ஐம்பது வயதுக்குப் பிறகு, கடவுள் பற்றிய சிந்தனைகள் அதிமாகி வருகிறது.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா, அவர் யார் என்ற கேள்விக்கு “இதுதான் சரி என்பதைத் தவிர எல்லாமே சரிதான்” என்கிறார் நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் நாகை ஆனந்தன்.
அதுதான் சரி என்பதே என் கட்சி.
தாமிரபரணி தண்ணீர் குடித்த ஆழ்வார்திருநகரி சடகோபரும் அந்தக் கட்சிதான். எந்தக் கடவுளும் குறை இல்லாதவரே என்கிறார்.
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
– நம்மாழ்வார் திருவாய்மொழி
என்னைப் பொறுத்தவரை, கடவுளைப் பற்றிய இப்போதைய நிலைப்பாடு அவர் பங்கு சந்தையின் “call option” போல. வாழ்க்கைக்கு தேவையான ஓன்று.
கஷ்ட காலங்களில் கை கொடுக்கவும், நல்ல கால பலன்களை நீட்டிக்கவும் கடவுள் நம்பிக்கை உதவும்.
சரி கடவுள் வேண்டும் என்று நம்பிக்கை வந்து விட்டால், அவரை எப்படி அணுகுவது என்ற கேள்வி வருகிறது.
சடகோபர் இருப்பவை, இல்லாதவை என நாம் நினைக்கும் எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறார் என்று சொல்விட்டு போய் விட்டார்.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையிnல்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.
– நம்மாழ்வார் திருவாய்மொழி
திருப்பதியின் அழகை வர்ணிக்கும் ஒரு அற்புதமான பாடல் ஒன்றில் திருப்பதி சிலை சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த கலவையே என்கிறார் பேயாழ்வார்.
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு,
இரண்டுருவும் ஓன்றாய் இசைந்து.
– பேயாழ்வார்
உருவமில்லா கடவுளை வணங்கும் நிலை எல்லோருக்கும் எளியது அல்ல. கை பேசிகளின் கவனச் சிதறல்களுக்கு நடுவே ஒரு ஐந்து நிமிடம் அவரோடு பேசுவதற்கு ஒரு ஒரு உருவம் மொழி தேவைப்படுகிறது.
எனக்கு கடவுள் உருவம் பெருமாளாய் இருப்பதில் சில சௌகரியங்கள் உள்ளன.
வைணவர்கள் “அந்தர்யாமி” என்று எல்லா கடவுளுக்கும் உள்ளே இருப்பவன் விஷ்ணுவே என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள். இதற்கு யஜுர் வேத ஆதாரங்களைக் காட்டி சண்டை போடுவதற்கு ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது.
என் காரணங்கள் அதுவல்ல.
1. தமிழ்.
முதல் காரணம் தமிழ்.
தமிழ்க் கடவுள் முருகன் என்கிறார்கள். இருக்கலாம். சங்கத் தமிழில் முருகனும் இருக்கிறார், திருமாலும் இருக்கிறார்.
தன் சக்கர ஆயுதத்தால் (நேமியம்) பகைவரை அழித்த திருமாலின் மார்பில் மாலையாய் வானவில் தோன்றியது என்கிறது இந்த அகப் பாடல்
நேர் கதிர் நிரைத்த நேமியம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
திருவில் தேஎத்துக் குலைஇ உருகெழு .- அகநானுறு 175
எல்லா பெருமாள் கோவில்களிலும் பாசுரம் கண்டிப்பாக பாடப்படுகிறது. தெலுங்கிலோ, கன்னடத்திலோ, ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ எழுதி வைத்து கொண்டு பாசுரம் படிப்பது எனக்கு பிடித்த ஓன்று.
சிவன் கோவிலில் இருப்பதை போல, இதற்கென்று ஒரு தனிக் கூட்டத்தை நிப்பாட்டாமல், சமஸ்க்ரிதத்தில் பூசிப்பவரே, பாசுரமும் சொல்லுகிறார்.
திருப்பதி சானலில் உடம்பு முழுவதும் நாமங்களை இட்டுக் கொண்டு ஒருவர் தமிழில் பிரபந்தங்களைச் சொல்லி, தெலுங்கில் விளக்கம் சொல்லுகிறார்.
சனிக்கிழமை காலைகளில் என் வீட்டின் அருகில் உள்ள ஒரு சுத்தமான பெருமாள் கோவிலில் அவரை குளிப்பாட்டி, பூவால் அலங்கரிக்கும் போது, தமிழே தெரியாத கன்னடர்கள் நூறு பேர், ஏதோதோ மொழிகளில் எழுதி வைத்துக் கொண்டு சொல்லும் தமிழ் ஒரு அற்புதம்.
கடவுளைக் குழந்தையாய் உருவகப்படுத்தி, அவனை குளிப்பாட்டவும், பூச்சூட்டி கொள்ளவும், உணவருந்தவும் அழைக்கும் பெரியாழ்வாரின் தமிழை எல்லா அப்பாக்களும் ரசிக்கலாம்.
கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச
வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின்
வாசிகையும், நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
அழகனே நீராட வாராய்.
– பெரியாழ்வார்
2. ராமானுஜர்
பெரியாருக்கும், பாரதிக்கும் முன்னால் தமிழுக்கும், தாழ்த்தபட்டவர் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தவர் ராமானுஜர்.
பழுத்த நாஸ்திகவாதியும், தமிழரிஞரும் ஆன கலைஞரே ஒத்துக் கொண்டு விட்ட விஷயம் அது.
எல்லோரையும் கடவுள் முன் சமப்படுத்தவும், தமிழை இந்தியாவின் எல்லா இடங்களிலும் கொண்டு செல்லவும், சாதி வேறுபாடுகளைக் களையவும் கிட்டத்தட்ட எட்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் எடுத்த முயற்சிகள் வியப்புக்குரியவை.
தன் நூறு வருட வாழ்வில் அவர் எதிர் கொண்ட இடர் பாடுகளும், அவற்றை எல்லாம் மீறி அவர் சாதித்த விஷயங்களும் வணக்கத்து உரியன.
அவரைக் கும்பிட வேண்டும் என்றால் பெருமாள் தேவைப் படுகிறார்.
3. பிரசாதம்.
என் மகள் என்னை காலய்ப்பது – “அப்பா ஏன் தமிழ், ராமானுஜர் அது இது என்று சொல்லி time waste பண்றிங்க?. நீங்க போறதென்னவோ பெருமாள் கோவில் பிரசாதத்துக்குத் தானே?”
சைவரோ, வைணவரோ, கிறிஸ்துவரோ, இஸ்லாமியரோ, எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் பெருமாள் கோவில்களில் தரப்படும் உணவின் சுவை.
கடவுள் வழி பாட்டில் உணவைக் கொண்டாடுவதில் வைணவத்துக்கு இணையில்லை.
நூறு அண்டாவில் அக்கார வடிசல் செய்து படைத்த அழகர் கோவிலுக்கு செல்லுவதில் எனக்கு பெரு மகிழ்ச்சியே.
நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)
ஆண்டாள்
திருநெல்வேலி கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தில் தரப்படும் வெண்பொங்கல், இறச்சகுளம் கிருஷ்ணன் கோவில் அரவணை, செங்கோட்டை கிருஷ்ணன் கோவில் ராம நவமி சத்தி உணவு, பிட்ஸ்பெர்க் பெருமாள் கோவில் புளியோதரை, சிங்கப்பூர் பெருமாள் கோவிலில் காலையில் தரப்படும் சர்க்கரைப் பொங்கல், திருப்பதி லட்டு, என் பக்கத்து வீட்டில் ஒரு ஐயங்கார் குடும்பம் செய்யும் அக்கார வடிசல்..என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.
பெருமாள் கோவில் பிரசாதங்களின் சுவை தனிச் சுவைதான்
செவிக்கு நல்ல தமிழும், வயிற்றுக்கு அருமையான அக்கார வடிசலும், புளியோதரையும், சாப்பிட்ட பின் இனிப்புக்கு லட்டுவும் தரும் பெருமாளே கடவுளின் உருவமாக இருந்து விட்டு போகட்டுமே.
இதுதான் சரி என்று சொல்ல வரவில்லை.
இதுவும் சரியாக இருப்பதில் உள்ள சௌகரியங்களைத் தான் சொன்னேன்.