“ப்ளைட்டுக்கு நேரமாகலையா”. விட மனமில்லாமல் இறுக்கி கட்டி இருந்த அவளின் கைகள் இறுக்கியபடியே இருந்தன.
அவள் கழுத்தில் புதைந்திருந்த முகத்தை திருப்பி காது மடலின் கீழ் இதழ் பதித்து “கிளம்பணும்ல.. இந்த நேரத்திலே பெரிய க்யூ நிக்கும்” என்று விலகிக் கொண்டான்.
அவள் முகம் களைத்துப் போய் இருந்தது.
மூன்று மாதம் முந்திய பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டியதாகி விட்டது.
அதற்கு முன்னும் மூன்று மாதம் வீட்டிலேயே ரெஸ்ட்
ஆனாலும் தாய்மையின் பெருமையில் அழகு கூடித்தான் இருந்தாள்.
அவள் மகளின் மணம் அவள் மீது எப்போதும் வீசிக் கொண்டிருந்தது. .
தொட்டிலில் கிடந்த குழந்தை தூக்கத்திலேயே சிரித்த மாதிரி தெரிந்தது.
முகம் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
மெதுவாக தூக்கி, தலையை உள்ளங்கையில் தாங்கி, அவளை முன் கையில் வைத்துக் கொண்டான்.
பிறந்து ஒரு மாதத்தில் இருந்து இந்த பழக்கம்.
இரவில் அவளைக் கையில் வைத்துக் கொண்டு கதை சொல்லும் போது கண் கொட்டாமல் கேட்டுக் கொண்டு இருப்பாள். கிருஷ்ணன் கதை, பாரதியின் வசன கவிதை, புதுமைப்பித்தன், சுஜாதா, ஆபிஸ் பிரச்சினைகள்…. எல்லாவற்றிக்கும் ஒரே பார்வை – கண்களை உருட்டி உருட்டி கேட்பாள்.
ஒரு வாரத்துக்கு முன் கதை சொல்லி முடித்து தொட்டிலில் போடும் போது குழந்தை அவனைப் பார்த்து சிரித்தது என்று அவன் சொன்னதை அவள் நம்பவில்லை.
“ஆறு மாசம் கழிச்சு project முடிஞ்சு நான் வரதுக்குள்ளே, பெரிசாயிடுவா இல்ல?” மிருதுவான தலையை தடவிக் கொடுத்தான்.
அம்மா மாதிரியே நிறைய முடி.
அவனை பின்புறமாய் கட்டிக் கொண்டாள்.
“facetimeலே காமிக்கறேன்.. டெய்லி பாத்துக்கலாம்”
திரும்பி மனைவியின் முகம் தூக்கி, கண்ணில் இதழ் பதித்து, மூக்கை மூக்கால் உரசி, இதழை முகர்ந்தான்.
“facetimeல..இந்த மணத்துக்கு எங்க போறது?”
ஆறு மாத project வெற்றியில் முடிந்தால் வரும் போனசில், முதலில் குல தெய்வக் கோயிலுக்கு வெள்ளை அடிக்கவும், ஊரில் உள்ள அரசு பள்ளிக் கூட குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்கவும், குட்டியாய் ஒரு காருக்கு முதல் தவணை கட்டவும் கணக்கு போட்டாகி விட்டது.
சிரித்த முகத்துடன் எல்லாம் எடுத்து வைத்து, பைகளை மூடி, காப்பி போட்டுக் கொடுத்து, அவன் கார் மறையும் வரை கை காட்டி, மறைந்த பின், சோபாவில் விழுந்து, கன்னங்களில் வழிந்து ஓடிய கண்ணீரைத் துடைத்துக் கொள்ளமாலேயே தூங்கிப் போனாள்.
– தொடரும்
*********
தமிழில் மனித உறவுகளைப் பாடும் அகத் திணை கவிதைகளில், ஊரையும், பேரையும் சொல்லுவதற்கு இலக்கணம் தடை விதிக்கிறது.
ஏன் எனில் அவை பாடும் மென்மையான உணர்வுகளும், கொண்டாடும் உறவுகளும் காலாவதி ஆவதில்லை. அவ் உணர்வுகளை பெயர்க் குறியீடுகளால் ஒரு குழுவுக்கோ, ஊருக்கோ, கால அளவைக்குள்ளோ சுருக்கி விடுவதை நம் முன்னோர்கள் விரும்பவில்லை.
பொருள் தேடி கடலும், மலையும், காடும் தாண்டிச் செல்லும் கணவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இருந்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு தலைவனோடு பயணிக்கும் தொடர் இது.
தொழில் நுட்பங்களால் உலகம் சுருங்கி விட்டதென்று நாம் சொல்லிக் கொள்ளும் காலத்திலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்த வரிகள் பொருத்தமாய் இருப்பதில் தமிழ் இலக்கியத்தின் செம்மை மட்டுமல்ல, அந்த மொழியின் தனிச் சிறப்பான பொருள் இலக்கண விதிகளின் புத்திசாலித்தனமும் அடங்கி இருக்கிறது.
திணைகளும், துறைகளும் போரடித்தாலும், இந்த வரிகள் பாடும் உறவுகளும் உணர்வுகளும், வாழ்க்கை நெறிகளும் பிரமிக்க வைப்பவை.
*****
குறுந்தொகை 62, சிறைக்குடி ஆந்தையார்,
கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே
கோடல் – அல்லி, முகை – மொட்டு, ஐது – அழகான; தொடை – தொடுத்த, கோதை – மாலை (ஆண்டாள் வருவதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முந்திய கவிதை)
அல்லி, முல்லை, குவளை முதலிய மலர்களின் மணம் வீசும் புதிய மொட்டுகளால் தொடுத்த அழகான மாலை போல மணக்கும் உடல் என் மனைவிக்கு.
புதிய பசுமையான இளந்தளிர் இலைகளை விட மிருதுவானது அவள் தேகம்.
அணைத்து முயங்கும் போது மிகவும் இனிக்கும்.
*******
குறுந்தொகை 63, உகாய்க்குடிகிழார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி;
அவ்வினைக்கு அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே.
இல்லோர்க்கு – பொருள் இல்லாதவர்க்கு; அரிவை – பெண்
பொருள் இல்லாதவர் பிறருக்கு உதவி செய்ய முடியாது. அவர்களும் நல்ல இன்பங்களை அனுபவிக்க முடியாது என்றெல்லாம் சொல்லி என்னை வேறு ஊருக்கு பொருள் தேடி வர அனுப்பும் நெஞ்சே; என்னுடன் என் மனைவி வர முடியுமா என்பதை நினைத்தாயா? என்னை மட்டும் தனியாக அனுப்ப முடிவு செய்து விட்டாய் அல்லவா?.