புறநானூறு – பாடல் 229

இது ஒரு தனித்துவமான பாடல். ஆச்சரியம் அளிக்கும் ஒரு அறிவியல் உண்மையைச் சொல்கிறது. ஒரு அரசனின் மரணத்தை முன் கூட்டியே கோள்களின் நிலை கொண்டு கணித்ததாகவும் கதைக்கிறது.

பாடலை எழுதியவர் கூடலூர் கிழார்.

நம் தமிழ் முன்னோர்கள் வானவியல் அறிவு கொண்டவர்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் முன் வைக்கப் படுகின்றன. இந்தப் பாடலே பல ஆராய்ச்சி கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்படுகிறது. இப் பாடலில் வரும் நட்சத்திர நிலைகளைக் கொண்டு அக்காலத்தை கணிக்கவும் சிலர் முயன்று தோற்றுள்ளனர்.

கனையெரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்ந்தன்றால் விசும்பினானே.

இந்த வரி ஒரு ஆச்சரியம். விண்ணிலே மிதற்கும் கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும் போது உரசிக் கொள்வதால் தீப் பற்றி எரிந்து விழும். அதுவே எரி நட்சத்திரம் என்ற அறிவியல் அறிவு சொல்லும் வரிகள்.

எரி நட்சத்திரம் தெரிந்தால் மரணம் வரும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கை சோழர் காலம் வரைத் தொடர்கிறது (பொன்னியின் செல்வன்).

இப் பாடலை தமிழரின் ஜோதிட மோகம் 2000 வருஷமாகத் தொடர்கிறது என்பதா? அல்லது பழந் தமிழரின் வானவியல் அறிவுக்கு சான்றாகச் சொல்வதா?

அதை திறமை உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு விட்டு விட்டு, பாட்டை ராசி பலன் வடிவில் எழுதிப் பார்க்கலாம். ராசி, நட்சத்திரம் மற்றும் கோள்களின் வர்ணனை புலவருடையது. பலன் மற்றும் பரிகாரம் என் கற்பனை.

பின் பாட்டில் வரும் சோக நிகழ்வை பார்க்கலாம். ஒரு கலவையான வர்ணனைதான். அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மன்னிப்பாராக.

*******************

பங்குனி மாத ராசி பலன்கள்.

கணித்தவர் :  முது திசைவேழர் கூடலூர் கிழார்

பங்குனி மாத பொதுப் பலன்களை பார்க்கும் போது மிகவும் பாதகமான, சொல்லவே மனக் கிலேசத்தை கொடுக்கும்  நிலைகளே தென்படுகின்றன.

ஆட்சியில் இருப்போருக்கு இது மிகவும் கஷ்டமான காலம். மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும்.

முதலில் கிரக சஞ்சாரங்களை பார்க்கலாம்.

ஆடு போல் வடிவம் கொண்ட மேஷ ராசி, நெருப்பு நட்சத்திரமான கார்த்திகையில் உச்சம் பெறுவது நல்ல சகுனம் அல்ல. போர் மூளும் அபாயம் உண்டு.

பனை வடிவம் கொண்ட அனுஷ நட்சத்திரத்தில் சுக்கிரன் முதலில் நீச்சமாய் இருந்து பின் குள வடிவமும் பிரகாசமும் உள்ள புனர்பூச நட்சத்திரத்தில் உச்சம் பெறுகிறான்.  இதனால் பட்டத்து யானைகளுக்கு உடல் நலம் குன்றும். மரணம் நிகழக் கூடும்.

மாதத்தின் முதல் பாகத்தில் உத்திர நட்சத்திரம் மேலிருந்து கிழே வருகிறது. அதற்கு எட்டாவது நட்சத்திரமான மூலம் அதன் நேர் எதிரே தோன்றும். இதனால்  நண்பர்கள் பகைவர்களாக மாற வாய்ப்புள்ளது.

மிருக்ஷிரீஷ நட்ச்சத்திரம் கிழக்கேயும் போகாமல் வடக்கேயும் போகாமல் இருந்த இடத்தில் இருந்தே கஷ்டங்களைக் கொடுக்கும். குடை எடுத்து செல்வதைத் தவிர்க்கவும். குடை சாயும் தருணங்கள் வரலாம்.

இப்படி பட்ட கிரக நிலையில் ஒரு எரி நட்சத்திரம் கீழ் திசையில் விழுந்தால் ஏழு நாட்களில் அரச குலத்தில் மரணம் நிச்சயம் .

இதற்கு பரிகாரம் செய்வது மிகவும் சிரமம்.

பரிசில் கேட்டு வரும் பாணர்களுக்கு பட்டத்து யானை எடைக்கு இணையாக தங்கமும், முத்தும் நிறுத்துக் கொடுக்கலாம்.

அரசரின் முரசு அளவுக்கு தங்கப் பந்து செய்து புலவர்களுக்கு கொடுத்தால் முரசு கிழிந்து உருளாது.

வெண் கொற்ற குடை போல பத்து செய்து முத்து, பதித்து ஐந்து திசை வேழர்களுக்கு ஆளுக்கு இரண்டாய் கொடுக்கலாம்.

நல்ல நாள் – இல்லை

எம கண்டம் – எரி நட்சத்திரம்  விழுந்த ஏழாவது நாள்.

போர் செய்ய உகந்த நாட்கள் – இல்லவே இல்லை.

 *********************    

எரி நட்சத்திரம் விழுகிறது. பரிசில் பெற வந்த புலவர்கள் கவலை அடைகிறார்கள். பறை அடிக்கும் ஓசை போல் அருவி விழும் மலை நாட்டு அரசன் நலமுடன் வாழ வேண்டும்  என்று பேசி கொண்டார்கள். ஆனால் எல்லோர் உள்ளமும் கலக்கம் அடைந்து இருந்தது. ஏழாம் நாள் நெருங்க நெருங்க பயம் பரவியது.

ஏழாம் நாள், பட்டத்து யானை தும்பிக்கை ஊன்றி கால் மடித்து மறைகிறது. முரசு கிழிந்து  கீழே உருளுகிறது. வெண் கொற்றக் குடை கால் ஒடிந்து சாய்கிறது. காற்று போல் வேகமாய்ச் செல்லும் குதிரைகள் கல்லாய்ச் சமைந்தன.

வளையல் அணிந்த குலப் பெண்களை அணைக்க மறந்தான்.

வேண்டாமலேயே அளவின்றி கொடுப்பவன் கொடுக்க மறந்தான்.

பகைவரை வெற்றி கொண்டு பகை அறுத்து பிணிக்க மறந்தான்

நீல மாணிக்க மலை போன்ற மன்னவன் மறைந்தான்.

*********************    

 ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாள்மீன் நிலை திரிய
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர் தரத்
தொல் நாள்மீன் துறை படியப்
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்
கனை எரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர்
பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்
கால் இயல் கலி மாக் கதி இன்றி வைகவும்
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகித்
தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை
மணி வரை அன்ன மாஅயோனே?

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply