பாகம் ஒன்றை படிக்க http://vaakaiadi.com/தனியன்-பாகம்-1
ப்ராஜெக்ட் ஆரம்பித்து சில மாதங்களில் கோடை காலம் மறையத் தொடங்கி விட்டது.
இலைகள் நிறம் மாறி எங்கும் வண்ண மயமாக தோன்ற, காரில் அந்த சாலைகளில் பயணிப்பதே ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது.
ராஜாவின் இசை வண்டியை நிறைக்க, வீடியோ அழைப்பில் (facetime) அவளுக்கு சாலையோர மரங்களின் வர்ண ஜாலங்களை காட்டி கொண்டே சென்றான்.
குழந்தையும் கண்களை அகல விரித்து பார்த்து, திரைக்குள் புகுந்து கொள்ள முயல்வது போல் அம்மாவின் கையில் இருந்து போனைப் பிடுங்கி முகத்தை திரைக்குள் திணித்துக் கொண்டது.
“வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மேகக் கூந்தலோ…” ஷோபாவின் முகத்துக்கு பதில் போனின் திரையில் மனைவி
“என்ன ஐயா பயங்கர மூடிலே இருக்கற மாதிரி இருக்கு? ஊருக்கு திரும்பி வர ஐடியா இல்லையா?” தூங்கிப் போய் விட்ட குழந்தையை மடியில் படுக்க வைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்த படியே அவனைச் சீண்டினாள்.
“சிவப்பும், மஞ்சளும், பச்சையும், ஆரஞ்சுமாய் பழுத்துக் கிடக்கற இந்த இலைகள் பாக்க நல்லத்தான் இருக்கு. ஆனா நீ அதை அங்கேருந்தே பாக்கும் போது, உன் கண்ணுலே தெரியறதும் அதே காட்சிதான். அது இன்னும் இவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?”
“எனக்கு அத பார்த்தது போதும். கேமராவைத் திருப்பி உன் முகத்தை காமி” என்று சொல்லி அவன் முகம் தெரிந்ததும் திரையில் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“ரொம்ப தேடுதுடா.. ப்ராஜெக்ட் சீக்கிரம் முடிஞ்சுரும்லே? வந்துருவதானே” என்றாள். குரல் கம்மியது
*****
ப்ராஜெக்ட் ஆறு மாதத்தில் முடியவில்லை.
கடைசி நேரத்தில் கஸ்டமர் அவன் காட்டிய டெமோவைப் பார்த்து விட்டு இன்னும் இரண்டு மூன்று தேவைகளை சேர்க்கச் சொன்னான். அவன் அதை தவிர்க்க விரும்பி எக்கச்சக்கமான விலை ஒன்றை கேட்க, உடனேயே அது ஒப்புக் கொள்ள பட்டது.
“டிக்கட் கன்பர்ம் பண்ணிட்டியா?’ என்று கேட்டவளிடம் இதைச் சொன்னவுடன், ஏமாற்றத்தில் வாடிய முகத்தை மறு கணம் மாற்றிக்கொண்டு “பரவாயில்ல.. இருந்து முடிச்சுட்டு வந்துடு.. வந்துட்டு உடனேயே திரும்பிப் போகணும்னு இருந்தா இன்னும் கஷ்டம்” என்றாள்.
கண்ணில் ததும்பிய கண்ணீரை மறைக்க வீடியோவை அணைத்து விட்டாள்.
குரல் மட்டும் கேட்டது.
“இரண்டு மாதமோ.. மூணு மாசமோ.. சீக்கிரமா முடிச்சுட்டு வந்துடறேன்.”
நிறம் மாறிய இலைகள் உதிரத் தொடங்கி விட்டன.
தரை எங்கும் உதிர்ந்த இலைகளை குளிர்ந்த காற்று சுருட்டி வீசியது.
அந்த வருடத்தில் முதல் பனி சீக்கிரமே விழத் தொடங்கியது.
*****
குளிர்.
காது மடலைத் தாண்டி உள் வரை புகுந்து உறைய வைக்கும் குளிர்.
இலைகள் எல்லாம் உதிர்ந்து காம்புகளும், கிளைகளும் பனியில் உறைந்து போய், காற்றும் குளிருக்கு பயந்து வீச மறந்தது போல் அசைவின்றி இருந்தன.
ஆறு மாதத்தில் ப்ராஜெக்ட் முடித்து விட்டால் கடுங்குளிர் தொடங்குவதற்கு முன் ஊருக்கு போய் விடலாம் என்ற கணக்கு தப்பாகி விட, பனியும் குளிரும் தனிமையைக் கூட்டின.
இரண்டு நாட்களாய் பனி மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது.
உறை பனியின் எடை தாங்காமல் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரமும் இல்லை.
காகம் போன்று இருக்கும் ஒரு பறவை மட்டும் அவன் வீட்டருகே சமீபத்தில் வந்து கொண்டிருந்தது. அதுவும் இப்போது தென்படவில்லை.
அவன் வீட்டுக்கு பின் புறம் இருந்த பரந்த புல்வெளி, வெள்ளை போர்வை போர்த்திக் கொண்டிருக்க, அதைத் தாண்டி அடர்ந்த மரங்கள் அனைத்தும் பனிக் குச்சிகளாய் கண்ணாடியில் செய்தது போல் தெரிந்தன.
மரங்களின் வெளியே ஒரு ஒற்றை ஆண் மான் மட்டும் இருள் கவிழ ஆரம்பித்த நேரத்தில் வெளியே வந்தது. புல் முழுவதும் பனி மறைத்திருக்க, மான் அதைத்தான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தது.
மின்சாரம் இல்லாததால் பிரிஜ்ஜில் இருந்த உணவுகள் கெட்டுப் போய் விட, இருந்த பழங்களும், பண்டங்களும் தீர்ந்து போய், சீரியலை அப்படியே சாப்பிட்டு பசி தீர்த்தான்.
அந்த மான் பக்கத்தில் வந்தால் கொஞ்சம் கொடுக்கலாம். ஆனால் அது மரத்தின் அடியிலிலேயே நின்று விட்டது.
தொலைபேசியும், இன்டர்நெட் தொடர்பும் விட்டுப் போய் விட ஊருக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
எப்போதே படித்த லா.சா.ராவின் வரிகள் நினைவுக்கு வந்தன.
“தனியாய் இருக்கலாம்.. ஆனால் தனிமையாயிருத்தல்.. அப்பா! பயங்கரத்தில் அவன் சிலிர்த்துக் கொண்டான்”
நினைவுகளை போர்த்திக் கொண்டு, அந்த வெப்பத்தில் குளிர் குறைக்க முயன்றான்.
******
“பயணிகளுக்கு என் வணக்கம்.”.. விமான ஓட்டியின் குரல் கேட்டு முழிப்பு வந்து விட்டது.
“சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறினால், விமானத்தை பெங்களூரில் தரை இறக்க வேண்டி வந்த சூழ் நிலைக்கு வருந்துகிறோம்.”
தூக்க கலக்கத்தில் கேட்டதின் அர்த்தம் புரிவதற்கு சில நேரம் ஆனது.
ப்ராஜெக்ட் நினைத்ததற்கு இரண்டு வாரத்துக்கு முன்பே முடிந்து விட, அவளை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்து, அவளிடம் சொல்லாமலேயே டிக்கெட் வாங்கிக் கொண்டு கிளம்பியிருந்தான்.
நாளை காலை அவளின் பிறந்த நாள். இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு கதவை தட்டி அவளை ஆச்சர்யப்படுத்த வேண்டும் என்று திட்டம்.
இந்தியாவில் நேரம் மாலை நாலு மணி என்றாள் ஒரு விமான சிப்பந்தி.
பெட்டியெல்லாம் கிடைத்து வெளியே வரும்போது மணி ஆறைத் தாண்டி இருந்தது.
இங்கிருந்து சென்னை செல்வதற்கு குறைந்தது எட்டு மணி நேரம் என்றது கூகுள் வரை படம்.
காரில் ஏறியவுடன்.. “உங்க பேர் என்ன.. தமிழ் பேசுவிங்களா?” டிரைவரை கேட்டான்.
“சஞ்சீவ் சார். அம்மா அனுமான் பக்தை. அதனால இந்த பேரு” கேட்காமலே விவரம் சொன்னவனை உடனேயே பிடித்து போய் விட்டது.
“அப்பா.. சமய சஞ்சீவி.. என்ன செய்வியோ தெரியாது. எனக்கு பன்னிரண்டு மணிக்குள்ளே சென்னை அண்ணாநகர் வளைவு கிட்ட இருக்கனும். பறந்து வேணாலும் போ”..
விமான நிலையத்தை விட்டு வெளியில் வருவதற்குள் ஏழு மணி நெருங்கி விட்டது.
“நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க.. ஹோசஹோட்டே, கோலார், குடி குப்பமுனு ஷார்ட் கட் ஒன்னு இருக்கு. சிட்டிக்குள்ளே போகாமலயே போறேன். நீங்க பாட்டு கண்ணை மூடிட்டு தூங்குங்க. பன்னிரண்டு மணிக்கு முன்னாடியே வீட்டுலே நிப்பாட்டறேன்”
குடியாத்தம் தாண்டி சேலம்-சென்னை சாலையில் வந்து சேரும் வரை முழித்து இருந்தான். பின் கண் சொக்கி விட்டது.
கதவைத் திறந்த பெண் கழுத்து வரை வளர்ந்து இருந்தாள்.
“அம்மா யாரோ அங்கிள் பெட்டி படுக்கையோட வந்திருக்காருமா..” என்று உள்ளே கேட்கும் படி இரைந்தாள்.
முடி நரைத்து இருக்க, உடல் மெலிந்து இருமியபடி வெளிய வந்த மனைவி “ஆறு மாசத்துலே வரேன்னு சொன்னிங்களே.. பதினாறு வருஷம் ஆயிடுச்சே!!” என்றாள்.
கனவு தூக்கத்தை கலைத்தது.
வண்டி ஓடாமல் நின்று விட்டிருந்தது.
*****
அவள் கோபமும், சஞ்சலமுமாய் துடித்துக் கொண்டு இருந்தாள். .
இரண்டு நாட்களாய் அவனை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவனை காதலிக்க தொடங்கியதில் இருந்து இது வரை ஒரு நாள் கூட இப்படி பேசாமல் இருந்ததில்லை.
அவன் நண்பர்கள் கூட அவன் எங்கு சென்றிருக்கிறான் என்று தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் பன்னிரண்டு அடித்து விடும். பிறந்த நாள் வாழ்த்து சொல்லவாவது கூப்பிடுவான் என்று நினைத்து அவனுக்கு பிடித்த ஆரஞ்சு நிற புடவை அணிந்து, தலையில் மல்லிகைப் பூ வைத்து, அவனுடன் சேர்ந்து வெட்ட தனக்கு பிடித்த ஐஸ் க்ரீம் கேக் வாங்கி வைத்திருந்தாள்.
கழுத்தில் மெல்லிய சங்கிலியில் ஒரு பெரிய வைரக் கல் மட்டும் தொங்கியது.
சோபாவில் விழுந்து கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
தூக்கம் கண்களை மூடியது.
கதவு மணி அடித்தது.
******
“சார்.. வந்துட்டோம் சார். வளைவு கிட்ட வந்துட்டோம். வீடு எங்க சொல்லுங்க. பன்னிரண்டு அடிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு”.
பரபரவென்று எழுந்தான். விமான நிலையத்தில் வாங்கிய ரோசாப் பூக்களை எடுத்து வைத்துக் கொண்டான். வீட்டுக்கு வழி சொன்னான்.
“எப்படிபா இவ்வளவு சீக்கிரம் வந்தே?. டீ குடிக்க கூட நிப்பாட்டலை போல? பசிக்கலையா?”
அவன் இல்லை என்று தலையாட்டினான். “நீங்க முதல்லே போங்க சார்..நான் பெட்டியெல்லாம் எடுத்துட்டு வரேன்”.
******
கதவைத் திறந்த அவள் கண்கள் ஒரு கணம் வியப்பில் விரிய மறு நிமிடம் கோபத்தில் கொப்பளித்தன.
அவன் கையில் இருந்த பூவை வாங்கி சோபாவில் வைத்து விட்டு, கதவை மூடினாள்.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று முத்தமிட வந்தவனை கதவில் சாய்த்து, அவன் மேல் கையில் பலமாக கிள்ளினாள்.
“பைத்தியமா உனக்கு?? எப்படி பயந்து போய்ட்டேன் தெரியுமா?.. “
அவன் சிரிக்க “சிரிப்பு வருதா உனக்கு..?” என்று அடுத்த கையையும் மேலும் பயங்கரமாய் வலிக்க கிள்ளினாள்.
இரு கையையும் விரித்து முதுகு பக்கம் அழுத்தி இறுக்கிக் கொண்டாள்.
சுருக்கமாய் பெங்களூரில் இறங்கி சென்னை வந்த கதையைச் சொன்னான்.
“அழுக்கு மூட்டை.. குளிச்சு இரண்டு நாள் ஆச்சு தானே.. குளிச்சுட்டு போய் உம் பொண்ணை கொஞ்சு”
“சரிம்மா.. டிரைவர் வருவாரு. சாப்பிடாம ஆறு மணி நேரம் ஓட்டிட்டு வந்துருக்காரு. இங்க தங்கிட்டு, நாளைக்கு காலலே திரும்பி போகட்டும்.
“நான் பாத்துக்கறேன். நீ போய் குளி..”
டிரைவரை உள்ளே அழைத்து போய், சுட சுட தோசை செய்து கொடுத்து, அவர் படுக்க ஏற்பாடு செய்து விட்டு, ஒரு கிண்ணத்தில் அவனுக்கு பிடித்த ரசம் சாதம் சுட வைத்து எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
குழந்தை அவன் மேல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.
“போதும் அவளைக் கொஞ்சினது. இந்தா இதைச் சாப்பிடு. நான் போய் புடவையை மாத்திட்டு குளிச்சுட்டு வரேன்”…
மகளை பக்கத்தில் இருந்த தொட்டிலில் படுக்க வைத்தாள்.
குளித்து முடித்து உடை மாற்றும் கண்ணாடி அருகில் நின்ற போது, ஒரு நகைப் பெட்டியில் சின்னதாய் நெக்லசும், அருகில் பிறந்த நாள் வாழ்த்து மடலும் இருந்தது.
******
“வெல்கம் ஹோம்.” போர்வைக்குள் அவனையும் சேர்த்து மூடி நெருங்கி கட்டிக் கொண்டாள்.
மல்லிகையும் சந்தனமும் கிறங்கடித்தது.
“நெக்லஸ் பிடிச்சுதா?”..
“ம்ம்.. உடனேயே போட்டுண்டேனே”..
அவன் கைகள் நகையைத் தேடின. ஆனால் கழுத்தில் ஆரம்பிக்கவில்லை.
“திருடா..வேறென்ன தேடறே” காதருகில் மெல்லிசைத்து மடல் கடித்தாள்.
அவன் கைகள் அவள் உடலெங்கும் திக்கின்றி தேடி அலைந்தன.
கைகள் தேடிய இடமெல்லாம் இதழ்களும் பல முறை தேடின.
தேடல் முடியட்டும் என்று சூரியனும் சோம்பிக் கிடந்து நேரம் கழித்தே எழுந்தான்.
*****
இந்தக் கதையின் சம்பவங்களில் என் கற்பனை மிகக் குறைவு.
இந்தியாவில் எழுதப்படும் பெரும்பாலான கதைகளின் மூலம் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இருக்கிறது என்பது பல இலக்கிய விமர்சகர்களின் கருத்து.
அதே போல், தமிழ் இலக்கியத்திலும், திரைப் படங்களிலும் நாம் காணும் உணர்ச்சி வரைகளும், மனித நெறிகளும், காட்சி அமைப்பும் சங்க காலப் பாடல் வரிகளில் இருக்கின்றன என்பது என் தாழ்மையான கருத்து.
சிலம்பும், ராமாயணமும், பக்தி இலக்கியமும் சங்க கால கற்பனைகள் பலவற்றை பிரதிபலிக்கின்றன.
அதன் பின் வந்த பல இலக்கியங்களுக்கும் திரை இசைப் பாடல்களுக்கும் அவையே முன்னோடிகள்.
********
பொருள் தேடிப் பிரிந்து செல்லும் கணவரை வாழ்த்தி அனுப்பி, அவள் செல்லும் வழி எங்கும் வளம் கொழிக்க வேண்டும் என்று எண்ணும் மனைவி..
மனைவியைப் பிரிந்து இருக்கும் நிலையில் புலம்பும் கணவன்.
வந்த வேலை நீண்டு கொண்டே போக, மனைவிக்கு தேடி வந்த பாணர் மூலமோ, பயணம் செய்யும் பார்ப்பனர் மூலமோ சொல்லும் செய்தி.
வீடு திரும்பும் போது தேரை விரைந்து செலுத்தி சீக்கிரம் வீடு கொண்டு சேர்த்த தேர்ப்பாகன்.
வீடு திரும்பிய பின் கூடலின் இனிமை.
சங்க கால வரிகளில் பார்க்கலாம்.
*******
ஐங்குறுநூறு 431, பேயனார், முல்லைத் திணை
நன்றே காதலர் சென்ற ஆறே,
அணி நிற இரும் பொறை மீமிசை,
மணி நிற உருவின தோகையும் உடைத்தே.
நிலன் அணி நெய்தல் மலரப்,
பொலன் அணி கொன்றையும், பிடவமும் உடைத்தே.
குருந்தக் கண்ணிக் கோவலர்
பெருந்தண் நிலைய, பாக்கமும் உடைத்தே
இரும் பொறை – பெரிய பாறை; மீமிசை – அதன் மேல் தோகை – மயில்; பொலன் அணி – பொன் மாலை; குருந்தம் – ஒரு வகை மலர்; பெருந்தண் – குளிர்ச்சியான (பெருந்தன்மையின் மூலம்); பாக்கம் – ஊர்
என் காதலர் பொருள் தேடச் சென்ற வழியெல்லாம் பல வர்ணங்களில் பாறைகள் இருக்கும் (விலை உயர்ந்த ரத்தினங்கள் நிறைந்த பாறைகள்).
அதன் மேல் மயில்கள் நடமாடும்.
நிலமெங்கும் நெய்தல் மலர் (water lillies) பூத்திருக்க, மரமெங்கும் பொன்னால் ஆன அணிகலன் போல் கொன்றையும், பிடவமும் மலர்ந்திருக்கும்.
அழகிய மலர்கள் அணிந்த, பெருந்தன்மையுடைய கோவலர் வாழும் ஊர்கள் இருக்கும்.
******
குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தலைவன் அந்தண நண்பனிடம் சொன்னது
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே.
நல் நார் – பட்டை; படிவ உண்டி – பிரசாதம்; எழுதாற் கற்பு – வேதம்; மயலோ – குழப்பம்
பார்ப்பன மகனே – புருச மரத்தின் தண்டில் செய்த கமண்டலத்தில் சாப்பிட பிரசாதத்தை எடுத்துக் கொண்டு செல்லும் மகனே – எழுதி வைக்கப்படாத உன் வேதத்தில்; பிரிந்தவரைச் சேர்த்து வைக்கும் மந்திரம் ஏதாவது இருக்கிறதா?
வேதம் ஓதும் பார்ப்பனர்களை பற்றிய குறிப்புகள் சில பாடல்களில் வருகின்றன. அவர்கள் அரசர்களுக்கு இடையே தூது சென்றதாக ஒரு பாடல் சொல்லுகிறது.
****
குறுந்தொகை 237, அள்ளூர் நன்முல்லையார், பாலைத் திணை ; தலைவன்சொன்னது
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய
நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே.
தழிஇய – அணைத்துக் கொள்ள; திரை – அலைகள்;
என் நெஞ்சம் பயம் அறியாது. என் மனைவியை அணைத்துக் கொள்ள சென்று விட்டது. ஆனால் என்ன பயன்? அவளைத் தழுவ வேண்டிய கைகள் இங்குதானே என் உடம்போடு இருக்கிறது? அவளுக்கும் எனக்கும் எத்தனை தூரம்? கடலின் ஓசை போல் உறுமும் புலிகள் உலாவும் காடுகளைத் தாண்டி அல்லவா போக வேண்டும்? (புலிகள் போல் ஒலிக்கும் கடல்களை தாண்டி அல்லவா போக வேண்டும் என்று மாற்றினால் இந்தக் காலத்துக்கும் பொருந்தும்).
****
ஐங்குறுநூறு 450, பேயனார், முல்லைத் திணை – தலைவன்சொன்னது
முரசு மாறு இரட்டும் அருந்தொழில் பகை தணிந்து,
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்
வெய்ய உயிர்க்கு நோய் தணியச்
செய்யோள் இள முலைப் படீஇயர் என் கண்ணே
இரட்டும் – ஒலிக்கும்; அருந்தொழில் – கடினமான வேலை; முன்னியரோ – திரும்ப எண்ணி; பீடு கெழு – பெருமை மிக்க; வெய்ய உயிர் – பெரு மூச்சு;
போர் முரசு நின்று, பகைவரை கடும் போரில் வென்று; என் பெருமை மிகு அரசன் சினம் தணிந்து நாடு திரும்பினால்; என் மனைவியின் அழகிய மார்பில் என் கண்கள் உறங்கும்.
என் பெருமூச்சுக்கு காரணமான அவள்தான் என் நோய்க்கும் மருந்து.
********
384, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை
இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறு நனி அறிந்தன்றொ இலெனே தாஅய் …
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ 10
உரைமதி- வாழியோ வலவ எனத்தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்து இழையோளே.
ஆறு – பாதை; இலனே – இல்லையே; வளி – காற்று; மனை – வீடு; புக்கனன் – புகுந்தான்; திருத்து இழையோள் – பிழையில்லாத அணிகலங்கள் அணிந்த பெண்.
“என் அரசன் பகையை வென்று முடித்தான். என் மனைவியை உடனே காண வேண்டி தேர் ஏறினேன். நான் தேர் எப்போது ஏறினேன் என்று நினைவில்லை. வந்த வழி புரியவில்லை. நீ காற்றைப் பூட்டி ஓட்டினாயா? அல்லது மனதை பூட்டி தேரை செலுத்தினாயா? நீ வாழ்க!” என்று சொல்லி அவனை மார்போடு அணைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.
நல்ல அணிகலன்களை அணிந்திருந்த அவன் மனைவி, அவன் தேரோட்டிக்கு விருந்து வைக்கும் பேறைப் பெற்றாள்.
தமிழ் நாகரிகத்தின் இந்த மனித நேயம் வியக்கத்தக்கது.
என்னை பிரமிக்க வைத்த ஒரு பாடல்.
“விருந்தேர் பெற்றனள்” என்ற வரிகள் அற்புதமானவை. விருந்து கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை ஒரு வரமாகச் சொல்லும்.
********
ஐங்குறுநூறு 415, பேயனார், முல்லைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே,
இதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே,
இனிதுடன் கழிக்கின் இளமை
இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே.
மடந்தை – பெண்; மேவிய – விரும்பிய; புறவே – காடு (புல் வெளி?)
நாம் இருவரும் புணரும் நேரமே இனிமையான நேரம்.
இந்த புல் வெளிதான் நாம் ஒன்றாய் களிக்க நினைத்த இடம்.
நம் இளமை இனிக்கும் நேரம்.
நாம் விரும்பும் நேரம்.
*****
ஐங்குறுநூறு 410, பேயனார், முல்லைத் திணை
மாலை முன்றில் குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவியாகப், புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே,
மென் பிணித்து அம்ம பாணனது யாழே.
மாலை நேரம்.
கட்டிலில் கணவனும் மனைவியும்.
கணவனின் மார்பில் தவழ்ந்து விளையாடுகிறது குழந்தை.
அப்போது அவர்கள் சிரித்து மகிழும் ஓலி.
அந்த ஓசைக்கு இணையாக எந்த பாணனின் யாழ் இசையும் வராது.