மூணு முத்துக் கொலுசு!

காலே பரி தப்பினவே

கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே

அகல் இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற

இவ் உலகத்துப் பிறரே.

இருபது ஐந்து வருடங்களுக்கு பின் நீண்ட நேர ஆம்னி பஸ் பயணம்.

திருநெல்வேலிக்கு ஒரு வேலையாய் சென்று திரும்பி வர ரயிலோ, விமானமோ சரி வராமல், ஒரு நீண்ட வார இறுதி நாட்களின் ஞாயிறு இரவில் பஸ்ஸில் வர நேர்ந்தது.

“கணேஷு, ஒன்னும் பிரச்சினை இல்லடே. Sleeper பஸ் பாத்துகிடு. ஏறிப் படுத்து தூங்கிரு. சல்லுனு போகும். ஏழு மணி நேரத்திலே பெங்களூர் போயிருவாம்லா.. காலேஜ் படிக்கேலே KTC வசந்தம்ல போவேல்லா. மறந்துட்டியோ!”

ரிஷி மூலம் நதி மூலம் போல் நம் மூலத்தை தோண்டும் நட்பு

புதிதாய் இருந்தது வண்டி. உட்காரும் இருக்கைகளே இல்லை.

இரண்டு அடுக்காய் ரயில் பெட்டியில் இருக்கும் பெர்த்தைப் போல இரு பக்கமும் மெத்தை தலையணையுடன் படுக்கைகள்.

ஒரு பக்கம் ஒரு படுக்கை மட்டும் இருக்க, மறு பக்கம் இரண்டு பேர் சேர்ந்து படுக்கும் படி இருந்தது. எங்கும் திரை போட்டு மறைக்க முடிந்தது. ஒவ்வொரு பர்த்திலும், டிவி, charger இருக்க, போர்வையும், தண்ணீர் பாட்டிலும் வைக்கப் பட்டிருந்தன.

ஏறியவுடன் படுத்துக் கொண்டேன்.

Airpodஐக் காதில் மாட்டியவுடன் ராசாவின் இசையில்  “அழகிய கண்ணே உறவுகள் நீயே.. நீ எங்கே.. இனி நான் எங்கே” என்று ஜானகியின் குரல்  மனதுக்குள்  இறங்கி உருக்கியது.

****************

பக்கத்து படுக்கையில் இருந்து குசு குசுவென்று பேச்சு கேட்க, பாட்டை நிறுத்தி விட்டேன்.

“வண்டி இன்னும் கிளம்பலே போலியே” பெண்ணின் குரலில் பதற்றம்.

“ஏன் பயந்துக்கற கண்ணம்மா. நாளைக்கு காலைலே பெங்களூர்.  போய்  விசா, டிக்கெட் வாங்கிட்டு, உடனே அமெரிக்கா போகப் போறோம். ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ. அதுக்குள்ள எல்லோரும் சமாதானம் ஆயிடுவாங்க”

திரை மறைக்காத வெளிரென்ற பெண்ணின் கால்களில் புதிதாய் மெட்டி. மருதாணி, சிவப்பாய் நிறத்தை எடுத்துக் காண்பித்தது.

பளிரென்று தெரிந்தது கொலுசு.

அகலமாய் அடுக்கு அடுக்காய் மூணு வரிசை முத்துக்கள் இருந்தது.

மௌனம்.

“ஏய்..என்னது இது ச்சே ச்சே.. கல்யாண நாள் ராத்திரி அழக் கூடாது”

மீண்டும் மௌனம்.

விசும்பலும், அதை மென்மையான முத்தத்தால் அடக்கும் முயற்சியும், திரையின் மறைவை மீறிக் காதைத் துளைத்தன.

மௌனத்தை கலைத்தது, கொலுசின் முனகல்.

‘கொலுசை கழட்டி பெட்டிலே வச்சுக்கோயேன்”  கிசு கிசுத்தது ஆணின் குரல்.

“வேண்டான்டா. அம்மா போட்டது. அவங்க பாட்டியோடதாம். நான் காலேஜ் போன முதல் நாள் போட்டு விட்டாங்க இரண்டு மூணு தடவை போட்டுட்டு போயிருப்பேன். இதுவாது இப்போ என் கூட வரட்டும்”.

கீதா ரவியின் கவிதை ஞாபகம் வர மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

உன்னவன் அருகினிலே
யாருக்கும் தெரியாமல்
ஆசையாய் நீ கொஞ்சும் போது
மெதுவாய் முனகுமடி!
அவிழ்த்துவை என்பான்.
மறுப்பேதும் பேசாமல்
சினுங்காமல் , சாதுர்யமாய்
அவிழ்த்திடுவாய்!

*************

பஸ் இன்னும் நகரவில்லை.

நெல்லை ஆம்னி பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது. இரண்டு மூன்று வரிசையாய் நின்று கொண்டிருந்தன பேருந்துகள்.

சொந்த ஊரை விட்டு பிரிய மனமில்லாமல் தயங்கி தயங்கி ஊர்ந்தன.

மார்கழி நடு இரவுப் பனி, மஞ்சள் விளக்குகளின் ஒளியில், புகை படலமாய் இறங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நடுத்தர வயது பெண்ணும், கூடவே இரண்டு மூன்று ஆண்களும் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.

பெண்ணின் முகத்தில் அழுகையும் கலவரமும்.

முந்தானையால் அடிக்கடி முகத்தை துடைத்து வாயை மூடிக் கொண்டார்.

கூட வந்த ஆண்களின் முகத்தில் கோபமும், ஆத்திரமும், வெறுப்பும் தெறித்தன.

நான் இருந்த பேருந்தின் அருகில் அவர்கள் வருவது தெரிந்தது.

“அண்ணாச்சி எங்கே போகணும். வண்டி fullu.” என்று ஒருவன் மறைக்க

“தள்ளுலே.. எங்க பொண்ணை ஒரு கேடு கெட்ட பய இழுத்துட்டு போறான். உங்க வண்டிலே இருக்காவளான்னு பாக்கோம்” ஒரு மீசை உறுமியது.

“வண்டி ஏற்கனவே லேட்டு. உடனே எடுக்கணும். இரண்டு பேர் மட்டும் உள்ளே போய் சுருக்க வாங்க”

அந்த பெண் தான் முதலில் ஏறினார். ஒவ்வொரு திரையாய் ஒதுக்கி தேடுவது தெரிந்தது.

கூட வந்தவர்களில் ஒருவர் பின்னால் “ஏட்டி நீ ஒரு பக்கம் பாரு. நான் ஒரு பக்கம் பாக்கேன்”  கைபேசியில் இருந்த விளக்கை அழுத்தியபடி ஒவ்வொரு திரையாய் விலக்கினார்.

மீசை என் திரையை விலக்கி, கை பேசியின் வெளிச்சத்தை முகத்தில் அடித்தபடி நகர்ந்தது.

அந்தப் பெண்ணில் கையில் போன் இல்லை.  அவரும் திரைகளை விலக்கி மறு பக்கமாய் தேடிக் கொண்டே அழுகையை அடக்கியபடி  நகர்ந்தார்.

“இந்த வண்டியிலேயும் இல்லையே. பாவி மவ. எப்படிதான்  மாயமாய் போனாளோ” பெண்ணின் அழுகை வண்டியின் எஞ்சின் உறுமலில் அழுந்தி மெலிந்தது.

“நீ ஒன்னும் கவலை படாதே. பஸ்ஸிலேதான் போயாகனும். ரயில் ஒன்னும் கிடையாது. தே….. பயல இழுத்து போட்டு வெட்டிட்டுத்தான் ஊருக்கு போறோம்.“

“அண்ணாச்சி சரியா பாத்திடியல்ல.. வண்டிய எடுக்கணும் இறங்குங்க” என்று சலம்பியவனை, புறக்கையால் தள்ளி, நெல்லைக்கே உரிய வசவால் திட்டியபடி இறங்கியது மீசை.

கூட வந்த ஆண்கள், அடுத்த பஸ்களில் தேட, அந்தப் பெண் மட்டும் நான் இருந்த பேருந்து மறையும் மட்டும் பார்த்தபடியே நின்றிருந்தார்.

**************

தாழையூத்தை தாண்டி வண்டி விரைந்தது.

விஜய் நடித்த ஏதோ ஒரு படம் திரையில் ஓடிக் கொண்டிருக்க, சிலர் headpohoneஐக் காதில் மாட்டியபடி, படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து படுக்கையில் டிவி திரை இரண்டும் அனைத்தபடி இருக்க, பலத்த மூச்சு மட்டும் அவர்கள் தூங்கவில்லை என்பதை காட்டியது.

கோவில்பட்டி தாண்டியதும், பேருந்து டீஸல் போட நின்றது. “பாத்ரூம் போணும்னா இறங்குங்க. இன்னுமே வண்டி பெங்களூர் போய்தான் நிற்கும்”

பலரும் இறங்கினார்.

பக்கத்து படுக்கையில் அந்தப் பெண் எழுந்து உட்கார்ந்ததை கொலுசு சொல்லியது.

“ரொம்ப பயந்துட்டியா?.. தண்ணி வேணுமா.. நல்ல வேளை.. நம்மளை அவங்க பாக்கல.. ”

அவளின் அழுகை விசும்பலில் ஆரம்பித்து பலத்தது.

“இல்லடா.. அம்மா பாத்துட்டாங்க..அவங்க கை திரையைத் தள்ளினதுமே, என் கொலுசுலே பட்டுது. அதை சத்தம் போட விடாமே அழுத்தி புடிச்சுட்டாங்க. எனக்கு இப்பவே திரும்பிப் போய் அவங்கள பாக்கணும் போல இருக்குடா”..

***************

பேருந்து மறு நாள் பனி கொட்டிக் கொண்டிருக்க, சோம்பிக் கிடந்த பெங்களூரின் சில்க் போர்டு சந்திப்பில்  நின்றது.

நான் எழுந்த போது பக்கத்து படுக்கைகளில் திரை முழுவதுமாய் விலகி இருக்க, படுக்கை இரண்டும் காலியாய் கிடக்க, ஒரு தலையணையில் மட்டும் மல்லிகை பூக்கள் ஒரு புதிய உறவின் ஆரம்பத்தின் அடையாளமாய், உதிர்ந்து கிடந்தன.

*************

குறுந்தொகை 44, வெள்ளிவீதியார்பாலைத் திணை – செவிலித் தாய் சொன்னது

காலே பரி தப்பினவே

கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே

அகல் இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற

இவ் உலகத்துப் பிறரே.

பரி தப்பினவே – நடக்க முடியவில்லையே; வாள் – ஒளி

அகல் இரு – பரந்து இருண்ட; விசும்பு – வானம்; மீன் – நட்சத்திரம்

************

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இந்தத் தாயும், தன் பெண்ணை தேடி அலைந்து இருக்கிறாள்.

நடக்க முடியாமல், கால் வலிக்கும் வரை, பாலை நிலத்தில் தன் காதலனுடன் ஊரை விட்டுச் சென்ற பெண்ணை தேடி ஓடி இருக்க வேண்டும்.

போகும் வழியில் பார்த்த மக்கள் எல்லோர் முகத்திலும் தன் பெண்ணைத் தேடி தேடி கண்கள் ஒளி இழந்து விட்டதாக ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து புலம்பும் தாயின் முகம் பாடலில் விரிகிறது.

அடுத்து வரும் இரு வரிகள் தான் முக்கியமானவை.

வானின் உள்ள நட்சத்திரங்களை விட மக்கள் கூட்டம் கூட்டமாய் அவ் வழியில் செல்வதாக சொல்லும் வரிகளில் தாய் தனது மனதுக்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம் தெரிகிறது.

தன் மகள் செல்லும் இடத்தில் அவளுக்கு உதவ “இவ் உலகத்து பிறர்” இருக்க வேண்டும் என்று வேண்டி கொள்ளும் தாயின் அழுகைக் குரல்.

கொலுசின் ஸ்பரிசத்தில் தன் மகளைக் கண்டு கொண்ட அதே தாயின் குரல்.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள