளை முழுவதுமாக ஆதரித்து, அன்பு செலுத்தி, ஆளாக்கிய ஒரு தாய் இருந்தார். அவர் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

வயதான காலத்தில் வறுமையிலும், வியாதியிலும் வாடிய தன் அம்மாவை தன்னுடன் வைத்து காப்பாற்றிய ஒரு கனிவான மகள் இருந்தார்.

மீண்டும், மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், இசைக் கலைஞர்களையெல்லாம் தன் வீட்டுக்கு அடிக்கடி வரச் செய்து அவர்களுடன் பாடிக் களித்த அர்பணிப்பு மிக்க ஒரு மாணவி இருந்தார்.

தான் செய்து கொடுத்த சத்தியத்துக்கு உண்மையாக, தன் உடை, உருவம் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு தன் கணவர் சொன்ன இடத்தில்,. சொன்ன பாடல்களை மட்டுமே பாடிய ஒரு உன்னத பெண்மணி இருந்தார்.

பக்தியுடன், பாவத்துடன், சுருதி சுத்தத்துடன்  லட்சுமியின் குரல் இன்றும் உலகம் எங்கும் பாடிக் கொண்டுதான் இருக்கிறது.

“குறை ஒன்றும் இல்லை.. மறை மூர்த்திக் கண்ணா குறை ஓன்றும் இல்லை கண்ணா”

*****

நன்றி

M. S. Subbulakshmi: The Definitive Biography, by T. J. S. George  (Author)

பின்னணியில் ஒலிக்கும் குரல் பாம்பே ஜெயஸ்ரீ.

ரதி மன்மத சிற்பம் – திருக்குறுங்குடி. பெண்ணின் தோள் மீது ஏறி பெருமையுடன் சவாரி செய்யும் ஆண் சிற்பம் இந்த பதிவுக்கு பொருத்தமாக இருந்தது.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள