வீணா ஸ்டோர்ஸ் இட்லி வடையும், ஓணம் சத்தியாவும்

“அப்பா நாளைக்கு டான்ஸ் ப்ரோக்ராம் மல்லேஸ்வரத்துலே. நீங்க தான் டிரைவ் பண்ணி கூட்டிட்டு போனும்”. மகளின் ஆர்டர்.

“போடா… மல்லேஸ்வரம் எங்க இருக்கு. என்னால முடியாது. Uber புக் பண்ணி தரேன். நீயும் அம்மாவும் போயிட்டு வாங்க”.

“அப்பா.. uber அழுக்கா இருக்கும். I can’t sit there with my dance dress”.

“பெட்ஷீட் போட்டு உட்கார்ந்துக்கோ”

சிறிது நேரம் அம்மாவும் பொண்ணும் OPS-EPS மாதிரி குசு குசுவென்று சதித் திட்டம் போட்டது தெரிந்தது.

“அப்பா….” மகளின் கொஞ்சலிலேயே பாதி உறுதி கரைந்தது.

“போற இடத்துக்கு பக்கத்திலே தான் வீணா ஸ்டோர்ஸ் இருக்காம். பிரேக் பாஸ்ட் அங்கே சாப்பிட்டுட்டு வர வழிலே “எண்டே கேரளம்” restaurantல  போய் ஓணம் சத்தியா சாப்பிடலாம்னு அம்மா சொன்னாங்க” –

இருபது வருட திருமணத்தில் நம்ம weakness எல்லாம் அத்துபடி.

“இந்த தடவை தான் கடைசி”

************

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மாதிரி பெங்களுரு வீணா ஸ்டோர்ஸ் இட்லி வடை.

“எங்களுக்கு வேறு எந்த இடத்திலும் கிளைகள் இல்லை” என்ற போர்டு மாட்ட தேவையில்லாத புகழ்.

காலையிலும் மாலையிலும் மூன்று மணி நேரமே திறந்திருக்கும் என்றாலும், இட்லி காலி ஆகிவிட்டால் சீக்கிரமே கடை மூடப்படும்.

ஞாயிறு காலை மழையின் தூறலையும் பொருட்படுத்தாமல் நூறு பேர் சுட சுட இட்லியும், வடையும், கார பாத்தும், கேசரியும் நின்று கொண்டே சாப்பிட, பார்சல் வாங்க இன்னும் ஒரு பெரிய  Q.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா என்று பல மொழிகளில் பேசிய கூட்டம், தேசிய உணவாக இட்லியை,  சட்னி மட்டுமே ஊற்றி, உள்ளே தள்ளினர்.

என் திருநெல்வேலி நாக்குக்கு வடை மட்டுமே தேறியது.

நல்ல இட்லி எது என்று சூடு சற்று ஆறியவுடன் தெரிந்து விடும்.

சூட்டில் வாயில் கரையும் எல்லா இட்லியும் ஆறியவுடன் ரப்பர் மாதிரி இழுக்கும்.

வீணா ஸ்டோர்ஸ் இட்லியும் அப்படியே.

நெல்லை டவுன் கல்லூர் பிள்ளை-ஐயர் ஹோட்டல் இட்லி இரவு வரை மல்லிகை பூ மென்மை.

****************

ப்ரோகிராம் முடிந்து இரண்டு மணிக்கு “எண்டே கேரளம்”

26 வகைகளுடன், இலை வடிவில் plateல், சிறிய வாழை இலையில் ஓணம் சத்தியா.

காளன், ஓலன், அவியல் என்று தெரிந்த முகங்கள். தெரியாத சுவைகள்.

மதுரை மணியின் “மா ஜானகியும்” சோமுவின் “நகுமோவும்” கேட்ட காதுகளுக்குள் ரஞ்சனி-காயத்ரியின் இசை.

“அபங்க் என்னமா பாடறா..”

துவரனின் இடத்தில் உருளைக் கிழங்கு மசாலா. அதுவும் taste தான். ஆனா தமிழ்லே இல்லாத துக்கடாவா?

துவரனுக்கு பீன்ஸ் கூடவா கிடைக்கலே?

செங்கோட்டை ஆற்றங்கரை கிருஷ்ணன் கோயில் சத்தி சாப்பிட்ட நாக்குக்கு, மசாலா சரிப் படவில்லை.

புளி இஞ்சியும், இஞ்சித் தொகையலும், ரசமும் மட்டும்  இது சத்தி சாப்பாடு தான் என்று ஞாபகப் படுத்தின.

நாலு வகைப் பாயாசம்.

பருப்பு பாயசமும், சக்கைப் பிரதமணும் மற்ற குற்றங்களை மறக்கடித்தன.

வெளியில் வந்தால் நூறு பேர் சத்தி சாப்பிட Waiting.

மணியும் சோமுவும் எப்பவோ போயாச்சு.

இனிமே ரஞ்சனி-காயத்ரி காலம்.

உருளைக் கிழங்கு மசாலாவுடன் சத்தியா.

எல்லாம் அபங்க் மயம்.

***********

காரில் ஏறியவுடன்

“அடுத்த ப்ரோக்ராம் எப்போ அனன்யா? – மல்லேஸ்வரமா, ஜெய நகரா?”

Print Friendly
பகிர்ந்து கொள்ள

2 thoughts on “வீணா ஸ்டோர்ஸ் இட்லி வடையும், ஓணம் சத்தியாவும்”

  1. இந்த ஊரின் breakfast items எல்லாம் different ஆ இருக்கு. பொங்கலுக்கு பச்சடி வெச்சி சாப்புடரங்க. 😂😂😂

Leave a Reply