தாமிரபரணி எனும் சிநேகிதி

“அப்பா.. ஏன் திருநெல்வேலி போகும் போது மட்டும் தனியாவே போறிங்க? அம்மாவ ஏன் கூட்டிட்டே போறதில்லே?” என்று என் மகள் எடுத்துக் கொடுத்தாள்.

நமக்கு எதிரி வீட்டுக்குள்ளையே, அதுவும் நம்ம சாயல்லேயே இருக்கு.

“ஆமாம்!! உங்க அப்பாவை சின்ன வயசிலே பார்த்த பொண்ணுங்கல்லாம் அவரைத் தனியா பாக்கனும்னு  wait பண்றாங்க. நீ வேற!  விஞ்சை விலாஸ், ஜானகிராம்னு போய் சாப்பிடனும். வரும் போது கிலோ கணக்குல இருட்டு கடை அல்வா. இதுக்குதான் நம்மை கழட்டிவிட்டு போறாரு” என்று என்னை சீண்டினாள் சக தர்மிணி.

“ஏய்.. என் பெருமை உங்களுக்கெல்லாம் தெரியல. பெருமாள் கோயில் தெரு, தெப்பக்குளத் தெரு கிட்ட வந்து என்னப் பத்தி கேட்டு பாருங்க. அங்க கிடக்கு தராசும், படியும்.” என்னைத் தெரிந்த எல்லாரும் ஊரை விட்டு போய் விட்டார்கள் என்ற தைரியத்தில் சவால் விட்டேன்.

“என்ன.. ஐயாவுக்கு இந்த தடவை சொந்த ஊருக்கு போற துள்ளல் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு. சைட் அடிச்ச பொண்ணுங்க யாரையாவது மீட் பண்ண போறியா” என்று இரவின் தனிமையில் சீண்டிய மனைவியிடம், “ஆமா ஒரு பொண்ணை பாக்கத்தான் போறேன். மழை பெஞ்சு வெள்ளம் குறுக்குத் துறையை முக்கிட்டு ஓடுதாம். தாமிரபரணியைப் அப்படி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்றேன்.

*******************

மறு நாள் காலை விடியும் முன், நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் என்னை இறக்கி விட்டு விட்டு, சிறிது இளைப்பாறி மீண்டும் பயணத்தை தொடர்ந்தது.

மழை வெறித்து இருந்தது. ஆனால், எங்கும் ஈரம்.

நிலையத்தில் உடல் முழுதும் மூடி பலர் இன்னும் படுத்து இருந்தனர். லேசான குளிரில் தேநீரைக் கையில் ஏந்தி சிலர் சூடு ஏற்றிக் கொண்டிருக்க, நிறைய ஐயப்ப பக்தர்கள் குளிக்க இடம் தேடிக் கொண்டிருந்தனர்.

நான் புக் செய்த ola டிரைவர் போனில் பல முறை அழைத்தும் எடுக்க விலை.

“அண்ணாச்சி ஆட்டோவா?” என்று என்னைக் கடத்திக் கொண்டு போக பலர் முயற்சிக்க, போன் அடித்தது.

“மன்னிச்சுக்கிடுங்க.. டீ குடிச்சிட்டு முருகங்குருச்சிலே நிக்கேன். Tower கிடைக்கவே இல்ல பாத்துகிடுங்க. ஒரே மழை கேட்டியளா. எளவு டவேருக்கெல்லாம் என்ன ஆச்சோ. இதோ வந்துட்டேன். காமராஜருக்கிட்டே நில்லுங்க. வாரேன்”

அவர் சொல்லுவது நெட்வொர்க் coverage பிரச்சினை என்றும், காமராஜர் சிலை என்றும் புரிவதற்குள் வந்து விட்டார்.

********************

மதுரை ரோட்டில் இருந்த லாட்ஜில்  குளித்து முடித்து ஜானகிராம் ஹோட்டல் செல்லும் போது மணி ஆறைத் தாண்டி இருந்தது.

நெய் உறைந்து கட்டியாகிப் போகாமல்,  வழுக்கிக் கொண்டு உள்ளே போன பொங்கலும், சூடான இட்லியும், பொடியும் அமிர்தமாய் இருந்தன.

திருநெல்வெலி தோசைப் பொடி கொஞ்சம் கருப்பாய், ஓன்று இரண்டாய் அரைத்து, சாப்பிடும் போடு கடி படும் பதத்தில் இருக்கும். மற்ற இடங்களில் (e.g. முருகன் இட்லி கடை) மாவு மாதிரி கொடுப்பதெல்லாம் பொடி அல்ல – உல்லுலாக்கு.

பக்கத்து டேபிளில் ஒரு மாமாவும் மாமியும். பையும் பெட்டியும் அருகே.  இப்போதுதான் இரயிலில் இருந்து இறங்கி இங்கு நேரே வந்திருக்க வேண்டும்.

“ஜானகிராம் காப்பி டேஸ்ட் மட்டும் எத்தனை வருஷம் ஆனாலும் மாறவே இல்ல பாத்தேளோ.” என்று மாமி சப்புக் கொட்ட, “நீயும் போடறேயே காப்பின்னு..” என்று மாமா கிண்டலடிக்க, “நான் இங்க இருந்தப்ப போட்டது இதை விட நன்னா இருக்கும். எல்லாம் தாமிரபரணித் தண்ணிலே இருக்கு. உங்க மெட்ராசில பாக்கட் பாலுக்கும் கூவம் தண்ணிக்கும் அவ்வளவுதான் வரும்” என்று தப்பித்தாள் மாமி.

காலையில் காபி அருமையாகவே இருந்தது.

நல்ல காப்பி குடித்தவுடன் சில நிமிடங்கள் வாயில் மணம் இருந்து பின் மறைந்து விடும். பாலின் பிசுபிசுப்பும், காப்பியின் கசப்பும் நாக்கில் தங்கினால் அது நல்ல காப்பி அல்ல.

இரண்டாவது கப் கேட்ட என்னை சர்வர் சிரிப்புடன் பார்த்தான்.

********************

தாமிரபரணிக்கு சங்க இலக்கியத்தில் பொருநை என்று பெயர்.

அரிமயிர்த் திரள் முன் கை
வால் இழை மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்குக்
குலவுச்சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்

புறநானூறு 11, பாடியவர்:  பேய்மகள் இளவெயினியார்

கைகளில் மெல்லிய முடிகள், உடலெங்கும் பளிச்சிடும் நகைகளுடன் அழகிய இளம் பெண்கள்.

ஆற்று மணலில் பொம்மைகள் செய்து, அவற்றுக்கு வளைந்து தொங்கும் கிளைகளில் இருந்து பூக்கள் பறித்து அணிவித்து, பின் ஆற்றில் குதித்து விளையாடுகிறார்கள் என்று வர்ணிக்கிறார் ஒரு பெண் புலவர்.

இப்போது பெரிய இயந்திரங்கள் மணல் அள்ளிக் கொண்டிருக்கின்றன.

********************

“சுரேஷ்.. இருட்டுக் கடை அல்வா சொன்னேனே வாங்கிட்டியா” நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழியிலும் மனம் அல்வாயில் அலை பாய்ந்தது.

சுரேஷ் மாமா மகன்.

“Owner லாலாகிட்டயே பேசி தனியா மூணு கிலோ எடுத்து வைக்க சொல்லிட்டேன்பா. Station வரும் போது கொண்டு வரேன்” என்றான்.

கடந்த ஐம்பது வருடங்களில் நெல்லையில் மாறாதிருப்பது காந்திமதி அம்மையின் அழகும், நெல்லையப்பரின் கோடாலியால் வெட்டப்பட்டு சரிந்த தலையும், இருட்டுக் கடை அல்வாவும்தான்.

அல்வா குடும்பத்து பையன் ஒருவனிடன் இதைப் பற்றி கேட்டேன்.

“உங்க கடை அல்வா மட்டும் taste வேற மாதிரி, ஆனா மாறாம அப்படியே இருக்கே. அது எப்படிடே? எதோ மருந்து கலக்கறிங்கன்னு பேசிக்கறாகளே! உண்மையாடே?”

சிரித்தான்.

“அதெல்லாம் இல்ல அண்ணாச்சி.. நாங்க நெய், ஜீனி, கோதுமை – இந்த மூணும் தவிர வேற ஒண்ணுமே போடறதில்லே. எல்லாமே ஒரே இடத்திலேந்துதான் அம்பது வருஷமா வருது”

கொஞ்சம் நிறுத்தி பின் “முக்கியமா, தாமிரபரணித் தண்ணி. இன்னி வரைக்கும் அதைத் தவிர வேற எந்தத் தண்ணியும், use பண்ண மாட்டோம்” என்றான்.

********************

ஸ்ரீவரமங்கலம் என்று நம்மாழ்வார் காலத்தில் வழங்கி இன்று, நாங்குநேரி எனப் பெயர் உடைய ஊருக்குள் நுழைந்ததும் கடல் போல் நிரம்பிய அலை அடிக்கும் பெரிய குளம்.

தாமிரபரணியில் இருந்து கால்வாய் வெட்டி தெற்கே கொண்டு வரப் பட்டிருக்கிறது.

தாமிரபரணிப் பாசனம் பிரமிக்க வைக்கும் ஒரு நெட்வொர்க். குளங்களும், கால்வாய்களும், அணைக்கட்டுகளும் இணைக்கப்பட்டு பாண்டியர்களும், நாயக்கர்களும், காமராஜரும் சேர்ந்து செய்த அற்புதம்.

வானமாமலைப் பெருமாள்.

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்

உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்

எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற வம்மானே

நம்மாழ்வார் திருவாய்மொழி

 “அங்கேயும் இல்ல, இங்கேயும் இல்ல, ஏன் எங்கேயுமே இல்ல” என்னும் நம்மாழ்வாரின் வரிகளுக்கு, விசிஷ்டாத்வைத விளக்கமெல்லாம் இருக்கிறது. ராமரையும், அவரைப் பிரிந்து இலங்கையில் சிறையில் இருந்த  சீதையையும்  வைத்து பெரிய விரிவுரைகள் இருக்கின்றன.

நெருங்கிய ஒன்றைப் பிரிந்து இருக்கும் பலருக்கும் பொருந்தும் இவ் வரிகள்.

நம்மாழ்வார் காலத்தில் (8th  Century AD) சிறிய கோயிலாக இருந்து பாண்டிய மன்னர்கள் பெரிது படுத்திய கோயில்.

மூலவரின் அருகில் இருக்கும் ராமர், லக்ஷ்மணர், சீதை சிலை ஒரு உன்னத கலைப் பொக்கிஷம். எல்லோர் முகத்திலும் சிரிப்பு – மூன்றும் மூன்று வகை.

சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்

மலி தண் சிரீவர மங்கை

நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே

நம்மாழ்வார் திருவாய்மொழி

கரும்பும் நெல்லும் இன்றும் இருக்கிறது, தாமிரபரணியின் கொடையாய்.

********************

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து, பொருள் தேடி எங்கெங்கோ அலையும் பலர் இன்றும் உண்டு. RMKV, போத்திஸ், சரவணா ஸ்டோர்ஸ், கண்ணன் ஸ்டோர்ஸ் என்று பல இடங்களின் ஆரம்பம் திருநெல்வேலியே.

சங்க காலத்திலும் அப்படி அலைந்த கணவர்கள் பலர் இருந்திருக்க வேண்டும். அவர்களும் தாமிரபரணியைத் தேடி இருக்கிறார்கள்.

நீள் இருங்கூந்தல் மாஅயோளொடு
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்
நுரை முகந்தன்ன மென் பூஞ்சேக்கை
நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்க
நலங் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப…….

தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

அகநானூறு 93, கணக்காயனார் மகனார் நக்கீரனார்

ஊருக்கு திரும்பும் காதலன், ஊருக்கு போய் என்ன செய்ய வேண்டும் என்று தன் மனதுடன் பேசுகிறான்.

நீண்ட கருங் கூந்தல். கரிய நிறம். அழகிய என் மனைவி.  மலையைக் குடைந்து செய்தது போல் உயரமான வீடு. நுரையை முகர்ந்து செய்தது போன்ற மென்மையான அகலமான பூ விரித்த மெத்தை.

பெரிய விளக்கின் நீண்ட ஒளி.

அவள் மார்பில் காயம் படும் படி இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டுமாம்.

எவ்வளவு முறை?

தாமிரபரணியின் கரை மணலின் துகள்களின் எண்ணிக்கையை விட அதிகமாய்.

பல நாள் கழித்துப் பார்க்கும் மனைவியுடன் முயக்கம் இருட்டில் இல்லாமல் வெளிச்சத்தில் நடக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன்.

அந்த நினைவுகள் அடுத்த முறை ஊருக்கு வரை நிலைக்க வேண்டுமே.

இப்போதும் கணவர்கள் ஊருக்கு வருகிறார்கள் குடும்பத்தை தேடி.

மணல் தான் குறைந்து கொண்டே வருகிறது.

********************

“என்னடே சரோஜினி முதலியார் பாலமே வரலையே இன்னும்” என்றேன் டிரைவரிடம்.

“நம்ம மதுரை ரோட்டுலே வந்து பை-பாஸ்லே ஏறிட்டோம்லா. அங்க ஒரே டிராபிக்கு”

“தாமிரபரணி வெள்ளம் பாக்கனும்பா. வரும் போது ஜங்ஷன் வந்து வா” என்றேன்.

வந்தவுடன், வண்டியில் இருந்து இறங்கி பாலத்துக்கு அருகில் நின்றேன்.

ஆற்றில் வெள்ளம் வடிந்து விட்டிருந்தது.

தாமிரபரணி எப்போதும் போல் குறுக்குத்துறை முருகனின் காலடியில் மெதுவாய் தொட்டும் தொடாமலும் நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

ஆசையாய் தேடி வந்த பொங்கும் வெள்ளத்தை பார்க்க முடியவில்லை.

“முந்தா நா தான் கோயிலை முக்கிட்டு ஓடிச்சு பாத்துகிடுங்க. எல்லா வெள்ளமும் கிழக்கேயும் தெற்கேயும் வடிஞ்சு போச்சு போலயே. அதான் நாங்குநேரி குளம் நிறைஞ்சு வழியுது. பாத்தோம்லா”

என் வருத்தம் தோய்ந்த முகம் அவனையும் பாதித்திருக்க வேண்டும்.

“ஒன்னும் கவலைப்படாதிக. டேம் எல்லாம் ரொம்பிடுச்சி. இன்னிக்கு ராவுலே மழை வரும். எல்லாத் தண்ணியும் இங்கனதான் வந்தாவணும். நாள காலேலே நுரச்சுட்டு ஓடும் பாருங்க”

“இன்னிக்கே ஊருக்கு போகணும்பா” என்றேன். .

ரயில் ஏறி, கல்லூரி காலப் பழக்கத்தில், கதவைப் பிடித்துக் கொண்டு படிகளில் நின்றேன்.

பழைய சிநேகிதியைத் தேடி வந்து முழுதாய் பார்த்து பேச முடியாத வெறுமை உணர்வு.

சந்திப்பை கடந்ததும் முகத்தில் துளித் துளியாய் தெறித்த மழை, சிறிது நேரத்தில் பலத்து பெய்து, உடம்பை நனைத்தது.

மனம் என்னவோ, வேகமெடுத்து ஓடும் இரயிலில் இருந்து குதித்து, சரோஜினி முதலியார் பாலத்தை தேடி ஓடியது.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள