அம்மா ஆக்க தெரிந்த கணவா, அப்பா ஆவது என்று?

Postpartum Depression – முதல் முறையாய் தாய் ஆகி, உடலில் எழும் மாற்றங்களால் மனங் கலங்கும் பெண்களும், அதைப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களும் நேற்றும் இன்றும் என்றும் உண்டு. அதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணே சொல்வதாக,  ஒரு மன்னன் பாடியது.

************************

சூர்யா பையனை கொஞ்சம் தூக்கிக் கொடேன். பால் கொடுக்கனும்” அவந்திகா பெட்ரூமில் இருந்து குரல் உயர்த்தினாள். பால் கட்டி வலித்தது. முன்னறையில் கை பேசியில் ஆழ்ந்திருந்தவனுக்கு கேட்டதோ கேட்கவில்லையோ. தானே எழுந்து வலியோடு பையனை தொட்டிலில் இருந்து எடுத்தாள். குழந்தை குடிக்கக் குடிக்க வலி குறைந்தது. அவனை பக்கத்தில் படுக்க வைத்து விட்டு, உடையை உடனே சரி செய்யாமல், தன் உடம்பை சிரிது நேரம் வெறித்து பார்த்தாள். மார்பகங்கள் புதிதாய் தோன்றின. நிறம் மாறி தேமல் படர்ந்தது போல் இருந்தது. இரண்டு வருடங்கள் முன் திருமண ஆன போது இப்படி இல்லை. கேவலுடன் வந்த அழுகையை அடக்கி கண்ணைத் துடைத்து கொண்டாள். சூர்யா அவள் கேவேல் கேட்டு திரும்பி பார்க்காதது இன்னும் அழுகையைத் தூண்டியது. உடையை சரி செய்து கொண்டு சரிந்து படுத்து சத்தம் இன்றி அழுதாள்.

அவன் இன்னும் கை பேசியிலிருந்து கண் எடுக்கவில்லை.

***********************

கல்யாணம் முடிந்து தேனிலவு. வால்பாறையில். ஒரு வாரமும் நல்ல மழை. முயங்கிக் களைத்து அணைத்துக் கிடந்த ஒரு நெருக்கமான நேரம். கண் இரண்டிலும் மெதுவாய் மென்மையாய் முத்தமிட்டு, பின் காதோரமாய்.

அவந்திமா. இது ரெண்டும் எப்படி இருக்கு தெரியுமா?”

ஏதோ உளறப்போற. சொந்த சரக்கா? சாண்டில்யனா?” அவன் சாண்டில்யன் பைத்தியம்.

அதற்கும் பழசு. பெரிய ஆண் யானை. நிமிர்ந்து இருக்கும் பருத்த ரெண்டு தந்தங்கள். அதிலே இரும்பாலே செஞ்ச பூணை மாட்டி கோட்டையயை உடைப்பாங்க. அது மாதிரி” சொல்லி முடிக்கும் முன் காது வலிக்க கிள்ளினாள்.

என் கண்ணைப் பத்தி ஏதோ சொல்லப் போறேன்னு பார்த்தா!. படவா. போதும். அவ்வளவுதான் இன்னிக்கு.”

பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று

கோட்டை பெருங்கதவு. அதை உடைக்க வரும் அழகான தந்தங்களை உடைய யானை. அத் தந்தங்களில் மாட்டப்பட்ட இரும்பினால் ஆன பூண் (கிம்புரி). அது போன்ற கண்களையுடைய என் மார்பகங்கள். நான் தள்ளி விட்டாலும் அகலாமல் அவற்றை அணைத்து இருப்பார்.

*******************************

பிரசவ அறை. சுகப் பிரசவம். கூடவே இருந்தான், சூர்யா. பிடித்த கையை விடவே இல்லை. பெண் வேண்டும் என்று கொள்ளை ஆசை. பேரெல்லாம் பெண் பெயராகவே குறித்து வைத்திருந்தான். ஒரே வரலாற்றுப் பெயர்கள். சாண்டில்யன் நாயகிகள்.

அவள் வலியில் துடித்த போது கண்களில் கண்ணீர்.

குழந்தை ஆணா பெண்ணா என்று கூட கேட்கத் தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தான் டாக்டரைக் கேட்டாள். “பையன்” என்று கேட்ட அவன் முகம் மிக வாடிப் பின் சரியானதை பார்த்து கண் கலங்கியது.

*************************

பால் குடித்துப் பக்கத்தில் தூங்கிய குழந்தையை அனைத்து நினைவுகளோடு அவந்திகா. கண்களில் இரண்டிலும் கண்ணீர் இன்னும் நிற்கவில்லை. “சூர்யாக்கு என்ன ஆச்சு?” அவளை பார்த்துக் கொள்வதில் குறை இல்லை. ஆனால் மூன்று மாதமாக அவளிடமிருந்து தள்ளியே இருந்தான். பையனை தூக்க முயற்சிக்கவேயில்லை. பெரிய படுக்கையில் எப்பொழுதும் நடுவில் பையன், இரு புறமும் ஓரமாய் அவனும் அவளும். சந்தோஷமாய் அவன் சிரித்துப் பார்த்து மாதமாகிறது. பக்கத்தில் போனால் லேசாய்க் கட்டிக் கொண்டு பின் விலகி விடுகிறான்.

 *************************

போன வாரம். அவன் கல்லூரி Reunion. குழந்தையோடு, அவளும் சென்றிருந்தாள். நிறையப் பெண் சிநேகிதிகள்.

சூர்யா.. இதுதான் உன் ஜோதிகாவா? எங்களை எல்லாம் ஏமாத்திட்டு…”

கல்யாணம் இன்னும் செய்து கொள்ளாத சிலர் அவன் மேல் விழாத குறையாக.

அவர்கள் உடை இன்னும் கல்லூரிக் காலம் போலேவே குறைந்து இருந்தது. தன் மேல் குழந்தையின் பால் குடித்த மணம் அதிகமாய் வீசுவதாகத் தோன்றியது அவந்திகாவுக்கு..

சூர்யா.. நான் கார்லே இருக்கேன். tired ஆ இருக்கு. நீ இருந்து பேசிட்டு வா”.

அவன் வர ஒரு மணி நேரம் மேல் ஆனது.

 ****************************

நினைவுகள் முன்னும் பின்னும் அலைய அவந்திகா தூங்க வில்லை. அவனும் போனில் இருந்து தலை நிமிரவில்லை.  அவன் முன் சென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்து, அவன் தாடை தொட்டு தூக்கினாள்.

சூர்யா கோபமா!  பொண்ணு பெத்துக் கொடுக்கலேன்னு கோபமா? நான் நல்லா இல்லே இல்லே? எப்ப பாரு ஒரு பால் வாடை வருதுல்லே?. போயிருச்சில்ல? உன் சாண்டில்யன் book அட்டை படத்திலே வர மாதிரி இருந்ததெல்லாம் போயிருச்சுல்ல? உன் காலேஜ் friends மாதிரி டிரஸ் போட முடியாதுல்லே” நடுக்கம் குரலில்

அவளை எரிச்சலாய் பார்த்தான்.

“உனக்கு என்ன ஆச்சு?. நான் என்ன செய்யலே இப்போ.?” குரல் உயர்ந்தது. தலை குனிந்து குலுங்கினாள்.

நான் வேணா ஒரு மாசம் பையனோட எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரவா? உனக்கும் ஒரு change இருக்கும். காலேஜ் reunionலே, அந்த பொண்ணுங்கல்லாம் உன்னை எங்கேயோ trekking போலாம்னு கூப்பிட்டாங்களே. நீ வேணாப் போயிட்டு வா” குரல் உடைந்தது.

சூர்யாவின் கையில் இருந்து கைபேசி கிழே விழுந்தது. சற்று நேரம் மௌனம்.

நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு பிரேக் இருந்தா நல்லதுதான் சூர்யா. குளிச்சுட்டு வரேன். யோசிச்சு வை. நாளைக்கு கார்லே கொண்டு விடேன் ப்ளீஸ்” என்று அவனை  வலிய வரவழைத்த முறுவலோடு கெஞ்சினாள்.

அவன் பதில் சொல்லும்  முன் சென்று விட்டாள்.

 

*******************************************

குளித்து முடிக்க நேரம் ஆனது. அழுத தடம் போகவில்லை.

கட்டில் மாறி இருந்தது. சுவர் ஓரமாய் தள்ளிக் கிடந்தது. சுவர் மறைத்து அடுக்கிய தலையணைகள். பக்கத்தில் ஒரு ஓரத்தில் பையன். நடுவில் இடம் விட்டு மறு ஓரத்தில் அவன். அவனும் குளித்து அவளுக்குப் பிடித்த lavender  வாசம். மௌனமாய்ச் சென்று நடுவில் முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

பின்புறமாய் அணைத்துக் கொண்டான். பின் கழுத்தில் சூடாய் இதழ் பட்டது. “அவந்திமா.. sorry டா”

உடனே அவன் பக்கம் திரும்பினாள். நீர் தேக்கிய கண்கள். “நீ என்னை இப்படி கூப்பிட்டே எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா?”

நான் நேர்ல பார்த்த உன்னோட வலி, என் சுத்தம் பத்தாதுன்னு நீயே எப்போதும் குழந்தைக்கு செய்யற வேலை!. என் சுத்தம்தான் உனக்கு தெரியுமே. எங்கே நான் பக்கத்திலே வந்தா உனக்கும் ஏதாவது வந்திருமோன்னு ஒரு பயம். பால் வேற கொடுக்கிறயா? எங்க infection ஆயிருமோன்னு” பேசிக் கொண்டிருந்தவன் பக்கத்தில் சென்று கன்னத்தில் முத்தமிட்டாள். உப்பு இனித்தது.

பொண்ணு தான் ஆசை. ஆனாப் பொண்ணுன்னா மட்டும் உனக்கு வலி கொஞ்சமாவா இருந்திருக்கும்? எனக்கு அதெல்லாம் வருத்தம் இல்லே. தலை நிக்காத பையனை தூக்க பயம். ஆனா இன்னிக்கு நான் தூக்கினப்போ சிரிச்சான் பாரு. உன்னை மாதிரியே இருந்தது. I was an idiot. I am sorry அவந்திமா”

அவன் முகம் புதைத்த அவள் கழுத்து நனைந்தது.

அறைக்குள் கம்மென்று புது மண் வாசனை. வெளியில் பலமாய் மழைத் தூறல்.  மண்ணில் மழை விழும் சத்தம். நன்றாக கொத்திக் கிளறி விட்ட மண், மழைக்கு நெகிழ்ந்து கொடுக்கும் இசை.

சூர்யா… உனக்கு நம்ம honeymoon ஞாபகம் இருக்கா?”

குழந்தை மட்டும் காலை வரை அயர்ந்து புன்னகையுடன் சுவர் பார்த்து தூங்கியது.

**********************

அம்மா ஆக்க தெரிந்த கணவா,
அப்பா ஆவது என்று ?

மாசம் ஆனால் பெருமை,
வாசம் வந்தால் தனிமையா?

என்று வாடித் தான் போனாள்

தாயானாள் தலைவி,
தனியானான் தலைவன்.

அப்புறம் தெரியும்,
அப்புறத்திற்கு அப்புறம் ?

குழம்பித் தான் போனான்  – நாகை ஆனந்தன்

*****************************

கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற
மீன் முள்ளன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அவ் வயல் தண்ணிய வளங் கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடஇத்
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறுஞ்சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என்
மகன் வயின் பெயர்தந்தேனே அதுகண்டு
யாமும் காதலம் அவற்கு எனச் சாஅய்
சிறுபுறம் கவையினனாக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே
நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே?

கூன் முள் முள்ளி – வளைந்த முட்களை உடைய செடி; குவி குலை கழன்ற – குவிந்த கொத்தை பிய்த்து; மீன் முள்ளன்ன வெண் கால் – மீனின் எலும்பை போன்ற வெண்மையான காம்பு; பொய்தல் மகளிர் – பெரிய

பொருத – பிளந்த; யானை மருப்பின் இரும்பு – கிம்புரி எனும் ஓர் அணிகலன்; முயங்கல் விடாஅல் – விலக விடாமல் அணைத்து யான் ஓம் என்னவும் ஒல்லார் – நான் தள்ளி விட்டாலும் விடாமல்

தடுத்த – செல்ல விடாமல்; தடஇத் திதலை அணிந்து – சரிந்து தேமல் உடைய; தேம் கொள் – பால் பற்றி இனிமையான

நறுஞ்சாந்து – நல்ல சந்தானம்; கேழ் கிளர் – நல்ல நிறம்; அகலம் – மார்பு; முயங்கல் – அணைப்பு

தீம் பால் – இனிமையான பால்; அஞ்சினர் – பயந்தார்; ஆயிடை கவவுக் கை – இடையை அணைத்த கைகள்; நெகிழ்ந்தமை – நழுவிய

காதலம் – அன்பு; சாஅய் – பணிவுடன்; சிறு புறம் – சிறிய முதுகு; கவையினன் – அணைத்தான்

தண் – குளிர்ந்த ; செஞ் – நல்ல;

*******************************

வளைந்த முள்ளிச் செடியின் குவிந்த குலைகள்.   மீன் முள் போன்ற காம்புகள் உடைய அதில் தொங்கும் மலர்கள்.

விழாவுக்காக அம் மலர்களை கூட்டி அணியும் அழகு மகளிர். அப் பெண்கள் வாழும் ஊர்,  குளிர்ந்த வயல்கள் நிரம்ப உடையது. அவ் ஊரின் தலைவன் என் கணவன்.

அவனை நான் என்ன  சொல்ல முடியும்?.

முன்பு அவர் என்னவெல்லாம் சொல்லி என்னைப் புகழ்வார்?

கோட்டை பெருங்கதவு. அதை உடைக்க வரும் அழகிய இரு தந்தங்களை உடைய யானை. அத் தந்தங்களில் மாட்டப்பட்ட இரும்பினால் ஆன பூண். அதைப் போல் அழகினை உடையது என் மார்பு என்றெல்லாம் சொல்லுவார். நான் வேண்டாம் என்று தள்ளினாலும் என்னை முயங்கிக் கிடப்பார்.

இப்போது நமக்கு ஒரு மகன் பிறந்து விட்டான். அவனுக்கு தாய்ப் பால் கொடுக்கிறேன். என் மார்பகங்கள் சரிந்து தேமல் உண்டாயின.

மணக்கும் சந்தனம் அணிந்த அவர் மார்பை தழுவிக் கொள்ள என் மனம் நாடுகிறது. எங்கே என் முலைப் பால் அவர் மீது பட்டு விடுமோ என்று பயந்து தள்ளிப் போகிறார்.

முன்பு என்னை கட்டி கொண்டால் அகலவே செய்யாத அவர் கைகள் இப்போதோ எளிதில் நழுவி விழுந்து விடுகின்றன.

 செவிலித் தாயின் கையில் என் மகன். நான் அவனை நோக்கி நகர்ந்தேன். “நான் என் மகனின் அன்புக்கு மட்டுமே உரியவள். உங்களுக்கு உங்கள் ஊர்ப் பெண்களின் அன்பு உள்ளது”

அதனைக் கேட்டு, “நானும் அவனை நேசிக்கிறேன்” என்று கூறி என்னை வந்து முதுகை கட்டி அணைத்துக் கொண்டார்.

நன்றாக கொத்திப் பல முறை  உழுது விட்ட மண், மழைக்கு நெகிழ்ந்து கொடுக்கும். அது போல் என் குழம்பிய நெஞ்சமும் அவரை ஏற்றுக் கொண்டது.

Print Friendly
பகிர்ந்து கொள்ள