நாவிதம் நாகரிகமாகிறது.

நான் பத்து வயதில் இருந்து கல்லூரி செல்லும் வரை முடி வெட்டிக் கொண்ட கடை, திருநெல்வேலியில் பாப்புலர் திரை அரங்கின் அருகில் இருந்தது.

இரண்டே இரண்டு நாற்காலி. ஒரே ஒருவர் தான் முடி திருத்துபவர். வார இறுதியில் இன்னொருவர் இருப்பார் – ஷேவிங் செய்ய மட்டும்.

சுவரில் ஒரு தினசரி நாட்காட்டி, ஒரு முருகன் படம், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் அளவாய் கவர்ச்சி காட்டும் படங்கள்.

வானொலி எப்போதும் இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனலைப் பொழிந்து கொண்டிருக்கும்.

இளையராசாவின் ஆரம்ப வருடங்கள். “தென்றல் என்னை முத்தமிட்டது. இதழில் இனிக்க.” என்ற பாடல் அப்போது கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. பின்னாளில் அதிகம் கேட்கப்படாத ஒரு அதியக் குரல்.

வாசலில் பந்தலின் கீழ் பெஞ்சில் நிறைய பேர் அமர்ந்து இருப்பார்கள். அது முடி வெட்டிக் கொள்ள காத்திருக்கும் கூட்டம் அல்ல. பாட்டு கேட்கவும், ஓசி பேப்பர் படிக்கவும் வருவது.

இளைஞர்கள் சிலர் வருவார்கள். சுவாதீனமாக உள்ளே நுழைந்து சீப்பை எடுத்து கண்ணாடி பார்த்து முடியை வாரிக் கொள்வார்கள்.

“அண்ணாச்சி நல்லா இருக்கியள்ள.. கொஞ்சம் பவுடர் எடுத்துகிடுதேன்” என்று கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் முகத்திலும், பின் கழுத்திலும் போட்டுக் கொண்டு, பேன்டில் இருந்து எடுத்து கர்சிப்பிலும் தட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

கடையை சுற்றிலும் அக்கிரகாரம்.

“சாமி.. பாருங்க இந்த பயலுவள. பள்ளிக் கூடம் போற வரைக்கும் நம்ம கடையிலே வெட்டிக்கிட்டு இருந்தானுவ. இப்போ ஏதோ ஸ்டெப் கட்டிங்குனு ஜங்ஷன்லே போய் புடுங்கிட்டு வாரான். முடி வெட்ட மட்டும் அஞ்சு ரூபாயாம். வெட்டின முடி மாதிரியா இருக்கு. ஏதோ புல்லை செதுக்கி விட்ட மாதிரி அங்க அங்க துருத்திக் கிட்டு நிக்கி”

“முடியை விடுவோம்வோய். அவன் போட்டுன்டு இருக்கிற பேன்டை பாரும். பெல் பாட்டமாம். பெருமாள் கோயில் தெரு முழுக்க புழுதியை பெருக்கிட்டு போறானுவ” – திருநெல்வேலி பிராமணப் பாஷை ஒரு ஆனந்தக் கலவை.

“அப்பா கௌசிக கோத்திரம். பையன்கள் இரண்டு பேரும் அக்னி கோத்திரமாய் அலையறதுகள். கையிலேயும் வாயிலேயும் எப்போதும் புகை”

நான் போய் உட்கார்ந்ததும் “வாங்க தம்பி.. அப்பா நல்லா இருக்காகளா. உட்காருங்க” என்று மட்டும் கேட்டு விட்டு ஒரு துணியை உதறி கழுத்தை சுற்றி கட்டி விட்டு வெட்ட ஆரம்பித்து விடுவார். கத்திரி மட்டும் தான் பயன் படுத்துவார்.

மெசின் எல்லாம் அவர் கடையில் சின்னஞ் சிறுவர்களுக்கு தான்.

அவர் கையில் இருக்கும் கத்திரி, வெட்டுவதற்கு நடு நடுவே வானொலியில் கேட்கும் பாட்டுக்கு தக்கபடி தாளம் போடும்.

ஒரு பக்கம் சீப்பு வடிவில் இருக்கும் இன்னொரு கத்திரி கடைசியில் பயன் படுத்துவார்.

ஒவ்வொரு முடியாய் தூக்கி, வெட்டலாமா வேண்டாமா என்று யோசித்து, முடிக்கு வலிக்க கூடாது என்பது போல், மெதுவாய் கத்தரிப்பார்.

பத்து நிமிடத்தில், தலையை சீப்பு வருடும் சுகத்தில் தூக்கம் சொக்கி விடும். அரை மணி நேரமாவது எடுக்கும் அவர் முடி வெட்ட.

“தம்பி.. ஆயிடுச்சு” என்று தோளில் தட்டி எழுப்பி விடுவார்.

துணியை எடுத்து உதறி, முடியை எல்லாம் தட்டி விட்டு, கொஞ்சம் பௌடரை எடுத்து பின் கழுத்தில் அப்பி அனுப்பி விட்டு விடுவார்.

இரண்டு ரூபாய் கொடுத்த ஞாபகம்.

********************

முடி வெட்டுவதற்கும் நாள் கிழமையெல்லாம் உண்டு. பொதுவாக சனிக் கிழமையில் தான் நடக்கும். முடி வெட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால் தீண்டத் தகாதவனாகி விடுவோம். துணியைக் கழட்டி தண்ணிரில் போட்டு விட வேண்டும். குளிக்காமல் எதையும் தொட முடியாது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் அன்றுதான்.

ஏதோ ஒரு காரணத்தால் வீட்டில் சனிக்கிழமை அன்று முக்கால் வாசி நேரம் தேங்காய் அரைத்த குழம்பும், வாழைக்காய் பொடிமாசும் தான் மெனு.

“வாடா சங்கர். சுண்டைக்காய் வத்தல் போட்டு குழம்பு.. உனக்கு பிடிக்குமே.. கணேஷ் கூட சாப்பிடேன்”.

பின்னாளில் எக்கச்சக்கமாய் படித்து,  அறிவியலில் வழங்கப் படும் உயரிய விருதான பட்நாகர் விருதெல்லாம் வாங்கப் போகும், சங்காணி என்று நாங்கள் அன்புடன் கூப்பிட்ட என் நண்பன் சங்கருக்கு மூக்கில் வியர்த்து விடும்.

“அடடா.. காலைலேயே சொல்லப்படதா மாமி. இப்பதான் சாப்பிட்டுட்டு வரேன். சரி ரொம்ப சொல்றேள் கொஞ்சம் taste பண்றேன்” என்று பாதி சுண்டைக்காய் காலி ஆகி இருக்கும்.

முடி வெட்டிக் கொண்ட கடையும், சுற்றி இருந்த மனிதர்களும், முடி வெட்டிக் கொண்ட நாளில் சாப்பிட்ட உணவும் இன்றும் நினைவில் இருக்கிறது.

*******************

அமெரிக்கா சென்ற பின் முடி வெட்டிக் கொள்வதே கொஞ்சம் அலுப்பான அனுபவமாகிப் போனது.

சூப்பர்-கிளிப், cutforless போன்று, ஊரில் பல இடங்களிலும் இருக்கும் ஒரு corporate chain கடை.

கடையில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து இருப்பதே முதலில் ஆயாசாமாய் வரும்.

“Short OR MEDIUM?” என்ற அதே கேள்வியை எப்போதும் கேட்கும் நடுத்தர வயது பெண்மணிகள். மாறிக் கொண்டே இருக்கும் முகங்கள்.

சீதோஷ்ண நிலையைப் பற்றிய ஆழமில்லாத உரையாடல்கள்.

இயந்திரம் ஒன்றை கையில் எடுத்து மேலும், கீழும், குறுக்கும் நெடுக்குமாய் இரண்டு இழுப்பு இழுத்து விட்டால் முக்கால் வாசி வேலை முடிந்தது

பின்பு இன்னொரு சிறிய இயந்திரம். காதின் மேலும், பின் கழுத்திலும் trim செய்து, கொஞ்சமாய் கத்திரியை பயன்படுத்தி சமன் செய்து, சம்பிரதாயத்துக்கு ஒரு பெரிய கண்ணாடியை தூக்கிக் காண்பித்து “looks great” என்று அவளே சொல்லி முடித்து விடுவார்.

ஐந்தே நிமிடத்தில் முடிந்து விடும்.

பத்து டாலர் பில்லுக்கும், ஐந்து டாலர் டிப்புக்கும் கொடுத்து விட்டு வெளியே வருகையில், மனம் ஸ்ரீதேவியையும், பின் கழுத்தில் பௌடரையும் தேடும்.

*************

நேற்று சனிக்கிழமை.

பெங்களூரில் வீட்டுக்கு பக்கத்தில் புதிதாய் திறக்கப்பட்டு இருக்கும்  starbucks கடைக்கு சென்றிருந்தேன்.

பக்கத்திலேயே ஒரு cold-stone ஐஸ் கீரீம் கடை, organic காய்கறி கடை, எலெக்ட்ரானிக்ஸ் கடை, furniture கடை ஓன்று. கண்ணைக் கொஞ்சம் மூடி, வெளியே வீதியின் மேடு பள்ளங்களை மறந்து விட்டால், Seattle நகரில் உள்ள ஸ்ட்ரிப் மால் மாதிரியே இருந்தது.

லேசாய் மழை வேறு தூறிக் கொண்டிருந்ததது.

உள்ளேயே “Toni அண்ட் Guy: என்ற பெயரில் பள பளவென்று மின்னும் வெளிச்சத்தில் சலோன்.

வாசலில் ஒரு அழகான பெண் நின்று வரவேற்றார். மென்மையான குரலில் ஆங்கிலம் பேசினார். மார்பில் தொங்கிய பெயர்ப் பலகை “நந்தினி” என்று தமிழ் பேசியது

“associate, specialist, ஸ்டைல் டைரக்டர் என்று மூன்று ரேட் சொன்னார்.

நான் “ஸ்டைல் டைரக்டர் கிட்டயே appointment கொடும்மா” என்றேன். ஒரு மணி நேரம் ஆகும் என்றார்.

Starbucks கடையில் ஒரு காப்பியை ரசித்து குடித்து விட்டு மீண்டும் கடைக்குள் நுழைந்தேன்.

இன்னொரு பெண் என்னை அழைத்து சென்று ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு “என்ன சாப்பிடறிங்க சார். கிரீன் டீ அல்லது லெமன் டீ?”

ஒரு ஈரம் நனைத்த துண்டைக் கொடுத்து முகம் கழுவிக் கொள்ளச் சொன்னார்.

“வாங்க சார். முடியை வாஷ் பண்ணிடலாம்” என்று கழுத்தை பின்னால் வளைத்து, தண்ணீரால் நனைத்து, ஷாம்பு போட்டு கழுவி துடைத்து உட்கார வைத்தார்.

“five minutes sir. Director is on his way” என்று நகர்ந்து போய் விட, சிறிது நேரத்தில் ஒரு சூட் போட்ட பையன் பக்கத்தில் வந்தான்.

அவன் முடி விநோதமாய் இருந்தது. சுற்றி கருப்பாய் இருக்க, மேல் பகுதி மட்டும் தங்க நிறத்தில் ஈட்டி மாதிரி துருத்திக் கொண்டு இருந்தது.

“நான் உங்கள் முடியை தொடலாமா?” என்று கேட்டு, முடியைத் தொடாமலே எப்படி வெட்டுவான் என்று நான் யோசித்துக் கொண்டே தலை ஆட்ட, அங்கங்கே தூக்கிப் பார்த்து “உங்கள் முன் நெற்றியில் முடியே இல்லை” என்று “அத்திபட்டிக்கு தண்ணி வரலை” என்பதை கண்டு பிடித்தவன் குரலில் பேசினான்.

நான் ஏதோ பேச வேண்டுமே என்று “உன் ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கிறது” என்றேன்

“இது mohawk ஸ்டைல் with steep கட்டிங்” என்று பெயர் சொன்னான்.

“அதுக்கெல்லாம் நிறைய முடி வேணும் சார்” என்று கடுப்படித்தான்.

நிறைய கேள்விகள் கேட்டான்.

பின்புறம் நீளமாகவா, கம்மியாகவா, வட்டமாய் வெட்ட வேண்டுமா இல்லை சதுரமாகவா, மேலே முடி எது வரை வேண்டும், காதுக்கு மேலே முடி அடர்த்தியாக வேண்டுமா, கிருதா எது வரை வேண்டும் என்று அடுக்கிக் கொண்டே போக, நான் பொறுமை இழந்து

“ஏம்பா நீ தானே ஸ்டைல் டைரக்டர்?” என்று கேட்டு விட்டேன்.

அதன் பின் அவன் பேசவில்லை.

அங்கங்கே முடியை தூக்கி கிளிப் போல் ஒன்றை மாட்டி விட்டு, ஒரு இயந்திரத்தை எடுத்து தலையை சுற்றி ஓட்ட வெட்டி, சிறிதே கத்திரி போட்டு, சின்ன இயந்திரத்தால் trim செய்து, பத்து நிமிடத்தில் முடித்து விட்டான்.

“mohawk ஸ்டைல் சார்.. with flat on டாப்” என்று பெயர் வேறு சூட்டினான்.

பள்ளியில் படிக்கும் போது “பானை கட்டிங்” என்று கிண்டல் செய்வோம். பானை ஒன்றை தலையில் கவிழ்த்து விட்டு சுற்றி ஓட்ட கத்தரித்து விட்டது மாதிரி இருக்கும்.

அதே மாதிரி இருந்தது.

முடி வெட்ட இரண்டாயிரம், கழுவி விட ஆயிரம், GST இருபத்தெட்டு சதவிகிதம் என்று மொத்தம் நாலாயிரத்துக்கு வந்தது பில்.

மனதுக்குள் எப்போதோ மறந்து போன ஒரு தேர்ந்தெடுத்த திருநெல்வேலி வசச் சொல்லால் திட்டினேன்.

பாத்ரூமில் நுழைந்து, you-tubeல் தேடி, தென்றல் என்னை முத்தமிட்டது பாடலை மீண்டும் மீண்டும் கேட்டபடியே குளித்து முடித்தேன்.

சமீபத்தில் இறந்து போன ஸ்ரீதேவியின் புகைப்படம் மேலட்டையில் வந்திருந்த ஏதோ ஒரு வார இதழ் கண்ணில் பட்டது.

வெளியில் சென்று இருந்த மகளும், மனைவியும் வந்த பின், “எப்படி இருக்கு என் புது ஹேர்-கட்” என்று கேட்டேன்.

“சூப்பர்பா. முடி வெட்டின மாதிரியே தெரியாம வெட்டி இருக்கான்” என்றாள் என் பெண்.

ரத்தத்தின் வழி வந்த திருநெல்வேலிக் குசும்பு.

மதிய உணவுக்கு தேங்காய் அரைத்த குழம்பும், வாழைக்காய் கறியும்.

எப்போதோ சொன்னதை நினைவில் வைத்து செய்து வைத்து இருந்தாள் மனைவி.

பெருமையுடன் முடியை கோதி விட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன்.

***************

சித்திரம்  – A. Hunter, Indian Barber under tree – Original early 19th-century etching print

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள