நாகரிகச் சங்கிலி

ஒரு நாகரிகத்தின் அடையாளமாக நாம் படித்ததெல்லாம் எங்கோ தோண்டி எடுத்த மண் பாண்டங்களும், இடிபாடுகளும், புரிந்து கொள்ள முடியாத எழுத்துக்களும்தான்.

நம் வரலாற்று புத்தகங்களில் முதல் பத்து, இருபது பக்கங்களில் படித்த சிந்து சமவெளி நாகரீகம், மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாராய்ச்சி படங்கள், சிறிய சிற்பங்கள் – இவையே நாம் அறிந்த நாகரிகச் சின்னங்கள்.

தமிழர் நாகரிகத்தின் உயிர்தன்மையற்ற அத்தகைய அடையாளங்கள் கூட  புத்தகங்களின் பக்கங்களை அடைய முடியாமல் இன்னும் கீழடியில் புதைந்து கிடக்க, தமிழ் இலக்கியம் காட்டும் உணர்வுகள், மனித நெறிகள், இயற்கை சிந்தனைகள், பரந்த கால பரப்பை கோர்க்கும் சங்கிலிக் கண்ணிகளாய், நம் நாகரிகத்தின் மரபைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

**********

சங்க காலம் – 100 BC

திதியன், உறையூரின் கடைத் தெருவில் அலைந்து கொண்டிருந்தான்.

நாளை ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் மனைவிக்கும், விரைவில் பிறக்கப் போகும் மகளுக்கும் இனிப்பும், பருத்தி ஆடைகளும் வாங்கிக் கொண்டிருந்தான்.

சோழ மன்னர்கள் வேளிர்களை தோற்கடித்து, ஆற்று வழி வணிகத்தை பெருக்கிய பின், மலையில் வேலை கிடைப்பது அரிதாகி விட்டது. இடம் பெயர்ந்து, குடும்பம் துறந்து, பெரிய ஊரில் வேலை செய்ய வந்தவர்களில் அவனும் ஒருவன்.

சம்பாதிக்க வந்து ஆறு மாதம் ஆகி விட்டது.

சேய்ந் நாட்டு அருஞ்செயல் பொருள் பிணி முன்னி நப் பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே

சேய்ந் நாட்டு – தூர தேசம்; பொருள் – செல்வம்; பிணி – வேலை; சேண் – தொலைவு; உறைநர் – வாழும்; ஆறே – வழியே

அகநானூறு 59, மதுரை மருதன் இளநாகனார்

அப்பொழுதான் தாயாகி இருந்த மனைவியை தனியே விட்டு விட்டு பொருள் தேட இவ்வூருக்கு வந்து பட்ட துன்பங்கள், ஊரின் நினைப்பில் மறைந்து கொண்டிருந்தன.

சமவெளியைக் கடந்து தனது குடி இருந்த மலையின் அடிவாரத்தை தொட்டதும், பழகிய காற்றும், மணமும் முகத்தை வருடிச் சென்றது.

தன் மரம், தன் கொடி செடிகள், வெள்ளியாய் உருகி வழியும் தனது அருவி – நடையின் வேகம் கூடியது.

நடை பாதையில் இருந்து சிறிய தூரத்தில் ஒரு யானைக் கூட்டம். கூட்டத்தில் இருந்து விலகி ஒரு பெண் யானை.

தாய்மை அடைந்திருக்கும் பெண் யானை பசியில் வாடி, உயரத்தில் இருக்கும் இலைகளை எட்ட சிரமப்பட்டு கொண்டிருந்தது.

நல்ல வெயில்.

மத நீர் வழிய சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஆண் யானை ஓடி வந்தது.

முதலில் வெயிலை மறைத்து நின்று பெண் யானைக்கு நிழல் அமைத்தது

அச்சா மரத்தின் இளம் கொப்பை சிறிதாய் ஒடித்து,  தனது தும்பிக்கையால் பெண் யானைக்கு ஊட்டியது. அதே இலையால் சுற்றி வந்து தொல்லை தந்த வண்டுகளையும் விரட்டியது.

காத்துக் கொண்டிருக்கும் மனைவியின் நினைவு, திதியனை துரத்தியது.

அவன் விரைவாய் மலை ஏறினான்.

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

மரம் செல மிதித்த மாஅல் போலப்

புன்தலை மடப்பிடி உணீஇயர் அம் குழை

நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே

அண்டர் மகளிர் – ஆயர் குலப் பெண்கள்;  தண் தழை உடீஇயர் – குளிர்ந்த இலைகளால் ஆன ஆடை; செல மிதித்த மாஅல் – கிளை தாழ மிதித்த திருமால் (1)

மடப் பிடி – மென்மையான பெண் யானை ; உணீஇயர் – உண்ணுமாறு ; நெடு நிலை யா – வளர்ந்த ஆச்சா மரம்; ஞிமிறு – வண்டு; களிறு – ஆண் யானை

அகநானூறு 59, மதுரை மருதன் இளநாகனார்

**************

உபெர் காலம் பெங்களூர் – 2017 AD.

பலத்த மழை.

இரவின் மௌனத்தை இடித்துக் கலைத்து, இருட்டை மின்னிக் கிழித்து, தடித்த நீர் தாரைகளாய் இறங்கி, ஏரிகளையும் குளங்களையும் தேடிக் களைத்து அபார்ட்மென்ட்களில் கார்களுடன் தானும் ஒய்வு எடுக்கத் தொடங்கியது.

வெள்ளி இரவுகளில், ola, uber கிடைப்பது பெரிய பெருமாளை கூட்டமின்றி பார்ப்பதுக்கு சமம். கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அதுவும் மழை பெய்தால் இன்னும் சிரமம்.

ஒரு மணி நேர முயச்சிக்குப் பின் ஒன்று கிடைத்தது. கூகுள் மாப்பில் இன்னும் ஏற்ற படாத ஒரு வில்லா குடியிருப்பு ஒன்றுக்கு வழி சொல்லி, கொட்டும் மழையில் நனைந்து ஏறி உட்கார்ந்தேன்.

“நல்ல மழை பெய்துமா. சீக்கிரம் வந்தர்றேன்” டிரைவர் போனில் யாருடனோ தமிழில் பேசியது, உடம்புக்குள் சூடு பரப்பியது.

“எந்த ஊருப்பா நீ”? தமிழ் கேட்டு உடனே திரும்பினான்.

“வேலூர் பக்கம் சார். இங்க வந்து ஆறு மாசமாத்தான் வண்டி ஓட்டுறேன்.” சொந்த மொழியில் பேச, மழை இரவில் ஒருவர் கிடைத்த உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது.

“இங்க வீடு எங்கப்பா? கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆறு மாசம் முன்னாடி தான் சார் ஆச்சு. இங்க பெய்யற மழை அங்க கொஞ்சம் பெஞ்சா, ஊர்லேயே வெள்ளாமை பார்த்துட்டு இருந்திருப்போம். கொஞ்சம் நிலத்தை வித்து, மீதிக் கடனை வாங்கி சொந்த கார் வாங்கி ஓட்டிட்டு இருக்கேன்”

“வீடு எங்க இங்கே?”

“ராஜ ராஜேஸ்வரி நகர் சார். உங்களை எறக்கி விட்டுட்டு நேர வீட்டுக்குத்தான் சார். காலேலே அஞ்சு மணிக்கு வண்டி எடுத்தது”

மணி இரவு பதினொன்று. அவன் வீடு போய் சேரும் போது ஒரு மணி ஆகி விடும்.

“சாப்டியா?”

“இன்னும் இல்ல சார். மதியம் மூணு மணிக்கு லேட்டாதான் சார் சாப்பிட்டேன்”.

“இங்க பாரு. சரியா சாப்டாம வண்டி ஓட்டினா, வயிறு கெட்டுப் போகும். இதை வச்சுக்க. என்னை இறக்கி விட்டுட்டு எதுதாப்லே ஒரு உடுப்பி ஹோட்டல் இருக்கு. சாப்பிட்டுட்டுப் போ”

நான் கொடுத்ததை தயக்கத்துடன் வாங்கி கொண்டான்.

இறங்கியதும் அந்த ஹோட்டலை காண்பித்தேன்.

“திறந்து தான் இருக்கு. போய் சாப்பிடு. பொடி தோசை நல்லா இருக்கும்”

“பார்சல் கிடைக்குமா சார்?”

“ஏன்பா?. சூடா சாப்ட்டு போயேன். மழையும் வெறிக்கற மாதிரி இருக்கு”

“இல்ல சார். வீட்டுலே வெயிட் பண்ணிட்டு இருக்கும் சார். முழுகாம வேற இருக்கு. பார்சல் வாங்கிட்டு போய் சேர்ந்து சாப்பிட்டுகறேன் சார்”

மழை நின்று இருந்தது.

வீட்டின் முன் நீரில் நனைந்து இருந்த மரம் ஒன்றில் கொப்பு வளைந்து, இளம் தளிர் தலையைத் தட்டியது.

****************

  1. திருமால் – இது ஒரு கண்ணன் கதை பற்றிய குறிப்பு. ஆயர் பெண்கள் யமுனை ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது கண்ணன் கிளையில் அமர்ந்து குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது பலராமன் அங்கே வந்து விட, பெண்கள் எல்லோரும் கண்ணனை நோக்கி உதவி கேட்க, அவன் தான் அமர்ந்து இருந்த மரத்தின் கிளையை காலால் அழுத்துகிறான். அதன் மறைவில் பெண்கள் உடை மாற்றிக் கொள்ளுகின்றனர். கண்ணன் கதை சங்க காலப் புலவருக்கு தெரிந்து இருக்கிறது.
  2. இதே பாடலில் திருப்பரங்குன்றத்து முருகனைப் பாடிய சந்துவன் என்ற புலவரைப் பற்றியும் வரிகள் இருக்கின்றன. சந்தன மரங்கள் நிறைந்த மலை. கோயிலாய்ப் பார்க்காமல் நாகரிகத்தின்  அடையாளமாய் பார்க்க வேண்டிய கோயில். கூட்டம் இல்லாத ஒரு வேலை நாள் மதிய நேரத்தில் போனால் நல்லது.

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை

 

Print Friendly
பகிர்ந்து கொள்ள