மகட் போக்கிய தந்தை பாடியது

திணை : பாலைத் திணை

துறை : மேல் படிப்புக்கு கடல் கடந்து மகட் போக்கிய தந்தை பாடியது

 

அவள் அம்மாவுக்கு மட்டும்தானா

எனக்கும் என் மகளைத் தேடுகிறது.

*

மூன்றாம் வகுப்பில் விளையாட்டு தினத்தில்

கீழே விழுந்து கால் ஒடிந்து கதறி அழ

தூக்கிக் கொண்டு ஓடிய

மகளை எனக்கும் தேடுகிறது.

*

இடுப்பில் இருந்து நழுவி விழுந்த பட்டு பாவாடை புரள

வயிறு தெரிய சட்டையைத் தூக்கிக் கொண்டு வந்து நின்று

“உங்க Beltஐ கழட்டிக் குடுங்கப்பா” என்று நின்ற

மகளை எனக்கும் தேடுகிறது.

*

அலுவலகத்துக்கு செல்லும் அவசரத்திலும் என்னை நிறுத்தி

“என்னப்பா இது சட்டையும் பாண்டும்.. மேட்சே ஆகலே”

மேலே இழுத்து சென்று வேறு சட்டை எடுத்துக் கொடுத்த

மகளை எனக்கும் தேடுகிறது.

*

மனைவியுடன் முறைத்துக் கொண்டு கைபேசியிலேயே மூழ்கிய நாளில்

பக்கத்தில் வந்து அமர்ந்து தோள் வழியே

“office ல வேலை அதிகமாப்பா?. ரொம்ப டென்ஷனா இருக்கிங்க” என்ற

மகளை எனக்கும் தேடுகிறது.

*

அம்மாவின் பட்டு புடவையை சுற்றிக் கொண்டு சொந்த ஊரில்

தனக்கு தெரிந்த தப்பான தமிழில் உறவினருடன்  

“என்னை bless பண்ணுங்க மாமா, அத்தை” என்று காலில் விழுந்தெழுந்த

மகளை எனக்கும் தேடுகிறது

*

அம்மாவும் மகளும் முட்டி முறைத்துக் கொண்ட நாட்களில்

“உன் நல்லதுக்கு தானேம்மா சொல்றாங்க” என்று நான் உரைக்க

பக்கத்தில் வந்தமர்ந்து மடி மீது படுத்துக் கொண்ட

மகளை எனக்கும் தேடுகிறது.

*

இலைகள் எல்லாம் உதிர்ந்து விட்ட மரங்களின் அடியில் 

பனி பெய்து புல்லின்றி  உறைந்து கிடக்கும் தரையில் 

வயதாகிய ஆண் மானும் பெண் மானும் மட்டும் கிடக்கும் ஊரில் உறையும்

மகளை எனக்கும் தேடுகிறது. 

*

கூடிய விரைவில் சாய்ந்து கொள்ள தோள் கொடுக்க

இன்னொரு ஆண் மகன் அவளுக்கு

கிடைத்து விடுவான் எனும் உண்மையில்

*

அவள் அம்மாவுக்கு மட்டும்தானா

எனக்கும் என் மகளைத் தேடுகிறது.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள