தாய் மாமன்

எனது தாய் மாமாவும், திருநெல்வேலி தாணு கனபாடிகளின் பேரனும், சுப்ரமணிய ஐயரின் மூத்த மகனும் ஆன டி.ஸ். தாணு நேற்று காலமானார். அவருக்கு வயது எண்பது.

*****

நான் பிறந்த உடன் பார்த்த முதல் மனிதர் இவராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

“கீழப் புதுத் தெரு வீட்டுலதான்டா நீ பிறந்தே. தலை முதல்லே வரலே. கால்தான் வந்துது. மருத்துவச்சி பிரசவம். டாக்டர்லாம் கிடையாது. கெட்டிக்காரி – திரும்பி உன்னை வயித்துக்குள்ளே விட்டு, திருப்பி போட்டு , தொப்புள் கொடி கழுத்தை இறுக்காம எப்படியோ வெளியிலே எடுத்துட்டா. சாயங்காலம் ஆறு மணி இருக்கும். நெல்லையப்பர் கோயில் திருவிழா கொடி ஏறியிருக்கு அன்னிக்கி. நீயும், உங்க அம்மாவும் பிழைச்சதே அதிசயம். உங்க அப்பாவுக்கு சொல்லி விட்டோம்.. அப்போ அவருக்கு என் மேல ஏதோ மனஸ்தாபம். உங்க அண்ணாக்கு அல்வா வாங்கிக் கொடுத்து கூட்டிண்டு வந்தார். அப்போவே தாத்தா மாதிரி குண்டா இருப்பே”

இந்தக் கதையை பல முறை கேட்டிருக்கிறேன்.

“மாமா!! நான் பிறந்தது புதனா, வியாழனா.. கரெக்டா தெரியுமா”

ஒரு முறை புதன் என்பார், மற்றொரு முறை வியாழன்.

இதனால் மேஷ ராசியா, ரிஷப ராசியா என்று தெரியாமல் ஜாதக் கணிப்புகளில் இரண்டையும் படித்து, எது நல்லதோ அதை எடுத்துக் கொள்வேன்.

*

என் அப்பாவுக்கும், அவரின் மச்சினன் என் மாமாவுக்கும் இருந்த உறவு அலாதியானது.

வாழ்க்கையில் கடனே வாங்காமல் வாழ்ந்த என் அப்பாவும், தன் முழுக் குடும்பத்தையும் தலையில் தூக்கி சுமந்து, அதற்காக சளைக்காமல் கடன் வாங்கிய மாமாவும் வருடா வருடம் ஜனவரி முதல் நாள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

“கையிலே இருந்த பணம் போய்ட்டு வரதுக்கு சரியா இருக்கும். போக வர பஸ் சார்ஜ், வள்ளி குடில்லே ஒரு ரூம், காலையிலே டிபன், மத்தியானம் மணி அய்யர் கடையிலே சப்பாடு. கூட இரண்டு இட்லி சாப்பிட்டா, பாளை பஸ் ஸ்டான்ட்லே இறங்கி, டவுன் வரைக்கும் நடந்து தான் வரணும். யாருக்கிட்டயாவது கை மாத்தா வாங்கலாம்னா, உங்க அப்பா கேட்க மாட்டார். வெத்தில பாக்கு புகையில கூட வாங்க விட மாட்டார்”

மாமா அப்போதிலிருந்தே ஐம்பது வருடமாக வெத்திலை, சீவல், புகையிலை போடுவார்.  

என் பாட்டிக்கு (அப்பாவின் அம்மா) மாமா என்றால் மிகவும் பிரியம். என் அப்பாவிடம் கேட்க பயந்த சில விஷயங்களை அவரிடம் சொல்லி வாங்கிக் கொள்வாள்.

அவள் இறந்து போன மழை பெய்து கொண்டிருந்த ஒரு இரவில், பெருமாள் தெற்கு ரத வீதியின் வீட்டில் திண்ணை ஒன்றில் என் மாமாவும், அப்பாவும் தோளோடு சேர்த்து வாய் விட்டு அழுததை நான் பார்த்தேன். யாரிடமும் இது வரை சொன்னதில்லை.

வருடா வருடம் சஷ்டி விரதம் முடிந்த நாள் அவர் வீட்டில் சமாராதனை இருக்கும். அவர் விரதம் இருந்ததாக எனக்கும் நினைவில்லை. ஆனால் மறு நாள் வடை, பாயசத்துடன் சாப்பாடு.

என் தந்தையும், அவரும் ஒரே திதியில் இறந்து போயினர் – சஷ்டி திதி.

*

நான் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு முதல் முதலாய் கிடைத்த எல்லா அனுபவங்களின் போதும் இவர் கூட இருந்திருக்கிறார்.

அப்பா வெடி வாங்க மட்டும் செலவளிக்க மாட்டார். வருடா வருடம் தீபாவளிக்கு வெடி வாங்க கொடுத்த காசு அவருடையதுதான்..

“தாணு.!! கணேஷ் ஆறாம் கிளாஸ் இங்க்லீஷ் மீடியம் போறான். ஷு போட்டுண்டு போனுங்கறா. வாயேன். போய் வாங்கிண்டு வந்துரலாம்”. அப்பா கூடப் போவார்.

“பிளஸ் one போறான். டியூஷன் எல்லாம் போக வேண்டி இருக்கும். ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்காலம்னு இருக்கேன்” அவரும் கொஞ்சம் பணம் போட்டு வாங்கிக் கொடுத்த ராலி சைக்கிள் தந்த சந்தோசம் அலாதியானது.

என் கல்யாணம் முடிந்து முதல் இரவு ஒரு ஹோட்டலில். அடுத்த நாள் மாமா, மாமியுடன் திருநெல்வேலி செல்ல ஏற்பாடு. அவருக்கும் அதே ஹோட்டலில் ரூம்.

மறு நாள் காலை, மனைவியை அறையிலேயே விட்டு விட்டு, டிபன் சாப்பிட மாமாவுடன் சென்று விட்டேன்.

“என்ன கணேஷ். எல்லாம் ஹாப்பி தானே” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

*

எண்பது வயது வரை பெரிதாய் வியாதி எதுவும் வந்ததில்லை. ஒரு நாள் கூட ஆஸ்பத்திரி அறையில் இருந்ததில்லை. சுகர், பிரஷர் எதுவும் இல்லை.

எங்கள் குல தெய்வம் கோயிலில் வருடா வருடம் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவில் அவருக்கென்று ஒரு இடம் உண்டு. சாமான் அறையின் வெளியே ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கொள்வார். ஐயாயிரம் லட்டு பிடித்து வைக்கப்பட்டு இருக்கும்.

எல்லோருக்கு லட்டு பிரசாதம் கொடுப்பது தான் அவர் வேலை.

“மாமா… இந்த லட்டு வேண்டாமே. யாரு சாப்பிடறா. எல்லோருக்கும் சுகர். வாங்கி, வாங்கி வேஸ்ட்தான் பண்றா!. அடுத்த வருஷம் நிப்பாட்டிரலாம்!”

“கணேஷ்.. நான் இருக்கறவரைக்கும் லட்டு உண்டு. எனக்கு சுகர் இல்லை. உனக்கும் இல்லைலேயோ.. இந்தா கொஞ்சம் சாப்டு”

இனிப்பு மட்டும் இல்லாமல், கலர் குடிப்பதும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். மார்ச், ஏப்ரல் வெய்யிலில், குல தெய்வ கோயிலுக்குள் வேர்த்து வடியும்.

“கணேஷ்.. உன் டிரைவர அனுப்பி கூலா பாண்டா வாங்கிண்டு வரச் சொல்லு.”

“மாமா.. தண்ணி குடிங்கோ.. பாண்டால்லாம் வேண்டாம். குடிச்சா, தொண்டையிலே கேன்சேர் வருமாம்.”

“அப்படியா…தெரியவே தெரியாதே. சரி இதான் கடைசி. அடுத்த வருஷம் வேண்டாம்”

பாண்டாவை டேபிளுக்கு அடியில் வைத்துக் கொண்டு ரசித்து  குடித்தது கொண்டே இருப்பார்.

“இந்தா நீயும் கொஞ்சம் குடி. உனக்கெல்லாம் சின்ன வயசு. ஒன்னும் பண்ணாது”.

அவர் இறந்து போவதுக்கு ஒரு மாதம் முன், மயிலாப்பூரில் ஒரு நாடகம் பார்த்து விட்டு, இரவு உணவுக்கு ஈஷா உணவகத்துக்குப் போனோம்.

“இங்கல்லாம் பாண்டா கிடைக்காதோ கணேஷு”

“அதெல்லாம் வேண்டாம் மாமா. தொண்டை புண்ணுக்கு நல்லதில்லை. சீதா பழம் மில்க் ஷேக் சாப்பிடுங்கோ” என்றேன்.

வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

*

மூணு மாதத்துக்கு முன் அவருக்கு தொண்டையில் கான்சர் என்று கண்டு பிடித்தார்கள்.

“உங்க அப்பா சொன்னார். தாணு.. புகையிலே போடாதேன்னு..”

“ச் ச்சே.. early stage தான் மாமா. சீக்கிரமா குணம் ஆயிரும். திரும்பவும் வெத்தில போடாலாம்” என்றேன்.

“இல்லடா அதெல்லாம் விட்டு ஆறு மாசமாச்சு!!”

அண்ணா அவரை சென்னைக்கு கூட்டிக் கொண்டு வந்து அடையார் கான்செர் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டான்.

பதினேழு radiation வரைக்கும் தாங்கிக் கொண்டார்.

ஒரு வாரம் ஐரோப்பா டூர் போவதற்கு முன் பேசினேன்.

“நல்லா இருக்கேன் கணேஷ். ஒரு பிரச்சினை இல்ல. வாழ்க்கையிலே இப்போதான் எந்தக் கவலையும் இல்லாம இருக்கேன். நல்லா சாப்பிடறேன். நீ ஜாலியா போயிட்டு வா. அடுத்த வாரம் பாப்போம்”

அதுதான் அவர் என்னுடன் கடைசியாய் பேசியது.

*

அடுத்த வாரம் சனிக் கிழமை அவரை ICU வில் தான் பார்த்தேன்.

மூக்கையும், வாயையும் சேர்த்து ஒரு முக மூடி அழுந்தியிருக்க. ஒரு இயந்திரம் அவரை தூக்கி தூக்கி போட்டு மூச்சு விட வைத்துக் கொண்டு இருந்தது.

மூக்கில் இருந்து ஒரு குழாய். இடுப்பில் இருந்து ஒரு குழாய்.

இப்போதுதான் மேல் படிப்பு படித்து முடித்திருந்த ஒரு டாக்டர் தெளிவாய் விளக்கினார் – “septesemia கண்டிஷன். நுரையிரலல்லே infection. Oxygen saturation percentage கம்மியா இருக்கு. சோடியம், uriya எல்லாம் கூட இருக்கு. முதல்லே அவர் lungs சரியாக்க முடியுமான்னு பாப்போம். ஆனா அவர் ஹார்ட், பிரைன் இரண்டும் normal

“டாக்டர் எல்லாம் ஒழுங்கா தானே போயிட்டு இருந்தது”

fast growing carcinoma strain சார். Platelets கவுன்ட் கம்மியாய்ட்டு வருது. Bone marrow test எடுத்தா தெரிஞ்சி போகும். ஆனா இன்னும் புண்ணாக்கணுமா?”

“மாமா.. நான் கணேஷ் வந்திருக்கேன்” கண்ணைத் திறந்து பார்த்தார். கையை தூக்கி விரலை நிமிர்த்தி கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பேச முயற்ச்சித்தும் பேச முடியவில்லை

“சீக்கிரம் குணம் ஆயிடும்” தெரிந்தே பொய் சொன்னேன்.

*

ஒரு வாரத்தில் நுரையிரல் சரியாகி தானே சுவாசிக்க ஆரம்பித்தார். ஆனால் மற்ற அவயங்கள் செயலிலக்க ஆரம்பித்தன.

அதே டாக்டர் – “நீங்க வேற hospital கொண்டு போயிடுங்க. Creatin level ஜாஸ்தி, urea நூத்தி முப்பது இருக்கு. Dialysis தேவைப் படலாம்” என்றார்.

நான் தனியாய் கூப்பிட்டு பேசும் போது “சார்.. நீங்க அவரை சொந்த ஊர் – திருநெல்வேலி தானே – அங்க கூட்டிட்டு போயிடுங்க. வயசு ஆயிடுச்சசு. Chances are slim” என்றார்.

என் நெருங்கிய உறவினரான மருத்துவரும் அதையே சொன்னார்.

ஒரு ambulance வைத்து, இரண்டு மகன்களும், தம்பியும் உடன் வர, நெல்லைக்கு பயணம்.

இரவ பத்து மணிக்கு மதுரை தாண்டி போய்க் கொண்டிருந்த போது அவர் மகனுடன் பேசினேன்

“நேர இருக்காருடே. சொன்னா எல்லாம் புரியறது. கண்ணை திறந்து கேட்டுக்கிறார். தலையை ஆட்டிக்கிறார். பேசறயா?. காதுல போன் வைக்கறேன்”

“மாமா.. கணேஷ் பேசறேன்.. கிளம்பி வந்துண்டே இருக்கேன். சீக்கிரம் குணம் ஆயிடும். ஆத்துக்கு போயிடலாம்”

போனை காதில் இருந்து எடுத்து “நீ என்ன சொன்ன.? தலையை ஆட்டிண்டார். கண்ணுலேந்து ஒரே ஜலம்” என்று அவன் அழுதான்.

அதுதான் நான் அவருடன் கடைசியாய் பேசியது.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு – “கணேஷ்.. அப்பா போயிட்டாருப்பா. அவர் நாப்பது வருஷம் வேலை பாத்த தாழையூத்து தாண்டி, பாலம் மேல ambulace வரும்போதே ஏதோ மாதிரி ஆயிட்டார். ஆஸ்பத்திரி போய், ஒரு மணி நேரத்திலே எல்லாம் முடிஞ்சு போச்சு. தாமிரபரணி தாண்டி திருநெல்வேலி வந்துதான்  தான் உயிர் போகனும்னு கையிலே புடிச்சுண்டு வந்திருக்கார்” என்றான் சுரேஷ்.

*

தூத்துக்குடிக்கு flight பிடித்து நேராக சிந்துபூந்துறை மயானத்துக்குச் சென்றேன்.

வண்டியில் இருந்து இறக்கி வைக்கப் பட்டிருந்தவரை, தூக்கி சிதையில் வைத்தோம்.

வாயில் அரிசி போட்டு, நெஞ்சில் வரட்டியில் தீ மூட்டி வைத்து  திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டோம்.

கலங்கி சகதியாய் ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி நதியில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு முங்கி எழுந்தேன்.

கண்ணீரையும் சேர்த்து துடைத்துக் கொண்டு ஓடியது தாமிரபரணி.

*

திருநெல்வேலிக்கு வந்தால் திரும்பிப்  போகவே மனம் வராத எனக்கு, இரவே பஸ் பிடித்து சென்று விடலாம் என்று தோன்றியது.

திருநெல்வேலிக்கு வர வேண்டிய காரணங்கள் எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன.

மாமாவும் சாம்பலாகி தாமிரபரணியில் கரைந்து போனார்.

குல தெய்வம் நடுக்காவுடையாரும், கோடாலி வெட்டுக் காயத்துடன் நெல்லையப்பரும் இருக்கிறார்கள்.

கல்லாய் சமைந்து போன இருவர்.

யாருக்கென்ன!

இருந்து விட்டு போகட்டும்.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள