ரமணிய சங்கீதம்.

எனக்கு கர்நாடக சங்கீதத்தை அறிமுகப்படுத்தியது என் பெரியப்பா.

கல்லூரிக்கு படிக்க செல்வதற்கு முன் மதுரை மணி ஐயரின் பாடல்களை அவர் வைத்திருந்த டேப் ரிகார்டரில் கேட்டிருக்கிறேன்.

சின்ன வயதிலேயே அவர் தந்தையார் காலமாகி விட, அவர் கையில் விடப்பட்ட அவர் தம்பியையும், மூன்று தங்கைகளையும் தன் பதினைந்து வயதில் இருந்து சுமக்க ஆரம்பித்து, உழைத்து சம்பாதித்ததை எல்லாம் கடைசி வரை, அவர்களுக்கும் அவர் குடும்பங்களுக்குமே செலவிட்டது போக, அவரிடம் இருந்த சொத்து அந்த டேப் ரிகார்டரும், செங்கோட்டை ஆத்தங்கரைத் தெருவில் இருந்த சொந்த வீடும் தான்.

சில ராகங்களின் பெயர் மட்டுமே தெரிந்திருந்தாலும், என் மனதில் சுப்புடு அளவுக்கு ஒரு நினைப்பை வளர்த்துக் கொண்டதற்கும் அவர்தான் காரணம்.

“சுருதி விலகாத குரல் MS சுப்புலட்சுமிக்கு. நல்ல சங்கீதம். ஆனா இந்த பத்திரிகைக்காராதான் அவருக்கு விரோதி. பஜனும் ஸ்லோகமும் பாடறத்துக்கு மட்டுமா அந்தக் ஞானம்?”

அவருக்கு N.C. வசந்தகோகிலம் தான் பிடிக்கும்.

அதே மாதிரி, குன்னக்குடி. “எப்படி ஒரு கை!. குரளி வித்தை காட்றதுக்கு வீணாப் போறதே”

MS கோபாலகிருஷ்ணன், மதுரை மணி அய்யர், TN கிருஷ்ணன் – இவர்கள் எல்லாம் அவர் கேட்கும்போது நான் தெரிந்து கொண்ட பெயர்கள்.

************************

அதே காலத்தில், தி ஜானகிராமனின் “மோகமுள்” வேறு படித்து முடித்திருந்தேன்.  

சென்னையில் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில், நிறையை கச்சேரிகள் போக ஆரம்பித்தேன்.  

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் K.V. நாராயணசாமி, ஒரு கோயிலில் மறக்கவே முடியாத சந்திரசேகரின் வயலினுடன் TV சங்கரநாராயணன், IITயில் ஹரிப்ரசாத் சௌரசியாவுடன் பாலமுரளி, ஆஸ்திக சமாஜத்தில் MS கோபாலகிரிஷ்ணன்.

கிளீவ்லாண்டில் அவருடைய மெயின் கச்சேரி சோபிக்காமல் கூட்டம் தூங்கப் போகி விட, மிஞ்சியிருந்த சிலரைக் கூட கண்டு கொள்ளமால் நெஞ்சுருகி ஒம்பது மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரைப் பாடிக் கொண்டே இருந்த சேஷகோபாலன்.

மறு நாள் காலையில், அதே இடத்தில் ஒரு சிறிய ஹாலில்  சிறு வயது நித்யஸ்ரீ. பிழையே இல்லாத தமிழ் உச்சரிப்பும்,  சத்தம் குறைந்த இனிமையான குரலும்…”எப்படிப் பாடினரோ”

ராணி சீதை ஹாலில் – மகாராஜபுரம் சந்தானம் – “கூட்டத்துக்கு பாடறார்” என்று சிலரால் விமர்சிக்கப்பட்ட அவருடன் விக்கு விநாயகராமை முதல் முறையாக கேட்டது அப்போதுதான்.

“சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்” என்ற பாசுரம், பாரதியாரின் “திக்குத் தெரியாத காட்டில்”.. இதயம் பேசுகிறது மணியன் முன் வரிசையில் இருந்து பாடல் பாடலாய் வேண்டிக் கொண்டே இருக்க நாலு மணி நேரத்துக்கு மேலும் பாடிக் கொண்டே இருந்தார்.

****************

இந்த அனுபவங்களால் எனக்கு நல்ல கச்சேரி எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் விழுந்து விட்டது.

  1. இரண்டு மணி நேரத்தில் பத்து பாடல்கள் பாடுவதெல்லாம் கச்சேரியில் சேராது. ராகம்-தாளம்-பல்லவி இல்லாத கச்சேரி குடிகாரர் பாஷையில் “சரக்கு இல்லமால் சைட்-டிஷ் மட்டும் சாப்பிடுவது” மாதிரி.

 

  1. நல்ல சங்கீதம் தாமிரபரணி ஆறு போல, மெதுவாய் ஆரம்பித்து, அருவியாய் பொங்கி, அமைதியாய் முதலியார் பாலத்தைக் கடந்து, பக்கத்துக் குளம் கிணறுகளை நிரப்பி, கடலை அடைவதற்கு முன் பரந்து விரிந்து மங்களமாய் முடிய வேண்டும். பெங்களூரில் கிளம்பியதில் இருந்து எங்கும் நிற்காமல் ஒரே வேகமாய் சென்னையில் வந்து நிற்கும் சதாப்தி ரயில் போல இப்போது உள்ள சிலர் பாடுவது…கூட்டத்துக்காக.

 

  1. பாடுபவரோ, வயலினோ, வீணையோ – அவர் மட்டுமின்றி, கூட வாசிக்கும் பக்க வத்தியக்காரர்களும் அனுபவித்து பின் தொடர, பயின்று நகலெடுத்த சங்கீதமாய் இராமல், தற்பிரவாகமாய் மேடையிலேயே பின்னப்படும் இசை உன்னதமானது.

*******************

அப்படி ஒரு நல்ல கச்சேரி கேட்கும் அனுபவம் சமீபத்தில் கிடைத்தது.

ரமணியின் சிஷ்யரான கார்த்திக் அவரது குருவின் நினைவாய் பெங்களூரில் வருடத்துக்கு ஒரு முறை வைக்கும் புல்லாங்குழல் விருந்து.

மேடையோ, மைக்கோ, விருதோ, விருதாய் தலைமை உரைகளோ இல்லாமல், அவரது வீட்டிலேயே மும் மூர்த்திகள் ஒரு ஓரமாய் புகைப் படங்களில் இருந்து ஆசிர்வதிக்க, மாலையிடப்பட்ட குருவின் படத்துக்கு முன் விரித்த சமுக்காளத்தில், சரியாய் அவர் சொன்ன மாதிரியே ஐந்து மணிக்கு ஆரம்பித்து விட்டார்.

தான் முதல் முதலாய் கை தொட்டு வணங்கிய போது தன் கையில் தங்கிய ரமணி அணிந்து இருந்த சார்லி வாசனைத் திரவியத்தின் மணம் போய் விடக் கூடாது என்பதற்காக கை நனைக்காமல் ஐந்து நாள் குளித்ததைச் சொல்லி அஞ்சலியை ஆரம்பித்தார்.

வழக்கமாய் கணபதியைத் தொழுது ஆரம்பிக்காமல்,  “என்தரோ மகானுபாவு” என்று தன் குருவுக்கு வந்தனமிட்டு தொடங்கினார்.

பின் “ஹசெரிக்க ரா ரா” என்று ராமனை, கிளியைக் கையில் வைத்திருக்கும் அவன் தங்கை மீனாட்சியை பார்க்க கூப்பிட்டார்.

பின்பு அவர் எடுத்த ஆலாபனையில் என் குறைந்த அறிவு “இந்த வீணைக்கு தெரியாது” என்று சஹானவைத் தேடியது. 

என் போலவே கூட்டத்தில் சிலரும், அலை பாய்ந்தனர். 

வசித்து முடித்து விட்டு இது “மாளவி” என்றார் கார்த்திக். 

கூகுள் இரண்டுக்கும் பிறப்பிடம் ஒன்றே என்றது – ஹரி காம்போதி.

இரண்டுக்கும் ஆரோகணம் ஒன்றே என்றது.  

மாளவிக்கு சஹானவைவிட அவரோகணத்தில் – G3 R2 கம்மி.

இரண்டு மணி நேரம் போனதே தெரியாத போது – ராகம் தாளம் பல்லவி ஆரம்பம்.

அவர் குருவின் மேல் அவரே எழுதிய பல்லவி.

அடுத்த ஐம்பது நிமிடங்களும் ஒரு படகின் மீது ஏறி, மாலை மயங்கும் அந்திப் பொழுதில் மனதுக்கு பிடித்தவருடன், யாருமில்லா ஒரு ஏரியில்,   நீருக்கு வலிக்காமல் மெதுவாய் துடுப்பு போட்டு சுற்றி வந்த அனுபவம்.

கார்த்திக்கும், வயலின் வாசித்த ஸ்ரீ ராம்குமாரும், புதிதாய்க் காதலிக்க தொடங்கிய ஜோடி போல, விட்ட இடத்தில் இருந்து தொடுவதும், தொட்ட இடத்தில் இருந்து விடுவதுமாய் கூடி இருந்த கும்பலை மறந்து குலாவினர்.

ஸ்ரீராம்குமாரின் வயலின், புல்லாங்குழலின் இனிமையை உள் வாங்கி மெருகேற்றி திருப்பிக் கொடுத்தது.

மிருதங்கத்தில் சுதீந்திராவும், கஞ்சிராவில் புருஷோத்தமனும் தனியே ஒருவரை ஒருவர் ரசித்து மகிழ்ந்தனர்.

சந்தானத்தின் குரலில் கேட்ட பெரியாழ்வாரின் பாசுரம்தான் ஞாபகத்துக்கு வந்தது. 

ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து 
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்காப் புடை பெயரா
எழுது சித்திரங்கள் போல நின்றனவே.

மேயவும் மறந்து, மேய்ந்த புல்லை மெல்லவும் மறந்து, எழுதிய சித்திரத்தை போல கண்ணனின் குழழோசை கேட்டு மான்கள் நின்றன என்கிறார் விஷ்ணு சித்தர்..

செல் போனில் கண் பதிக்க விடாமல் மூன்று மணி நேரம் எல்லோரையும் கட்டி போட்டது கார்த்திக்கின் குழல் இசை.

ரமணி போட்டிருந்த சார்லி வாசனைத் திரவியத்தின் மணம் கார்த்திக்கின் கையில் இருந்து மறைந்து இருக்கலாம்.

அவரிடம் கற்ற வித்தை அவர் மூச்சில் இருந்து மணம் வீசி மனம் நிறைத்தது.

மதுரை சோமு ராக ஆலாபனைகளில் பலராலும் எட்ட முடியாத இடங்களில் சஞ்சாரிக்கும் போது நடுவில் “குருநாதா” என்று நன்றியில் நெஞ்சுருகுவார்.

அந்த உணர்வை கொடுத்தது இந்தக் கச்சேரி.

Print Friendly
பகிர்ந்து கொள்ள