கபிலரின் தோழி

அகநானூறு – பாடல் 2

கபிலர் பழந்தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான நபர்.

கண்ணதாசன், வைரமுத்து போல சங்க காலத்தில் பிரபலமான கவிஞர் என்றால் கபிலரைத்தான் சொல்ல வேண்டும்.

சங்கப் பாடல் தொகுப்புகளில் அதிகப் பாடல்களை எழுதியவ்ர் அவர்தான். காதல், வீரம் என்று பல வகைப் பாடல்கள் எழுதியிருக்கிறார். மென்மையான உணர்வுகள் கொண்ட பாடல்கள். அறிவு செறிந்த வரிகள்.

அவர் கவிதையில் வரும் பல பெண்கள் அறிவுடையவர்கள். கல்வி கற்றவர்கள். தவறை தட்டிக் கேட்டவர்கள்.

கோதை ஒரு உதாரணம்.

**************

“நான் வேனா அவரைப் பார்த்து பேசிட்டு வரட்டா?” கோதையின் குரல் தாமிரபரணி நதிக் கரையில் வீசிய காற்றில் அழுந்தி மெலிந்தது.

“பக்கத்திலேயா இருக்கு. தேர்ல வர அவருக்கே ஒரு நாள் ஆகுது. நீ எப்படிப் போவே?” வள்ளி சலித்துக் கொண்டாள்.

வைகாசி முடிந்து ஆனி ஆரம்பம். சாரல் கட்டத் தொடங்கி விட்டது.

“பொதிகைலே மழை வேற ஆரம்பிச்சுடும். முன்ன மாதிரி அடிக்கடி அவர் வரக் கூட முடியாது”

மயிலன் வள்ளியை காதலிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகி விட்டது.

உள்ளத்தாலும், உடலாலும் எல்லா விதத்திலும் நெருங்கி விட்ட உறவு.

வள்ளியின் தந்தை முத்து வணிகன். மலை மேல் உள்ள குடியில் மகளைக் கட்டிக் கொடுக்க விரும்ப மாட்டான். ஊர் அறியாமல், உறவு அறியாமல் வளர்ந்தது இவர்கள் உறவு.

மயிலனும் திருமண பேச்சை எடுப்பதாக தெரியவில்லை.

“அப்பா உப்பு எடுத்துகிட்டு அங்கே போறாரு. முடிநாகனும் வரான்.” கோதையின் அப்பா உமணர் – உப்பு வணிகர். முடிநாகன் கோதையின் காதலன்.

“ச்சே.. உனது மகிழ்ச்சி பயணத்திக்கு நடுவிலே என் கவலை உனக்கு எதுக்கு” நெருங்கிய தோழி ஆனாலும் நமக்கு கிடைக்காத ஓன்று அவளுக்கு கிடைக்க போகும் பொறாமை குரலில்.

“வள்ளி நீ அங்கே போனா அவரை எனக்கு உடனே பாக்கணும் போல இருக்குன்னு அவர்கிட்டே சொல்லேன். மழை தொடங்கிட்டா. அவர் இங்க வர கூட முடியாது” காதலில் தோய்ந்து அழுகையின் தொடக்கத்தில் குரல்.

எப்போதும் பளிச்சென்று சிரித்த முகத்துடன் இருக்கும் வள்ளியின், சீவி முடிக்காத தலையும், அழுது வடிந்த முகமும், புழுதி படிந்த உடையும், மெலிந்த கைகளில், நில்லாமல் விழுந்து விட்ட வளையல் இல்லாத தேமல் தோன்றிய கைகளும் கோதைக்கும் அழுகையை வர வைத்தன.

அவள் திரும்பி எடுத்து வைத்த நடையில் உறுதி தெரிந்தது. முடியை பிரித்து விசிறி மீண்டும் கொண்டை போட்டுக் கொண்டாள்.

*************

ஒரு நாள் பயணத்தில் பொதிகை மலை சென்றனர் உமணர்கள்.

பல குடிகள் சேர்ந்தது ஊர். பல ஊர்களின் தலைவன் வேந்தன். வேந்தனின் படைத் தலைவன் மயிலன்.

நதி நாகரீகம் பலம் பெற தொடங்கிய காலம். நதிகளின் அருகில் நகரங்கள் தொடங்கி, அம் மன்னர்கள், மலை வாழ் குடிகளுடன் போரிடத் தொடங்கினர்.

யவணருடன் நடந்த வணிகத்துக்கு மலையில் விளையும் மிளகும், பாறைகளில் கிடைக்கும் விலை மதிப்பற்ற கற்களும் அவசியம்.

அன்றும் இன்றும் என்றும் போருக்கு அடிப்படை காரணம் வணிகம்தான்.

**************

மேலே சென்றதும் மயிலனின் வீட்டை கண்டுபிடிப்பது சுலபமாயிருந்தது.

மயிலன் வீட்டின் வெளியே குதிரையில் ஏறப் போனவன் கோதையைக் கண்டு திகைத்து நின்றான்.

“கோதை.. நீ எப்படி இங்க? வள்ளியும் வந்திருக்காளா?”

“இல்லை நான் மட்டும்தான்”

முடிநாகன் தொலைவில் கண்ணியமாய் நின்று கொண்டான்.

“வள்ளி..எப்படி இருக்கா?”

“அவ வீட்டை சுத்தி அப்பா காவல் போட்டுடாரு. வீட்டுலே சண்டை.  ஆனா அவ யார் சொன்னாலும் கேட்காம உன்னையே நினைச்சுட்டு இருக்கா”

மயிலன் நல்ல உயரம். அழகன். ஆனால் தாடி வளர்ந்து, தலை முடி பெருகி பார்க்க பாவமாய் இருந்தான்.

“அவ அப்பா கிட்ட பொண்ணு கேட்க பயமா இருக்கு கோதை. கண்டிப்பா மாட்டேன்னு சொல்லிடுவாரு. என்னால அதை தாங்க முடியாது”

சிறிது நேரம் மௌனம்.

“உங்க ஊர் ரொம்ப நல்லா இருக்கு மயிலா” பேச்சை மாற்றினாள்.

“உன் தோழிக்கும் பிடிக்கணுமே. தாமிரபரணி மாதிரி ஆறா இருக்கு இங்கே”

“எவ்வளோ பெரிய வாழை மரங்கள். மலை முழுதும் இருக்கும் போல. ஒரு பழம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடுது. பக்கத்திலேயே பலா. அவ்வளவு இனிப்பு. ஒன்னு சாப்பிட்டா திகட்டிடுது.”

இருவரும் நடந்து கொண்டே பேசிக் கொண்டு வந்தனர்.

“மயிலா அங்கே பாரேன். அந்தக் குரங்கை”     

செழித்து வளர்ந்த சந்தன மரம். அதைச் சுற்றி மிளகுக் கொடி படர்ந்திருந்தது. அந்தக் குரங்கு சிறிது நேரம் அம் மரத்தையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தது

“அப்படி என்னதான் இருக்கு அந்த மரத்திலே?”

“அது சந்தன மரம். சுற்றி படர்ந்து இருப்பது மிளகு. இது மலைலே தான் வளரும். யவனர்கள் எடைக்கு எடை தங்கத்தை கொட்டி வாங்கிட்டு போறாங்க. உங்க பாண்டிய மன்னனுக்கும் இது தெரியும்”

குரங்கு அதை பார்த்து கொண்டிருந்ததே தவிர அதில் ஏற முயலவில்லை.

மலைச் சரிவில் வாழையும் பலாவும் செழித்து வளர்ந்திருந்தன.

பக்கதிலேயே ஒரு சுனை. தண்ணீர் நிரம்பி வழிந்தது. அச் சுனையின் மேலே தேனடை. தேன் விழுந்து சுனையே கள்ளாகிப் போயிருந்தது.

அந்தக் குரங்கு பழங்களை சாப்பிட்டு, தேனை குடித்து மயங்கி விழுந்தது.

மல்லாக்க கவிழ்ந்து படுத்த அக் குரங்கின் மேலே மகரந்தம் விழுந்து மறைத்தது.

கோதை சிரித்தாள்.

“பாரேன் உங்க ஊர்லே குரங்குக்கு கூட கேட்காமலேயே எவ்வளவு இன்பங்கள் கிடைக்குது. எளிதா இதெல்லாம் இருக்கும் போது கஷ்டப்பட்டு என் மரம் ஏறனும்?”

மயிலனின் முகம் மாறியது.

“கோதை. நானும் அந்த குரங்கு மாதிரின்னு சொல்ல வர இல்லே”

“ச்சே ச்சே.. அப்படி இல்ல மயிலா. ஏறினாத்தானே மேல போக முடியுமான்னு குரங்குக்கு தெரியும். எளிதா கிடைக்கற பழமும் கள்ளும் கொஞ்ச நாளானா போரடிச்சுடாது?. மேல இருக்கும் இளம் சந்தன இலையும், மிளகுப் பழமும் எப்படி இருக்கும்னு தெரிய வேண்டாமா? யவனர்களுக்கு விற்க வெட்டிட்டு போய்ட்டாங்கன்னா குரங்கு வேற மரம் தேடிப் போகணுமே?”

கோதையின் அறிவும், மென்மையாய் தோன்றி,  ஆழமாய் குத்திய அவளின் உவைமையும் தேக்கனை உலுக்கின.

“உங்க ஊர்லே ஓடுற தாமிரபரணிலே என்னமோ இருக்கு கோதை. இவ்வளவு அறிவும், ஊசிக் குத்தற மாதிரி குசும்பான பேச்சும் அதைக் குடிச்சாதான் வரும் போலே” மயிலன் விரக்தியாய் சிரித்தான்.

“எங்க ஊர்லே பொண்ணு எடுத்தாலும் அந்த தண்ணி நிறைய தருவோம்.. அப்ப தெரிஞ்சுரப் போது என்ன கலந்திருக்கு தண்ணிலேன்னு”

அவன் தலை குனிந்து இருந்தது.

“மயிலா.” தலை நிமிர்ந்தான்.

கோதை அவனை உற்று நோக்கினாள். “வேங்கை பூ பூத்து குலுங்க ஆரம்பிச்சாச்சு எங்க ஊர்லே. இன்னும் பத்து நாள்லே முழு நிலவு வந்திரும். அன்னிக்கு நல்ல நாள். நிறைய கல்யாணம் நடக்கும். நான் வரேன். மழை தொடங்கி வெள்ளம் வந்துட்டுன்னா, எளிதா கடக்க முடியாது”

சரிவில் ஓடி தொலைவில் நின்ற முடிநாகனுடன் கை கோர்த்து பேசிக் கொண்டே சென்றாள்.

சிறிது நேரத்தில் அவன் அவளை அணைத்து உச்சி முகர்ந்தான்.

அவள் முகம் தூக்கி அவன் இதழைக் கவ்விக் கொண்டாள்.

வந்த வேலையை முடித்ததற்கு இருவரும் கொடுத்து கொண்ட பரிசு

**************

மறு நாள் உப்பு வண்டிகள் காலியாய் ஊருக்குள் திரும்பின. தாமிரபரணி நதியில் வண்டிகளை கழுவினர். மாடுகள் இளைப்பாறின.

மூன்று தேர்கள் பெரும் சத்தத்துடன் ஊருக்குள் நுழைவதை கோதை மகிழ்ச்சியோடு பார்த்தாள். நடுத் தேரில் மயிலன் பரபரப்பான முகத்தோடு நின்றிருந்தான்.

அடுத்த வந்த முழு நிலவு நாளில் மங்கள மகளிர் நெல்லும் பூவும் கலந்த தாமிரபரணி நீரை தலையில் ஊற்ற மயிலனுக்கும், வள்ளிக்கும் திருமணம் நடந்தது.

மணம் முடிந்த மறு நாள், தேரை மயிலன் ஓட்ட வள்ளியும், கோதையும் சிரித்த முகத்துடன் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

“இது என்ன வள்ளி, மயிலன் கழுத்துலே கருப்பா?.. ஆண்களுக்கு பசலை வருமா? இல்லையே.. இது பல் பட்ட காயம் மாதிரி இருக்கே! தலை நாள் இரவில் உன் வேகம் கொஞ்சம் அதிகமோ?  

வள்ளி பொய்க் கோபத்தோடு “மயிலா தேரை நிறுத்து. இந்த வாயாடியை இங்கியே இறக்கி விட்டுடலாம்” என்றாள்.

ஊர் எல்லையில் கண்கள் ததும்ப கோதை விடை பெற்றுக் கொண்டாள்.

தேர் மலை நாட்டுக்குள் நுழையவும் பருவ மழை தொடங்கவும் சரியாக இருந்தது.

அடுத்த இரண்டு வாரமும் நல்ல மழை.

மயிலனும் வள்ளியும் வெளியே வரவே இல்லை.

மழை வெறித்த முதல் நாளில் இருவரும் கொஞ்சிக் கொண்டே வெளியே வருவதை அருகில் சந்தன மரத்தின் மேலே இருந்து ஒரு குரங்கு தன் துணையுடன் வேடிக்கை பார்த்தது.

*********

அகநானுறு 2, கபிலர்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம்சொன்னது
கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலைப்
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய
வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத் தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை பைம்புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர் கொண்டன்றே.

 

Print Friendly
பகிர்ந்து கொள்ள