சங்க காலத்தில் மது வகைகளும், கடைகளும்-பாகம் 2

முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லவும் http://wp.me/p8HWyD-92

அந்த சண்டை ஒரு விளையாட்டை போலத்தான் இருந்தது.

ரத்தம் வேலுவைத் தவிர வேறு யார் மீதும் இல்லை. எல்லோர் மீதும் சேறுதான் அதிகம். நக்கர் இப்பொழுது கொஞ்சம் relax ஆகி இருந்தார். மெதுவாய் வேலுவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

“என்னய்யா சண்டை?”

“அறுத்த நெல்லை மாடு விட்டு போர் அடித்திருக்கிறார்கள் காலையில்” என்று ஆரம்பித்தார் நக்கர்.

“அதுக்கென்ன?”

.”இவர்களெல்லாம் கள் அருந்த வந்த போது போரடித்த துரும்பு காற்றில் பக்கத்தில் உள்ள உப்பளத்தில் சென்று விழுந்து விட்டது” புரிந்தது போல் இருந்தது வேலுவுக்கு.

தூரத்தில் கடல். கடலின் அருகே உப்பளம். ஆறு கடலை கலக்கும் அருகில் இந்த செழிப்பான ஊர். உப்பும் அரிசியும் சேர்ந்தே கிடைக்கும் இடம்.

போரடித்த நெல்லின் துகள் காற்றில் சென்று அங்கு இருந்த வெள்ளை உப்பின் மேல் ரத்தத் துளியாய் படிந்து விட்டது.

“அப்ப இவிங்கைல்லாம் யாரு?”

“உப்பளம் இவர்களுக்கு சொந்தமானது. பரதவர்கள்”

“உப்புலே உமி விழுந்ததுக்கா இவ்வளவு சண்டை. உங்க பேஸ்ட் ல உப்பு இருக்கா; உமி இருக்கானு கேட்டுட்டு இவ்வளவு பேர் வாராய்ங்க. அங்க தள்ளி விடுவீங்களா?”

சட்டென்று சண்டை நின்றது.

களத்துக்குள் நாட்டமை மாதிரி ஒருவர் நாலு பேருடன் வந்தார். தலையில் வெள்ளை முடி. அவரைக் கண்டதும் எல்லோரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர்.

“ஏன் ஐயா சண்டை? காற்று செய்த குற்றம். சரி விடுங்கள். உழவர்களே, நீங்கள் களங்கப் படுத்திய உப்புக்கு நிகருக்கு நிகர் நெல் கொடுத்து விடுங்கள்.”

எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.

“யார் அங்கே. அந்தப் பானையை எடுத்து வாருங்கள்”

“தேனின் கள். எல்லோரும் அருந்தலாம்.”.

“ஆகா எவ்வளவு நல்லவங்க. நாங்கல்லாம் தண்ணி அடிச்சுட்டு தான் சண்டை போடுவோம். இவங்க சண்டையை நிறுத்திட்டு தண்ணி அடிக்கறாங்க. அதுவும் இனிப்பா. பேசாம நாம இங்கேயே இருந்துற வேண்டியதுதான்”

நக்கர் வேலுவுக்கும் ஒரு கலயம் கொண்டு கொடுத்தார். இது வேறு சுவை. தேனை பதப்படுத்தி செய்த கள். சில பூக்களின் மொட்டுக்களும் மிதந்தன.

தான் எப்போது கவிழ்ந்தோம் என்ற நினைவே இல்லை வேலுவுக்கு.

*******************************

காலையில் நக்கர் வந்து எழுப்பினார்.

“ஐயா. இன்று நாம் பக்கத்து ஊருக்கு போகலாம். அங்கே ஒரு பெரிய கடை உள்ளது. இங்கு நீங்கள் அருந்திய கள்ளை விட இனிப்பானது கிடைக்கும். விலை அதிகம். நான் வாங்கித் தருகிறேன். ஆனால்..”

“என்னய்யா ஆனால்”

“அங்கு கொஞ்சம் ஆபத்து உண்டு. யானைகள் அதிகம். மேலும் அங்கு வலுவில் சண்டைக்கு அழைப்பவரும் வருவர்.”

“யாருகிட்டே பேசறே பெரிசு. எனக்கு ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடற மாதிரி. நானே எங்க ஊர்ல பெரிய ரௌடி தான்டா என் சிப்சு.”

நக்கர் அவரை நக்கலாய் பார்த்தார்.

போகும் வழியெங்கும் பசுமை. மாமரமும், பலா மரமும் நிறைந்து இருந்தன. ஊரை நெருங்க நெருங்க பசுமை இன்னும் கூடியது. தினை விளைந்து கமழ்ந்தது.

வேலுவுக்கு முதலில் கண்ணில் பட்டது சாலையின் ஓரத்தில் கீற்று சாய்ப்பின் கீழ் பானைகள். அதன் அருகில் இடுப்பில் சிறிய பானை தாங்கிய இளம் பெண்கள்.

“நக்கரே.. இந்த பொண்ணுங்கல்லாம் எதாவது விக்கராய்ங்களா?”

“ஐயா அந்த கள் நமக்கு வேண்டாம்”

“என்னது வேண்டாமா?” ஒரே ஓட்டமாய் ஓடி அடுத்து வந்த பெண் கடையில் வந்து தான் நின்றார் வேலு.

“ஏம்மா கள்ளு என்ன விலை?”

“நெல் கள் வேண்டுமா? தினை கள்ளா?” குரல் கினு கினுத்தத்து.

‘இது புது மாதிரியா இருக்கே. ஏதோ சிங்கிள் மால்ட் whiskey அப்படின்னு பைவ் ஸ்டார் ஹோட்டல்லே இருக்காமே. அது போல இருக்குமோ?’ வேலு யோசித்தார்.

“சரி ரெண்டையும் கொடு”

ஒரு சின்ன மண் கோப்பையில் இரண்டும் ஊற்றி குடுத்தாள்.

நக்கர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

“ஐயா. இது இனிக்காது. நாங்கள் இதையெல்லாம் அருந்துவது இல்லை”

அவர் சொல்லி முடிக்கும் முன் கோப்பை இரண்டும் காலி.

ராவா இரண்டு கட்டிங் அடித்த உணர்வு வேலுவுக்கு.

பத்து அடி எடுத்து வைக்கும் முன் படுத்து விட்டார்.

நக்கர் அவரை எழுப்பும் முன் மதியம் முடிந்து விட்டது.

*******************************

அவர்கள் கடையை வந்து அடையும் முன் மாலை ஆகி விட்டது. அந்த இடமே ஒரு பயம் கலந்த பிரமிப்பை கொடுத்தது.

மலை அடிவாரம். வீடுகள் அருகில் இல்லை.

ஒரு பெரிய ஓலை வேய்ந்த கூடம். கூடத்தின் உள்ளும் வெளியும் மரத்தில் கடைந்த மேசை நாற்காலிகள். ஆங்காங்கே கொழுத்தி வைக்க தயாராக சூழ்ந்து குச்சிகள்.

அவர்கள் இருவரும் கடையை நெருங்கவும் ஒரு யானையின் பிளிறல் கேட்டது. ஒரு அழுகையின் பிளிறலாய் நெஞ்சை உருக்கி பயமுறுத்தும் சத்தம்.

ரௌடி மாதிரி இருந்த நாலு பேர் கையில் ஒரு குட்டி ஆண் யானை. தாயை சற்று முன்தான் பிரிந்த சோகம் அதன் கண்ணில்.

தெலுங்கு படத்தில் வரும் தடியர்கள் போல் இருந்த அவர்கள் நால்வர் கையிலும் வாள். இரத்தம் இன்னும் சொட்டிக் கொண்டிருந்தது. ஒருவன் கையில் யானைத் தந்தம்.

வேலுவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

தாயிடம் இருந்து பிரித்துக் கொண்டு வந்த யானையை கடம்ப மர நாறால் கடையின் கதவில் கட்டிப் போட்டனர்.

நக்கர் அவரை வேறு வாசல் வழியே அழைத்து சென்றார்.

“ஆரம்பமே வில்லத்தனமா இருக்கே?. நம்ம ஊர் டாஸ்மாக்கே போதும்டா சாமி. எப்படியாவது பொழுது விடியறதுக்குள்ள வீடு போய் சேரனும்”.

உள்ளே நல்ல கூட்டம். எங்கு பார்த்தாலும் வேலும் வாளும் சாய்த்து வைத்து விட்டு மது அருந்திக் கொண்டிருந்த கூட்டம்.

“இன்னொரு தோப்பி..” சத்தமாய் தோப்பிக் கள்ளு கேட்கும் சத்தம் கடை எங்கும் எதிரொலித்தது..

தளிர் இலைகளை ஆடைகளாய் அணிந்து இருந்த பெண்கள் அங்கும் இங்கும் அலைந்து எல்லோருக்கும் தோப்பி ஊற்றிக் கொடுத்தனர்.

இலை மறைவு காய் மறைவு.

நக்கரைப் பார்த்ததும் கடையின் உரிமையாளர் போல் இருந்தவர் சிரித்து வரவேற்றார்.

“ஐயா.. இவர் பேர் வேலு. நமது நண்பர். உம்மிடம் இருப்பதிலேயே பழைய தோப்பி கள் குடும்”

பெண்கள் வேலுவை ஒரு விதமாய்ப் பார்த்தனர்.

“அட அட அடா. எங்க பார்த்தாலும் திரிஷாவும் நயன்தாராவுமா தெரியரான்களே. நடுவுலே இவிங்க வேற.. தெலுங்கு பட அடியாள் மாதிரி திரியறாய்ங்க”.

“இதை வைத்துக் கொண்டு பழைய தோப்பி குடு” அந்த நாலு வாலிபரும் ஒரு பெண்ணை மறித்தனர். அவள் அவர்கள் கையில் இருந்த தந்தத்தை வெறுப்புடன் பிடுங்கிக் கொண்டு சென்றாள்.

“ஏய்.. போய் இன்னும் ஒரு தந்தம் எடுத்து வா” வேறொரு மேசையில் ஒரு தல ரௌடி மாதிரி இருந்தவன் தன் மகனை விரட்டினான்.

அவன் எடுத்து வந்த தந்தத்தை பெண் கையில் திணித்தான் “இப்ப குடு. இன்னும் தோப்பி ஊற்று”

“யானைகளை கொன்று, கொண்டு வரும் தந்தம். யவன நாட்டில் நல்ல விலைக்கு போகிறது” உரிமையாளர் விளக்கம் கொடுத்தார்.

“யானைகளின் அருமை தெரியா மூடர்கள். பாரி இருந்தது வரை எல்லாம் ஒழுங்குடன் இருந்தது. மூவேந்தர்கள் ஆட்சி வந்ததில் இருந்து இவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை” நக்கர் வாய்க்குள் முணு முணுத்தார்.

“இவங்களுக்கு வேற வேலையே கிடயாதா?”

“உண்டு ஐயா. தினை விழைந்த வயல்களை யானைகளிடம் இருந்து காப்பாற்றும் வேலை. இன்னும் சிறிது நேரத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கி விடும். இவர்கள் எல்லாம் சென்று அவற்றை விரட்ட வேண்டும்”

வேலுவுக்கு யானையின் பிளிறல் அப்போதே கேட்க ஆரம்பித்து விட்டது.

“என்னது யானை கூட்டம் கூட்டமா வருமா? இங்கேயும் வருமா?”

“வரும். ஆனா வராது” நக்கர் சிரித்தார்.

“இது ஏன் டயலாக் இல்ல. இவனுக்கு எப்படி தெரிஞ்சுது” வேலு திகைத்தார்.

“முன்பு வரும். இப்போது வருவதில்லை. சுற்றி நெருப்பு வளையம் ஏற்றி விடுவார்கள். மழை பெய்யும் நேரம் யானைகள் கீழிரங்காது”

ஒரு பெண் இரு புறமும் அடைத்த நாலு மூங்கில் குழாய் கொண்டு வந்தாள்.

“ஐயா இதுதான் இங்கு இருப்பதிலேயே பழைய சரக்கு. உங்கள் நண்பர் உடல் தாங்குமா?”

“யாருகிட்டே. நாங்கல்லாம் விஷத்தையே லிட்டர் கணக்குலே உள்ள தள்ளினவங்க. தோப்பி எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி”

நக்கர் முகத்தில் பயம் தெரிந்தது.

“நண்பரே. இது சாதாரண கள் அல்ல. மரத்திலேயே பழுத்த நல்ல மாம்பழத்தின் சாறு. கோடையில் பழுத்த நல்ல பலா பழத்தில் பிசு பிசு என ஓட்டும் சுளைகள். இவை ரெண்டையும் கலந்து நசுக்குவார்கள். அதில் தேன் ஊற்றி கலந்து பின் அவற்றை ஒரு மூங்கிலில் அடைத்து வைத்து விடுவார்கள். பல ஆண்டுகள் கழித்து திறந்து, திறந்த உடன் குடிப்பார்கள்.”

அந்தப் பெண் ஒரு மூங்கிலை உடைத்தாள்.

முழுக் கடையும் கள்ளை முகர்ந்தது.

“நக்கரே நீங்க முதல்ல குடிங்க” வேலுவின் முகத்தில் பயம்.

“இல்லை ஐயா. நீர் தான் விருந்தினர்”

வேலு கையில் மூங்கிலை எடுத்து வாயின் அருகில் கொண்டு போனார்.

வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. ஒருவன் ஏதோ கத்திக் கொண்டே வந்தான். கூடிக் குடித்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் வில்லையும் வாளையும் எடுத்துக் கொண்டு ஓடினர்.

“ஐயா யானைக் கூட்டம் ஊருக்குள் வந்து விட்டது. ஒரு பெரிய ஆண் யானை மட்டும் இங்கு மதம் பிடித்து வருகிறதாம்” நக்கரும் கடை உரிமையாளரும் ஒடி மறைந்தனர். . பெண்கள் எல்லாம் சென்ற இடம் தெரியவில்லை.

வேலுவுக்கு பயத்தில் ஓன்றும் தோணவில்லை. யாரையும் காணவில்லை. தொண்டை அடைத்தது. தன்னிச்சையாய் தோப்பியை வாயில் ஊற்றினார்.

“ஐயோ! அம்மா! எரியுதே” நாக்கில் பாம்பு கொட்டினால் போல் வலித்தது. தரையில் விழுந்து புரண்டார்.

எதிரில் ஒரு யானை நெருங்கி வந்தது.

“ஐயோ. யானை. தோப்பி.. யானை. தோப்பி”

தலயில் யாரோ குளிர்ந்த நீரை உற்றியது போல் இருந்தது.

“ஆகா மிதிக்கறதுக்கு முன்னாடி குளிப்பாட்டுதே”

“யோவ் வேலு எழுந்திரியா.. எழுந்திரியா. ஒரு கட்டிங்லேயே மட்டை. யானை, தோப்பின்னு உளறிக்கிட்டு. கடை மூடனும். எழுந்து வீட்டுக்கு போ”

வேலு கொஞ்சம் தெளிந்தார்.

“ஆகா.. இது வரைக்கும் எல்லாம் கனவா? பிழச்சேண்டா சாமி” வேட்டியை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டார்.

தள்ளாடி எழுந்தார்.

ஒரு மூங்கில் குடுவை டொட்டேன்று கிழே விழுந்து உருண்டு ஓடியது.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply