மௌன ராகமும் கபிலரும்.

மௌன ராகம். கல்லூரிக் காலங்களில் மறக்க முடியாத ஒரு படம்.

Hostelல் எல்லா அறையிலும் ரேடியோ இல்லாத காலம். இந்தப் படத்தில் வரும் “சின்ன சின்ன வண்ணக் குயில்” பாட்டு எந்த அறையில் இருந்து வந்தாலும், உடனே ஓடிச் சென்று கேட்பேன். அபாரமான மகிழ்ச்சி தெறிக்கும் பாட்டு. மனம் எதையாவது நினைத்து சோர்வடையும் போது கேட்கும் ராசாவின் பாடல்களில் இதுவும் ஓன்று.

எனக்கு என்னவோ, கார்த்திக் பாத்திரத்தை விட, மோகனைத்தான் பிடித்தது.

கல்லூரிக் காலத்தில் கார்த்திக் மாதிரி பையன்களை ரசித்த எல்லா பெண்களும், மோகன்களை கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்பது என் கருத்து. ஒரு வேளை, ஒரு பெண்ணுக்கு தந்தை ஆனவுடன், கார்த்திக் மாதிரி திரிந்தவர்களும், மோகனாக மாறி விடுகிறார்கள் போலும்.

அந்தப் படத்தில் வரும் இக் காட்சி, ஒரு இனிய உறவின் ஆரம்பத்தை காட்டுகிறது.

இக் காட்சியின் ஆரம்பத்தில் வரும் ஊடலும், முடிவில் வரும் ரேவதியின் சிரிப்பும், நாணமும், கடைசி சில நொடிகளில் அவள் காட்டும் கனிவும் காதலும் ஒரு இனிய கவிதை.

இதே ஒரு மாதிரி ஒரு காட்சியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார் கபிலர்.

கலித்தொகையில் வரும் பாடல் – 52.

************************

மாயோன் கோயிலுக்கு விளக்கு ஏற்ற சென்று கொண்டிருந்த வள்ளியின் முதுகு குறு குறுத்தது. யாரோ தன்னை பின் தொடர்ந்து வருவது போல உணர்வு. திரும்பி பார்த்தாள். அவனேதான். மூன்று நாள் அவள் செல்லும் இடமெல்லாம் அவனைப் பார்க்கிறாள்.

இந்த ஊரைச் சேர்ந்தவன் இல்லை. ஆனாலும் எங்கோ பார்த்த முகம். எப்போதுமே சிரித்த குறும்பு கொப்பளித்த முகம். அவள் அவன் கண்களை சந்திக்க நேர்ந்த போதெல்லாம் கை அசைத்தான்.

பார்த்தால் மறு முறைப் பார்க்க சொல்லும் உயரமும், கம்பீரமும் நிறைந்த ஆளுமை. தனித்து தெரியும் வெளுத்த நிறம்.

உடையிலும் நடையிலும் செல்வத்தின் அடையாளங்கள்.

காலில் கழலும், சிலம்பும், மேல் கைகளில் கேயுரம், மணிக் கட்டில் கங்கணம், இரு கை விரல்களிலும் பவளமும், மரகதமும்.

தூரத்தில் இருந்தே வரும் சந்தன மணம்.

சட்டென்று திரும்பினாள். அவன் அருகே நெருங்கும் வரை பொறுத்து இருந்தாள்.

“ஏய்.. யார் நீ? ஏன் எப்போ பாரு என் பின்னாடியே வரே?. நான் யார் தெரியுமா?”

அந்த குறும்புக் கண்கள். எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது வள்ளிக்கு.

அவன் பதில் சொல்லவில்லை. இன்னும் நெருங்கி வந்தான். கண்கள் அவளை அளவெடுத்தன.

சிவப்பு நிறத்தில் சேலை கட்டி இருந்தாள். கால்களில் சிலம்பும் வீரக் கழலும்.

ஒரு காலை மடித்து இடுப்பை சற்றே வளைத்து..

அவன் கண்கள் இடுப்பில் தங்கின. குறுகிய இடுப்பில் மெல்லிய தங்க ஒட்டியாணம். சிவப்பு நிறப் புடவை அவளின் வெண்மையான இடுப்பை மேலும் எடுத்துக் காண்பித்தது. கண்கள் அதை விட்டு வர மறுத்தன.

மனம் மட்டும் இன்னும் மேலே செல்ல அலைந்தது.

அம்மாவின் கையை விட்டு சற்று பின் தங்கி, எதையோ வேடிக்கை பார்த்து, முன் சென்ற அம்மாவிடம் ஓடிச் சென்று கை கோர்த்துக் கொள்ளும் குழந்தை போல் கண்கள் விரைந்து மனதுடன் சேர்ந்து கொண்டன.

சரேலென்று விரிந்தது உடல்.

சேலை சற்று விலகி இருந்தது. மெல்லிய கச்சை அவளின் வளர்ச்சியை கட்டுப் படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

வெள்ளி போல் மின்னும் தந்தங்களில் இரும்பு கவசம் (கிம்புரி) மாட்டியது போல் மார்பகங்கள். அத் தந்தங்களை உடைய யானைகள் கோட்டையை உடைப்பது போல் அவள் அவன் மனதை துளைத்தாள்.

அவன் ரசிப்பதை பார்த்து அவள் சற்றே நாணிக் குனிந்து பின் உடனே நிமிர்ந்தாள். அவள் முகம் கோபத்தை காட்டியது. ஆனால் மனம் ஒத்துழைக்கவில்லை.

“தட் தட்” என்று அவன் முன் இரு கையையும் சேர்த்து தட்டினாள்.

அவன் கண்கள் நிமிர்ந்து அவளை நோக்கின. ஆனால் அவன் மனம் கச்சையை விட்டு அகல மறுத்து விட்டது.

“ஏய்.. நீ என்ன ஊமையா. நான் யார் தெரியுமா?”

“தெரியுமே.. உன் அப்பா பெயர் தேக்கன். பெரிய நெல் வணிகர். அம்மா பெயர் கோதை. நீ அவர்களின் ஒரே செல்ல மகள். விரைவில் என் வருங்காலத் துணைவி”

“யாருடா நீ? உனக்கென்ன பைத்தியமா?”

“வள்ளி என்னைத் தெரியலையா? நான்தான் மருது. சின்ன வயசுலே சேர்ந்து விளையாடுவோமே. மதுரைக்கு எழு வருடம் படிக்கப் போய் இருந்தேன்”

அவள் கண்ணில் மின்னல் வெட்டியது. அதை அவன் பார்த்து விட்டான் என்று அவளுக்கும் புரிந்தது.

“அதனாலே என்ன?. நீ வந்து நின்னா நான் உன்னை உடனே காதலிக்கணுமா. நீ பெரிய பாரி மன்னன் மகனா?”.

அவன் தந்தை பாரியின் தேர் படைத் தலைவன்.

“நாளைக்கு தேனருவி கிட்டே வா. நாலு மணிக்கு. உன் கூட பேசணும்”

“மாட்டேன். வர மாட்டேன்.” தலை ஆடியது. மனம் போகலாம் என்றது.

“வருவே.. நீ வருவே. தனியா வருவே. நாலு மணி. நீல நிறப் புடவை”

“போடா. எங்கிட்ட அந்த நிறமே இல்ல”

திரும்பி ஓடிப் போய் குரல் ஏழுப்பினான். குதிரை ஒன்று ஓடி வந்தது. ஓடிய வேகத்தில் தாவி ஏறியவனை பார்த்து அவள் முகம் மலர்ந்ததை அவன் பார்த்தபடியே கை அசைத்து மறைந்து விட்டான்.

**********************

மாலை நேர வெயிலுக்கு இதமாய் சாரல் அடித்து தேனருவி, வெள்ளியாய் உருகி ஓடியது.

மேகம் இல்லாத வானத்தின் நிறத்தில் அவள் சேலை அணிந்து காத்துக் கொண்டு இருந்தாள். அவன் வரவில்லை. திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

ஒரு பாறையின் பின்னால் இருந்து அவள் முன்னால் குதித்தான்.

“மாட்டேன்னு சொன்னே. வர மாட்டேன்னு சொன்னே. அந்த நிற சேலையே உன்கிட்ட இல்லேன்னு சொன்னே”. எதோ ஒரு பழத்தை கடித்துக் கொண்டே பேசினான்.

வாடி இருந்த முகம் சிறிதே மலர்ந்து பின் கோபத்தை தேக்கியது.

“எனக்கு உன்னை பிடிக்கலே. என் பின்னாடி இன்னுமே வாரதேன்னு சொல்லத்தான் வந்தேன்”

“ச்சே ச்சே.. பயம். உனக்கு பயம். என்னை பிடிச்சுருமோன்னு பயம்”

“உன்னையா..நீ ஒரு முரடன். சின்ன வயசுலே என்ன பாடு படுத்துவே. முடியை இழுப்பே. நான் கட்டின மணல் வீட்டை உடைப்பே. தலையிலே இருந்த பூ மலையை பிரித்து உதருவே. நாங்க விளையாடும் போது பந்தை எடுத்துட்டு ஓடுவே. என்னையே சுத்தி சுத்தி வருவே. உன்னைக் கண்டாலே எனக்கு அப்பவும் பிடிக்காது” பட பட என்று பேசினாள்.

“அப்ப நேத்து ராத்திரி பூரா தூங்காம என்னைப் பத்தியே யோசிச்சிருக்கே.”

“ஐயே. சீ போடா பட்டி” முகம் வலிப்பு காட்டியது.

“அப்ப சரி. நான் உங்க அம்மாகிட்டே பேசிக்கரேன். நாளைக்கு 11 மணிக்கு வீட்டுக்கு வரேன்.”

“வீடு சுத்தி காவலுக்கு ஆள் போட்டிருக்கு. ஒரு குரங்கும் உள்ளே வர முடியாது”

“நாளைக்கு பகல்லே வரேன். கோதை அம்மாகிட்டே சொல்லி வை. பெரிசா விருந்தெல்லாம் வேண்டாம். நல்ல மோர் கொடுத்தா போதும்”

அதே சத்தம். குதிரை வந்தது.

ஏறி விரைந்தான்.

மறைந்தான்.

**********************

காலையில் இருந்தே நிலை கொள்ளவில்லை வள்ளிக்கு. வாசலுக்கும் முற்றத்துக்குமாய் நடந்தாள். நல்ல வேலையாக அவள் அப்பா ஊரில் இல்லை. வீட்டை சுற்றி பெரிய மதில் சுவர். அதைத் தாண்டி பெரிய தோட்டத்துக்குள்ளே வீடு. யார் வந்தாலும் உள்ளே வந்து அனுமதி பெற்று தான் வர விடுவர் காவலர்.

குதிரையின் குளம்படி சத்தம்.

“அம்மா..வீட்டுலே யாரும் இல்லையா? கொஞ்சம் தண்ணி வேணுமே”.

வள்ளிக்கு தெரிந்து விட்டது. அவன்தான். எப்படி உள்ளே வந்தான்?. ஏன் காவலர்கள் நிப்பாட்ட வில்லை?

அவள் வாசலுக்கு வரும் முன் அவள் அம்மா பார்த்து விட்டாள். ஏதோ பேசினான் அம்மாவிடம்.

“வள்ளி.. உள்ளே போய் அந்த தங்கக் கோப்பையிலே தண்ணி கொண்டு வா. பாவம் இந்த பையன் களைச்சு போய் வந்திருக்கு” சொல்லி விட்டு அம்மா நெல் முற்றத்துக்கு சென்று விட்டாள்.

வள்ளி வாசலுக்கு வந்தாள்.

“எப்படி உள்ளே வந்தே? என்ன சொன்னே வாசல் காவலர் கிட்டே?”

“அவன் என் நீண்ட நாள் தோழன். உன்னை கல்யாணம் பண்ணிக்க அம்மா கிட்டே பேசப் போறேன்னு சொன்னேன்”

“அவனை.. அப்பா கிட்டே சொல்லி என்ன பன்றேன் பாரு”

“எங்கே! அப்பா வீட்டுலே இல்லையா.. ஐயா தேக்கரே. ஐயா …” கூவினான்.

“வாயை மூடு” கையால் அவன் வாயைப் பொத்தினாள். அவள் கையைப் பிடித்து அங்கேயே கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டான். அவளும் சிறிது நேரம் கழித்தே கையை உதறினாள்.

“இந்தா தண்ணி. குடிச்சுட்டு கிளம்பு” .. தொட்டேன்று கீழே வைத்தாள்.

“அப்புறம். எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?”

“போடா பட்டி. ஆசையைப் பாரு”.. உள்ளே போகத் திரும்பினாள்.

கையைப் பிடித்து “ஏய் பதில் சொல்லிட்டு போ” அவள் திரும்பிய வேகத்தில் அவன் நகம் பட்டு வலித்தது.

“ஐயோ அம்மா. இவன் என்ன செய்யறான் பாரு” குரல் கேட்டு அவன் அம்மா ஓடி வந்தாள்.

“என்ன ஆச்சு வள்ளி?”

பேச்சு வரவில்லை. அம்மா அவனைத் பார்த்தாள்.

“பெரிசா விக்கினான். பயந்துட்டேன்…” என்று அவனை கை காட்டினாள்.

போலியாய் விக்கினான் – “அவ்..அவ்”..

“ஏம்மா.. பாத்து தண்ணி கொடுக்க வேண்டாமா? பாவம் தம்பி”

அம்மா அவன் தலையைத் தோளில் சாய்த்து முதுகைத் தடவி கொடுத்தாள்.

விக்கல் சிறிது நேரம் தொடர்ந்தது.

அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

சிரித்துக் கொண்டே இருந்தான்.

“நன்றி அத்தை. விக்கல் போயிடுச்சு”

“இருப்பா சாப்பிட கொஞ்சம் இனிப்பு அவல் கொண்டு வரேன். பாவம் பசியா இருக்கே போல இருக்கு”.

அம்மா விலகிச் சென்றதும், அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தாள்.

கோப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் வீசினாள். தண்ணீரை துடைத்துக் கொண்டே அவனும் சிரித்தான்.

அவனைப் பார்த்த அவள் பார்வையில் கனிவும், காதலும் மலர்ந்தன.

************

சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்

மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய

கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி

நோதக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை

அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்

உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்

தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை

வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு

அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா

அன்னை அலறிப் படர்தர தன்னை யான்

உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்

கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்

செய்தான் அக் கள்வன் மகன்.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply