அசுர வேகம்

பெங்களுரின் கூடிக் கொண்டே போகும் போக்குரவரத்து நெரிசலில், கார்களின் வேகம் குறைந்து கொண்டே போனாலும், வாழ்க்கை என்னவோ விரைந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு வார இறுதி நாட்கள் முடிந்தவுடன் அடுத்த ஓன்று ஆரம்பித்து விடுகிறது போலத் தோன்றும் வேகம்.

தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் நம்முடைய வருடங்கள் ஒரு நொடி போல என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். இதற்கு அறிவியல் ஆதாரம் எல்லாம் சொல்லி ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் நமது வாழ்க்கை நம்மையெல்லாம் தேவர்கள் நிலைக்கு உயர்த்திக் கொண்டு இருக்கிறதோ என்னவோ.

அசுர வேகம் என்று ஒரு சொலவடை. அசுர வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தால், தேவர்களாகி விடுவோம் போல.

இந்த அசுர வேகத்திலும் நமக்கு சலித்துக் கொள்வதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கிறது. பெங்களுரில் போக்குவரத்து  நெரிசல், குண்டும் குழியும் நிறைந்த சாலைகள், சிங்கப்பூரில் கூடிக் கொண்டே போகும் விலைவாசி, துபாயிலோ ஐம்பது டிகிரியை தொடும் வெயில்.

அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கோ இருக்கவே இருக்கிறார் Trump.

இதற்கெல்லாம் நடுவில், நம்மை நிறுத்தி, நிதானிக்க வைத்து, நமது முகத்தில் புன்னகையை வரவழைக்கும் காட்சிகளும் இருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் நாம் அவற்றை ரசிப்பது குறைந்து, முக நூலிலும் (facebook), வாட்ஸ்-ஆப்பிலும் உள்ள நிழல் வாழ்க்கையில் கண்டு கொள்வது கூடிக் கொண்டே வந்தாலும், வாழ்க்கையின் வேகத் தடைகள் நாம் நிஜ வாழ்க்கையில் ரசிப்பவைதான்.

ஐம்பது வயதை நெருங்கும் போது வாழ்க்கையின் வேகம் குறைந்தால்தான் நல்லது. இரு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே, வயதில் ஓன்று கூடினால் யாருக்குத்தான் ரசிக்காது?

அப்படிப்பட்ட விஷயங்களை, ரசித்தது பத்து என்று எழுதலாம் என்று ஒரு ஆசை.

*************************

தமிழ் இலக்கணத்தில் வாழ்க்கையை ஐந்து திணைகளாக பிரித்து இருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை என்று மொட்டுரு போட்டு பரீட்சையில் பதில் எழுதி நாமெல்லாம் மதிப்பெண்கள் வாங்கி இருப்போம்.

பயந்து போய் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.

நான் சொல்லப் போவது அது பற்றி அல்ல. (தமிழ் இலக்கணத்தில் பொருளதிகாரம் ஒரு அற்புதம். நான் அறிந்த வரை, மற்ற மொழிகளில் இல்லாதது. நல்ல குரு கிடைத்தால் ரசித்து கற்றுக் கொள்ளுங்கள்).

நான் ரசித்த முதல் விஷயத்துக்கு, சங்க நூலான  ஐங்குறுநூறு நூலிருந்து வர்ணனைகளை உருவப் போகிறேன்.

ஐங்குறுநூறு ஒரு தொகுப்பு. மொத்தம் ஐநூறு பாடல்கள். திணைக்கு நூறு பாடல்கள், திணைக்கு ஒன்றாக ஐந்து புலவர்கள். நூறு பாடல்களை – பத்து பத்தாய் தொகுத்திருக்கிறார்கள் – வேட்கை பத்து, வேழம் பத்து, புலவிப் பத்து  இப்படி.

இதை படிக்கும் போது, இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தமிழர் வாழ்க்கையின் வர்ணனைகள் என்று நினைவில் கொள்வது நலம்.

அதிலிருந்து எடுத்ததுதான் தான் தலைப்பு – ரசித்தது பத்து.

***************

சென்னையில் மைலாப்பூர் போல பெங்களூரில் ஜெய நகர்.

பழைய பகுதி.

இன்றும் நல்ல நிலையில் இருக்கும் பூங்காக்களையும், அகலமான தெருக்களையும், நல்ல உணவகங்களையும், கச்சேரிகள், பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும்,  கொஞ்சம் கூடுதல் அழகான பெண்களையும் உடைய பகுதி.

நான், வார இறுதி நாட்களில் தவறாது காலையில் என் மகளை ஒரு நாட்டிய வகுப்புக்கு அழைத்து செல்லும் சாக்கில் சென்று, கொஞ்சம் நடைப் பயிற்சி, நிறைய ஒய்வு, முக்கியமாக அற்புதமான  காலை உணவும், காப்பியும் என்று அனுபவிக்க சென்று கொண்டிருக்கிறேன்.

அங்கு ஒரு சிறிய பூங்கா. அந்தப் பூங்காவுக்கு அருகிலேயே ஒரு விளையாட்டு மைதானம் இருப்பதால், கூட்டம் எல்லாம் மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்க இந்தப் பூங்காவில் யாரும் இருப்பதில்லை.

அந்தப் பூங்காவில் ஒரு சிறிய வீடு இருக்கிறது. அதை வீடு என்று சொல்ல முடியுமா என்று எனக்கு தோன்றியது உண்டு. அப்போதெல்லாம் மாலனின் அற்புதமான பழைய கவிதை மனதில் ஓடும். பெரிய பெரிய வீடுகளில் இப்போது வசிக்கும் பல பேருக்கு, ஒரு காலத்தில் தாங்கள் ரசித்து வாழ்ந்த ஒரு சிறிய வீட்டை நினைவுபடுத்தும் வரிகள்.

வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே  கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ

 மாலன்

ஒரே ஒரு அறை, அதன் பக்கத்தில் கூறை போட்டு சமையலறை.

பூங்காவில் பொதுவான  ஒரு கழிப்பறை மட்டும்  இருக்கிறது.

ஆனால் அந்தப் பெரிய பூங்காவே அந்த வீட்டுக்கு  மட்டுமே அமைந்துள்ளது  என்று நான் நினைத்து பொறாமைப்பட்டதுண்டு.

இந்தப் பூங்காவை பார்த்துக் கொள்ளும் காவலரின் வீடு என்று சில நாட்களில் தெரிந்து கொண்டேன்.

ஒரு குளிரான, மழை தூறிக் கொண்டிருந்த காலை வேளையில் அந்தக் குடும்பத்தை வெளியில் வரப் பார்த்தேன்.

கன்னடம் பேசும் இள வயது அப்பா, அம்மா – ஒரு பெண் குழந்தை. குழந்தைக்கு இரண்டு வயதுக்குள் இருக்கும். எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் நான் முதலில் வைக்கும் பெயர் குந்தவை.

இந்தக் குந்தவை எதையோ விரட்டிக் கொண்டு திரிந்தது.

ஒரு அணில்.

அதை இவள் கூப்பிட்டுக் கொண்டே துரத்த, அந்த அணில் பயந்து கொண்டு ஓட, ஒரு சமயத்தில் அணில் நின்று இவளை முறைக்க, குந்தவை ஓடிப் போய் தன் தந்தையின் மடியில் ஒடுங்கிக் கொண்டது. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒரே சிரிப்பு.

புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதாகின்றே,
அகன் பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்னகை பயிற்றிச்,
சிறு தேர் உருட்டும் தளர் நடை கண்டே.

வீட்டின் முன்னால் நடக்க முடியாமல் தளர் நடை நடந்து சிறு தேர் உருட்டி விளையாடும் தன் மகன். அவனுக்கு  புகழ் பெற்ற  தாத்தாவின்  பெயரை வைத்து இருக்கிறார்கள். அவன் சிரிப்பை கண்டு அவன் காதலித்து மணந்த மனைவியின் மேல் இருக்கும் அவன் உள்ளம் மேலும் பெரிதாகின்றது.

******************

வாரம் தோறும் அந்தப் பூங்காவுக்கு போகும் போதெல்லாம், இந்தக் குடும்பத்தை ரசிக்க ஆரம்பித்தேன். சில நாட்களில் அவர்கள் வெளியே வருவதில்லை. பூங்கா இன்னும் வெறிச்சோடி இருக்கும்.

ஒரு முறை, அந்த சிறிய வீட்டின் முன்னால் ஒரு நார்க்கட்டில் கிடக்க அதில் படுத்து இருந்த அப்பாவின் மேல் உட்கார்ந்து கொண்டு, அவரின் கை பேசியில் எதையோ ரசித்து பார்த்துக் கொண்டு இருந்த குந்தவை, அவள் அம்மாவையும் அழைக்க, மூவரும் சேர்ந்து ரசித்து சிரித்தது தெரிந்தது.

மாலை முன்றில் குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவியாகப், புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே,
மென் பிணித்தம்ம பாணனது யாழே.

மனைவி அருகில் இருக்க, கட்டிலில் படுத்து இருக்கும் மகன் மார்பில் தவழ்ந்து விளையாட, அவர்கள் சிரிப்புக்கு இணையாக எந்த இசையும் இல்லை.

******************

எட்டு மணிக்கு மேல், இந்தப் பூங்காவை சுற்றியும் வாழ்க்கை விரைந்து ஓட துவங்கி விடுகிறது. ஹாரன்களை அலற விட்டுக் கொண்டு செல்லும் பேருந்துகளும், இரு சக்கர வாகனங்களில் வேலைக்கு செல்லுவோரும், பள்ளிக்கு குழந்தைகளை அடைத்து கொண்டு செல்லும் குறு உந்துகளும், காய்கறி விற்போரும், தண்ணீர் லாரிகளும் ஓடத் துவங்கி விடுகின்றன.

ஆனால் பூங்காவில் மட்டும் வாழ்க்கை நிதானித்து செல்லுகிறது. ஒரு அணில் அதன் துணையுடன் மேலும், கீழும் ஓடிக் கொண்டிருக்க, இரண்டு மூன்று நாய்கள் குளிரில் சுருண்டு படுத்துக் கொண்டு இருக்கின்றன. பறவைகள் மெதுவாகவே வெளியில் வந்து, மெலிதாகவே கூவுகின்றன. ஒரு வயதான ஜோடி, கைபேசிகள் இன்றி, மனைவியின் கையை கணவர் பிடித்துக் கொள்ள, பேச்சு அதிகம் இன்றி, ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டு சுற்றி வருகின்றனர். பூங்காவின் ஒரு பெஞ்சில் ஒரு நடுத்தர வயது பெண்மணி, கண்களை மூடி மூச்சு பயிற்சி செய்கிறார்.

இங்கு மட்டும் நிமிடங்கள், மணிகளாய் மெதுவாக நகர்கிறது.

மறி இடைப்படுத்த மான் பிணை போலப்,
புதல்வன் நடுவணனாக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை, முனிவு இன்றி,
நீல் நிற வியல் அகம் கவைஇய,
ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே.

குழந்தை நடுவில் இருக்க, அதை அணைத்துக் கொண்டு, பெண் மானும், ஆண் மானும் போல், எந்தக் கவலையும் இல்லாமல், இனிமையாக படுத்து இருக்கும் அவர் நிலை – கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் மட்டும் இன்றி, தேவர் உலகத்திலும் கிடைப்பது அரிது.

வருடங்கள் நொடிகளாக ஓடும் தேவர்களுக்கு எப்படி வாய்க்கும் இந்த வாழ்க்கை?

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள