தொப்புள் கொடி

முற்றிய தயிரைப் பிசைந்த 

மென்மையான விரல்களைத்  துடைத்த துண்டை

கழுவாமல் உடுத்திக் கொண்டு

கண்களில் புகை கரிக்க

தானே துழாவிச் சமைத்த புளிக் குழம்பு

இனிமையாக இருக்கிறது என்று

கணவன் உண்பதில்

மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது 

இந்த அழகான பெண்ணின் முகம்

400 காதல் கவிதைகள் குறுந்தொகை பாடல் -  167 சுஜாதா

 

“வெளிலே வெயில் அடிக்கற மாதிரி இருக்கு, ஆனா உள்ளே ஏன் இந்தக் குளிரு குளிருது?” தூக்கம் கலைந்து எழுந்து காலை கீழே வைத்தவுடன் சில்லென்றது ஜானகிக்கு.

வானத்தில் ஒற்றை மேகங்கள் சூரியனை மறைக்க முயன்று தோற்றன. குளிரில் மொட்டை அடிக்கபட்ட மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தளிர்க்க ஆரம்பித்திருக்க, வீட்டின் உள்ளே சிறு தொட்டியில் துளசிச் செடி ஓன்று வாடி இருந்தது.

“Winter முடிஞ்சு போச்சு. இப்ப வான்னு” சொன்ன மகளை நம்பி வந்திருக்க கூடாது.

நியூ யார்க் JKF ஏர்போர்ட்டில் மதியம் இறங்கி மருமகனுடன் Danbury, Conneticut வரும் வரை நாலு வார்த்தை தான் பேசினாள். தூக்கம் கண்ணை சுழற்றியது. வந்த உடன் தலை வலி என்று தூங்கி விட்டாள்.

இரவு எட்டு மணி இருக்கும் என்று தோன்றியது. பெரிய வீடு. சுற்றி காடு மாதிரி இடம். இப்போது தான் சூரியன் மறைந்து, இருள ஆரம்பித்து இருந்தது. பறவைகள் சத்தத்துடன் அடையத் தொடங்கின. ஒரு அணில் இவளைப் பார்த்து ஆள் புதிதாய்த் தோன்ற, தலை தூக்கி முறைத்து விட்டு ஓடியது போல் இருந்தது.

நான் அமெரிக்கா வர மாட்டேன் என்று சொல்லி விட்ட கணவர் ஞாபகம் வந்தது. வந்து சேர்ந்து இன்னும் அவரிடம் பேசவில்லை. அவருக்கு இரண்டு வாரம் சாப்பிட எல்லாம் செய்து வைத்து விட்டு வந்து இருந்தாள்.

ஜானகிக்கு சமைக்க பிடிக்கும். ஒரு ரசமும், வத்தக் குழம்பும் செய்தாலும் தனித்து தெரியும் சுவை. உறவினர் மெச்சும் கை பக்குவம். ஆனால் அவரிடம் இருந்து ஒரு போதும் பாராட்டோ, குறையோ வந்ததில்லை. கேட்டாலும் மௌனமோ அல்லது ஒரு புன்னகையோதான் பதில்.

அப்பா மாதிரியே பொண்ணும். சமையல் பக்கமே வந்ததில்லை.

“அவ இஷ்டபட்ட மாதிரி கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. நம்ம பேச்சை கேட்டா எல்லாம் பண்றா. நான் வரல. நீ வேணா போயிட்டு வா”.

கார் கார்த்த வெள்ளாளப் பெண் பிராமணப் பையனை காதலித்து மணந்த வருத்தம்.

“பிராமணப் பையன் இவ்வளவு கருப்பாவா இருப்பான்?. நம்ம பொண்ணு எழுமிச்சை கலரு”

“திருநெல்வேலி வெள்ளாருக்கே கட்டி கொடுக்க மாட்டோம். தஞ்சாவூர் தாண்டினாலே இளப்பம். அதெல்லாம் அந்தக் காலம். இப்ப கொஞ்சம் படிச்சுட்டாலே படி தாண்ட அலையுதாளுக”

உறவினரின் குத்தல்கள் பெண்ணின் உறுதியில் மோதி மழுங்கின.

கல்யாணம் அவர்கள் வழியிலேயே நடத்த வேண்டும் என்று பையனின் அம்மா அடம் பிடித்தாள்.

பையனின் சத்தத்தில் இரண்டு தாலியும் கட்டிக் கொள்ள ஏற்பாடானது.

திருமணம் முடிந்த உடன் அமெரிக்காவில் வேலை.

தூரம், தாய் மகள் உறவிலும் விழுந்தது.

*********************

“அம்மா எழுந்துட்டன்னா அழச்சுண்டு வாயேன் ஆனந்த்” பிராமண பாஷை தொற்றிக் கொண்டு விட்டது கொஞ்சம்.

“என்ன மாமி.. நம்ம பாஷை கலக்கறேளே” என்று

முகத்தை திருப்பி இதழ் கவ்வியவனை தள்ளி விட்டாள்.

“சொன்ன வேலையை செய்யுவே முதல்லே” பேச்சில் அவன் படித்த புதுமைப்பித்தன் தெறித்தார்.

“முதல்லே கூலி. அப்புறம் வேலை..” இடுப்பை வளைத்தன அவன் கைகள்.

சிறிது நேரத்தில் ஜானகியே கீழே இறங்கி வந்து விட்டாள்.

“தலை வலி பரவாயில்லையா அம்மா” ஆனந்த் தான் கேட்டான்.

“நீங்க கொஞ்ச நேரம் கார்டன்ல இருங்க. காப்பி தரேன்”

கார்டன்ல் இருந்து கிச்சன் தெரிந்தது.

*********************

புதிதாய் சமைக்கும் மகளிடம் ஒரு பரபரப்பு இருந்தது.

ஒரு கண் சமையலிலும் மறு கண் அம்மாவிடமும் அலைந்தன.

நாலு அடுப்பும் எரிந்து கொண்டிருந்தது.

ஒரு அடுப்பில் எண்ணை. சூட்டில் புகை பரவி அவள் கண்ணை கரித்தது தெரிந்தது. கையில் கத்தியுடன் வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தாள். புகைத்த கண்ணில் கைகள் பட்டு இன்னும் கண்ணீர்.

கையில் துண்டுடன் அவள் முகத்தை துடைக்க வந்தவனை எரிந்து விழுந்தாள். “போய் அம்மா கூட வெளியிலே இரு”

சிறிது நேரத்தில் எல்லாம் டேபிளுக்கு வந்தன. அரக்க பரக்க கிச்சனை சுத்தம் செய்தாள்.

கடைசியாய் தயிர் சாதம் பிசைந்து வைத்து விரல்களில்ய் ஒட்டி இருந்த தயிராய் அதிசயமாய் கட்டியிருந்த சேலையிலேயே துடைத்துக் கொண்டாள்.

“சாப்பாடு ரெடி”..

ஊரில் மழை பெய்கிறதா, flight எப்படி இருந்தது போன்ற அர்த்தமற்ற பேச்சில் கரைந்தது நேரம்.

“எனக்கு தயிர் சாதம் மட்டும் போறும்” ஆனந்த் சாதமும் புளிக் குழம்பும் ஊற்றிக் கொண்டான்.

“அனு.. சூப்பர். நீ எப்பவும் பண்றதோட ரொம்ப நல்லா வந்திருக்கு” ரசித்து சாப்பிட்ட ஆனந்தை பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.

தலை குனிந்து சாப்பிட்ட அம்மாவுக்கு தெரியாமல் அவன் தலையைக் கலைத்து காற்றில் முத்தமிட்டாள்.

தயிர் சாதம் நன்றாகவே இருந்தது. இஞ்சியும், மிளகாயும், மாதுளம் பழமும் கலந்து கம்பில் செய்தது. கொஞ்சமாய் முந்திரி மிதந்தது.

சிறு வெங்காயம் போட்ட புளிக் குழம்பு – காரமாய் எண்ணை மினு மினுத்தது.

முதல் கவளத்திலேயே ஜானகிக்கு தெரிந்த சுவை, தொண்டை குழியை அடைத்தது. தன் உணவின் சுவை.

கலப்பு மணத்திலும் மாறாத அதே மணம்.

கருவிலும் இடுப்பிலும் சில மாதங்கள் மட்டுமே தன்னுடன் சமையல் அறையில் இருந்த பெண்ணின் கையிலும் அதே கை பக்குவம்.

தொப்புள் கொடியின் வழியே கலந்த ருசி.

*************

“அம்மா.. நீ இன்னும் தூங்கலே?”

இருட்டில் படுக்கையில் உட்கார்ந்து இருந்தாள் ஜானகி.

அருகில் அமர்ந்து அனு, அம்மாவின் கையைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்.

“உனக்கு இன்னும் என் மேல கோபம். நானே பையன் பாத்துண்டேன்னு கோபம். அவா பாஷை பேசறேன்னு கோபம். இல்லம்மா?”

கையில் சொட்டென்று விழுந்தது அவளுடையதா, அம்மாவுடையதா தெரியவில்லை.

“என்ன இருந்தாலும் நான் ஓம் பொண்ணுதானே. சீக்கிரம் மன்னிச்சுடேன். இல்லை உன் பேத்தி வந்தப்பறம் உங்கிட்ட சண்டை போடப் போறா” ..

அனுவைத் தன் மடியில் சாய்த்து, தலையைக் கொவினாள்.

புடவையில் கண்ணீரின் ஈரம்.

“சந்தோஷமா இருக்கியா அனு?”. அனுவின் கன்னத்தில் கண்ணீர் சூடாய்ப் பட்டு தெறித்தது.

தலையை ஆமாம் என்பதாய் புடவையில் புரட்டினாள்.

அம்மாவின் புடவை மணம். நல்ல உணவின் வாசனை.

நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.

கை தலை முடியை கோவிய படி இருந்தது.

“அம்மா, ஆனந்த் ஒரு சாப்பாட்டு ராமன். பசி வந்தா மட்டும் தான் பெரிசா கோபம் வரும். நீ இருக்கற வரைக்கும் அவனுக்கு உன் சமையல் கத்து கொடுத்துடு. அவனே சமைச்சுடுவான். என் பாடு நிம்மதி”

“சரிடா” என்று சிரித்தாள் அம்மா.

“இது என்ன முடி பூரா ஒரே சிக்கு. பக்கராச்சி மாதிரி. எண்ணை தேய்க்கறதே இல்லையா நீ?. போ. போய் சீப்பு கொண்டு வா”

கருவின் வழியே கசிந்த கை மணத்தில் உறவின் தூரம் தொலைந்தது.

***********************

குறுந்தொகை 167, கூடலூர் கிழார்

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்

குவளை உண்கண் குய் புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்

இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல்
முகனே

முளி தயிர் – கட்டித் தயிர்; காந்தள் – மலர் வகை (மலபார் லில்லி)

கழுவுறு – துடைக்க அல்லது கழுவ; கலிங்கம் – ஆடை

கழாஅது உடீஇ – துவைக்காமல் அணிந்த ;

குவளை – நீல நீர் அல்லி

குய் – வறுக்கும் ; கழம – பரவ

துழந்து அட்ட – கலந்து சமைத்த ; பாகர் – குழம்பு, கறி

நுண்ணிதின் – நுண்ணுர்வு – (delicate manner); மகிழ்ந்தன்று – மகிழ்ந்தாள்;

ஒள் – ஒளிர்கின்ற ; நுதல் – நெற்றி


Print Friendly
பகிர்ந்து கொள்ள