வளையல் கடை ஷீலா

நான் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த பள்ளிக்கூடம் அப்பர் கிளாப்டன் நடு நிலைப் பள்ளி – 1863ல் தொடங்கப்பட்டது இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

தமிழ் முறையில் படித்ததாலும், ABCD கற்றதே மூன்றாம் வகுப்புக்கு மேல் தான் என்பதாலும் பள்ளியின் பெயரை ஆங்கிலத்தில் சரியாக எழுதக் கூட தெரியாமல்தான் அங்கு படித்தேன்.

தமிழகத்தின் கடைக் கோடியில், நெல்லையப்பர் கோயில் கீழரத வீதியில், வாகையடி முக்குக்கு அருகில் இருக்கும் இந்தப் பள்ளிக்கூடம் ஆன் சுட்டன் (Ann Sutton) என்ற ஆங்கிலப் பெண்மணியால் தொடங்கப்பட்டது.

அவருடைய சொந்த ஊர் லண்டன் அருகில் உள்ள Upper Clapton.

அந்தப் பெயரில், இந்தப் பகுதியில் இருந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நெசவு செய்யும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பள்ளி.

அந்தப் பள்ளியில் படித்த நினைவுகளில் இன்னும் நான் மறக்காதவை – அங்கு இருந்த வீட்டிலேயே தங்கி இருந்த கனிவான தலைமை ஆசிரியையும், என் மேல் அதிக அக்கறை எடுத்து சொல்லிக் கொடுத்த அவர் மகளும், வீட்டில் இருந்து ஆயா கொண்டு வந்த பல அடுக்கு உணவுகளை பாய் விரித்து, ஸ்பூன் வைத்து உண்டு, தனித்து தெரிந்த கார்கார்த்த வெள்ளாள ஜமீந்தார் குடும்பத்து பெண்களும், காமராஜர் தயவில்  இலவச மதிய உணவு சாப்பிட மட்டுமே வந்த பலரும்..

இதையெல்லாம் விட முக்கியமாக ஷீலா.

வளையல் கடை ஷீலா.

*********************

திருநெல்வேலியில் சேட்டு கடைகள் என்று அழைக்கப்படும் விநியோக நிலையங்கள் (distribution business) நடத்திய  மார்வாரி குடும்பங்கள் நிரம்ப இருந்தன.

மின்சார சாதனங்கள், ரெடிமேட் ஆடைகள், அலங்காரப் பொருட்கள் என்று அவரகள் கை வைக்காத தொழிலே இல்லை.

இவர்கள் பல தலை முறைகளாகவே அங்கு வசிக்கும் குடும்பங்கள்.

வயதான பிராமணர்கள், அரசாங்கத்துக்கு ஒப்புக்கு காண்பிக்கப்படும் கணக்குகளை உருவாக்கி சரி செய்து, ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதிக் கொடுக்க, சேட்டுக் கடைகளில் அமோக வியாபாரம் நடந்தது.

ஆண்கள் அனைவரும் அவர்கள் மொழியும், நன்றாக ஹிந்தியும், , திருநெல்வேலித் தமிழும் பேசினர்.

அவர்கள் வீட்டு பெண்கள் கோதுமை நிறத்தில் செழிப்பாக வளர்ந்து, கை நிறைய வளையலும், ராஜஸ்தான் மகளிர் அணியும் உடையும் அணிந்து, முக்காடு போட்டு, முகமும் மறைத்து, வெளியில் யாருடனும் பேசாமல் வாழ்ந்தனர்.

*******************

வாகையடி முக்கில் வளையல் கடை மொத்த வியாபாரம் நடத்தி வந்த குடும்பத்தின் மகள்தான் ஷீலா.

என்னுடன் முதல் ஐந்து வகுப்பும் படித்தாள்.

அப்போது வந்து ஊரையே கலக்கி கொண்டிருந்த Bobbi பட விளம்பர போஸ்டரில் இருந்த டிம்பிள் கபாடியாவை சிறுமியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஷீலா அப்படித்தான் இருந்தாள்.

கருப்பு நிறக்  கண்களும், கரிய தலை முடியும் மட்டுமே கொண்ட ஒல்லியான பெண்கள் நிறைந்த  கூட்டத்தில், கண்கள் வேறு நிறத்திலும், உடல் கோதுமை நிறத்திலும், பூசிய உருவமும் கொண்ட ஷீலா தனித்து தெரிந்ததற்கு அது மட்டும் காரணமல்ல.

எல்லா பரிட்சையிலும் முதல் இடம் வாங்க நான் முட்டி மோத, அலட்டிக் கொள்ளாமல் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஷீலாவை எனக்கு முதலில் சுத்தமாக பிடிக்கவில்லை.

படிப்பைத் தவிர, அப்போது எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட – கூடை பின்னுதல், நூல் நூற்றல், துணிகளில் பூத்தையல் (Embroidery) நெய்தல் இப்படி எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி அவளிடம் இருந்தது.

அவளுடன் போட்டி போடுவதற்காகவே நான் இவைகளில் எல்லாம் நேரம் செலவளித்தேன். ஓடி விளையாடுவதற்கு சோம்பல் என்பதும் மற்றோரு காரணம்.

மூன்றாம் வகுப்பு வந்த பின் எனக்கு ஷீலாவை பிடித்துப் போய் விட்டது.

காரணம் – பிறந்ததில் இருந்து இன்று வரை தொடரும் உணவின் மேல் உள்ள என் பலவீனம்தான்.

காய்ச்சலில்  கிடந்த ஒரு நாள் முழுவதும் ருசியாக மிளகு ரசமும், தயிர் சாதமும் செய்து கொடுத்தாள் என்ற ஒரே காராணத்துக்காக  தற்போதைய என் மனைவியுடன்  அப்போது காதலில் விழுந்ததும் அதே பலவீனத்தினால்தான்.

பள்ளியின் எதிரில் சேட்டுமார்கள் கோயில் (சமணர் கோயில்) இருந்தது.

அங்கு தரப்படும் பிரசாதங்கள், அக்கிரகாரங்களில்  நான் கண்டே இருக்காத வகை.

புதுச் சுவை.

ஷீலா அவ்வப்போது அந்த உணவுகளைக் கொண்டு வந்து எனக்கும் கொடுக்க ஆரம்பித்தாள்.

நான் அவளுக்கு தமிழில் வீட்டு பாடங்களில் உதவி செய்ய, அவள் என் பூத்தையலையும் கூடைப் பின்னலையும் முடித்துக் கொடுத்தாள்.

ஷீலாவை எனக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.

**************************

அங்கு என்னோடு படித்த மற்றொரு சேட்டுப் பையன் ராஜேஷ்.

அவனுக்கு சுத்தமாகப் படிப்பில் ஆர்வம் இல்லை.

அவர்களுடையது மின்சார சாமான் மொத்த வியாபாரம். ஓரளவுக்கு தெரிய வேண்டிய கணிதம் கூட அவனுக்கு வரவில்லை.

ராஜேஷ் வீடும், கடையும் சுவாமி சன்னதித் தெருவில் இருந்தது.

பள்ளிக்கூடம் முடிந்ததும் என் கூடவே வழியில் இருந்த என் வீடு வரை வந்து, பல தினங்களில் என் வீட்டிலேயே தங்கி, என்னுடனே சாப்பிட்டு விட்டு நேரம் கழித்தே போவான்.

அவனுக்கு அம்மா இல்லை. அப்பா இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டு வந்த சித்தி சரியாக சாப்பாடு போடுவதில்லை என்று என் அம்மா அவனுக்கு தாராளாமாக சாப்பிட கொடுத்தாள்.

ராஜேஷையும் எங்களுடன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள ஷீலாவுக்கு விருப்பமே இருந்ததில்லை.

“கோட்டிக்காரப் பய. ஒன்னாம் வாய்ப்பாடு கூட ஒழுங்கா சொல்லத் தெரியாது” என்று அவள் முறைக்க, அவள் முடியை இழுத்து விட்டுச் செல்லும் அவனை, மார்வாரி மொழியில் சத்தமாக திட்டுவாள்.

அப்பர் கிளாப்டனில் ஐந்து வகுப்பு வரைதான் ஆண்கள் படிக்க முடியும். எட்டு வரை பெண்கள் படிக்கலாம்.

சமணர் கோயில் பிரசாதங்களையும் ஷீலாவையும் விட்டுப் பிரிந்து நான் வேறு பள்ளிக்கு சென்று விட்டேன்.

ராஜேஷும் வேறு பள்ளிக்குக் சென்று விட்டான்.

************************

ஆறாம் வகுப்பு சேர்ந்த பின், பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் வாகையடி முக்கில் வளையல் கடையை தாண்டிச் செல்லும் போதெல்லாம் ஷீலா தெரிகிறாளா என்று தேட ஆரம்பித்தேன்.

ஒரு நாள் சமணர் கோயில் வாசலில் நின்றவளிடம் ஓடிப் போய் “நல்லா படிக்கியா ஷீலா?” என்றேன்.

பதில் சொல்லவில்லை.

அவள் கையில் இருந்த பிரசாதத்தை என் கையில் கொடுத்து நான் சாப்பிடுவதையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“இங்க்லீஷ் மீடியம் படிக்கே போல. உனக்கு என்ன படிப்பாளி. நல்ல படிச்சு பெரிய ஆளாயிருவே”..

குரல் உடைந்து வந்தது.

“எங்க வீட்டிலே என் படிப்பை நிறுத்திட்டாக” என்றாள்.

“ஏன்… நீ  நல்லா படிப்பியே”

“எங்க வீடுகள்ளே அப்படித்தான். நான் இவ்வளவு படிச்சதே பெரிசு. நீ நல்லா படிலே, நான் வாரேன்” என்று பெரிய பெண் மாதிரி சொல்லி விட்டு போய் விட்டாள்.

அதற்குப் பின் ஒரு வருடம் மட்டும் சில நாட்களில் அவளைப் பார்க்க முடிந்தது.

கை அசைத்து சிரிப்பாள்.

எட்டாம் வகுப்பு தேர் திருவிழாவில், என்னை விட உயரமாய் பெரிய பெண்ணாய் வளர்ந்து விட்ட ஷீலாவை பார்த்தேன்.

பார்த்……….தேன்.

அதன் பின் பார்க்கவே இல்லை.

*******************

நெல்லையப்பர் தேர் முன்பெல்லாம் ரத வீதி சுத்தி நிலைக்கு வந்து சேர்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும்.

எண்பதுகளின் ஆரம்பத்தில், தேரும் வேகமெடுத்து ஒரே நாளில் நிலைக்கு ஓடி வரத் தொடங்கியது.

வாழ்க்கையும் வேகமெடுத்தது.

அரை டௌசெரில் இருந்து சாரத்துக்கு (லுங்கி) மாறி, லேசாய் மீசை முளைத்து, சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, தெப்பக்குளத் தெருவிலும், அம்மன் சன்னதித் தெருவிலும் கையை விட்டு ஒட்டி, தாவணி அணிந்த பெண்களை கவனிக்க தொடங்கி ஷீலாவை சுத்தமாக மறந்து போனேன்.

எட்டாம் வகுப்பில் ஒரு முறை ராஜேஷை அவன் கடையில் வைத்து பார்த்தேன்.

“படிப்பை நிறுத்திட்டேன் மக்கா. ஒரு எளவும் புரியல. ஆறாங் கிளாஸ்லே பெயில் பண்ணிட்டான் அந்த …. “ திருநெல்வேலி மார்வாரிகள் வசவு வார்த்தை மட்டும் சுத்தமாகப் பேசுவார்கள்.

வயதுக்கு மீறிய வளர்த்தி.

திறந்து விட்ட சட்டையும், உள்ளே தெரிந்த தங்கச் சங்கிலியும், தலை நிறைய வாரி விடப்பட்டாத முடியும் – ஹிந்திப் படத்தில் அடி வாங்கும் வில்லன் கும்பலில் ஒருவன் போல் இருந்தான்.

“பிரைவேட்டா படிக்க வேண்டியது தானே?” என்றேன்.

“அப்பா பெல்டால அடிச்சு பாத்தாரு. நான் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. கடைலே கிடன்னு சொல்லிட்டாரு”.

ராஜேஷையும் அப்புறம் நான் பல வருடங்கள் பார்க்கவில்லை.

*******************

பதினொன்னு, பன்னிரண்டாம் வகுப்பு வந்த பின், நாட்கள் இன்னும் வேகமெடுத்தன.

தெரு கிரிக்கெட் எல்லாம் நின்று போய், காலை முதல் இரவு வரை டியூஷன் வகுப்புகளும், படிப்பும் நிறைத்துக் கொண்டன.

அதன் இடையே கிடைத்த நேரங்களை சுஜாதாவும், பாலகுமாரனும், தி. ஜானகிராமனும்,  இளையராஜாவும் எடுத்துக் கொண்டனர்.

பள்ளியில் இருந்து சைக்கிளில் வரும் போது, நானும் என் நண்பன் சங்கரும் பார்த்த கல்லணை பள்ளி  தாவணித் தேவதைகளில் – எங்கள் கவனம் அதிகமாய் சிதறவில்லை.

இருவரும் நன்றாகவே படித்தோம்.

பிளஸ் டூ முடித்ததும் சென்னைக்கு பொறியியல் படிக்க சென்று விட்டேன்.

முதல் வருடத்தின் செமஸ்டர் விடுமுறையில் ஊருக்கு வந்து, அம்மன் சன்னதி தெருவில் இருந்த நண்பனை பார்த்து விட்டு சைக்கிளில் அமர்ந்தபடியே கணேசன் கடை டீ ஸ்டாலில் விவா டீ குடித்துக் கொண்டிருந்த என்னை, பெயர் சொல்லி யாரோ முதுகில் பலமாகத் தட்ட, திரும்பினேன்.

ராஜேஷ்.

சிறிய தொப்பையுடன் நடிகர் கோவிந்தா போல் இருந்தான்.

திறந்து கிடந்த சட்டை வழியே தங்கச் சங்கிலி முன்பை விட பருத்து தொங்கியது. இரு கைகளிலும் விரல்களில் மோதிரங்கள். மணிக்கட்டில் கலர் கலராய் கயிறுகள் தொங்கின.

“மெட்ராஸ்லே கம்ப்யூட்டர் படிப்பு படிக்கேன்னு கேள்விப்பட்டேன்” என்றான்.

“உன்னை பாக்கவே முடியலயேடே.. நீ இந்த ஊர்லதான் இருக்கியா.. பெரிய சேட்டு ஆயிட்டே போலே?”

“படிப்பை நிறுத்திட்டேன்னு சொன்னேன்லா. அப்பா என்னை ராஜஸ்தான் அனுப்பிட்டாரு. அங்க அஞ்சு வருஷம் இருந்து தொழில் கத்துகிட்டேன்.. போன மாசம்தான் கல்யாணம் முடிஞ்சு இங்க வந்தேன். இங்கயே டவுண்ல தனிக் கடை வச்சு கொடுத்துட்டாங்க” என்றான்.

“அடப் பாவி.. மச்ச்சக்கரா பயடே. உனக்கு யாருலே பொண்ணு கொடுத்தா?”

“ஏன்லே.. எனக்கு என்ன குறை! படிப்புதான் கொஞ்சம் கம்மி…என் wife…” என்று சொல்லி திரும்பினான்.

அம்மன் கோயில் வாசலிலேயே நின்று விட்ட அந்தப் பெண் இவன் பார்ப்பது தெரிந்து தெருவைத் தாண்டி, எங்கள் அருகில் வந்தாள்.

கை முழுவதும் மருதாணியும், ராஜஸ்தான் உடையும், கை நிறைய வளையலும் அணிந்து, முக்காடிட்டு, முகம் முழுவதும் மறைத்து சற்று தள்ளியே நின்றாள்.

“உன் wifeக்கு தமிழ் தெரியுமா?”

“என்ன அப்படி கேக்கே. கல்யாணம்தான்லே ராஜஸ்தான்லே. பொண்ணு இந்த ஊருதான். அவங்க கடை கூட டவுண்லேதாம்லே இருக்கு”

“புறவு என்ன.. wife பேரு சொல்லலே நீ இன்னும்”

“ஷீலா..” என்றான்.

“யாரு.. வளையல் கடை ஷீலாவா?” என்று வாய் வரை வந்து விட்ட கேள்வியை, ஆச்சரியத்திலும், பொறாமையிலும் தோய்ந்து எழுந்த குரலை தொண்டைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டேன்.

அந்தக்  கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதில் எனக்கு பயன் ஒன்றும் தெரியவில்லை.

சைக்கிள் மீது ஏறி, “சந்தொஷம்லே.. நல்லா இருங்கடே” என்று சொல்லி அழுத்தி மிதித்து வாகையடி முக்கு வரை விரட்டிக் கொண்டே சென்று விட்டேன்.

வழியில் இருந்த upper Clapton பள்ளியை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

***********************

சங்க காலத்திலும் ஷீலாவும், ராஜேசும் இருந்திருக்கிறார்கள். இந்தப் பாடலை எழுதிய மோதாசானார் பற்றி ஒரு குறிப்பும் இல்லை.

இந்த ஒரு பாடல் மட்டுமே இவர் எழுதியதாகத் தெரிகிறது.

இந்தப் பாடலில் வரும் இருவருடனும் சேர்ந்து படித்து விட்டு, ஊரை விட்டு காஞ்சி சென்று, அங்குள்ள பல்கலைக் கழகத்தில் கணிதம் பயின்று, ஏதோ ஒரு வட நாட்டுக்கு வேலை தேடி போயிருக்கலாம்.!!

குறுந்தொகை 229, மோதாசானார், 
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல் 5
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

(ஐம்பால் – ஐந்து பகுதியாக உள்ள கூந்தல்; புன்தலை – புல்லிய தலை மயிர்; ஓரி வாங்குநள் – வளைத்து இழுப்பாள்; சிறு செறு – சிறிய சண்டைகள்; நல்லை மன்ற – நிச்சயமாக நல்லது; பாலே – விதியே; துணைப் மலர்ப் பிணையல் – இரட்டை மாலை அல்லது இரண்டு பூக்களை சேர்த்து கட்டிய மாலை; மணம் மகிழ் – மகிழ்ச்சியாக திருமணம் புரிந்து; இயற்கை காட்டியோயே – இயல்பை உண்டாக்கினாய்)

சிறு வயதில், அவள் தலையை இவன் பிடித்தும் , அவள் அவன் தலை மயிரை இழுத்து வளைத்தும் சிறு சண்டைகள் போட்டு திரிந்த இவர்கள் இருவரும் இப்போது திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்வது விதியின் விளையாட்டே.

மெல்லிய இரட்டை மாலை போன்று திரிகிறார்கள் இப்போது.

இயற்கை நல்லதே செய்தது.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள