வள்ளுவரின் தும்மல்

அமெரிக்கா சென்ற புதிதில், புரியாத விஷயங்கள் நிறைய இருந்தன. அதில் ஓன்று இந்தத் தும்மல்.

என் அம்மாவின் பாட்டி தும்மியவுடன் “ராம ராம அல்லது ஹரே கிருஷ்ணா” என்று சொல்லி தான் நான் கேட்ட நினைவு.

முதலில் நாம் தும்மியவுடன் “excuse me” என்று எல்லோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று புரிவதற்கு கொஞ்சம் நாள் ஆனது.

அப்போதெல்லாம் Trump பொதுக் கூட்டத்தில் நுழைந்து விட்ட கருப்பு நிறத்தவரை பார்ப்பது போல் எல்லோரும் நம்மை முறைப்பது ஏன் என்று புரிந்ததில்லை.

ஒருத்தர் தும்மியவுடன் “Bless you” என்று அங்கு இருக்கும் எல்லோரும் சொல்வது புரிவதற்கும் இன்னும் கொஞ்சம் நாள் ஆனது.

முதல் தும்மல் போட்டவுடன் சொல்லாமல், இரண்டாவது முடிந்தவுடன் சேர்த்து சொல்லிக் கொள்ளலாம் என்று நான் தாமதித்தால், மற்றவர் எல்லோரும் உடனே சொல்லி விட்டு, என்னை ஒரு விஷ ஜந்துவைப் போல் பார்த்தனர்.

ஏன் வம்பு என்று முதல் தும்மல் முடிந்தவுடன் சேர்த்தே இரண்டு “Bless you” சொல்ல ஆரமிபித்தேன்.

ஒரு முறை விமான பயணத்தில், பக்கத்தில் இருந்த ஒருவர் ஜலதோஷ மூக்குடன் ஒரு தும்மல், இரு தும்மல், அடுக்குத் தும்மல் என்று இரண்டு மணி நேரம் தொடர்ந்து தும்மினார். அத்தனை “bless you”. சொன்னேன்.

கடவுளே வானில் இருந்து கை நீட்டி, என் தலையில் தட்டி “எத்தனை தடவ சொல்லுவே.. எனக்கு என்ன தும்மலுக்கு bless பண்றத விட்டா வேற வேலை இல்லன்னு நினைச்சியா ?” என்று திட்டிய மாதிரி கனவெல்லாம் வந்தது.

*

இங்க வள்ளுவருக்கு என்ன வேலைன்னு கேட்பீங்க.

நம்ம ஸ்கூல்லே படிக்கும் போது திருக்குறள்லே அறத்துப் பாலும், பொருட் பாலும் தான் குடிச்சு வளந்தோம்.

மூணாவதா காமத்து பால் பக்கம் போகவே விட மாட்டாங்க.

இப்போ அத கரைச்சு குடிக்கனும்னு (பால்.. பால்..) முடிவு பண்ணி படிக்க ஆரம்பிச்சேன்.

என்ன ஆச்சர்யம்!. இந்த பழக்கம் வள்ளுவர் காலத்திலேயே, இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலேயே இருந்திருக்கு.

இந்த மனுஷன் தொடாத சப்ஜெக்டே இல்லே போல.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்கென்பாக்கு அறிந்து (1329)

 

கணவன், மனைவிக்குள்ளே ஏதோ சண்டை. ஊடல். பேச்சு வார்த்தை இல்லை. அப்போ கணவர் தும்முகிறார்.

அப்போவும், நம்மதான் மனைவிக்கு முதல்லே பணிஞ்சு போக வேண்டிருந்திருக்கு.

வீட்டம்மா சொல்றாங்க – “பொய்த் தும்மல். நான் அவரை ‘நீடுழி வாழ்க!’ ன்னு சொல்வேன்னு நினைக்கிறார்”.

தும்மினா “நீடுழி வாழ்க” என்று சொல்லும் வழக்கம் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பே நம்ம ஊர்லே இருந்திருக்கு.

ஒழுங்கா காமத்துப் பால் சொல்லிக் கொடுத்திருந்தா, அமெரிக்காவில அவஸ்தை பட்டிருக்க வேண்டாம்.

*

சரி இதை நம்ம வீட்டுலே try பண்ணிப் பார்க்க சந்தர்ப்பம் உடனே கிடச்சுது.

சண்டைக்கா பஞ்சம்?.

எனக்கு சாப்பிட்டு முடிச்ச உடனே, கொஞ்சம் இனிப்பா எதாவது உள்ளே போகணும்.

அன்னிக்கு வீட்டுலே எல்லா டப்பாவும் காலி.

“ஆத்துலே ஸ்வீட் எதுவுமே இல்லையா?”.

எட்டுக்கு குரு மாறிட்டான். பேச்சிலே கவனம் தேவைன்னு போட்டிருந்தத மறந்துட்டேன்.

“ம்ம். ஸ்வீட் வாங்கி வச்சா, என்னை இதையெல்லாம் சாப்பிட வச்சு குண்டாக்காறேன்னு குத்தம் சொல்ல வேண்டியது”

யானையை விட மனைவிமார்களுக்கு அதிக ஞாபக சக்தி உண்டுன்னு கல்கண்டுலே போட்டிருந்தான்.

கடைசிலே பேரிச்சம் பழம் ஒரு டப்பாலே, மூலைலே இருந்தது.

இரண்டு எடுத்து வாயிலே போட்டேன்.

குரு தன் வேலையை காட்டினானோ, இல்ல பிறவியிலே வந்த தாமிரபரணிக் குசும்போ

“எங்க ஊர்லே பழசல்லாம் போட்டுதான் பேரிச்சம் பழம் வாங்குவோம். நீதான் பழசாவே பேரிச்சம் பழம் வாங்கியிருக்கே”

அப்புறம் என்ன – தாமிரபரணி குசும்பு,, திருநெல்வேலி நாக்கு, என் travel, Body weight, அவள் சொல்லி  நான் செய்ய  மறந்து போன விஷயங்கள் –  எங்கெல்லாமோ போய், ஊடல்லே முடிஞ்சது.

*

பாதி நாள் கடந்தது. ஊடல் தொடர்ந்தது.

வள்ளுவர் சொல்லிக் கொடுத்ததை try பண்ணலாம்னு முடிவு பண்ணினேன்.

முதல் தும்மல் – கண்டுக்கவே இல்லை.

நிஜம்மாவே தும்மலாம்னு துண்டை மூக்குலே விட்டு try பண்ணினேன். ஒன்னும் வரலை.

எம்ஜிஆரின் படத்துலே வர சண்டை மாதிரி, மூணாவது பொய்த் தும்மலுக்குதான் response கிடச்சுது.

நல்ல சத்தம்

“வாயை மூடிண்டு தும்மறதுதானே?”

ஆகா பேச்சு வார்த்தை start ஆயிடுச்சு.

“கையை வச்சு மூடிண்டுதானே தும்மினேன்”

“அப்போ.. போய் கை wash பண்ணனும்னு யாரும் சொல்லிக் கொடுக்கலயா?”

அம்மாவுக்கு கண்டிப்பா தும்மியிருக்கும்.

“உங்க பொண்ணு பண்ற மாதிரி dress லேயே துடைச்சாசா?.. ஜீன்லேயே வருது இதெல்லாம்.”

பொதுவா அதுதான் வழக்கம்.

“இல்ல இது நிஜத் தும்மல் இல்ல. பொய்த் தும்மல்”.

கண்களில் தீப்பொறி பறந்தது. பிறந்த ஊர் சிவகாசி பக்கம்.

“தும்மல்ல கூட பொய் சொல்ல ஆரம்பிச்சாச்சா?.”

“ அப்படி இல்லம்மா.. வந்து .. இந்த வள்ளுவர் காமத்துப் பால்லே என்ன சொல்லிருக்காருன்னா…”

“உம்ம்.. ஐம்பது வயசுலே பாசுரம் படிக்கலாமே.. ஏன் வள்ளுவர் இன்னும் ரெண்டு பால் கூட எழுதிருக்காரே- –தன்னெஞ்சறிவது பொய்யற்க..பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்.”

சண்டை எல்லாம் மறந்தே போனது.

படித்த குறளை மறக்காமல் வைத்திருந்து சரியான நேரத்தில் எடுத்து விட்ட மனைவியை, பெருமிதத்துடன் பார்த்தேன்.

கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டேன்

“GOD BLESS YOU.. நீடூழி வாழ்க”

பல முறை சொன்னேன்.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள