வந்தியத்தேவர் வல்லவரையரும் எடப்பாடி பழனிச்சாமியும் -பாகம் 4

பாகம் 4 – சர்வாதிகாரி குந்தவை

குந்தவையின் பெயரைக் கேட்டபின், வந்தியத்தேவர் உள்ளம் வேகமாக வேலை செய்யத் தொடங்கியது. அதே நேரத்தில், ஆடவல்லானின் கருவறை மணி அடிக்கும் ஓசையும் வலுத்தது. அந்த மணி ஓசை வந்த திசையிலேயே குந்தவையை அழைத்த குரல்களும் வந்ததை கவனித்த வந்தியத்தேவர்,  படை வீரரின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

“ஐயா.. என்னை விசாரிக்க அதிகாரி வரும் முன் இராஜராஜீஸ்வர உடையாரை, தஷிண மேரு விடங்கரை ஒரு முறை வணங்கிட்டு வந்து விடுகிறேன். கண்டிப்பாக தப்பிச் செல்ல மாட்டேன். இங்கிருந்து கோயிலுக்கு செல்வதற்கு வேறு வழி இருக்கிறதா?” என்று கொஞ்சலுடன் கேட்டார்.

“கொஞ்சம் இங்கேயே இருங்கள்” என்று வந்தியத்தேவரின் கைகளிருந்து விடுவித்துக் கொண்டு அந்த இரு காவலர்களும் என்ன செய்கிறார்கள் என்று போய் பார்த்தார். கொஞ்சம் தள்ளி இருந்த புல் தரையில் அவர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் கவனம் இங்கு இருந்ததாகத் தெரியவில்லை.

உள்ளே சென்றவர், வந்தியத்தேவரை அருகில் அழைத்து “திருச்சுற்று மாளிகைக்கு இங்கிருந்து இன்னொரு வழி இருக்கிறது. மாளிகையின் ஒரமாகவே நடந்து கோயிலைச் சுற்றிக் கொண்டு தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்து விடுங்கள். சட்டையை கழட்டி கையில் வைத்துக் கொண்டு, துண்டை வைத்து உடம்பை மூடிக் கொண்டு போங்கள்” என்றார்.

“நன்றி படை வீரரே.. நான் கண்டிப்பாக திரும்பி வந்து விடுவேன். உங்களை காவல் அதிகாரியுடன் பிரச்சினையில் மாட்டி விட மாட்டேன்” என்று கையில் அடித்து கூறி விட்டு “உங்கள் பெயரைச் சொல்லவே இல்லையே” என்று கேட்டார் வந்தியத்தேவர்.

“என் பெயர் திருமலை” என்றவரை அணைத்து கொண்ட வந்தியத்தேவர் “எனக்கு அதே பெயரில் ஒரு உற்ற நண்பன் ஒருவன் உண்டு. மீண்டும் சந்திப்போம்” என்று  சட்டையை கழட்டி அவர் கையிலேயே கொடுத்து விட்டு திருச் சுற்று மாளிகை வழியே ஓடினார்.

அந்தப் பிரகாரத்தில் இருந்த சோழர் கால கணபதியும், நந்தியும் அவர் கவனத்தை ஈர்த்தாலும், கருவறைக்குள் குந்தவை இருக்கலாம் என்ற எண்ணம் அவரை எங்கும் நிற்க விடாமல் விரட்டியது.

நேராக ஆடவல்லானின் முன் வந்து அவர் நிற்கவும், மணி ஓசை முழங்கியது. இயந்திர மேளம் வலுத்தது. அங்கு கூடி இருந்த சின்ன கூட்டத்தில் இருந்து – “ஓம் நமச்சிவாய” என்ற கோஷம் எழுந்தது. கோயிலில் தற்போது மிஞ்சி இருந்த ஒரே ஒரு எக்காளமும் பிளிறியது.

வந்தியத் தேவர் ஆடவல்லானை தரையில் இருந்து துவங்கி ஆராதிக்கத் துவங்கினார்.

தரையில் இருந்து ஐந்தடி நாலு அங்குல அடி உயர பீடம்

தலை கவிழ்ந்த நிலையில் ஒன்பது கற்களால் ஆன கீழ் பாகம் (அதோபத்மம்), அதன் மேல் ஐம்பதடி சுற்றளவில் ஆறடி கோமுகம் இணைத்து ஒரே கல்லினால் ஆன மேல் பாகம் (ஊர்த்துவ பத்மம்).

அதன் மேலே பதிமூணடி உயரத்தில் பதினேழு அடிச் சுற்றளவில் லிங்க  பாணம்.

கோயில் மாறிப் போயிருந்தாலும், செல்வம் முழுவதும் குறைந்தாலும், கல்வெட்டுகள் மறைந்து போனாலும், ஆடல் மகளிரும், வாத்தியம் இசைப்போரும், பதிகம் பாடுவோரும் இல்லாது போனாலும், குஞ்சர மல்லன் தூக்கி நிறுத்திய போது இருந்த மாதிரியே, தரையில் இருந்து இருபது அடி உயரத்தில்,  தென்னாடு உடைய சிவன் ஆயிரம் வருடங்கள் தாண்டியும் அப்படியே இருந்தார்.

அவர் முன் தீபாராதனைகள் தொடங்கின.  வந்தியத்தேவர் தன்னை மறந்தார், குந்தவையை மறந்தார், ஆயிரத்தெட்டு வருடங்கள் தாண்டி வந்ததையும் மறந்தே போனார்.

கேரளாந்தகன் வாயிலை நெருப்பாகவும், இராஜராஜன் வாயிலை நீராகவும், கோயிலை நிலமாகவும், கருவறையின் மூன்று வாயில்களை காற்றாகவும் வடிமைத்து, ஆடவல்லானின் தலை மேல் உயர்ந்து ஓங்கிய விமானமே வளியாக சமைத்து, பஞ்ச பூதங்களை இணைத்து, ஆடவல்லானின் தத்துவத்தையே கோயிலாக படைத்த ஈசான சிவ பண்டிதரை மனதில் துதித்து, கண் இமைக்காமல் பெரு உடையாரையே கை கூப்பி பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாராதனை முடிந்த உடன் உரத்த குரலில் அவர் அறியாமலேயே பதிகம் பாட ஆரம்பித்தார்.

ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான்

சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான்

நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான்

நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்

நோக்கும் நிதியம் பல எத்தனையும்

கலத்தில் புகப் பெய்து கொண்டு ஏற நுந்தி

ஆர்க்கும் கடலங்கரை மேல் மகோதை

அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

  •    சுந்தரர்

சுந்தரர் பாடிய கடைசி பதிகம். இறைவன் அவரை ஆட்கொண்டு கயிலாயத்துக்கு அழைத்துச் செல்லும் போது பாடியது. தஷிண மேரு என்று அழைக்கப்பட்ட இந்தக் தென் கயிலாயத்துக்குள் தான் நுழைந்து விட்டதை எண்ணிப் பாடினாரோ தெரியவில்லை.

பக்தியில் உருகி, தன் நிலை மறந்து, கணீரென்ற குரலில் அவர் பாடியதை அங்கிருந்த கூட்டம் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தது. கோயில் அர்ச்சகர், ஏதோ உந்தித் தள்ள படிகளில் ஏறி, லிங்க பாணத்தில் முழு நீளத்துக்கு போடப் பட்டிருந்த மாலையை எடுத்து வந்து வந்தியத்தேவரின் தோளில் போட்டதும்தான் அவருக்கு தன் நினைவே வந்தது.

கண் விழித்து கூடியிருந்த கூட்டத்தை பார்த்தார்.

அங்கே அந்தக் காவல் அதிகாரியும் கை கூப்பி பெரு உடையாரை கண்கள் மூடி வணங்கிக் கொண்டிருக்க, வந்தியத்தேவர் அவர் அருகே சென்று  – “ஐயா.. நான் இப்போது விசாரணைக்குத் தயார்” என்றார்.

அவர் கண் விழித்து “விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டதே. பொது இடத்தில் குழப்பம் செய்ததாக பெரியவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்து, அவர் ஜாமீனிலும் வெளியே வந்து விட்டாரே”

வந்தியத் தேவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“யாரக் கைது செய்தீர்கள்? நான் இங்கே தானே இருந்தேன்?”

“நான்தான் அந்தக் குற்றவாளி” என்று முன்னால் வந்த முதியவருக்கு கிட்டத்தட்ட வந்தியத்தேவர் வயது தான் இருக்கும்.

வேட்டியும், சட்டையும் அணிந்து, நெற்றி முழுக்க திருநீறு துலங்க, சற்றே மெலிந்த உருவத்துடன் கழுத்தில் ஒரு உருத்திராட்ச மாலை அணி செய்ய, சிரித்த முகத்துடன் இருந்தவரை வந்தியத்தேவர் குழப்பத்துடன் நோக்கினார் –  “நான் செய்த குற்றத்துக்கு இவரை ஏன் கைது செய்தீர்கள்?”

“ஐயா.. நீங்கள் வாய் விட்டுக் கேட்டு விட்டீர்கள். நான் கேட்கவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். என் பையனிடம் அவருக்குப் பதிலாக என்னை சிறையில் போடு என்று கேட்டேன். சரி என்று விட்டான்.” என்று சொல்லி சிரித்தவரின் அருகில் இருந்த அதிகாரியை, பேச நினைத்தும் குரல் வராமல் “இவர் உங்கள் தந்தையா?” என்று வந்தியத்தேவரின்  உதட்டசைவு மட்டுமே கேட்க “ஆமாம். இவர் தான் என் அப்பா. தமிழ் வாத்தியார். ராஜ ராஜனின் சிலை வருகிறதென்று கேள்விப்பட்டு, அவர் இருக்கும் கிராமத்தில் இருந்து இங்கு வந்தவர், நடந்ததை கேள்விப்பட்டு உங்களுக்கு பதில் என் மேல் வழக்கு போடு என்று அடம் பிடித்து விட்டார்” என்றவரை உடல் முழுவதும் வளைத்து, அவர் கைகளில் தலையை வைத்து வணங்கினார் வந்தியத்தேவர்.

சிறிது நேரம் மௌனத்தில் கரைந்தது.

**************

“தாத்தா நீங்க நல்லா பாடினிங்க!.. ஆனா உங்க உடம்பு பூரா என்ன இப்படி தழும்பா இருக்கு? சின்ன வயசிலே நிறைய கீழே விழுந்திங்களா” என்று தன் வேட்டியை இழுத்து, வந்தியத்தேவரின் கவனத்தை தன் மேல் திருப்பியது ஒரு சிறு பெண்.

அவளுக்கு பத்து வயத்துக்குள் மேல் இருக்காது. அரக்கு நிறத்தில் பட்டுப் பாவாடை அணிந்து இருந்தவளின் காதுகளில் குட்டியாக ஜிமிக்கி ஆடியது. நீண்ட கழுத்து. சிறு வயதிலேயே நாட்டியம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு வாய்த்து விடும் உடல் வாகு, பேசும் பெரிய கண்கள். சிரிக்கும் போது இடது வாயின் ஓரத்தில் ஒரு தெத்துப் பல்.

“ஏய் குந்தவை.. பெரியவங்க கிட்ட அப்படி எல்லாம் பேசக் கூடாது.” என்று கண்டித்த அந்த பெண்ணின் தாயார், வந்தியத்தேவரைப் பார்த்து “ஐயா.. இது ஒரு சரியான வாயாடி..” என்றார்.

வந்தியத்தேவர் அந்தக் குழந்தையின் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து “நீங்கள் தானா கோயிலுக்குள் ஓடியது?.. உங்கள் பெயரும் குந்தவையா?” என்றார்.

“எங்க ஸ்கூல்லேயே நான் ஒருத்தி தான் குந்தவை. எங்க அப்பா வச்ச பேரு. வேற யார் பேர் குந்தவை? உங்க பேர் என்ன?”

“என் பெயர் வந்தியத்தேவன்” என்று சொல்லி பலமாக  சிரித்தவரை குழப்பமாக பார்த்த குந்தவை அப்பாவிடம் திரும்பி “நீங்க சொல்ற கதையில வர பேருப்பா..ஆனா அவர் மீசை அழகா சின்னதா இருந்துச்சே” என்றாள்.

வந்தியத்தேவர் எழுந்து அவளை தூக்கி கொண்டார்.

“உங்கள் தந்தை ஏன் இந்தப் பெயரை உங்களுக்கு வைத்தார்கள்?”

தன் மகளின் வாய்க் கொழுப்பை ரசித்துக் கொண்டு நின்று இருந்தவர் “சோழ தேசத்தில், இரண்டு மாமன்னர்கள் இருந்தார்கள் – ராஜ ராஜ சோழன், அதன் பின் அவர் மகன் ராஜேந்திர சோழன். இரண்டு பேரின் ஆட்சியிலும் சர்வாதிகரி ராசராசனின் அக்கா குந்தவைதான் என்பது வரலாறு”

அதுவரை பேசமால் இருந்த அவர் மனைவி “எங்க வீட்டுலயும் அதே கதைதான். இவ பேச்சுக்குத்தான் எல்லாரும் ஆடுறாங்க” என்றாள்.

திருமலை “அப்படி சொல்லக் கூடாது. குந்தவையின் கல்வெட்டுக்கள் அவர் ஒரு மகத்தான பெண்மணி என்று காட்டுகின்றன. என்னோடு வாருங்கள்” என்று கோயிலின் பிரகாரத்துக்கு கூட்டிக் கொண்டு போய், குந்தவையின் கல்வெட்டு ஒன்றைப் படித்துக் காண்பித்தார்.

“தன் சொந்த செல்வத்தில் இருந்து எவ்வளவோ இந்தக் கோயிலுக்கு கொடுத்திருக்காங்க. கிட்டத்தட்ட மூணு கிலோ எடையிலே ஒரு தங்க மேடை, நாலு கிலோ தங்கம், 3413 முத்து, 7067 வயிரம், 1001 மாணிக்கங்கள் உள்ள நகைகள், நிலங்கள்.. எவ்வளவோ. ஆனா, அதிலே முக்கியமானது அவள் தன் தந்தைக்கும், தாய்க்கும் இங்கு செய்து வைத்த செப்பு படிமங்கள். அது மட்டுமா, அவள் தம்பி கோயிலைக் கட்டிக் கொண்டிருக்க, அவள் தன் தந்தையின் பெயரில், சுந்தரச் சோழ ஆதுரச் சாலை என்று பெயரிட்டு, பல மருத்துவ மனைகளை கட்டினாள். சமண மதத்துக்கும் ஆதரவளித்து, குந்தவை ஜினாலயம் என்று பெயர் நிலைக்கும் படி சமணப் பள்ளிகள் கட்ட உதவினாள். அவற்றில் சில இன்றும் வேறு வேறு இடங்களில் இருக்கிறது. தாயையும், தந்தையையும் நேசித்தாள், தன் தம்பியை ஒரு மா மன்னனாக்கினாள், சிறு வயதில் தாயை இழந்த தன் மருமகனை வளர்த்து, கடல் கடந்து வளர்ந்த சோழ தேசத்தின் பேரரசனாக உருவாக்கினாள், மக்களை நேசித்தாள், பிற மதங்களை ஆதரித்தாள், தான் கை பிடித்த கணவரின் பெயரை வந்தியத் தேவ மாதேவரின் மாதேவியார் என்று பெருமையுடன் பொறிக்கச் செய்தாள். இப்படி ஒரு பெண் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள் என்பது தான் சோழ நாகரிகத்தின் பெருமை.. அவர்கள் வென்ற அரசர்களும், நாடுகளும் அல்ல. நம் குழந்தைகளுக்கெல்லாம் ஒரு உன்னத முன்னுதாரணம் குந்தவை. அவள் பெயரைச் சொல்லிக் கொண்டு இங்கு ஒரு கல்லூரியும் இருக்கிறது” திருமலை உணர்ச்சி பொங்க சொல்லிக் கொண்டே போனார்.

குந்தவை குறுக்கிட்டு “நானும் பெரிய பொண்ணா ஆகி, டாக்டர் ஆகப் போறேன். அவரை மாதிரி நானும் பெரிய ..hospital – ஆதுரம் கட்டுவேன்” என்று சரியாகச் சொல்ல வராமல் “அதற்க்கு பேர் என்னப்பா?” என்றது.

வந்தியத் தேவர் அவளை இறக்கி விட மனமில்லாமல் தூக்கிக் கொண்டே நடந்தார்.

பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்க, கோயிலின் பிரகாரத்தில் மாட்டியிருந்த ஸ்பீக்கரில்,  மென்மையான பெண் குரலில் பதிகம் ஒலிக்கத் தொடங்கியது.

அரியானை அந்தணர் தஞ் சிந்தையானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

  • திருநாவுக்கரசர்.

பல நூறு சலங்கைகள் ஒலிக்கும் சத்தம் அருகில் வரத் தொடங்கியது. அம்பது பெண்களுக்கும் மேல் பாரம்பரிய பரத நாட்டிய உடை அணிந்து கோயிலுக்குள் நுழைந்தனர்.

“இவர்கள்.. “ என்று வந்தியத் தேவர் ஆச்சரியத்துடன் கேட்க ஆரம்பிக்க, திருமலை “இன்று திருவாதிரை. மாதம் தோறும் இப்போது இங்கு பரத நாட்டியம் நடை பெறுகிறது . நாட்டின் பல இடங்களில் இருந்தும்  ஆட வல்லானின் சந்நிதியில் நாட்டியம்  ஆட வருகிறார்கள்” என்றார்.

வந்தியத்தேவருக்கு ஈசான சிவ பண்டிதர் சொன்னது புரிந்து விட்டது. இப்போது.

ராசராசன் கட்டிக் கொண்டிருப்பது கோயில் இல்லை. ஒரு நாகரிகத்தின் அடையாளம்.

தந்தையையும், தாயையும் நேசிக்கும் மகள், அக்காவிடம் அளவற்ற பாசம் வைக்கும் தம்பி, மக்களை அரவணைத்து சென்ற மன்னன், இசை, இலக்கியம், நடனம், நாடகம் என்று ரசித்து வாழ்ந்த மக்கள் – ஒரு முதிர்வடைந்த நாகரிகத்தின் அடையாளம்.

மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைத்து, சமுதாய நலத்தையும், பொருளாதார கட்டமைப்பையும் சேர்த்து, பலமான விதி முறைகளை உருவாக்க தெரிந்த, அதை நடைமுறைப்படுத்திய, மேம்பட்ட சிந்தனைகள் நிரம்பிய ஒரு பண்பட்ட நாகரிகத்தின் அடையாளம்.

சைவ சமயம் மேலோங்கி இருந்தாலும், மற்ற மதங்களில் இருந்து அதை மேம்படுத்தி வளர்த்தாலும்,  மற்ற மதங்களையும் ஆதரித்து, அரவணைத்து சென்ற ஒரு புத்திசாலித்தனமான அரசு ஆட்சி செய்த, நாகரிகத்தின் அடையாளம்.

வந்தியதேவருக்கு சிவ பண்டிதர் தன்னை இங்கு அனுப்பியதின் நோக்கம் நிறைவேறியது புரிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தான் மணந்து கொண்ட குந்தவை எண்ணும் ஒரு அற்புதமான பெண்மணியின் புகழ் ஆயிரம் வருடங்கள் தாண்டியும் நிலைத்து இருப்பது அவரை அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

“தாத்தா, என்னை இறக்கி விடுங்க..” என்ற குந்தவையின் குரல் அவளை தன் நிலைக்கு கொண்டு வர, அந்தப் பெண், அவர் கன்னத்தில் முத்தமிட்டு “மீசை குத்துது…” என்று தன் வாயைத் துடைத்தபடி இறங்கி கொண்டது.

“என்ன வந்தியத் தேவரே..மனசு சமாதானமாகி விட்டதா.. போகலாமா?” என்று சிவ பண்டிதரின் குரல் மண்டைக்குள் ஒலிக்க, கை கூப்பி சரி என்று தலை ஆட்டினார் வந்தியத் தேவர்.

************

“வாணர் குல வீரரே.. வாணர் குல வீரரே,..உட்கார்ந்த நிலையிலேயே உறக்கமா? என்று தன் முகத்தின் முன்னால் கைகளைத் தட்டியபடி நின்றிருந்த குந்தவைப் பிராட்டியை, முகம் மலர நோக்கி, தன் இரு கைகளாலும்,அவள்  பின் புறத்தின் கீழே கட்டி  தலைக்கு மேல் தூக்கி “நான் கொடுத்து வைத்தவன் குந்தவை” என்று சொல்லிச் சொல்லி தட்டாமாலை சுத்திய வந்தியத்தேவர், ஆயிரத்தெட்டு வருடங்கள் பிரிந்திருந்து, பின் சேர்ந்த தாபத்தை முழுவதும் கொட்டி அவளின் நெற்றியிலும், கழுத்திலும் இதழ் பதித்து, தன் மீசை அவள் முகத்தில் அழுந்த, அவள் இதழ்களை விரித்து முத்தமிட்டார்.

முதலில் தள்ளி விட முயன்று, பின் அந்தக் கணத்தின் உணர்ச்சியில் நெகிழ்ந்து, தன் கைகளை அவர் கழுத்தில் மாலையாக்கி படர விட்டு, இணைந்த இதழ்களை விலக்கிக் கொள்ளாமலேயே “மீசை குத்துது” என்று அவர் உதடுக்குள் தன் உதடுகள் உரசப் பேசி, அந்த அன்பின் கதகதப்பில் தன்னை  மறந்து நின்றாள் குந்தவை.

நொடிகள் கடந்தன.

“க்கும்..” என்று கனைத்தபடி நின்றிருந்த அருண்மொழிவர்மவரை முதலில் பார்த்தது வந்தியத் தேவர்தான்.

குந்தவையிடம் இருந்து விலகி ஓடிச் சென்று காலில் விழப் போனவரை பதறி தடுத்துக் கொண்ட ராஜராஜனைத் தழுவி அவர் கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டு “அருண்மொழிவர்மரே.. நீர் ஒரு மாமனிதர். உங்கள் எண்ணத்தை  நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்று தழுதழுத்த வந்தியத்தேவரை மன்னர் புதிருடன் நோக்கினார்.

“வந்தியத் தேவரே.. என்னாயிற்று உங்களுக்கு.. தங்களுக்கு ஏதோ ஒரு புது பூசை முறை ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னார் சிவ பண்டிதர். மாலை வரை அவரை சந்திக்க வேண்டாம் என்றும், கோவிலுக்கு வரும் போது, கூட்டிக் கொண்டு வரும்படியும் சொல்லி விட்டு சென்றார். ஆனால் இங்கு வழக்கமான பூசை தானே  நடந்து கொண்டிருக்கிறது” என்று கடைசி வாக்கியத்தை மட்டும் தன் தமக்கையின் காதில் விழாமல் இருக்க குரலைத் தாழ்த்தி, கண்களில் குறும்பு பொங்கப் பேசினார்.

மன்னருடன் வந்த அவர் மனைவி லோகமாதேவி, முகம் வெட்கிச் சிவந்து இருந்த குந்தவையை அணைத்து சற்றுத் தள்ளி அழைத்துக் கொண்டு போய் – “உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது அக்கா” என்று அவள் உதட்டில் படர்ந்து இருந்த வந்தியத் தேவரின் திருநீறை துடைத்த படியே சிரித்தாள்.

“எப்போது வந்தீர்கள்” என்று கேட்ட குந்தவையை “மீசை குத்த ஆரம்பித்த  போதே வந்து விட்டோம்” என்று மேலும் சீண்டினாள்.

ஆடவல்லானின் கோயிலின் மாலை நேர பூசையின் மணியோசை உரத்து ஒலித்தது.

“அக்கா இன்று தாங்கள் நிவந்தங்கள் அளிக்கப் போகும் திருவாதிரை நாள் அல்லவா. போகலாமா” என்ற இராசராசன் “ஏதோ இரண்டு செப்பு படிமங்கள் அளிக்கப் போவதாக குஞ்சரமல்லர் சொன்னார். அதை மன்னர் உள்பட யாரும் பார்த்து விடக் கூடாது என்று நீங்கள் கட்டளையிட்டதாகச் சொல்லிவிட்டார்”

“சோழ தேசத்தின் சர்வாதிகாரியின் கட்டளையை யார் மீற முடியும்” என்ற வந்தியத்தேவரை கோபக் கண்களாலேயே குந்தவை முறைக்க, அவர் அவள் அருகில் வந்து, காதுக்குள் “எனக்கு அந்தப் படிமங்கள் யாருடையது என்று தெரியும். ஆனால் நான் உன் கட்டளையை மீறவில்லையம்மா” என்றார்.

அவர்கள் நாலு பேரும், மாளிகையை விட்டு வெளியே வரவும், செப்பு படிமங்களை தூக்கிக் கொண்டு வந்த ஊர்வலம் அருகில் வரும் சத்தம் அதிர்ந்தது.

எக்காளங்கள் பிளிறின. உடுக்கைகள் இடித்தன. மொரோவியம் மயக்கியது.

நானுறு ஆடல் மகளிர் கூட்டத்தின் தலைக் கோலிகள் முன்னே நாட்டியம் ஆடி வந்தனர்.  மல்லன் இரட்டையனும், சித்திரம் கேசவனும் நட்டுவாங்கம் செய்ய, ஒற்றியூரான் சிங்கன் உடன் பாட்டு பாட, அரையன் நின்ற நாராயணன் மொரோவியம் என்னும் இசைக் கருவியை வாசித்தான்.

பின்னால் பதிகம் பாடுவோர் நாப்பத்தெட்டு பேர் நால்வரின் தேவாரப் பாடல்களைப் பாடி வர, தத்தயக்கிரம வித்தன் மகன் சூர்ய தேவக்ரம வித்தன் சோம சிவன் உடுக்கை வாசித்துக் கொண்டு வந்தான்.

ஒரு சப்பரம் முன்னால் வந்தது. அதில் சுந்தரச் சோழரும், அவர் மனைவி வானவன் மாதேவியும் கை கூப்பி வணங்கியபடி இருக்கும் படிமங்கள் வந்தன. ராஜராஜர் தன் கண்களில் கண்ணீர் வழிந்தோட, தன் தமக்கையின் கால்களில் விழுந்து வணங்கினார். குந்தவை தன் தம்பியை அணைத்து அவன் கண்களை துடைத்து விட்டார்.

பெற்றோரின் நினைவில் சில நொடிகள் மௌனமாய் கழிந்தன.

நால்வரும் மாளிகையின்  வெளியே வந்தனர். அருண்மொழி வர்மரும், வந்தியத்தேவரும் தலை வணங்கி, முன்னால் பக்கத்துக்கு ஒருவராய்  தோளில் சப்பரத்தை தூக்கிக் கொண்டனர்.

அதன் பின்னால் வேத கோஷங்களை எழுப்பிக் கொண்டு அந்தணர் கூட்டம் வந்தது.

சிறிது நேரத்தில் இன்னொரு சப்பரம் வந்தது. மூவேந்த வேளாளரும், சேனாதிபதி கிருஷ்ணன் ராமனும் முன்னால் தோளில் தாங்கி வர, இராசராசன், அவன் மனைவி லோகமாதேவியின் படிமங்கள் அதில் இருந்தன.

ஊர்வலம் வடக்கு திசையில் இருந்த அணுக்கன் வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்தது.

சிவபாதசேகரன், ராஜராஜன் என்று பெயர் பதித்த, தங்கத்தால் செய்யப்பட்ட எக்காளங்கள் முழங்கின.

ஆட வல்லானின் கருவறை மணி முழங்கியது.

ஆயிரத்தெட்டு வருடங்கள் தாண்டியும் ஒலித்த அதே ஓசை.

உன்னதமான தமிழர் நாகரிகத்தின் அடையாளமாய், இன்னும் பல்லாயிரத்தாண்டுகள்  தாண்டியும் ஒலித்துக் கொண்டிருக்கட்டும் அந்த மணி.

*****************************

முடிவுரை

  1. தஞ்சை கோயிலில் சிற்ப அற்புதம் லிங்கத்தின் பீடம் தான். பீடத்தின் மேல் பாகம் ஐம்பதடி வட்ட சுற்றளவில், ஒரே கல்லால் செய்யப்பட்டது. ஆறு அடி கோமுகத்தையும் (தண்ணீர் விழும் பாகம்) சேர்த்தால், இருபத்திரண்டு அடி விட்டத்தில் ஆன ஒரே கல்லில் செய்யப்பட்து.

2. இந்திய அகழ்வாராய்ச்சி துறை, தஞ்சை கல்வெட்டுக்கள் உள்பட, பலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

கீழே உள்ள பாகம், குந்தவையின் நிவந்தங்கள் பற்றிய ஆதாரம்.

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions

Hail! Prosperity! Until the third year (of the reign) of Ko-Parakesarivarman, alias the lord (udaiyar) Sri-Rajendra-Soradeva, — Arvar Parantakan Kundavaiyar, (who was) the venerable elder sister of the lord Sri-Rajarajadeva (and) the great queen of Vallavaraiyar Vandyadevar, gave to the images (tiru-meni) which she had set up herself, -gold which was weighed by the stone (used in) the city (kundinai-kal) and called (after) Adavallan, and jewels (ratna) which were weighed by the jewel weight (kasu-kal) called (after) Dakshna-Meru-Vitankan. Those (jewels), which could be weighed (separately), were weighed without the threads (saradu), the frames (sattam), the copper nails (seppani), the lac (arakku) and the pinju. Those jewels, the net weight of which could not[1]be ascertained, as they were united with the lac and the pinju, (were weighed) together with the lac and the pinju. (The amount of this gold and these jewels) was engraved on stone (as follows): –

கீழே உள்ள பாகம், ராஜராஜனின் வெற்றிகளை  பற்றிய ஆதாரம்.

Hail! Prosperity! This (is) the edict (sasana) of Rajaraja (alias) Rajakesarivarman, which is cherished by the multitude of the diadems of (i.e., which is obeyed by) the crowd of all princes. On the twentieth day of the twenty-sixth year (of the reign) of Ko-Rajakesarivarman, alias Sri-Rajarajadeva, who – while (his) heart rejoiced, that, like the goddess of fortune, the goddess of the great earth had become his wife, — in his life of growing strength, during which, having been pleased to cut the vessal (kalam) (in) the hall (at) Kandalur,[4]he conquered by his army, which was victorious in great battles, Vengai-nadu, Ganga-padi, Tadigai-padi, Nulamba-padi, Kudamalai-nadu, Kollam, Kalingam, Ira-mandalam, (the conquest of which) gave fame (i.e., made (him) famous) (in) the eight directions, and the seven and a half lakshas of Iratta-padi, — deprived the Seriyas (i.e., the Pandyas) of their splendor, while (he) was resplendent (to such a degree) that (he) was worthy to be worshipped everywhere; — having been pleased to make gifts (in) the royal bathing-hall (tiru-manjana-salai) to the east (of the hall) of Irumadi-Soran within the Tanjavur palace (koyil), the lord (udaiyar) Sri-Rajarajadeva vouchsafed to say: — “Let the gifts made by us, those made by (our) elder sister,[5]those made by our wives, and those made by other donors to the lord (udaiyar) of the sacred stone-temple (tirukkarrali), (called) Sri Rajarajesvara, — which we caused to be built (at) Tanjavur, (a city) in Tanjavur –kurram, (a subdivision) of Pandyakulasani-valanadu, — be engraved on stone on the sacred shrine (sri-viman)!”.

3. நாலு படிமங்களும் ஒரே நாளில் கோயிலுக்கு அளிக்கப்பட்டன என்பது என் கற்பனை. குந்தவையின் தந்தை மற்றும் தாயாரின் படிமங்கள் கொள்ளை போய் விட்டன.

4. இந்தக் கட்டுரையில் இருக்கும் எல்லா சோழ காலப் பெயர்களும் கல்வெட்டுகளில் உள்ள பெயர்களே.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள