வந்தியத்தேவர் வல்லவரையரும் எடப்பாடி பழனிச்சாமியும் – பாகம் 3

பாகம் 3 – ஓடாதே குந்தவை!!.ஓடாதே நில்!!

முன்கதை – கட்டி முடிக்கப்பட்டு சில நாட்களே ஆகி இருந்த தஞ்சை ஆடவல்லான் கோயிலின் எதிர் காலத்தை எண்ணிக் கலங்கிப் போயிருந்த வந்தியத்தேவரை, ஈசான சிவ பண்டிதர் தன் தவ வலிமையால் ஆயிரத்து எட்டு வருடங்கள் கடந்து சென்று தஞ்சை கோயிலின் தற்கால நிலைமையை பார்த்து வர அனுப்பி விடுகிறார்.

ஆயிரத்து எட்டு வருடங்களைத் தாண்டி தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வந்தியத்தேவர், கோயிலைக் காண முடியாமல் திகைத்துக் கொண்டு நிற்கையில், ராஜராஜ சோழனின் செப்பு படிமங்களை தஞ்சைக்கு திருப்பிக் கொண்டு வரும் விழாவின் கூட்டத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கு மேடையில் பேசிய பேச்சு, அவருக்கு ஆத்திரம் அளிக்க, குறுக்கிட்டு பேசி விடுகிறார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோயிலுக்குள்ளேயே அனுப்பி வைக்கப்படுகிறார்.

காவல் வண்டியின் பின் புறத்தில் உட்கார வைக்கப் பட்டிருந்த வந்தியத்தேவருக்கு, வண்டி கேரளாந்தகன் வாயிலைக் கடந்து உள்ளே சென்ற பின்தான், ராஜராஜீச்வரத்துக்குள்ளே நுழைந்து விட்டோம் என்று தெரிந்தது.

“ஓம் நமச்சிவாய” என்று மூன்று முறை உரத்து முழங்கினார்.

தரைக்கு மேல் நாப்பது அடி உயரத்தில், பன்னிரண்டு சதுர அடி குறுக்குவெட்டு அளவில், குஞ்சரமல்லன் தூக்கி நிறுத்திய இரண்டு தூண்கள் தாங்கிப் பிடித்த கேரளாந்தகன் வாயில்.

வாயிலைக்  காவல் காத்துக் கொண்டு நின்ற,  பதினெட்டு அடிக்கும் மேலாக  ஒரே கல்லால் செய்யப்பட்டு, ஒரு யானையை பாம்பு விழுங்க, அந்தப் பாம்பை  புழு போல் காலால் மிதித்துக் கொண்டு கம்பிரமாக உயர்ந்து நின்ற தூவார பாலகர்களிடம், “நான் உள்ளே செல்ல அனுமதியுங்கள்” என்று மனதார வேண்டிக் கொண்டார். அந்த சிற்பம் சொல்லும் பதிகத்தை வாய் விட்டு உரத்துக் கூறிக் கொண்டே வந்தார். 

புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்;

கிளி சேர் மொழி மங்கை தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்;

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த கரிய மிடற்றர்,

செய்யமேனி; கயிலை மலையாரே.

 • திருஞானசம்பந்தர்

வண்டி வலது புறமாய் திரும்பி கோயிலின் வடக்கு வாசலை நோக்கி சென்றது.

“இறங்குங்க பெரியவரே” என்று காவலர்கள் கை பிடித்து இறக்கி விட்டார்கள். அவரைப் பிடித்த கைகள் வலித்தன.

வண்டியில் இருந்து இறங்கிய வந்தியத் தேவர் நெடுஞ்சாண்கிடையாக கோபுரத்தை நோக்கி விழுந்து கிடந்தார். வாய் அடுத்து ஒரு  பதிகத்தை சொல்லிக் கொண்டே இருந்தது.

அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள்

விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப

வரமலி வாணன் வந்து வழி தந்து எனக்கு ஏறுவதோர்

சிரமலி யானை தந்தான், நொடித்தான் மலை உத்தமனே.

 • சுந்தரர்

சுந்தரர் கயிலாயத்துக்குச் செல்ல, வருணன் யானை கொடுத்த பதிகம். அங்கே சுந்தரருக்கு யானை, இங்கே வந்தியத்தேவருக்கு காவல் துறை வாகனம்.

காவலர்கள் இருவரும் அவரைத் தூக்கி நிறுத்தி, அருங்காட்சியகத்துக்குள்ளே கொண்டு சென்றனர். அவர் அதன் வாசலிலேயே நின்று கோயிலின் வடக்கு பாகம் முழுவதையும் கண்டு களித்தார்.

கோயில் நிறையவே மாறி இருந்தது. தங்கத் தகடுளைக் காணோம். சிற்பங்கள் சிலவற்றைக் காணவில்லை. புதிதாக இரண்டு சிறு கோயில்கள் முளைத்து இருந்தன.

ஆடவல்லானின் உச்சி கால பூசை மணி அடித்தது அவர் காதில் இன்பமாக ஒலித்தது. அவரை மறித்து நின்ற இரு காவலர்களையும் அடித்து போட்டு விட்டு கருவறை நோக்கி ஓட முடிவு செய்தார்.

உள்ளிருந்து – “வந்தியத்தேவரே. உமக்கு ஒரு விஷயம் தெரியுமா?.” என்று யாரோ பேசிக் கொண்டிருந்தது  காதில் விழுந்தது.

திடுக்கிட்டு திரும்பியவரின் கண்கள் அங்கு இருந்த சித்திரத்தை கண்டு விரிந்து நிலைக் குத்தி நின்றன.

இன்னும் அருகில் சென்று,  அந்தச் சித்திரத்துடன் பேசி கொண்டிருந்தவரின் முதுகுப் பின் வந்து நின்று அந்தச் சித்திரத்தை உற்று நோக்கினார்.

ஒரு புறம் அவரும், மறு புறம் சேனாதிபதி கிருஷ்ணன் ராமனும்.

அருகில் இருந்த இன்னொரு சித்திரத்தில் அருண்மொழிவர்மர், அவர் பின்னால் அவர் மனைவியர் மூவர் – உலகமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமானவல்லி.

நடுவில் ஆடவல்லானின் திருவுருவம்.

வந்தியத்தேவர் இந்தச் சித்திரம் இன்னும் வரையப்படவில்லையே. கருவறையின் வெளிட்புறச் சுவரில் ஓவியர் வாகீசன் சில ஓவியங்கள் வரைந்து வருகிறார் என்றும், அதற்குள் நுழைய மன்னருக்கே இன்னும் அனுமதி இல்லை என்றும் கேள்விப்பட்டிருந்தார். அந்த சித்திரம் இங்கு ஏன் இருக்கிறது?

அவருடைய உடையைப் பார்த்து அவருக்கே சிரிப்பு வந்தது. உரக்கவே சிரித்துவிட்டார். மெய்காப்பாளர் உடையில் இருவரும். ஓவியரின் குறும்பு.

“வாருங்க பெரியவரே. நீங்கதானே கூட்டத்துக்கு நடுவிலே முழங்கினது?” என்று திரும்பி வணக்கம் சொன்ன மனிதரை உடனேயே வந்தியத்தேவருக்கு பிடித்து விட்டது.

“சோழர் கால ஓவியம். கோயில் கருவறைச் சுவரில் இருப்பதின் நகல். இந்த ஓவியத்துலே இருக்கிற  வந்தியத் தேவரும் என்ன மாதிரி ஒரு போர் வீரர். அவர்கிட்டே இன்னிக்கு நீங்க முழங்கினத சொல்லலாம்னு ஆரம்பிச்சேன். நீங்களே வந்துட்டிங்க!”

“நானாக வரவில்லை ஐயா. இங்கே என்னை சிறைப் பிடித்து வைத்து இருக்கிறார்கள். அதிகாரி வருவார், விசாரணை சீக்கிரம் ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன். நான் அப்படி பேசி இருக்க கூடாது. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டேன்”

“ச்சே ச்சே.. நீங்க கேட்டது சரிதான். அங்க பேச வந்தவங்க இங்க வந்திருந்தா, இந்தக் கோயிலைப் பத்தி கொஞ்சம் சொல்லியிருப்பேன். அப்படி உளறிக் கொட்டிருக்க வேண்டாம்” என்றவரின் கை இரண்டையும் வந்தியத்தேவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“ஐயா..உங்களுக்கு இந்தக் கோயிலைப் பத்தி தெரியுமா? சோழ மன்னர்களின் வரலாறு தெரியுமா? எனக்கு கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன். உங்களைப் பற்றியும் சொல்லுங்கள்” வினயத்துடுடன் வேண்டினார்.

“ஐயா, நான் ஒரு இராணுவத்தான். Infantry division. நல்ல தமிழ்லே சொல்லனும்னா காலாட்படை வீரன். வடக்கிலே சில போர்களிலும், ஈழத்து போரிலும் சண்டை போட்டிருக்கேன். சோழ நாட்டான். காவேரித் தண்ணி குடிச்சு வளந்தவன். இந்த கோயில்லே, இந்த இடத்தை பாத்துக்கிட்டு இங்க வரவங்களுக்கு இந்தக் கோயிலைப் பத்தி எடுத்துச் சொல்ற வேலை இருக்குன்னாங்க. உடனே வந்துட்டேன்”

வந்தியத்தேவர் அவரைக் குனிந்து வணங்கினார். “படை வீரரே! கொஞ்சம் விவரமாகவே சொல்லுங்கள். ஆயிரம் வருஷத்து வரலாற்றைச் சொல்லுங்கள். வந்தியத்தேவர் என்று கூறினிர்களே அவர் யார்” என்று முகத்தில் ஒரு கேலிச் சிரிப்புடன் கேட்டார்.

“எந்த வரலாற்றை சொல்றது? இந்தக் கோயிலே ஒரு வரலாற்று ஆவணம்தான். சொல்லப் போனா இது கோயிலே இல்ல. இது ஒரு கலைக் கூடம், சிற்பக் கூடம், ஒரு வங்கி, ஒரு மகத்தான  நாகரிகத்தின் அடையாளம், தமிழ் நூலகம். இதோ பாருங்க. உங்க ராஜராஜன், இதுக்கெல்லாம் ஆரம்பம் இவன்தான்” என்று தாடியுடன் கை கூப்பி நின்றிருந்த மனிதரை பாசத்துடன் நோக்கி சுட்டிக் காட்டினார்.

“அப்ப நீங்க பேசிக் கொண்டிருந்த வந்தியத்தேவர்?”

“அவர் இவரோட நண்பர் Friend. அத விட குந்தவைன்னு ஒரு மகத்தான பெண்ணை மணந்து கொண்ட அதிர்ஷ்டக்காரர்.” என்று சித்திரத்தில் இருந்த வந்தியத்தேவரின் உருவத்தை செல்லமாக தட்டிக் கொடுத்தார்.

வந்தியத்தேவர் வாய் விட்டுச் சிரித்து விட்டார்.

“அது சரி.!! அவரை விடுங்கள். கோயிலைப் பற்றிப் பேசுவோம். ஐயா, இது ஏன் கோயிலே இல்லையென்று சொல்லுகிறிர்கள்?”

“தமிழ் நல்ல சுத்தமாப் பேசறிங்க. சோழ மன்னர்கள் எவ்வளவோ கோயில்கள் கட்டினாங்க. அவங்க காலம் ஒரு பொற்காலம். என்னைக் கேட்டா, அதற்கு முன்னாலும் பின்னாலும் அப்படி ஒரு ஆட்சி இங்க வரவேயில்ல. இவர் மகன் ராஜேந்திரச் சோழன், இதை விட அழகா, அற்புதமான சிலைகள் உள்ள ஒரு கோயிலைக் கட்டினான். அவரோட மகள் வயித்துப் பேரன் குலோத்துங்கன் – அவனும் சளைத்தவனில்லை. இராசராசனுக்கு பின் நூறு வருடங்களுக்கு மேல் கழித்து வந்த இரண்டாம் இராசராசன் கட்டின தாராசுரம் கோயிலுக்கு போய்ப் பாருங்க. மகத்தான  சிற்பக் களஞ்சியம். ஆனா அதெல்லாம் கோயில். இதுதான், இது ஒண்ணுதான்  பெரிய கோயில்”

வந்தியத்தேவரின் கண்கள் விரிந்தன.

“ஐயா.. இன்னும் கொஞ்சம் விவரமா சோழர் வரலாற்றை சொல்லுங்களேன்” எதிர் காலத்தை தெரிந்து கொள்ளும் ஆசை யாருக்குத்தான் இல்லை?

“பெரியவரே… மன்னர்கள் வருவாங்க போவாங்க. ஆட்சிகள் மாறும். அதுவா வரலாறு? எத்தனையோ மன்னர்கள் இராசரானுக்கு முன்னாலும் பின்னாலும் இருந்துருக்காங்க. அவங்களும் கோயில்கள் கட்டினாங்க. அதெல்லாம் மன்னர்கள், கடவுளுக்காக கட்டின கோயில்கள். இது மட்டும்தான் ஒரு மன்னன், தன் மக்களுக்காக, எல்லோரையும் கூட்டு சேர்த்து கட்டின ஒரு கலைக் கூடம், சமுதாய முன்னேற்ற நிலையம்.  சோழ தேசம் முழுவதும் இதனால் பயன் பெற வேண்டும், ஓன்று பட வேண்டும்னு நினைச்சு செஞ்சது”

வந்தியதேவருக்கு எதிர்காலம் தெரிந்து கொள்ள முடியாத ஏமாற்றம் ஒரு புறம். ஆனால் கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் மேலோங்கியது.

“அப்படி என்ன சிறப்பு இங்க?”

“இந்த உயர்ந்த கோபுரம், அதன் மேல் உள்ள கல், கலசம் – ஆவுடையாரை உள்ளே வைத்து விட்டு அதன் மேல் கட்டிய ஒரு அதியசம். கல்லே இல்லாத இந்த இடத்துலே எங்கிருந்தோ கற்களைக் கொண்டு வந்தது, ஒரே கல்லால் ஆன எண்பது அடி நிலைத் தூண்களை நிப்பாட்டியது, மழை நீரை சேகரித்தது.. இதெல்லாம் சிறப்புன்னு சில பேர் சொல்லுவாங்க. ஆனால் அதெல்லாம் நான் சொல்ல வரலே”

“அப்ப செல்வத்துலே சிறந்ததா?” மன்னர் ஆடவல்லானுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும் நிவந்தங்கள் அவர் நினைவில் வந்தன

“கொஞ்சமா இருந்தது? எவ்வளவு நிலம்! எவ்வளவு நகை! வைரம், பவளம், மாணிக்கம், வெள்ளி – ஒரு வருடத்துக்கு மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சத்துப் பதினையாயிரம் கலம் நெல்லும் (அறுபதாயிரம் மூட்டை), 300 கழஞ்சுப் (ஒன்றரைக் கிலோ) பொன்னும், 2000 காசுகளும் நிரந்தர வருமானமா கிடைக்க ஆவன செய்தான். ஆனா அதெல்லாம் போயிருச்சே. அதெப்படி சிறப்புன்னு சொல்ல முடியும்?”

வந்தியத் தேவரின் மனம் வாடியது. ஆனால், அந்த செல்வம் எல்லாம் சோழர்கள் தோற்கடித்த மற்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்தவைதானே என்பதும் அவருக்கு உரைத்தது.

“அப்ப ஏன் இதை பெரிய கோயில்னு சொல்றோம்?. பெரிய கோபுரம் இருக்குன்னா? இல்லவே இல்லை.  முதல் சிறப்பு, இந்த ராசாராசன் செஞ்சது. .

நாம் கொடுத்தனவும்,

நம் அக்கன் கொடுத்தனவும்,

நம் பெண்டுகள் கொடுத்தனவும்,

கொடுப்பார் கொடுத்தனவும்

இந்த கல்லிலே வெட்டி அருள்க.”

அப்படின்னு கல்வெட்டுலே பதியச் சொன்னான். அப்படி எழுதின ஒரே மன்னன் அவன்தான். கோயில் அடித்தளத்திலே போட்ட ஒவ்வொரு கல்லிலேயும், இந்தக் கோயிலுக்கு கொடுத்த எல்லார் பெயரையும் கல்லுக்கு ஒண்ணா எழுதச் சொன்னான். இங்க வேலை செய்யற எல்லாரோட பெயரையும் குறிச்சு வைக்க செய்தான். கோயில் அதிகாரி, பூசாரி,  பதிகம் பாடுவோர் நாப்பத்தெட்டு பேர், நட்டுவனார் ஏழு பேர், நானுறு நாட்டியம் ஆடும் பெண்கள், ஏன்.. முடி திருத்தற நாவிதன் பெயரைக் கூடப் போடுன்னான்… இப்ப பாருங்க எல்லாத்துலேயும் அம்மா பேரு. வரலாற்றை ஒழுங்கா படிச்சு இருந்தா, ஒரு நல்ல ஆட்சியாளனா எப்படி இருக்கணும்னு இப்ப இருக்கறவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.”

வந்தியத் தேவரின் உள்ளம் பெருமிதத்தால் துள்ளியது.

“கோயிலை நிர்வாகம் செய்யறதுக்கு சோழ நாட்டுலே இருந்த நூற்றிப் பத்து சபைகளில் இருந்தும் ஒருத்தரை தேர்ந்தேடுத்து அனுப்புன்னான். கோயிலுக்கு மிளகு, காய்கறி, பழம் – இப்படி ஒவ்வொரு சாமானுக்கும் ஒரு தொகைய நிர்ணயம் பண்ணி, அதை வணிகர்கள்கிட்ட கொடுத்து, அதற்கு பன்னிரெண்டு சதவிகிதம் வட்டி வச்சு, வட்டிக்கு பதிலா அதைக் பொருளா கொடுக்கணும்னு முடிவு பண்ணினான். மக்களுக்கு ஆடு, மாடு கொடுத்து அதை அவங்களும் அவங்க சந்ததியாரும்  அனுபவித்து,  அவங்க கோயிலுக்கு பாலும், நெய்யும் சூரிய சந்திரர் இருக்கும் வரைக்கும் கொடுக்கணும்னு எழுதி வாங்கினான். நிலத்தை துல்லியமா அளந்து, இவ்வளவு மரக்கால் – ஆடவல்லான் மரக்கால்னே பேரு –   நெல் கொடுக்கணும்னு கணக்கு வச்சான். இது அதிசயம் இல்லையா? எல்லாத்தையும் இலவசமா கொடுத்து, மக்களை கெடுத்து வைக்கற கூட்டத்துக்கு இது புரியவா போகுது?”

வந்தியத்தேவர் தன் கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்து கொண்டார்.

“ஆனா இராசராசனை விட அவன் அக்கா குந்தவை இன்னும் பெரிய மனுஷி. ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவைரையர் வந்தியதேவர் மாதேவர் மாதேவியார், உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார், ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார்  என்று ஒவ்வொரு கல்வெட்டும் அவள் பெருமையை சொல்லிட்டு இருக்கு. அதனாலே தான் தான் கொடுத்ததுவும்னு சொல்லிட்டு, உடனையே தான் அக்கா (அக்கன்) கொடுத்ததுவும்னு போடச் சொன்னான் அருண்மொழிவர்மன்” மன்னனின் பெயரை பாசத்துடன் உச்சரித்தார்.

வந்தியத் தேவரின் முகம் குந்தவையின் பெயரைக் கேட்டவுடனேயே  மலர்ந்தது.

“கொடுத்து வச்சவன்தான் அந்த வல்லவரையன்.. அப்படி என்னதான் கொடுத்தார்கள் அந்தக் குந்தவை” என்று வல்லவரையர் கேட்டுக் கொண்டிருக்கும் பொது வெளியே

“குந்தவை ஓடாதே நில்லு. ஓடாதே குந்தவை ஓடாதே” என்று ஒரு ஆண் குரலும், கூடவே ஒரு பெண் குரலும் கேட்டது.

வந்தியத் தேவருக்கு மனம் பரபரத்தது. குந்தவை ஏன் இங்கு வந்தாள். வந்து நம்மைப் போலவே ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டாளோ. எப்படி இங்கிருந்தது தப்பிச் செல்வது. எப்படி குந்தவையை காப்பாற்றுவது என்று யோசிக்க தொடங்கினார்.

 • தொடரும்

____________________________________________________________________________

மேற்கோள்

 1. இராஜஜராஜேஸ்வரம் – குடவாயில் பாலசுப்ரமணியன்
 2. பிற்கால சோழர் சரித்திரம் – சதாசிவ பண்டராத்தார்.
 3. சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி
 4. ஒவியத்தில் இருப்பது மெய்காவல் படையினர் – மற்றது என் கற்பனை.
 5. வந்தியதேவேர் போலவே அந்த படை வீரரும் உண்மை கதாபாத்திரேமே
 6. சோழர் கால சிலைகள், சித்திரங்கள் – பலவற்றின் கற்பனை தேவராப் பாடல்களில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் இந்த கோயிலின் சிற்பங்களை வருணித்து  வைத்து பல பாடல்கள் எழுதியுள்ளார்.
 7. கணபதிக்கு தினந்தோறும் 150 வாழைப் பழம் படைக்க 360 காசுகள் மூலதனமாக வைத்தான் என்று கல்வெட்டு எண் 37 கூறுகிறது. ஒரு காசுக்கு 1200 வாழைபழம். கணக்கு போட்டு பார்த்தால் – 12.5 சதவிகிதம் வட்டி.
 8. கோயிலுக்கு ஒரு உழக்கு நெய் தினசரி கொடுக்க, ஒரு குடும்பத்துக்கு 48 பசுக்களோ அல்லது 16 எருமைகளோ கொடுக்கப்பட்டன. (கல்வெட்டு எண் 63,64,94,95)
 9. அற்புதாமான சோழர் காலத்து சித்திரம் – கோபம், சிரிப்பு இரண்டும் காட்டும் காட்டும் திரிபுரந்தாகர் –
Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள