மேலங்கத்து கோபால மேனன்

கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன் நடந்த கதை இது.

கேரளாவின் ஒரு பகுதியை ஆண்ட குறு நில மன்னர் ஒருவரின் ஆட்சியில், வரி வசூல் செய்யும் அதிகாரியாய் இருந்த கோபால மேனன் நாடு கடத்தப்பட்டார்.

இந்த வழக்கை புரிந்து கொள்ள வேண்டுமானால், கேரளாவில் அப்போது வாழ்ந்த நம்பூதிரி குடும்பங்களை பற்றி கொஞ்சம் தெரிய வேண்டும்.

நம்பூதிரிகள் கேரள அரசியலில் பலத்த செல்வாக்கோடு இருந்த காலம் அது. கோயில்கள் அவர்கள் கைகளில் இருந்தன. மன்னர்களுக்கு அவர்களின் உறவு, அவர்கள் ஆட்சியை நியாயப்படுத்த தேவைப் பட்டது. ஐரோப்பாவில் இருந்த  மன்னர்களுக்கு போப்பின் ஆசி தேவைப்பட்டதற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

நம்பூதிரி குடும்ப சட்ட திட்டங்கள் கடுமையானவை. அக் குடும்பங்களில் மூத்த மகன் மட்டுமே மற்றொரு நம்பூதிரிப் பெண்ணை மணக்க முடியும். மற்றவர்கள் வேறு சாதிப் பெண்களைத்தான் கூட முடியும். அவர்கள் அப்போது இருந்த அரச, பிரபுக்கள் குடும்பத்து பெண்களுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டனர். பல வகைகளில் இது அவர்களின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள உதவியது.

நம்பூதிரி பெண்களின் நிலை மிகவும் மோசம். பல பெண்கள் திருமணம் ஆகாமல் கன்னிகளாகவே காலம் கழித்தனர்.

அவர்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர்.

ஸ்மார்த்த சபை என்று நம்பூதிரி ஆண்களை கொண்ட கூட்டம் ஓன்று  அப் பெண்கள் யாரேனும் முறை தவறி உறவு கொண்டால், அவர்களை கடுமையாக தண்டித்தது.

மேலங்கத்துக்கு அருகில் மணமாகாத ஒரு நம்பூதிரி பெண் கர்ப்பமானாள். சபைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டாள்.

இந்த வழக்குகளில் அப் பெண்ணிடமே யார் இதற்கு காரணம் என்று கேட்கப்படும். குற்றம் சாற்றப்பட்டவர்கள் தான் தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்க வேண்டும். இதற்கு “கை முக்கு” என்று ஒரு வழிதான் உண்டு.

சுசிந்தரம் கோயிலில், ஒரு உருளையில் கொதிக்கும் நெய்யில் கையை விட வேண்டும். கை வெந்து போகவில்லை என்றால் அவர் நிரபராதி.

குற்றம் சாற்றப்பட்டவர்கள் பல பேர் இதற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டனர். அல்லது குற்றத்தை ஒத்துக் கொண்டு நாடு கடத்தப்பட்டனர்.

இந்தப் பெண் தன்னுடன் உறவு கொண்டதாக பல பேரை கை காட்டினாள். அவர்களில் கோபால மேனனும் ஒருவர். உடனே அவர் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டார்.

அந்த பெண், சாதி விலக்கப்பட்டு, விலைக்கு விற்கபட்டாள். யாரோ ஒரு முஸ்லிம் வியாபாரி அவளை வாங்கிச் சென்று விட்டார்.

இலங்கைக்கு சென்ற கோபால மேனன், அங்கு தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்தார். சத்தியவதி என்ற பெண்ணை திருமணம் செய்து, இரண்டு மகன்களை பெற்றெடுத்தார்.

அவரின் வாழ்க்கை சந்தோசமாக இல்லை. நோயிலும், வறுமையிலும் வாடியவர் சீக்கிரமே இறந்து போனார்.

சத்தியவதி, தனது இரண்டு மகன்களையும் கூட்டிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். பல வேலைகள் செய்து அவர்களை வளர்த்து, கஷ்டம் தீராமல், அவர்கள் இருவரையும் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விடுகிறார்.

இருவரும் கடுமையான போராட்டங்களுக்கு பின் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்கள்.

அதில் இளையவருக்கு பல படங்களில் சிறு  சிறு வேடங்களில் நடித்த பிறகு கதாநாயகன் வேடம் கிடைக்கிறது.

பேரும், புகழும், பணமும் வந்து சேர்கின்றன.

அரசியலிலும் குதித்து, முதலமைச்சராகவும் ஆகி விடுகிறார்.

மேலங்கத்து கோபால மேனன் ராமச்சந்திரன் (MGR).

தனி வாழ்க்கையில் எப்படியோ, தன் திரைப்படங்கள் எல்லாவற்றிலும் பெண்களை மதித்து நடக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார் MGR.

  • முன் சுவடுகள் – ஜெயமோகன் எழுதிய புத்தகத்தில் இருந்து..

 

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள