புரட்சித் தலைவர் ராமானுஜர்.

திருநாராயணபுரம் (மேல்கோடே).

ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன் மாமனிதன் ராமானுஜர் நிர்மாணித்த நகரம்.

பல நூற்றாண்டுகள் வளமையுடன், கல்வியின் உறைவிடமாய் இருந்த நகரம் இப்போது ஒரு கோயில் சிற்றூராய் இளைத்துக் கிடக்கிறது.

ராமானுஜர் சோழ நாட்டில் இருந்து வந்து, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி செய்த ஜைன மன்னனின் மகளை குணப்படுத்தி அவனைக் கொண்டு இந்த நகரை நிர்மாணித்தார்.

இருப்பத்தொம்பது குளம் இருந்த ஊரில், இப்போது இரண்டு மட்டும். அதிலாவது தண்ணீர் இருப்பது ஒரு ஆறுதல். வயல் இருந்த இடம் எல்லாம் இப்போது மண் மேடு.

ஒரு மழை நாளின் காலையில் சென்ற போது நகரம் பழைய பெருமையின் எச்சமாய் ஒன்பது மணிக்கு மேல் மெதுவாய் கண் விழித்துக் கொண்டிருந்தது. பூவும் பழமும் விற்கும் கடைகள் வண்டிகளில் முளைத்தன. பிச்சைக்காரர்கள் கண் விழித்து உரத்த குரலில் இடம் பிடிக்க சண்டை போட்டனர்.

கோயிலை மட்டுமே நம்பியுள்ள பொருளாதாரம். வரிசையாய் படிக் கட்டுகளில் மோர் விற்கும் பெண்கள். பிச்சை எடுக்கும் ஆண்கள்.

மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருந்தது. மலை மேல் ஏறிச் சென்றால் யோக நரசிம்மர் கோயில்.

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்

போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி

கலந்தது குணதிசை கனைகடல் அரவம்

களிவண்டும் இழற்றிய கலம்பகம் புனைந்த

அலங்கலன்தொடையல் கொண்டடியினைப் பணிவான்

அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா

இலாங்கையர்கோண் வழிபாடு செய்கோயில்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

வண்டும், கடலும், பறவைகளும் குரல் எழுப்பாமலேயே செல்போன் ரிங் டோன் சத்தத்தில் பத்து மணிக்கு நரசிம்மர் எழுந்தருளினார். அவரென்ன அரங்கநாதனா?

குன்றின் மேலிருந்து பார்த்தால், பழைய அழகு சற்றே எட்டிப் பார்க்கும் வயதான தமிழ் நடிகையாய் ஊர், கோயிலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

கோயிலில் பெரிய வரிசையில் நாமம் போட்ட கன்னடியர்கள்.

பொருளாதார நிலையில் கீழ் தட்டில் இருக்கும் மக்கள்.

ராமானுஜரின் தயவால் கோயிலுக்குள் வர முடிந்த முன்னோர்களின் வாரிசுகள்.

ஊரைச் சுற்றி குளங்களை வெட்டி, கோயில் கட்டி, எல்லோரையும் கோயிலுக்கு வரச் செய்து, அவர்கள் வாழ்வாதரத்துக்கும் வகை செய்து நகரை நிர்மாணித்தார் ராமானுஜர்.

சுற்றி கன்னடம் மட்டுமே கேட்கும் மாண்டியா மாவட்டத்தில் ஒரு மலை மேல் கோயிலில் தமிழ் பேசும் சாஸ்திரிகள் இன்றும் அதற்கு சாட்சியாய்.

**********************

கீழே இறங்கி சற்று தொலைவில் செலுவ நாராயணசுவாமி கோயில்.

“ராமானுஜர் குளிக்க போகும் போது ஒரு பிராமணன் தோளைப் பிடிச்சுண்டு போவாராம். வரும் போது ஒரு திருக்குலத்தான் (பின்னாளில் அரிஜன்) மேலே கை போட்டுண்டு வருவாராம்” அண்ணா பேசிக் கொண்டு வந்தான்.

கோயில் வாசலில் கடை.

“தல புராணம் கிடைக்குமா பார்க்காலம் வா”

கன்னடத்தில் மட்டுமே இருந்தது. கடையில் இருந்த பெண் நாப்பது வயது ஜெயலலிதா சாயலில் இருந்தார். அதே ஸ்டைல் அய்யங்கார் திலகம்.

“தமிழ் இல்லையே. கன்னடாதான் இருக்கு ” தயக்கத்துடன் சிரித்தாள்.

“உங்களுக்கு எந்த ஊர்.? நன்னா தமிழ் பேசறேளே”

“நாங்கள்லாம் வைஷ்ணவா. பூர்விகம் தமிழ். இப்போ மைசூர்லே இருக்கோம்”

“அதென்ன டப்பாலே”

“புளியோதரைக் கஜ்சு”

“பிரெஷ்ஷா? எந்த எண்ணைலே பண்ணினது நல்லெண்ணதானே” திருநெல்வேலி நாக்கு புரண்டது.

“என்ன இப்படி கேட்டுட்டேள்? ஆத்துலேயே பண்ணினது”

அண்ணா இரண்டு டப்பா வாங்கினான்.

“என்ன லஷ்மிகரமான முகம். புளியோதரை என்ன மணம் மணக்கறது. இந்த weather க்கு சாதம் கூட வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்”

முகத்தின் மணம் டப்பா திறக்காமலேயே மூக்கில் நுழைந்தது.

**********************

இருநூறு வருடங்களுக்கு முன்  மழை பெய்து கொண்டிருந்த நரக சதுர்த்தி (தீபாவளி) நாளில், எண்ணூறு மாண்டியம் அய்யங்கார் குடும்பங்களை வெட்டிக் கொன்றான் திப்பு.

Mysore மகாராணிக்கு உதவியாய் இருந்த திருமலை ராவ் (Row) மேல் கொண்ட கோபத்தை அவர் ஊரின் மீதும் உறவினர் மீதும் காட்டினான்.

அதில் தப்பி பிழைத்த குடும்பங்கள் ஊரை விட்டு சிதறி ஓடின. ஊர் அழிந்தது. குளங்களை மண் மூடின. மேல்கோட்டை சிறிய கிராமமாய் ஆகிப் போனது.

நரசிம்மர் மலை மேல் தப்பித்தார்.

இந்தப் பெண்ணும் அந்த குடும்பத்தினரின் வாரிசாய் இருக்கலாம்.

நமக்கெல்லாம் தெரிந்த அம்மா ஜெயலலிதா மாண்டியா அய்யங்கார் வகை.

அக் கூட்டத்தார் இன்றும் தீபாவளி கொண்டாடுவதில்லை.

**********************

செலுவ நாராயணசுவாமி கோயில்.

ஹோய்சால மன்னர்கள் கைங்கரியத்தில் இன்னும் பிழைத்து இருக்கிறது.

உள்ளே நுழைந்த உடன் பாசுரம் காதில் விழுகிறது.

வாசலில் கன்னட எழுத்தில் தமிழ் பிரபந்தம் வாசிக்கும் ஒரு வயதான தம்பதியர்.

திருநெல்வேலி அருகில் ஆழ்வார்திருநகரி வெள்ளாளர் நம்மாழ்வாரின் அமுத வரிகள்.

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
 
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

கோயில் பிரகாரத்தில் தமிழில் வரலாறு சொல்லும் சாஸ்திரிகள்.

“உங்களுக்கு சொந்த ஊர் எது”

“நாங்கள்லாம் பல தலைமுறையாய் இங்கேதான் இருக்கோம். ராமானுஜர் கொண்டு வச்சார். பூர்விகம் திருக்கருங்குடி ஆனா போனதில்லை”

திருநெல்வேலி பக்கத்தில் இருந்து வந்து ஆயிரம் வருடம் ஆனாலும் தமிழ் பேசும் மக்கள்.

அவர் சொன்ன பிபி நாச்சியார் வரலாறு.

ஒரு முஸ்லிம் சுல்தானால் கொள்ளை அடிக்கப்பட்ட உற்சவர் சிலை – களவு போன   குமாரன்.

ராமானுஜர் சீடர்களுடன் டெல்லி செல்கிறார். அச் சிலை சுல்தானின் செல்ல மகளின் அரவணைப்பில் யாரும் செல்ல முடியாத அந்தப்புரத்தில்.

“செல்லப் பிள்ளாய். வாரும்” என்று அழைக்க, மகள் துரத்திக் கொண்டு வர ஆச்சாரியனின் மடியில் சிலை வந்து விழுகிறது. சிலையைப் பிரிய மனம் இல்லாத மகள் பின்னாலேயே வந்து மேல்கோட்டையிலேயே தங்கி விடுகிறாள். கோவிலுக்குள் அவள் கொஞ்சி மகிழ்ந்த செல்லப் பிள்ளை. உள்ளே வர அவளுக்கு  அனுமதி இல்லை.

இராமானுஜர் அவளை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

தினசரி கோவிலுக்கு வந்து அங்கேயே உயிர் விட்ட பிபி நாச்சியார் இப்போதும் மூலவர் அடியில் முகம் மறைத்த முகம்மதியப் பெண் சிலையாய்.

ஒரு ஹிந்து கோயிலில் முஸ்லிம் பெண் தெய்வமாய்.

ராமானுஜர் கைங்கரியம்.

**********************

கடைசியாய் ராமானுஜர் சந்நிதி.

தமருகந்த திருமேனி.

என்ன அருமையான தமிழ்.

ஊரை விட்டு ஸ்ரீரங்கம் திரும்பும் முன் தன்னை பிரிய மறுத்த ஊர் மக்களுக்கு, ஒரு சிலை செய்து விட்டு விட்டு சென்றார் ராமானுஜர். ஊரைக் காப்பாற்றி தைரியம் கொடுக்க ராமனுஜரின் உத்தி. சிலை பேசியதாம்.

சாந்தமாய் ராமானுஜர்.

காலில் தங்க சடாரி.

அங்கும் தமிழ் பேசும் சாஸ்திரிகள். சிலையின் வரலாறு சொல்லி, சடாரியைத் தலையில் வைத்தார்.

காந்திக்கும், பெரியாருக்கும், முன்னால் நாட்டில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்த மகான்.

தனக்குச் சொல்லப்பட்ட சொர்கத்துக்கு செல்லும் ரகசியத்தை, பிறருக்குச் சொன்னால் நரகம் கிடைக்கும் என்ற குருவை மீறி, உடனேயே கோபுரம் மீது ஏறி ஊருக்ககுச் சொன்ன மாமனிதன்.

தமிழ் பிரபந்தந்துக்கு வட மொழியில் பாஷ்யம் எழுதி தமிழை உயர்த்தியவன். எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் தமிழைக் கடவுள் மொழியாய் ஆக்கிய ஆச்சார்யன்.

அவன் கால் பட்டது.

தலை முதல் கால் வரைக் குளிர்ந்து உடல் குலுங்கியது.

அண்ணா தட்டில் நுறு ரூபாய் போட்டான்.

இங்கும் அதே கேள்வி.

“எந்த ஊர் உங்களுக்கு?”

“Mysore. பல தல முறையாய் இங்கே தான் இருக்கோம். குடும்பத்துக்கே இந்த சந்நிதி கைங்கர்யம் தான் எழுதி விட்டது. அப்பா கோயில்லே தான் இருந்தார். கொஞ்ச நாள் முன்னாடிதான் தவறிப் போய்ட்டார்”

“நீங்க இந்த ஊர்லே இருக்கேளா?”

“இல்லை Mysoreலே தான் ஜாகை. போயிண்டு வந்துண்டு இருக்கேன். கார் இருக்கறதுனாலே சௌகரியமாய் இருக்கு. அங்கே கொஞ்சம் ஜமீன் இருக்கு. நான் Lawyer. Practice விட்டுட்டு வர முடியல. சீக்கிரம் இங்கேயே ஆச்சாரியன் காலடிக்கு வந்துரனும்”

தட்டில் போட்ட நுறு ரூபாய் அப்படியே இருந்தது.

கோயிலுக்கு சற்று தொலைவில் ஒரு White Mercedez Benz கார் நின்றிருந்தது.

காரின் dashboardல் கண்ணாடி வழியே ராமானுஜர் சிரித்துக் கொண்டிருந்தார்.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply