வந்தியத்தேவர் வல்லவரையரும் எடப்பாடி பழனிச்சாமியும் – பாகம் 2

சிறைப்பட்டார் வந்தியத்தேவர்

 

முன்கதை – கட்டி முடிக்கப்பட்டு சில நாள்களே ஆகி இருந்த தஞ்சை ஆடவல்லான் கோயிலின் எதிர் காலத்தை எண்ணிக் கலங்கிப் போயிருந்த வந்தியத்தேவரை, ஈசான சிவ பண்டிதர் தன் தவ வலிமையால் ஆயிரத்து எட்டு வருடங்கள் கடந்து சென்று, தஞ்சை கோயிலின் தற்கால நிலைமையை பார்த்து வர அனுப்பி விடுகிறார். முதல் பாகத்தை படிக்க – https://wp.me/p8HWyD-h3

“ஏய் அங்க பாருடி..தேவர் மகன் கமலஹாசன் வந்துருக்காரு” இரண்டு பெண்கள் வந்தியத்தேவரை திரும்பிப் பார்த்து குசு குசுவென்று பேசிக் கொண்டனர்.

ஈசான சிவபண்டிதர் அவர் உருவத்தை காலத்துக்கேற்ப மாற்றி இருந்தார்.

ராம்ராஜ் விளம்பரத்தில் வருகிற மாதிரி தும்பைப் பூ போன்ற வேஷ்டி, வெள்ளை வெளேரென்ற சட்டை, தோளில் கரை பதித்த துண்டு, முகத்தில் இரு கன்னத்திலும் படர்ந்து  பார்ப்பவர்களை மரியாதையுடன் கை கூப்ப வைக்கும் மீசை.

தஞ்சைக்கு அவர் முதலில் வரும் போது இருந்த அரும்பு மீசை, இப்போது பழுவேட்டரையர் மீசை போல் பெரிதாகி இருந்தது.

குந்தவை திருமணத்துக்கு அவருக்கு அணிவித்த கை காப்பு, கால் கழல், ரத்தினக் கல் பதித்த தங்க கண்டிகை – அவைகளை வந்தியத்தேவர் ஒரு பொழுதும் கழற்றியதில்லை. அவை இப்பொழுதும் அவர் உடம்பில் இருந்தன.

நெற்றி முழுவதும் நேர்த்தியாக பூசப்பட்ட திரு நீறு.

வந்தியத்தேவர் தலை உயர்த்தி ஆடவல்லான் பெரு உடையாரின் கோபுரம் தென்படுகிறதா என்று மட்டுமே முதல் பல நிமிடங்களுக்கு பார்த்தார். தெரியாமல் மனம் கலங்கினார்.

தஞ்சையில் அன்று ஒரே கூட்டம்.

யாருடைய வருகையையோ எதிர்பார்த்து எல்லா இடங்களிலும் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர் நடந்து வருவதை பார்த்து, அவரை காட்டி  சிலர் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதை கவனித்தார்.

பேசிய மொழி தமிழ் என்றாலும் எதுவும் அவருக்குப் புரியவில்லை.

“தல.. இவரு மாவட்டமா.. வட்டமா!. முதலமைச்சர் கூட வந்திருப்பாரோ”..

“முட்டாப் பயலே. எனக்கு தெரியாத வட்டச் செயலாளர் நம்ம கட்சிலே யாரு இருக்கா? நெத்தியிலே பட்டயப் பார்த்தியா.. இது காவிக் கட்சி ஆளு!”

பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு அருகில் வந்தியத் தேவர் வந்து விட்டார்.

உடனேயே இருவரும் தங்களை அறியாமல் வேட்டியை இறக்கி விட்டு, துண்டை எடுத்து கைக்கு நடுவில் வைத்து கை எடுத்துக் கும்பிட்டனர்.

“ஐயா.. ஆடவல்லான் கோயிலுக்கு வழி சொல்ல முடியுமா?” அவர் காலத்தில் பெரிய கோயிலுக்கு அதுதான் பெயர். நாம் வைத்த பெயர்தான் பெரிய கோயில்.

“அப்படி இங்க எந்தக் கோயிலும் இல்லையே..” என்றது பெரிசு.

வல்லவரையரின் மனம் வாடியது.

பேருந்தோ, கார்களோ, மற்ற வாகனங்களோ அவரின் கவனத்தை ஈர்க்கவில்லை. மனம் முழுவதும் கோயிலைக் காண்பதிலேயே ஒருமித்து நின்றது.

கூட்டத்தில் ஒரு பரபரப்பு. எல்லோரும் முட்டி தள்ளிக் கொண்டு ஒரு பக்கமாய்ச் சென்றனர்.

“ஐயா.. என்ன நடக்கிறது”

“வெளியூரா நீங்க. இன்னிக்குதானே ராசராச சோழனையும், அவர் பொண்டாட்டியையும் இங்க அழைச்சுட்டு வாராங்க”..

வந்தியத் தேவர் கொஞ்சம் நிலை தடுமாறினார். மன்னரை ஏன் இங்கு அனுப்பினார் பண்டிதர்?.

மன்னருக்கு தெரிந்து போய் பண்டிதரிடம் வாதாடி, சாதித்து நம்மைத் தேடிக் கொண்டு வந்து விட்டாரோ?. ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இந்த மக்களுக்கு அவரைத் தெரிந்து போய் விட்டதா? அதனால் அவர் ஈழத்தில் இருந்து திரும்பி வரும் போது இதே தஞ்சை மக்கள் ஊர்வலமாய் தூக்கி வந்ததைப் போல் இப்போதும் நடக்கிறதோ!.

அவரும் கூட்டத்துடன் முண்டியடித்து முன்னேறினார்.

ஆ.. இது என்ன பல்லக்கு?. திருவாரூர் தியாகேச பெருமான் திரு வீதி உலா வரும் சப்பரம் போல் அல்லவா இருக்கிறது. இரண்டு சிலைகளை அல்லவா தூக்கிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால், திருப்பதிகம் ஓதுவாரைக் காணவில்லையே. வங்கியமும், எக்காளமும் முழங்கவில்லையே. உடுக்கை சத்தம் கேட்கவில்லையே. ஆடல் மகளிர் யாரும் ஆடிக் கொண்டு வரவில்லையே. அவர்கள் எல்லாம் இப்போது இல்லையோ.

சிலை ஊர்வலம் அவர் அருகில் வந்தது.

வந்தியத் தேவர் கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தார். அவரின் கண்கள் இன்னும் பெரிசாகி முழித்தன. ஆகா.. இது மூவேந்த வேளாளன் செய்து கொடுத்த செப்பு படிமங்கள் அல்லவா!!.

மன்னர் பணிவுடன் கை கூப்பி ஆட வல்லானை வணங்கும் நிலையை அப்படியே வடித்து இருந்தானே சிற்பி நித்த வினோத பெருந்தச்சன். அவை ஏன் சிவ பெருமானின் அருகில் இருந்து அகற்றப்பட்டன?. ஒரு போதும் ஆடவல்லானின் பார்வையில் மன்னர் இருந்து அகலக் கூடாது என்றல்லவா அவன் உத்தரவிட்டு இருந்தான்.

ஒரு வேளை கோயிலும் ஆவுடையாரும் இப்போது இல்லையோ.

சிலை ஊர்வலம் இப்போது அவரைக் கடந்து சென்றது. அவரும் கூட்டத்துடன் கலந்து சென்றார். கூட்டம் என்னவோ அவருக்கு விலகி வழி விட்டது.

சிறிது தொலைவில் ஒரு மேடையில் சிலைகள் இறக்கிப் வைக்கப்பட்டு இருந்தன. மேடையில் அவரைப் போலவே வெள்ளை வேட்டி சட்டையில் நிறைய பேர் அமர்ந்து இருந்தனர்.

அவர்களின் பின் புறம் நெற்றியில் திலகம் அணிந்து பச்சை சேலையை உடல் முழுவதும் போர்த்தியபடி ஒரு பெண்மணியின் சித்திரம் பெரிதாக வரையப்பட்டு இருந்தது. அதே சித்திரம் பல இடங்களிலும் இருந்ததை பார்த்தார். அம்மா என்ற வார்த்தையையும் படிக்க முடிந்தது.

மேடைக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டார். கை கூப்பி சிலை இருந்த பக்கம் வணங்கினார். கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

வல்லவரையருக்கு கோயிலைக் காண முடியாத ஏக்கம் வளர்ந்து கொண்டே வந்தது.

இன்று திருவாதிரை நட்சத்திரம். குந்தவையுடன் கோயில் இரவு நேர பூசைக்கு சென்று ஆவுடையாருக்கு புதிய நிவந்தங்கள் அளிக்க வேண்டும் என்று மனைவியின் சித்தம். எப்படி இங்கிருந்து ஆயிரம் வருடங்கள் திரும்பிப் போகப் போகிறோம்?. சிவ பண்டிதரை கேட்காமல் வந்து விட்டோமே. வல்லவரையரின் பொறுமை குறைந்து கொண்டே வந்தது.

பக்கத்தில் இருந்தவரை தோளில் தட்டி – “பெரியவரே. இந்த விழாவை ஏன் கோயிலுக்குள்ளேயே வைத்துக் கொள்ளவில்லை? கோயில் இன்னும் இருக்கிறதல்லவா?” என்றார்.

“எந்த ஊரு.. விஷயம் புரியாத ஆளா இருக்கீறே? முதலமைச்சர் கோயிலுக்குள்ளே போனா, ஆட்சியே போயுருமே..எந்த முதலமைச்சரும் கோயிலுக்குள்ள போனதில்லையே”.

வந்தியத் தேவருக்கு இதைக் கேட்டவுடன் கோயில் இன்றும் இருக்கிறது  என்று ஒரு பக்கம் பெரு மகிழ்ச்சி.. மறு பக்கம் பலத்த கலக்கம். கோயிலினால் ஆட்சிக்கு ஆபத்தா? இது எப்போதிலிருந்து? சோழ நாட்டுக்கு நாம் பயப்படும்படி இந்தக் கோயிலினால் ஆபத்து வந்து விடுமா?

மேடையில் இருந்து பேசும் குரல் ஒலிக்க ஆரம்பித்தது.

பல பேர் மேடையில் எழுந்து நின்று ஒருவர் பின் ஒருவராய் பேசியது தெரிந்தது.

“அம்மா, புரட்சித் தலைவி, இதய தெய்வம்” என்று அவர்கள் சொன்ன போதெல்லாம் பெரிய கை தட்டல் எழுந்தது. “முதலமைச்சர்” என்று சொன்ன போதும் அதே கை தட்டல். “துரோகி மன்னார்குடி கூட்டம்” என்று பேசிய போது “தினகரன் ஒழிக” என்று குரல் எழுந்தது.

வந்தியதேவருக்கு பொறுக்க முடியவில்லை. கோயிலையும் இன்னும் பார்க்கவில்லை. மன்னர் சிலையை மேடையில் வைத்துக் கொண்டு அவரின் பெயரைக் கூட அதிகம் சொல்லுவாரில்லை.

“பரகேசரி உடையார் தேவர் வாழ்க. பொன்னியின் செல்வர் வாழ்க” என்று முழங்கினார்.

கூட்டம் அவரைப் பார்த்து “யாரு இந்தப் பெரிசு.? குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் கூட்டத்துக்கு அள்ளிட்டு வரும்போது என்ன செய்யணும்னு சொல்லிக் கொடுக்கலையா? கேசரி வடைன்னு கூவுது?”

“முதலமைச்சர் பழனிச்சாமி வாழ்க” என்ற பலத்த கூச்சலுக்கு நடுவே ஒருவர் பேச எழுந்தார். புரியாத குட்டிக் கதை ஒன்றைச் சொன்னார். கூட்டம் அதற்கும் கை தட்டியது “துரோகி தினகரன் ஒழிக” என்று சில பேர் கூவினார்கள்.

“வட நாட்டிலே ஏதோ ஒரு ஊரிலே, ஒரு கண்காட்சியிலே, சிறை வைக்கப்பட்டிருந்த ராசராச சோழனையும், அவர் மனைவியையும் மீட்டேடுத்து இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியோடு இங்கே கொண்டு வந்து விட்டோம்” என்று அவர் தூய தமிழில் பேசியதும் வந்தியத் தேவருக்கு ஆத்திரம் எல்லை கடந்து விட்டது.

“நிறுத்து…” இடி போல் அவர் குரல் கூட்டத்தின் சலம்பலை மீறி ஒலித்தது. “இராஜராஜ சோழ தேவரை யாரால் சிறை பிடிக்க முடியும். சோழ குல தெய்வம் செம்பியன் மாதேவியின் ஆசி பெற்றவருக்கு இதய தெய்வம் அம்மாவின் ஆசி எதற்கு? உளறுவதை நிறுத்திக் கொள்”

மேடையில் இருந்தவர்களுக்கு  அவர் பேசியது கேட்டிருக்க வேண்டும். எங்கிருந்து வருகிறது என்று பார்த்தார்கள்.

சீருடை அணிந்த பத்து இருபது பேர் அவரை நோக்கி ஓடி வந்தார்கள்.

அவரைக் கூட்டமாகச் சூழ்ந்து தூக்கிக் கொண்டு ஒரு ஓரமாய் நிறுத்தப்பட்டு இருந்த காவல் வாகனத்தில் ஏற்றி உட்கார வைத்தனர்.

மேடையின் அருகில் இருந்து ஒரு உயரதிகாரி ஓடி வந்தார்.

“யாருய்யா இந்த ஆளு?. இவரை ஏன் மேடைகிட்டே வர விட்டிங்க? மேலிடத்திலே பெரிய கடுப்பு. இவர் தினகரன் குருப்பா இருந்தா கேஸ் போட்டு உள்ள தள்ளனும்னு கண்டிப்பு.”

“சார்.. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கலாம். இங்க கூட்டம் கூடிரும். அவங்க ஆளுங்க வந்துருவாங்க.”

வந்தியத்தேவருக்கு அந்த வாகனம் புதிதாகத் தெரியவில்லை. இதே மாதிரி மூடப்பட்ட வண்டி ஒன்றில்தான் தன்னை ஆதித்திய கரிகாலனின் மரணத்துக்கு பிறகு தஞ்சைக்கு கொண்டு சென்றது நினவுக்கு வந்தது.

“வேண்டாம்யா… அங்கயும் அவங்க வருவாய்ங்க..கோயிலுக்கு உள்ளே போய் லெப்ட்ல திரும்பினா ஒரு சின்ன museum இருக்கு. அங்க நல்ல நாள்லேயே யாரும் வர மாட்டாங்க. அங்க கொண்டு போய் வை. வெளில இரண்டு பேரைப் போடு. முதலமைச்சரைப் அனுப்பிட்டு அங்க வந்து விசாரிக்கறேன். பெரிசு எங்கயும் போகாம பார்த்துக்கோ”

அந்த அதிகாரி வரலாறு  படித்தவர். மதுரை சொந்த ஊராக இருந்தாலும், சோழ மன்னர்களைப் பற்றி தெரிந்து வைத்தவர். தஞ்சைப் பெரிய கோயிலின் அருமை தெரிந்தவர்.

“இவர் கேட்டதுலே என்ன தப்பு! அந்த கரை வேட்டிக் கழிசடைகளுக்கு அருண் மொழி வர்மர்னா யாருன்னாது தெரியுமா? இல்ல சரியா உச்சரிக்க  கூட  முடியுமா? இவங்க கட்டற பஸ் ஸ்டாண்ட் இடிந்து விழுது, விமான நிலையம் கண்ணாடி உடையுது. ஆயிரம் வருஷம் தாண்டியும் இன்னும் அப்படியே இருக்கு இந்த பெரு உடையார் கோயில். திருட்டு பயலுக. பேசறது என்னவோ பகுத்தறிவு. வாழ்வில் தோல்வியே காணாதவன் கட்டின கோயிலுக்குள்ள போனா ஆட்சி போயிடுமாம்.. தூ!! பேடிப் பதர்கள்! பாரதி இல்ல இப்ப.. ” என்று மனதுக்குள் பேச நினைத்து வாய் விட்டே கூறி விட்டார்.

அவர்கள் தன்னைக் ராஜராஜீஸ்வரம் கோயிலுக்கு உள்ளே கொண்டு போகப் போகிறார்கள் என்று தெரிந்ததும் வந்தியத் தேவருக்கு உற்சாகம் பிறந்து விட்டது. ஆடவல்லானைப் பார்க்கப் போகிறோம். மேரு மலை போன்ற உயர்ந்த கோபுரத்தைக் காணப்  போகிறோம். தானும் குந்தவையும் அமைத்ததுக் கொடுத்த கலசத்தை வணங்கப் போகிறோம். அந்தக் கோயிலுக்குள்ளேயே நாம் சிறை வைக்கப் படப் போகிறோம் என்பதை எண்ணி வந்தியத்தேவருக்கு மகிழ்ச்சியே மேலோங்கியது.

“சீக்கிரம் வண்டியை ஒட்டுங்கள். கோயில் உச்சி காலைப் பூஜை முடிந்து விடப் போகிறது” என்று குரல் கொடுத்த வந்தியத் தேவரை ஆச்சரியத்துடன் பார்த்து அவருடன் இரண்டு காவலர்கள் பின்னால் ஏறிக் கொள்ள, வண்டி கோயிலை நோக்கி சென்றது.

அந்த அதிகாரிக்கு வந்தியத் தேவர் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அதிகாரி தொப்பியைக் கழற்றி தன் கர்சிப்பை எடுத்து தலையை துடைத்து, பின் தலை தாழ்த்தி வணங்கித் தன் கண்களையும்  துடைத்துக் கொண்டார்.

வாகனம் சிரிது நேரத்தில் கேரளாந்தகன் வாயில் வழியே இராஜராஜீஸ்வரம் கோயிலுக்குள் நுழைந்தது.

(முன்னால் இராஜராஜன் வாயில் – பின்னால் கேரளாந்தகன் திருவாயில் – கோயில் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம். )

  • தொடரும்

 

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள