சோழ உன்னதத்தின் ஆரம்பம் – புள்ளமங்கை

சுவாமி மலையில் ஒரு ரிசார்ட்டில்  தங்கி சோழ கால கோயில்களை சுற்றி வந்தோம்.

கங்கை கண்ட சோழபுரத்தையும், தாராசுரத்தையும் பார்த்து மயங்கி இரவு ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது Steve Borgia என்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பக்கத்தில் ஒரு அடக்கமான வாலிபர்.

“உங்க stay எல்லாம் OK தானே? கோயில்லாம் பாத்தீங்களா?”

எங்கள் பதிலில் இருந்து நவக்கிரக கோயில் செல்லும் கும்பல் அல்ல நாங்கள், சோழர் கால வரலாற்று பைத்தியம் என்று தெரிந்து விட்டது.

பெரிய குஷி வந்து விட்டது அவருக்கு. ஒரு புத்தகத்தை எடுத்து வந்து சோழர் கால சிற்பங்கள் எல்லாம் காட்டி “சார் நான் ஒரு கோயில் சொல்றேன். நீங்க பெரிய கோயில் பார்க்கிறதுக்கு முன்னாடி அதைப் பாத்துட்டு போயிடுங்க”

“எந்த கோயில் சார்?”

“ராஜ ராஜன் முப்பாட்டன் பராந்தகன் கட்டியது. இதப் பார்த்து தான் “அவரே இப்படி கட்டிட்டாரு தான் இதையல்லாம் மறக்க அடிக்கிற மாதிரி பிரமாண்டமா கட்டணும்னு” பெரிய கோயில் கட்டினான்

அவர் கைகளும் கண்களும் விரிந்தன.

“அப்படி என்ன விசேஷம்?”

“இந்த கோயிலப் பத்தி எத்தனை பேர் ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க தெரியுமா?. இது ஒரு சிற்ப கலைக் கூடம்.  பல புத்தகங்கள், கட்டுரைகள்ளே வந்திருக்கு. நம்ம மக்கள் குரு எங்க, சனி எங்கன்னு தேடறாங்க. இப்படி ஒரு அதியசத்தை பார்க்க வரதில்லே”,

பக்கத்தில் இருந்த தம்பி பணிவான குரலில் “பிரகாரத்தை நல்லா பாருங்க. அதிசயம் அங்கேதான்” என்றார்.

பூசாரி போன் நம்பர் எல்லாம் கொடுத்து வழி எல்லாம் சொன்னார். “போன் பண்ணிட்டு போங்க. பூசாரி தினசரி எல்லாம்  வர மாட்டாரு”

“நீங்க இங்க தங்கி இருக்கீங்களா?”

“இல்ல நான் தான் resort owner”. Steve Borgia ஒரு பக்காத் தமிழர். சென்னைவாசி. அவருக்கு தமிழ் சமுதாயம் கொஞ்சம் கடமைப் பட்டிருக்கிறது. சுவாமி மலை போய் பாருங்கள்.

“தம்பி யாரு சொல்லவேயில்லயே”

“தம்பி Phd பண்ணினதே அந்த கோயிலைப் பத்திதான்”

மேலும் பணிவுடன் சிரித்தவரின் இரண்டு கைகளையும் பற்றி குனிந்து வணங்கினேன்.

*********

காலையில் பெரிய கோயில் போகும் வழியில் புள்ளமங்கை கோயிலைப் பார்த்து விட்டு போவதாக பிளான். யாருக்கும் கோயில் தெரியவில்லை. ஒருவர் மட்டும் “பசுபதி சாமி கோயில் தான் சார் இருக்கு” என்று ஒரு நெரிசலான தெருவுக்கு வழி காட்டினார். கோயிலுக்கு புதுப் பெயர் அதுதான்.

புள்ளமங்கை யார்? ஏன் சிவன் கோயிலுக்கு இந்தப் பெயர்?

ஞானசம்பந்தர் பாடிய கோயில். ஏழாம் நுற்றாண்டு. கிட்டத்தட்ட 1500 வருடங்கள் பழமையானது.

nude ukraine teen girl பொந்தினிடை தேனுரிய பொழில் சூள் புளமங்கை

அந்  தண்புனல் வரு காவிரி ஆலந்துறை.

(முதல் திருமுறை – 173)

இப்போது தேனும் காணவில்லை. காவிரியும் திசை மாறி தண் புனலாய் இல்லாமல் சூடாய் ஓடுகிறது.

மலரின் கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்

காவிரி கரைமேல் பொத்தின்யிடை ஆந்தை பல பாடும்

புளமங்கை

(முதல் திருமுறை – 167)

காவிரி கொண்டு வந்த மலரும், அகிலும் சந்தனமும் மணத்த கோயில்.

இப்போது பீடி சுற்றும் வீடுகள் புகையிலை வாசம். தறி ஓடும் சத்தம்.

காளாப் பிடாரி என்ற பெண் தெய்வம் இந்த ஊரின் தெய்வமாக இருந்திருக்கிறாள். அவளுடைய கோயிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றி கல்வெட்டு சொல்கிறது. சிவன் கோயில் கருவறை நுழை வாசலில் சிங்கம் இருக்கிறது. மனிதன் முதலில் வடித்த தெய்வங்கள் எல்லாம் தாய் தெய்வங்களாக இருந்தன (காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி) என்கிறது ஒரு ஆய்வு. மூல தெய்வம் பிடாரியாய் இருந்திருக்கலாம்.

புளமங்கை என்பது புள்ளமங்கலம் என்பதின் சுருக்கமா?.

புள் என்றால் பறவை.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

(ஆண்டாள் பாசுரம்)

அந்தணர்கள் வாழ்ந்த இடங்கள் மங்கலம் என முடிந்தன. உதாரணமாக  சதுர்வேதி மங்கலம்.- நாலு வேதங்கள் ஓதும் அந்தணர் வாழும் இடம்.

ஞானசம்பந்தர் காலத்தில் இங்கு அந்தணர் நிறைந்து வாழ்ந்ததாக அவர் பாடிய பாடல் கூறுகிறது.

வேதம் பயின்றேத்தி புலன்கள் தமை வென்றார்

புகழவர் வாழ் புளமங்கை

(முதல் திருமுறை – 170)

பறவைகள் நிறைந்த அந்தணர் வாழ்ந்த ஊர்?

மதச் சண்டைகளும் இங்கு நடந்திருக்க வேண்டும். ஞானசம்பந்தர் காலத்தில் சமணரும் சைவரும் போட்ட சண்டைகள் பிரசித்தம்.

நீதியாரியாத ரமண் கையரொடு மண்டைப் போதியவரோதும்

முரை கொள்ளார் புளமங்கை ஆதியவர் கோயில்

திருவாலந்துறை தொழுமின் சாதி மிகும்

வானோர் தொழுதன்மை பெறலாமே.

(முதல் திருமுறை – 172)

சமணர்களையும், பௌத்தர்களையும் சாடும் ஞானசம்பந்தர்.

நீதி அறியாத அமணர் கீழ் மக்கள்.

பிச்சை பாத்திரத்தை கையில் ஏந்தி போதி மரத்தடியில் அமர்ந்தவர் புத்தர்.

அவர்கள் பேச்சை எல்லாம் கேட்காமல், எல்லா பொருட்களுக்கும் ஆதியான ஆலந்துறை புளமங்கை கோயில் இறைவனை தொழுங்கள்.

“சாதி மிகும் தேவர்” – பல்வேறு பிரிவு உடைய தேவர்கள் அடைந்த நன்மையைப் பெறலாம்.

சாதி என்ற வார்த்தை வரும் பழைய பாடல்.

முந்திய பாடலில் சொன்ன பொந்துகளும்  இப்போது இல்லை அதில் வாழும் ஆந்தைகளும் இல்லை. ஒரு வேளை குகைகளில் வாழ்ந்த சமணர்களைத்தான் ஆந்தைகள் என்றாரோ தெரியவில்லை

*********

ஏழாம் நுற்றாண்டில் சிறிய கோயிலாய் இருந்து, பராந்தகன் காலத்தில் பத்தாம் நுற்றாண்டில் பெரிதாய் கட்டப்பட்ட கோயில்.

இந்த ஊரில், பராந்தகன் காலத்தில், அந்தணர் வாழ்ந்த பிரம்மதேயங்களுக்கெல்லாம் (அந்தணர் வாழ்ந்த சிறு கிராமங்கள்) தலைமை இடமாக மகாசபை (பேருராட்சி போல ஒரு அமைப்பு) செயல் பட்டிருக்கிறது.

பிற்கால கல்வெட்டு  ஓன்று சுவாரசியமான செய்தி சொல்கிறது.

ராஜராஜனே நேரிடையாக ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறான்.

“சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜராஜ தேவர் யாண்டு உயக வது திருவாய் மொழிந்தருளினமையில் இந்நிலமும் இறை கொள்வதாக திருவானை…”

சாமவேத அந்தணர் ஒருவருக்கு அளித்த வரி விலக்கை ரத்து செய்த உத்தரவு.

ராஜராஜன் காலத்திக்குப் பிறகு இங்கு மகாசபை செயல்படவில்லை. அந்தணரெல்லாம் புதிய தலை நகருக்கு (கங்கை கொண்ட சோழபுரம்) போயிருக்கலாம். அல்லது பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இருந்திருக்கலாம்.

இப்போது கோயில் அந்தணர் கூட வேறு ஊரில் இருந்து வருகிறார்.

*********

நாங்கள் சென்ற போது கோயில் பூட்டி இருந்தது.

“இப்போதான் சார் போனாரு. Phone பண்ணுங்க சார்” உதவிய ஒரு இல்லத்தரசி. ஆண்மக்கள் யாரும் தெருவில் இல்லை. உழைக்கும் வர்க்கம்.

“சார் நான் வேற வேலையாப் போறேன். பையனை அனுப்பறேன். இன்ஜினியரிங் படிக்கிறான். பரிட்சை வேற. சீக்கிரம் பார்த்துட்டு அனுப்பிடுங்கோ” போனில் கடுகடுத்தார்.

பையன் பைக்கில் வந்தான்.

“எந்த இயர் படிக்கறிங்க தம்பி?”

மீசை அரும்பத் தொடங்கியிருந்தது.

“செகண்ட் இயர் சார்”

சாவி எடுத்து நேராக சிவன் கோவிலை திறந்து விட்டான். எல்லா கோயிலிலும் உள்ள மாதிரி லிங்கம். சின்ன விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  சிவனுக்கு அழுக்கு ஏறின வேஷ்டி.

“பாத்துடேளா..? போலாமா சார்?”

“இல்லப்பா.. சிற்பம் இருக்குன்னு சொன்னாங்க”

“ஓ நீங்க அந்த குரூப்பா?. வெளிப் பிரகாரம் சார். வாங்க காண்பிக்கிறேன்”

*********

இக் கோயிலின் அமைப்பையும், சிலைகளையும் பலர் ஆய்வு செய்துள்ளனர். புரிய நிறைய பொறுமை வேண்டும்.

உதாரணமாக “அதிட்டானம், பாதம், பிரஸ்தரம், நிலைகள், கண்டம், சிகரம் என அணைத்து உறுப்புகளும் சதுர வடிவம் பெற்று நாகர பாணியாக விளந்குகின்றது” என்கிறார் ஒரு ஆய்வு ஆசிரியை.

இதன் விமானம் “ஜயத விமான” அமைப்பாம்.

கோயிலின் கோபுரத்திலும், சுவர்களிலும் சிற்பங்கள் பலரால் படி எடுக்கப்பட்டு அங்குலம் அங்குலமாக  ஆராயப்பட்டுள்ளன.

பிரம்மா, விஷ்ணு, திரி புராந்தகர் இவற்றை எல்லாம் விட, பிரகலாதனை அணைத்தபடி இருக்கும் நரசிம்மர் ஒரு அற்புதம்.

விமானத்தில் மேற்கு சுவரில் அமைந்துள்ள லிங்கோத்பவர் சிற்பம் அழகு. பிரம்மா விஷ்ணு இரண்டு பக்கமும் பணிவாய் நிற்க, பெருமிதமாய் லிங்கத்தில் வெளி வரும் சிவன். சைவ சமய பிடிப்பு வெளிப்படும் காலம். பிரம்மாவின் மூக்கும் உதடும் சற்றே பெண்மைத்தனம் உடன்.

சுற்றி வந்தால், தனியாய் பிரம்மாவும் கணபதியும்.

இருவரும் பின் வரும் பல கோயில்களில் வடிக்கப்படும் சிலைகளுக்கு முன் மாதிரிகள். சோழர் கால கணபதி சிலைகள் விசேஷமானவை. ஒரு நிஜ யானை முன்னால் நிற்பது போன்று தோன்றும்.

புஷ்டியான கணேஷ்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பின்னால் ஒரு பிரகாரத்தில் உள்ள பிள்ளையார் சிலைதான் சோழர் காலத்தது. தூக்கி கொஞ்ச சொல்லும் திரு உருவம். அவருக்கு அண்ணன் இந்த புள்ளமங்கை கணபதி. இவரை பற்றி ஆராய்ச்சியும் பக்கம் பக்கமாய் கிடைக்கிறது.

ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள் விஷயம் தெரிந்து ஆராய்ந்தவர்கள்.

*********

இக்கோயிலின் மற்றும் ஒரு அதிசயம் அதிட்டானத்தில் (கோயிலின் அடிப் பகுதி என்று புரிந்து கொண்டால் எளிது) சிறு சிறு சதுர வடிவில் காணப் படும் சிற்பங்கள். Miniature போல. அரையடிக்கு அரையடி சதுர கல் பலகையில் செதுக்கப்பட்ட அற்புதங்கள். ஆதித்தன் காலத்திலேயே வேலை தொடங்கி இருக்கிறது. பொதுவாக தேரில் மரத்தில் செய்யப்படும் நுண்ணிய படைப்புகளை கல்லில் செய்த மகா சிற்பிகள்.

காதலுடன் பார்க்கும் சிவனும்,  நாணிக் குனியும் உமையும், நாவினால் சிவனை நக்கும் நந்தியும்.

கூர்ந்து கவனியுங்கள். வலது கை மட்டும் இரண்டு. ஒரு “motion picture”. நந்தி மேல் கையை எடுத்து உமையின் தோளுக்கு கொண்டு செல்வது போல் வரைந்திருக்கிறான். இப்போது நாம் iphoneல் எடுக்கும் படம் போல – ஒரு குட்டி வீடியோ மாதிரி. கை நகர, நாக்கு வெளியே வர, உமையின் நாணிய சிரிப்பு பெரிதாக – ஒரு கவிதை

நாப்பத்தி ஐந்து பலகைகளில் நுண்ணோவிய சிற்பங்கள் ராமாயண கதை சொல்கின்றன. கம்ப இராமாயண பாடல் வரிகளுக்கு சித்திரம் வரைந்தாற் போல் வடித்த சிற்பங்கள்.

உதாரணமாக இந்த சிற்பம். சீதை ராமனை கட்டிக்கொண்டு தள்ளி நிற்க, லக்ஷ்மணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கும் காட்சி.

சீதையின் பயமும், லக்ஷ்மணனின் பாய்ந்து தாக்கும் கோபமும், பருத்த முலைகளும், விரிந்த முடியும், பெரிய வாயும் கொண்ட சூர்பனகையும் – கம்ப ராமாயண வரிகளை அப்படியே பிரதி பலிக்கின்றன.

‘நில் அடீஇ’ என, கடுகினன், பெண் என நினைத்தான்;

வில் எடாது, அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த

சில் வல் ஓதியைச் செங் கையில் திருகுறப் பற்றி,

ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி கிளர் சுற்று-வாள் உருவி

(ஆரணிய காண்டம்/சூர்ப்பணகைப் படலம்)

வில்லை எடுக்காமல்,

தீப்போன்று பரந்து செந்நிறம் கொண்ட வலிய கூந்தலை  (படத்தில் சூர்ப்பனகையின் முடியைப் பாருங்கள்)

கைகளால் சுருட்டிப் பிடித்து (இடது கை), அவளை காலால் உதைத்துத் தள்ளி (இடது கால்)

ஒளி விளங்கும் தன் உடைவாளை உறையிலிருந்து உருவி எடுத்து…

கம்பர் எழுதிய வரிகளுடன் ஒத்துப் போகும் சிற்பம்.

(கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/சூர்ப்பணகைப் படலம்)

வாலி ராமனால் கொல்லப்பட்டு கிடக்கும் போது அவன் மனைவி தாரை புலம்பும் வரிகள் சோகம் நிறைந்தவை.

“நான் உன் நெஞ்சிலேயே இருக்கேன்னு சொல்லுவியே. அப்படி இருந்தா அந்த  அம்பு என்னையும் கொன்னுருக்கனுமே”

‘செரு ஆர் தோள! நின் சிந்தை உளேன் என்னின்,
மருவார் வெஞ் சரம் எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்;
இருவேமுள் இருவேம் இருந்திலேம். 10

(கிட்கிந்தா காண்டம்/தாரை புலம்புறு படலம்)

கம்பர் வருவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நாம் கணித்த அவர் காலம் தவறா இல்லை இச் சிற்பங்களை பார்த்து அவர் பாடல் எழுதினாரா தெரியவில்லை.

சிவன் கோவிலில் இராமயணக் கதை எழுதிய காலத்தில் சோழ நாகரீகம் உன்னதம் அடையத் தொடங்கியது. கூரத்தாழ்வானை குருடாக்கி இராமனுஜரை வெளியேற்றி சமயப் பொறை குன்றிய காலத்தில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. மடாதிபதிகளும்,  இமாம்களும், பிஷப்களும் படிக்க வேண்டிய வரலாறு சொல்லும் பாடம்..

*********

பிரகாரத்தை சுற்றி வரும் போது வடக்கு சுவரில் துர்க்கை சிலை பிடித்து நிறுத்தியது.

முதலில் ஈர்த்தது நவ கண்டம் செய்யும் இரண்டு வீரர்கள். இது ஒரு வகையான சுய பலி. தலைவர்கள் ஜெயிலுக்கு போகும் போது தொண்டர்கள் தீக்குளிப்பது போல, மன்னர் போர் செய்யப் போகும் போது சிலர் செய்த விஷயம். ராஜராஜனும் அவர் மகனும் இதைக் கண்டித்ததாக பாலகுமாரன் உடையாரில் எழுதி இருப்பார். பிற்கால கோயில்களில் இவை இல்லை.

துர்க்கை சற்று வித்தியாசமாக இருந்தாள். தாராசுரம் விஷ்ணு துர்கையும் இல்லாமல், திருவழஞ்சுழி நிசும்ப சூதனியும் இல்லாமல் ஒரு முகம்.

அலங்காரம் அதிகம்.

“தம்பி கொஞ்சம், அலங்காரத்தையும் எடுக்கறையா?”

மாலைகளை அகற்றினான்.

“சேலையையும் கழட்டிருப்பா. சிலையை கொஞ்சம் போட்டோ எடுத்துக்கறேன்”

“அப்பா கோவிச்சுப்பாரு சார். அபிஷேகம் பண்ணும் போது கூட அதை எடுக்க மாட்டோம்.  என்னை இந்த அம்மன் கிட்ட எல்லாம் விட்டதில்லே”

“பாரவாயில்லே. ரெண்டு நிமிஷம்”

மெதுவாய் புடவையை அகற்றினான்.

ஆளை அடிக்கிற சௌந்தர்யமும், கை கூப்ப வைக்கும் ஆகிருதியும் கண்ணைக் கூசின.

தன்னிச்சையாய் அந்த பையனும் நாங்களும் ஓரடி பின் சென்றோம்.

மார்பில் கச்சை.

நெற்றியில் கண்ணி மாலை.

கழுத்தில் முத்து மாலையும், கண்டியும்,

மார்பு வரை நீண்ட முத்து வடம், மணி மாலை.

கைகளில் தோள் வளை, கேயுரம், முன் வளை, விரலணிகள்.

கால்களில் வீரக் கழல்கள், சதங்கை.

ஒரு கால் மடித்து, இடுப்பை வளைத்து, தலையை சாய்த்த திரிபங்க நிலை.

மூடிய விழிகள். சற்றே மலர்ந்த உதடுகள்.

தனித்துவம் நிறைந்திருந்தாள்.

பாரதியின் பாராசக்தி இவளாகத்தான் இருக்க வேண்டும்.

விண்டுரைக்க அறிய அரியதாய்

விரிந்த வான் வெளியென நின்றனை

 என்று பாரதியே வர்ணிக்க முடியாமல் கை விரித்தது இவள்தான்.

ஒருவன் தலையையும் மற்றொருவன் காலையும் கொடுக்கத் துணிந்தது இவளின் கடைக்கண் பார்வையினால்தானோ?

இப்படி ஒரு பெண் இருந்திருந்தால் அவள் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். இருக்க முடியும்.

யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்.

இன்பமாகி விட்டாய் காளி என்னுள்ளே புகுந்தாய்

அன்பளித்து விட்டாய் காளி ஆண்மை தந்து விட்டாய் – பாரதி

எவ்வளவு நேரம் அப்படி நின்றோமே நினைவில்லை. எங்களுக்கு சுய நினைவு வந்த பின்பும் அந்தப் பையன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“தம்பி… தம்பி”..

கண்கள் விரிந்தது விரிந்த படி இருந்தன. ஒரு பெண்ணை இப்படி பார்ப்பது இதுதான் முதல் முறை என்று அவன் அங்கம் சொல்லியது.

வாய் அசைந்தது “அய்யோ.. இப்படி பார்த்ததே இல்லே”

என்ன நினைத்தானோ, சட்டென்று கோயிலுக்குள் சென்றான். மணியும், தீபாராதனை தட்டும் எடுத்துக் கொண்டு வந்தான்.

“சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே”

என்று வாய் முணு முணுக்க மேலும் கீழும் தீபம் காட்டினான்.

கானத் தெருமைக் கருந்தலை மேல் நின்றாயால்

வானோர் வணங்க மறை மேல் மறையாகி

ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்

சிலப்பதிகாரம்

அவளை அம்பாளாய் மாற்றி மனதிலே இருத்திக் கொண்டான்.

*********************

கட்டுரைக்கு உதவிய குறிப்புகள்.

1. தேவாரம் – ஞான சம்பந்தர் எழுதியது. முதல் திருமறை. 16வது திருப்பதிகம். பாடல்கள்  – 163-173 இக் கோயிலைப் பற்றியவை. சமண, பௌத்த எதிர்ப்பு தெறிக்கும் பாடல்கள் சில உள்ளன. 

2. புள்ள மங்கை பிரம்மபுரிசவரர் திருக்கோயில் ஒரு ஆய்வு – ஆசிரியர் கோ. சசிகலா. பதிப்பாசிரியர் முனைவர் சீ. வசந்தி. ஆணையர் பொறுப்பு. தமிழ்நாடு தொல்லியல் துறை. 2012. அருமையான ஆய்வு. கம்ப ராமாயண வரிகளை சிற்பங்களுடன் ஒப்பிட்டுள்ளார். சிலைகளின் வர்ணனைகளும் ரசிக்க வேண்டியவை. 

3. Divine Images in Stone and Bronze South India, Chola Dynasty (c. 850-1280) ASCHWIN LIPPE . நமது சோழர் கால பொக்கிஷங்கள் எத்தனை வெளிநாட்டில் இருக்கின்றன என்று பார்க்கும் போது வருத்தம் வரும். ஆனால் ஆய்வாளரின் கலா ரசனை வியக்க   வைக்கும்.

4. கம்ப ராமாயணம் – கோயிலின் இருக்கும் சிற்பங்கள் அப்படியே சில பாடல் வரிகளுடன் ஒத்து போவது வியப்பு.

5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு சிற்ப விருந்து  http://poetryinstone.in/lang/ta/2009/08/25/the-splendor-of-pullamangai-brahmapurirswarar – அருமையான புகைப்படங்கள் இப்பக்கத்தில்உ ள்ளன.

6. https://ta.wikipedia.org/wiki/புள்ளமங்கை_ஆலந்துறைநாதர்_கோயில் – கோயிலைப் பற்றிய குறிப்புகள். இருக்கும் இடம்,  நேரம் etc

7. உளிகளின் மாயா உலகில்  – http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=985. கல்வெட்டு எழுத்துக்கள் படிக்க தெரிந்த ஆசிரியர் –   “நந்தா விளக்கெரிய மாடலன் நக்கன் சாமி வழங்கிய நிலக்கொடை, திரு. இராஜராஜசோழனின் ஆட்சிக் காலத்தில் ரிக், சாம வேதம் இசைக்க சாத்தப் பெருமக்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை என ஒரு சில கல்வெட்டுகளை”

8. http://vmis.in/ArchiveCategories/gallery?search=pullamangai – இந்திய அரசின் தளம். அருமையான கருப்பு   வெள்ளை  படங்கள் உள்ளன. Most Photographs are attributed to American Institute of Indian Studies. இக் கட்டுரையின் கருப்பு வெள்ளை படங்கள் இத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

9. The Brahmapurisvara Temple at Pullamangai (The Heritage of Indian art) Unknown Binding – 1958. by J. C Harle (Author).  – இந்த புத்தகம் முழுமையாக படிக்க கிடைக்கவில்லை. 

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply