தீபவாளிக்கு புது துணிமணிகள்

டிவியைத் திறந்தால், சினேகா புதுத் துணி வாங்க “போலாமா, போலாமா” என்று கூப்பிடுகிறார். “பிரமாண்டமாய், பிரகாசமாய்” கடைகளுக்கு வரும்படி மற்ற நடிகைகள் கூப்பிடுகிறார்கள். காஜல் “திரும்ப திரும்ப ஒரே கடையா” என்று கேட்க, ஓவியா “எல்லாம் ஒரே கடையில் கிடைக்கும்” என்கிறார். இதெல்லாம் போதாதென்று, அமேசான் வேறு, 100% தள்ளுபடியில் வீட்டில் இருந்தே வாங்கலாம் என்கிறது.

ஓரே குழப்பம்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் வளர்ந்த திருநெல்வேலியில் தீபாவளி புதுத் துணி வாங்குவது இவ்வளவு கடினமான விஷயமாக இல்லை.

இப்போது எல்லோருக்கும் தெரிந்த RMKV இத்தனை பிரமாண்டமாய், உலகம் எங்கும் வியாபிக்காமல், நெல்லை டவுனில், வடக்கு ரத வீதியில் ஒரு இரண்டு மாடிக் கட்டிடத்தில் அளவான ஒளியில் இருந்தது.

“என்ன அண்ணாச்சி.. தீபாவளித் துணி எடுத்தாச்சா”..

“எங்கே போக… தேர்த் திருவிழா கூட்டமால்லா இருக்கு நம்ம கடையிலே. எப்போதும் Q ராயல் தாண்டி, சாமி சந்நிதி வரை நிக்கி”

எல்லோரும் RMKVல்  துணி எடுக்க, கடைசி வாரத்தில் பெரிய Q இருக்கும்.. வாங்குவது என்னவோ ஒரு ஸ்கூல் uniform செட், ஒரு கலர் துணி செட்.

சட்டை, ட்ரௌசெர் அல்லது பான்ட் துணி.

கலர் என்றால் – மங்கிய வெள்ளை, மஞ்சள், அல்லது நீலம்.

ஒரே கடை, ஒரே நடை.

அடுத்தது தையல்காரர்.

எங்கள் வளவிலேயே இருந்த ஒருவர் தெப்பக்குளத் தெருவில் சின்ன கடை வைத்திருந்தார். அவர் மட்டுமே கடையில் “ஆல் இன் ஆல் அழகு ராசா”.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன் துணியைக் கொடுத்து விட்டு, கடைசி மூன்று நாட்கள் காலையும் மாலையும் கடைக்கு செல்ல  வேண்டும்.

அப்போது எனக்கு அழகாய் தெரிந்த பெண்கள் பலர் அந்த தெருவில் இருந்தார்கள். எனவே சைக்கிளில் ஒரு முறை மேலும் கீழும் போவதற்கு இது ஒரு சாக்கு.

“தம்பி எல்லாம் ஆயிடுச்சு காஜா மட்டும் வைக்கணும். ஒரு பயல ஒரு வாரம் வரச் சொன்னேன் பாத்துக்கிடு.  சவத்து பய ஒழுங்கா வர மாட்டேங்கான்”

இதையே மூன்று நாளும் சொல்லுவார். துணி கட்டிங்கே கடைசி நாள்தான் தொடங்கும். அந்த காஜாப் பையனை நான் பார்த்ததே இல்லை.

ஒரு வழியாய் தீபாவளி முதல் நாள் இரவு எட்டு மணிக்கு துணி கிடைக்கும்.

“புது மாதிரியா தச்சிருக்கேன் தம்பி. அப்பாகிட்டே சொல்லி சீக்கிரம் கூலி வாங்கிக் கொடுங்க”.

அடுத்து பனியன், உள்ளாடை, ஒரு சாரம் (லுங்கி). அப்பா தீபாவளி முதல் நாள் இரவு கடைகள் மூடும் முன் சேட்டு கடை ஒன்றில் எனக்கும் என் அண்ணனுக்கும் வாங்கித் தருவார்.

அவ்வளவுதான். தீபாவளி துணி மணி ரெடி.

இப்படி வாங்கி பல வருடங்கள் அணிந்த சில உடைகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

புதுத் துணியும், வெடியும், இட்லியுடன் சாப்பிட்ட ஒக்காரையும், தீபாவளி  நாள் முதல் ஷோ பார்த்த “வறுமையின் நிறம் சிகப்பு, நாயகன், அடுத்த வாரிசு” படங்களும், பாவாடை தாவணியில் புதிதாய்த் தெரிந்த பெருமாள் சந்நிதித் தெருப் பெண்களும், ஒரு தீபாவளி இணைப்பாய் விகடனில் வந்த பாலகுமாரனின் “பச்சை வயல் மனது” நாவலும் – டிவிகள் இல்லாத தீபாவளிகள்.

எங்களுக்கு எல்லாம் வாங்கி, காலையில் பூஜையில் வைத்து, குளித்த பின் எடுத்துக் கொடுத்த என் தந்தை மட்டும் தனக்கென்று ஒரு தடவை கூட  தீபாவளிக்கு புது சட்டை, பான்ட் எடுத்து நான் பார்த்ததில்லை.

ஏன் என்று கேட்கவும் எனக்கு அப்போது தோன்றவில்லை

அவர் வாழ் நாளில் கடனுக்கு என்று எந்த கடையிலும் எந்த பொருளும் வாங்கியதில்லை என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.

வருடம் தோறும் கடைசியாய் கடை மூடப் போகும் சமயத்தில் “கை வச்ச பனியன் காமிப்பா” என்று கேட்டு பனியனும், கதர் கடையில் துண்டும் வாங்கிக் கொள்வார்.

சில வருடங்களில் வேஷ்டி.

அவரின் கடைசி வருடங்களில், அவர் எப்போதாவது ஒரு முறைதான் போட்டுக் கொண்டாலும், ஒவ்வொரு தீபாவளிக்கும் அண்ணா அவருக்கு Louis Phillippe சட்டையும், Raymonds பான்டும் எடுத்துக் கொடுத்தான்.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply