தொலைதூரக் கருக்கலைவு

துபாய் பத்து வருடங்களில் இன்னும் மெருகேறியிருந்தது.

விமானத்தில் இருந்து உதிர்ந்து, எந்த மனிதத் தொடர்பும் இல்லாமல் வெளியேறி, காரில் ஏறி விடலாம்.

பள பளவென்று மின்னும் ஒரு இயந்திரம், என் கடவுச் சீட்டையும் (பாஸ்போர்ட்), கண்களையும் ஆராய்ந்து, “கணேஷ் வருக” என்ற செய்தியுடன் வெளியில் செல்ல அனுமதித்தது.

இராட்சத இயந்திரங்களின்  தயவில் பாலைவனம் குளிர்ந்து கொண்டிருந்தது.

கழிப்பறைகளை சுத்தம் செய்யவும், சாலை மராமத்து வேலைகளுக்கும், புல் வெட்டவும், இந்தியர்கள் எங்கும் இன்றும் நிறைந்திருக்க, எல்லா கம்பனிகளிலும் முக்கால் வாசி வேலைகளில் தமிழோ, மலையாளமோ பேசுபவர்கள் உழைக்கிறார்கள்.

எல்லோருக்கும் இது பணம் சேர்க்க மட்டுமே பயன்படும் பாலைவனம்.

”பத்து வருட சம்பளத்தை ஒரே தடவையில் வாங்கி விட்டால் ஊருக்கு சென்று செட்டிலாகிவிடும்” என்ற  கனவில் தான் பலரும் இருக்கிறார்கள்.

*****************

ஒரு உயரமான ஹோட்டலின் மேல் தளத்தில் இருந்த உணவகத்தில் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன்.

மணல் மேடுகளின் நடுவில் கட்டிய நகரம்.

வீடுகளின் மேலேயும் பாலை மணல் சேர்ந்து கிடந்தது.

சூரியனின் உக்கிரம் வெளியில் தெரிந்தது. உயரமான கட்டிடங்களிலும், விரைந்து சென்று கொண்டிருந்த கார்களிலும் இருந்தவர்களை விட்டு விட்டு, தெரு சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களை மட்டுமே வாட்டியது சூரியன்.

தடதடவென கோப்பைகள் கீழே விழும் சத்தம். அதன் பின்னால் உரத்து யாரையோ திட்டிய சத்தம்.

திட்டிய பாஷை உள்ளுராய்த் தெரிந்தது.

சோகமுடன் வெளியில் வந்தவனின் முகத்தில் தமிழன் என்று எழுதி ஒட்டியிருந்தது.

எனது மேஜையில் இருந்து காப்பி கோப்பையை எடுக்க வந்தவனைப் பார்த்து சிரித்தேன்.

வடிவேலு நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்த சாயலில் சற்றே பருமனாய் இருந்தான்.

“எந்த ஊருப்பா உனக்கு?” என்றேன்.

“ராமநாதபுரம் பக்கம் சார். மூணு மாதம் ஆச்சு வந்து” என்று கஷ்டப்பட்டு சிரித்தான்.

ஒரு மீட்டிங் செல்லும் அவசரத்தில் தொடர்ந்து பேசாமல் கிளம்பினேன்.

****************

பாலைவனத்தின் புழுதி தொடாமல் ஒரு கட்டிடத்தின் பார்க்கிங்கில் இருந்து குளிரூட்டப்பட்டு தயாராக இருந்த காரில் இன்னொரு கட்டிடத்துக்கு சென்று வந்த வேலைகளை முடித்து கொஞ்சம் சீக்கிரமே ஹோட்டலுக்கு வந்து விட்டேன்.

எனது தளத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த முகம், காலையில் பார்த்த அதே முகம்.

“என்னப்பா.. தண்டனையா? வேற வேலைக்கு மாத்திட்டாங்களா” என்று சிரித்தேன்.

அவன் வறட்டு புன்னகையை உதிர்த்தான்.

“வந்து நிறைய நாள் ஆகல சார். ஊர்லே ஒரு பிரச்சினை. அந்த ஞாபகத்துலே கை தவறிட்டுது” என்றான்.

அறையில் சுத்தம் செய்யும் சாக்கில் அவனை உள்ளே கூப்பிட்டேன்

நான் கேட்கும் முன்பே கொட்ட ஆரம்பித்தான்.

“கல்யாணம் ஆகி ஒரு மாசத்துலேயே வந்துட்டேன் சார். தெரிஞ்ச பொண்ணுதான். காதல் கல்யாணம். நம்ம வீட்டுலேதான் இருக்கா. நான் இங்க வந்தோன்னயே முழுகாம இருக்கேன்னா. ரொம்ப சந்தோசமா இருந்தேன்”

வார்த்தைகள் உடைந்த குரலில் அழுந்தி மெலிந்தன.

“என்னாச்சு?. வீட்டுலே நல்லா பாத்துக்க மாட்டேங்கறாங்களா?”

“சே சே அதெல்லாம் இல்ல சார். எங்க அம்மாக்கு அவளை ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா கருத் தங்கல சார். இரண்டு வாரத்துக்கு முன்னாடி கலைஞ்சு போச்சு. உடனே வரச் சொல்லி ஒரே அழுகை”

கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

அறையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கச் சொன்னேன்.

“எப்படியாவது ஊருக்கு போலாம்னா, லீவு கொடுக்க மாட்டேங்கறாங்க. பாஸ்போர்ட் எல்லாம் வாங்கி வைச்சுட்டாங்க. ஒரு தடவை ஊருக்கு போயிட்டு வந்தா அவளுக்கும் தைரியமா இருக்கும்”

தண்ணீரை இடை வெளி விடாமல் குடித்து முடித்து “நன்றி சார்” என்றான்.

“இதப் பாத்தியா” என்று என் கை பேசியில் இருந்த என் மனைவி, மகளின் படத்தை காண்பித்தேன்.

“இரண்டு பொண்ணுங்களா சார் உங்களுக்கு?. எனக்கும் பொண்ணு வேணும் தான் ஆசை”.

“ஏய்… ஒன்னு என் wife” என்றேன்.

மெல்ல சிரித்து “சாரி சார்.” என்றான். சோகம் இன்னும் மறையாத சிரிப்பு.

“எங்களுக்கும் முதல் தடவை தங்கல. கஷ்டமாதான் இருந்தது. லேட்டா கல்யாணம் வேற. ஆனா இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. நிறைய நடக்கறது தான். சரியாய்டும்” என்றேன்.

“அவ கூட இருந்தா நல்லா இருக்கும் சார். போன்ல அழறது தாங்க முடியல. தாயில்லாப் பொண்ணு சார்”  மீண்டும் கண் தழும்பியது.

என்ன சொல்வது என்று தெரியாமல் சில நிமிடம் அமைதியாய் இருந்தேன்.

“இங்க வர அவசரத்திலே குல தெய்வம் அய்யானர் கோயிலுக்கு போலாம்னு சொன்னவளை, அங்க கூட்டிட்டு போகாம வந்துட்டேன் சார். ஒரு நாலு நாள் ஊருக்குப் போய் கோயில்ல பொங்கல் வச்சுட்டு வந்துட்டா அவளுக்கு தைரியம் வந்துடும் சார். விட மாட்டேன்றாங்க”

எனது பர்சில் இருந்து பூர்ணா புஷ்கலாவுடன் உட்கார்ந்த நிலையில் இருக்கும் சாஸ்தாவின் புகைப்படத்தை எடுத்து அவன் சட்டைப் பையில் சொருகினேன்.

“இவரும் ஒரு அய்யானார் தான். வச்சுக்கோ. டெய்லி ஒரு தடவை கண்ணுலே ஒத்திக்கோ. நம்பிக்கைதான் குல தெய்வம்”

அவன் அமைதி அடைந்ததாய் தெரியவில்லை.

*************

இரண்டு நாளுக்கு பின் விமானத்தில் இருந்த செய்தித் தாளில் இருந்த செய்தியைப் படித்தவுடன் உடல் பரபரத்தது.

___________________________________________

இந்திய வாலிபர் கைது – வேலி தாண்டி விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றார்

மனைவியை பார்க்க செல்ல வேண்டும் என்று கதறல்.

அதிகாரிகள் எச்சரித்து விடுதலை செய்தனர்.

_____________________________________________________

 

அவனாய் இருக்கக் கூடாது என்று சாஸ்தாவிடம் வேண்டிக் கொண்டேன்.

*************

வேலை அதன் பின் ஆறு மாதங்களுக்கு வேறு நாடுகளுக்கு கூட்டிச் சென்றது.

மறுபடியும் துபாய். அதே ஹோட்டல்.

காலையில் சீக்கிரமே எழுந்து உணவகத்தில் நுழையவும், “வாங்க சார்.. ரொம்ப நாளாக் காணவே இல்ல” என்று வரவேற்றது அதே ராமநாதபுர முகம்.

நன்றாகவே தேறி இருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி.

“wife எப்படி இருக்கா?” என்றேன்

“இரண்டு மாதம் முன்னாடி தான் சார் ஒரு வாரம் ஊருக்குப் போனேன். நல்லா இருக்கா சார். திரும்பவும் முழுகாம இருக்கான்னு நேத்திக்கு தான் சார் போன் வந்தது”

“ரொம்ப சந்தோசம். இந்த தடவை எல்லாம் நல்லா நடக்கும்”

“ஆமாம் சார். ஐயானாருக்கு பொங்கல் வச்சாச்சு. பொண்ணுதாம் பொறக்கும்னு சொல்றா சார்.  பூர்ணானு பேரு வைக்கலாம்னு சொன்னா. பூர்ணா இங்கிலிஷ்லே எப்படி எழுதணும் சார்? Puவா, Pooவா சார்?”

நம்பிக்கைதான் குல தெய்வம்.

***************

பொருள் சேர்க்க மனைவியைப் பிரிந்து பாலைவனங்களில் வாடிய கணவர்கள் சங்க இலக்கியங்களில் நிறைந்து இருக்கிறார்கள்.

 அகநானூறு 33, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி
மனை மாண் கற்பின் வாணுதல் ஒழியக்
கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளி தேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்

அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்
செய் வினை ஆற்றுற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளோ?

அவளை விட்டு விட்டு வர வேண்டாம் என்று நான் நினத்ததை மாற்றி

வேலைக்கு போய் பொருள் சேர்ப்பது நல்லது என்று சொன்ன நெஞ்சே

இலைகளற்ற மரத்தின் உயரத்தில் உள்ள வலிமையான பருந்து

வளைந்த அலகு உடைய தன் அழகிய மனைவியை

பக்கத்தில் வர அழைக்கும்

இந்தக் கடுமையான பாலை வனத்தை விட்டு

உடனே செல்லலாம் என்று சொல்கிறாயே!!. நகைப்புக்கு உரியது.

மறு கிளையில் தான் இருந்தாலும், மனைவியை இன்னும் பக்கத்தில் அழைக்கும் பருந்து.

உள்ளம் கூடத் தன்னை விட்டு விட்டு மனைவியிடம் செல்ல புறப்பட்டு விட்ட தனிமை நிலை.

இலைகளற்ற மரங்கள் அடர்ந்த பாலை வனம்.

பிரிவின் தவிப்பில் துடிக்கும் மனத்தை இதை விட எப்படிச் சொல்ல முடியும்.

 

.குறுந்தொகை 131, ஓர் ஏர் உழவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத்தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆர் இடையதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே.

அசைகின்ற மூங்கில் போன்ற தோள்கள்

சண்டையிடும் கண்கள்

கொண்ட காதலி

வெகு தூரத்தில் இருக்கிறாள்

பசுமையான அகன்ற வயலிருந்தும்

ஒரே ஒரு ஏருள்ள உழவன் போல

அவசரத்தில் தவிக்கிறேன். – சுஜாதா

இது ஒரு அற்புதமான உவமையுடைய கவிதை.

நீர் நிறைந்து இருக்கும் நிலம்.

காய்ந்து விடுவதற்குள் உழ வேண்டும். ஒரே ஒரு ஏர். விவசாயியின் மனம் என்ன பாடு படும். எவ்வளவு அவசரப்படும்.

சண்டையிடும் கண்களை உடைய காதலியை பார்ப்பதற்கு பறக்கும் மனமும் அப்படித்தான் இருக்கும்.

தலைக் கருவை இழந்து போனில் அழும் மனைவியை தோள் சேர்த்துக் கொள்ள நினைக்கும் மனமும் அந்தப் பாடு படும்.

கருக் கலைந்து அழும் துணையின் துயரத்தில், பக்கத்தில் வர அழைக்கும் குரலின் தவிப்பில் – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரிகள் இன்றும் நமக்கு புரிவதுதான் தமிழின்  சிறப்பு.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள