வந்தியத்தேவர் வல்லவரையரும், எடப்பாடி பழனிச்சாமியும்

பாகம் 1 – வந்தியத் தேவரின் கலக்கம்

 

அருண்மொழி வர்மன் ராஜராஜ சோழனின் மைத்துனரும், மன்னரின் நெருங்கிய தோழரும், சோழ தேசத்தின் உயரிய இடத்தில் இருப்பவருமான வந்தியத்தேவேருக்கு அன்று தூக்கமே வரவில்லை.

மனதில் ஏதேதோ எண்ணங்களும் குழப்பங்களும் தோன்றிக் கொண்டே இருந்தன.

தஞ்சைப் பெரு உடையார் கோயிலின் வைகறைப் பூசைக்கான மணி இன்னும் அடிக்கவில்லை.

கோயில் கட்டி முடித்து சில தினங்களே ஆகியிருந்தன. பணிகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருந்தன.

தன் அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மனைவி குந்தவையின் கையை மெதுவாக எடுத்து தள்ளி வைத்து விட்டு, படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்.

வயது ஆகிக் கொண்டே வந்தாலும், அழகும் கூடிக் கொண்டே வரும் தன் மனைவியின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். சற்றே விரிந்து இருந்த இதழ்கள் அவரை முத்தமிடத் தூண்டின. அவள் தூக்கத்தைக் கலைக்க மனமின்றி, குனிந்து நெற்றியில் சத்தமின்றி முத்தமிட்டார்.

குந்தவையின் முகத்தில் புன்னகை. தூக்கத்தின் அழுத்தத்தில் நல்ல கனவாக இருக்க வேண்டும்.

அவளின் கரங்கள் எழுந்து வந்தியத்தேவரின் கழுத்தை வளைத்து, தன் முகம் நோக்கி இழுத்து, அவரின் இதழ்களைக் கவ்விக் கொண்டன.

பல நொடிகள் கழித்தே கைகளின் சிறை விலகியது.

“இன்னும் விடியவில்லை தேவி. அரைச் சாமம் (இரண்டு மணி நேரம்) இருக்கிறது. நான் சிறிது நேரம் மேன் மாடத்தில் உலாவி விட்டு வருகிறேன்.  நீ தூங்கு” என்று அவளின் நெற்றியை சிறிது நேரம் வருடி விட்டு விட்டு மெதுவாக கதவைத் திறந்து மேலே வந்தார்.

தஞ்சை மாநகரம் பரந்து விரிந்து கொண்டே இருப்பது தெரிந்தது. அருண்மொழிவர்மர் (முதலாம் ராஜ ராஜன்) ராஜராஜேஸ்வரம் என்ற பெயருடன் பெரிய கோயிலைக் கட்ட ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஊர் பெரிதாக ஆரம்பித்து விட்டது.

தானும் அவரும் கலந்து கொண்ட போர்கள்தான் எத்தனை எத்தனை!.

அத்தனை போர்களிலும் வென்ற பொன்னும் மணியும் இந்தக் கோவில் கட்டவே செலவழிந்தன.

காந்தளூர் சாலையிலும், பாண்டிய நாட்டிலும், சாளுக்கிய நாட்டிலும் சிறைப் பிடிக்கப் பட்ட ஆண்களில் பாதி பேர் இந்த கோயில் கட்டும் வேலையில் ஈடுபடுத்தப் பட்டனர்.

சோழ நட்டு மக்களுக்கு பெருமை நிறையவே இருந்தாலும், ஆங்காங்கே குழப்பங்களும் எழுந்தன.

“கட்டி முடித்த பின்னரும் ஆயிரத்து ஐநுறு பேர் வேலை செய்கிறார்களாம். தேவாரம் பாட மட்டும் அம்பது பேர், ஆடல் மகளிர்  நானுறு பேர். வேலை செய்பவர்களின் முடியைத் திருத்தும் நாவிதனுக்கும் ராஜராஜப் பெரும் நாவிதன் என்ற பட்டம், நிலம், பொன். நம் வரிச் சுமை தான் ஏறப் போகிறது”

சோழ தேசத்தை விட்டும் இன்னும் செல்லாத சில பாண்டிய ஒற்றர்களும் இக் குழப்பத்தை தூண்டி விட்டனர்.

கோயிலை நிர்வாகம் செய்வதற்கு ஒவ்வொரு ஊர்ச் சபையிலிருந்தும் ஒருவரை அனுப்ப வேண்டும் என்றும், அவர் தவறு ஏதாவது செய்தால், அதற்கு முழுப் பொறுப்பும் அவ்வூர் சபையோரே ஏற்க வேண்டும் என்று மன்னரின் பெயரில் ஆணை சமீபத்தில்தான் நூற்றிப் பத்து ஊர் சபைகளுக்கும் அனுப்பப் பட்டிருந்தது.

ஆணை அனுப்பிய கோயில் அதிகாரியான தென்னவன் மூவேந்த வேளாளன் பெயரை மக்கள் பயத்துடன் உச்சரிக்கத் தொடங்கி இருந்தனர்.

“வல்லவரையர் இருந்த இடத்தை மூவேந்த வேளார் பிடித்து கொண்டு விட்டார். மன்னரிடத்தில் அவர் வைத்ததுதான் சட்டமாம்” ஊர்ச் சபைகளில் வம்பு வளர்ந்தது.

“அவர் புத்திசாலி. பெரிய கோயிலில் மன்னருக்கும், உலக மகாதேவிக்கும் செப்பு படிமங்கள் செய்து வைக்கப் போகிறாராம்”.

தஞ்சை பலம் பெற்று வருவதை சில சிற்றரசர்களும் ரசிக்க வில்லை.

“இப்படி ஒரு கோயிலுக்கு செலவு செய்வதில், பல ஊர்களிலும் இருக்கும் கோயில்களை கற்றளிகளாக மாற்றலாம்” என்று சிலரும் “குந்தவை பிராட்டியார் செய்தது போல சுந்தரச் சோழ ஆதுரச் சாலைகளை எல்லா ஊர்களிலிரும் நிறுவலாம்” என்று பலரும் பேசத் தொடங்கி இருப்பது ஒற்றர்களின் மூலம் வந்தியத்தேவர் காதுகளில் விழத் தொடங்கி இருந்தது.

மன்னரோ இதை எல்லாம் காது கொடுத்துக் கேட்கும் நிலையிலேயே இல்லை. முழு நேரத்தையும் கோயில் பணிகளிலேயே கழித்துக் கொண்டிருந்தார்.

உள்ளாட்சிப் பொறுப்பு முழுவதும் வல்லவரையர் கைகளிலும், படைகளும், போர் முனைப்பாடுகளும் இளவரசர் இராசேந்திர சோழன் மற்றும் சேநாதிபதி கிருஷ்ணன் இராமன் தலைகளிலும் விழுந்தன.

கிருஷ்ணன் ராமனும், மன்னரின் ஆணைப்படி கோயிலின் திருச்சுற்று மாளிகையைக் கட்டிக் கொண்டிருக்கிறான்.  `

“நாட்டை ஒற்றுமையாக வைத்துக் கொள்ள வேண்டுமே, பகைவர்கள் படை எடுத்து வந்தால், படை நடத்த பொன்னும் பொருளும் தேவைப் படுமே. எல்லோரும் “நமச்சிவாய வாழ்க” என்று கோயிலிலேயே நேரத்தையும், செல்வத்தையும் செலவழித்தால், குறுகிய காலத்தில் பெருகிப் பரந்து விட்ட சோழ தேசத்தை நிர்வகிப்பது எப்படி” வல்லவரையர் கலங்கித்தான் போய் விட்டார்.

“வல்லவரையரே.. தூக்கம் வரவில்லையா. உடலுக்கு ஒன்றும் இல்லையே. இல்லை.. ஒரு வேளை குந்தவையுடன் ஊடலா?”

குரல் வந்த திசையை நோக்கினார்.

ஈசான சிவப் பண்டிதர். அரசரின் குரு.

காஞ்சி நகருக்கு அருகில் கூழ்ப் பந்தல் என்ற கிராமத்தில் பிறந்த தொண்டை நாட்டினர்.

தன் தவ வலிமையால் முக்காலமும் உணர்ந்தவர் என்று பலராலும் மதிக்கப் படுபவர், தஞ்சை பெரிய கோயில் கட்டுவதில் மன்னருக்கு முழு ஆதரவும் வழங்கியவர்.

சற்றே குள்ளமான உருவம். கூர்ந்து நோக்கும் கண்கள். உடல் முழுவதும் திருநீறு. இடுப்பில் ஒரு சிறு துண்டு. கழுத்தில் உருத்திராட்ச மாலை.

“இவர் ஏன் நம்மைத் தேடி வர வேண்டும். கோயில் விஷயத்தில் தமக்கு இருக்கும் தயக்கங்களைத் தெரிந்து கொண்டு விட்டாரோ?” வல்லவரையருக்கு சற்றே மனம் கலங்கியது.

“வர வேண்டும். வர வேண்டும். தாங்கள் ஏன் இச் சாமத்தில் இங்கு வர வேண்டும்?. சொல்லி அனுப்பி இருந்தால், நானே உங்கள் இடம் தேடி வந்திருப்பேனே.!” வல்லவரையர் உடல் தரையில் பட விழுந்து வணங்கினார்.

“நமச்சிவாயன் அருளால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உன் பெயரும், உன் மனைவியின் பெயரும் நிலைத்து நிற்கட்டும்” வாழ்த்தி திருநீறு பூசினார் பண்டிதர்.

“குந்தவை நலம் தானே?. தனியே இங்கு இந்த நேரத்தில் உலாவுவதேன். மனைவியிடம் சண்டையா வல்லவரையரே?”

“ஐயா. நான் ஒரு சிறு விஷயத்தில் கூட மனைவி சொல்லைத் தட்டாதவன். மன்னர் கட்டளையை விட மாதேவி குந்தவையின் சிந்தனைதான் என் சித்தம். அப்படி இருந்து விட்டால் சண்டை எப்படி வரும்? என் கலக்கம் எல்லாம் இந்த கோயிலைப் எப்படி பரமாரிக்கப் போகிறேம் என்று தான்”

கோயிலின் கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம் இப்போது ஏற்றப்பட்ட விளக்கில் பளபள வென்று ஒளி வீசியது. அதையே வெறித்து நோக்கினார்.

அவரும் குந்தவையும் செய்து கொடுத்தது.

இரண்டு ஆள் உயரம்.

2926.5 கழஞ்சு தங்கம் (14 கிலோ), 3083 பலம் (126 டன்) செப்பு என்று மூவேந்த வேளாளன் அளந்து குறித்துக் கொண்டான்.

கோபுரம் முழுவதையுமே தங்கத் தகட்டால் மூடும் வேலையும் தொடங்கி விட்டது.

“வல்லவரையரே. சிவ பெருமான் அருளால், இக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் நிலைத்து நிற்கும். சோழ நாகரிகத்தின் அடையாளமாக, நம் மக்களின் கலை உணர்வின் சின்னமாக விளங்கும் என்பதில் உமக்கு சந்தேகம் உண்டா?”

“ஐயா.. நான் படித்தவன் அல்ல. வாளும், வேலும் கொண்டு படை நடத்துவேன். பகைவர் தலை கொய்துவேன். அவ்வளவே நான் அறிந்தது. நானும், அருண்மொழிவர்மரும் பல இடங்களுக்கும் சென்று சுற்றி இருக்கிறோம். ஈழத்தில் பல இடங்களில் தகர்ந்து போய் விட்ட புத்த விகாரங்களை கண்டோம். வடக்கே, சாளுக்கிய தேசத்தில் பாதுகாப்பு அற்று போய் விட்ட சமண பள்ளிகளைக் கண்டோம். ஏன், நமது நாட்டிலேயே சிதைந்து போய் விட்ட திருமால் கோயில்கள் உள்ளனவே?”

“நல்ல கேள்வி தான் வல்லவரையரே. போரும், அழிவும் சோழ தேசத்துக்கும் வரும். நமது பகைவர்கள் மீண்டும் தலை தூக்கலாம். தஞ்சையும், பழையாறையும் பொலிவிழந்து போகலாம். அரண்மனைகள் யாவும் அழிந்து மண் மேடாகிப் போகலாம். ஆனால், இந்தக் கோவில் அழியாது. இது எல்லாக் கோவிலைப் போல இராசராசன் கட்டினான் என்று பெருமை அடைந்தாலும், இது ஒரு கூட்டு முயற்சி. இதற்கு உதவி செய்த எல்லோர் பெயரையும் இங்கு பதிக்கச் செய்து இருக்கிறான் இராசராசன். இதன் கட்டுமானம் ஒரு புதினம். இக்கோவிலின் அடிமான அமைப்பு மண் தொட்டியில் ஆடிக் கொண்டிருக்கும் தலை கவிழாத நம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்றது என்பது உமக்கு தெரியுமா?”

வல்லவரையர் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நீங்கள் சொல்வது நடக்க வேண்டும் பண்டிதரே. ஆனால் நாட்டு மக்களுக்கு புரிய வேண்டுமே?”

பண்டிதர் தலை அசைத்தார்.

“அன்றாட பிரச்சினைகளில் தலையை செலுத்தி, பல சின்னஞ்சிறு சிறு கதைகள் பேசி, மனம் வாடி, துன்பம் மிக உழன்று, கொடும் கூற்றுக்கு இரையான பின் மாயும் மனிதர்களுக்கு வேண்டுமானால் வீண் வேலையாகத் தெரியலாம்” பல வருடங்களுக்கு பின் வரப் போகும் ஒரு மகா கவியின் வரிகள் பண்டிதர் வாயில் இருந்து உதிர்ந்தன.

“ஆனால் இந்தப் பெரிய கோயில், பல தலைமுறைகள் தாண்டியும் வரப் போகும் நமது சந்ததியர்களுக்கு, நமது முன்னோர்கள் எதை எல்லாம் சாதித்தார்கள் என்பதை உணர்த்தி, அவர்கள் தளர்ந்து போகும் போதெல்லாம், ஊக்கமளிக்கும். உழைக்க வேண்டும், தழைக்க வேண்டும், படைக்க வேண்டும், பிறர் போற்றும் படி வாழ வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்”. பண்டிதரின் குரல் உயர்ந்து ஒலித்தது.

“வல்லவரையரே உமது மனம் இன்னும் ஆறவில்லை. நான் சொல்லுவதில் நம்பிக்கை வரவில்லை. நான் சித்து வேலைகளில் ஈடு படுவதில்லை. இருந்தாலும், உமக்காக ஒரு வேலை செய்கிறேன். என் ஈசன் அருளால், நான் பெற்ற தவ வலிமையால், உம்மை ஒரு பயணத்துக்கு அனுப்புகிறேன். கடல் கடந்து அல்ல. நேரம் கடந்து. இதே தஞ்சைக்கு. இன்றைக்கு சரியாக ஆயிரத்து எட்டு ஆண்டுகள் கழித்தும் இருக்கப் போகும் தஞ்சைக்கு உம்மை அனுப்புகிறேன்”

வல்லவரையரின் மனம் படபடத்தது.

முதன் முதலில், ஆதித்ய கரிகாலனின் ஓலையை எடுத்துக் கொண்டு வீராணம் ஏரியைக் கடந்து வந்தது நினைவுக்கு வந்தது.

ஆனால் எப்படி ஆயிரம் ஆண்டுகள் தாண்டிப் போக முடியும் என்று வியந்து நின்றார்.

“ஒரு கட்டளை. நீ யார் என்பதை யாருக்கும் சொல்லக் கூடாது. யாரிடமும் அதிகம் பேசக் கூடாது. வம்பு வேலைகளில் தலையிடக் கூடாது. பெரிய கோயில் எப்படி இருக்கிறது என்று மட்டும் பார்த்து விட்டு வந்து விட வேண்டும்.”

வல்லவரயையர் தலை அசைத்தார். கண்ணை மூடினார்.

பண்டிதர் சில மந்திரங்களை முணு முணுத்தார். திருநீறு எடுத்தது முகத்தில் ஊதினார். வல்லவரையருக்கு தலை சுழன்றது. மயக்கம் வந்தது போல் இருந்தது.

பண்டிதரின் முகத்தில் புன்னகை.

வல்லவரையர் எதிர்கால தஞ்சைக்கு வந்த சில நாழிகைளிலேயே, இராசராசனும், உலக மகா தேவியும் அங்கு எழுந்தருள்வார்கள் என்பதயும், அங்கு ஆளும் மன்னர் எடப்பாடி பழனிச்சாமியின் காவல் நிலையத்தில் வல்லவரையர் சிறைப் படப் போகிறார் என்பதையும் அவர் அறிந்துதான் இதைச் செய்தாரா என்று தெரியவில்லல.

  • தொடரும்

 

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள