தமிழ் நாட்டு கோயில் வரலாறு – ஒரு கட்டமைப்பு (framework)

 

தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா பெரிய கோயில்களுக்கும் தல புராணம் இருக்கிறது. அவற்றின் படி எல்லா கோயில்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.

“தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதைகள் அவைதான்” என்பார் சுஜாதா.

படிக்க சுவையான கதைகளுடன் இருந்தாலும், அவற்றில் வரலாற்றைத் தேடினாலும் கிடைக்காது.

அதைக் கோயில்களிலும், தேவாரப் பாடல்களிலும், பிரபந்தங்களிலும் தான் தேட வேண்டும்.

******************

காஞ்சிபுரம் 

பல வரலாற்று தேடல்களின் ஆரம்பப் புள்ளி. 

ஐயப்ப பக்தர்களின் முட்டல் மோதல்களுக்கு இடையே காஞ்சி வாரதராஜர். 

கொஞ்சம் அசப்பில் புத்தரை நினைவு படுத்தும் பெரிய சிலை.

குலந்தரும், செல்வம் தந்திடும் 

அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்  நிலந்தரம் செய்யும்

நீள் விசும்பருளும், அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும், மற்றும் தந்திடும்

பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமமே

பிரபந்தங்களில் முக்கியமானதாக கருதப்படும் இந்த பாசுரத்தை எழுதிய திருமங்கை ஆழ்வாருக்கும் இந்த பெருமாளுக்கும் உள்ள தொடர்பை பற்றி கதைகள் இருக்கின்றன. அவர் காலம் பிற்கால சோழர் காலம் (1000 ADக்கு பின்)

முதல் ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் பாடலும் இந்த பெருமாள் பேரில் இருக்கிறது. அவர் காலம் பல்லவர் காலம் (600-700AD).

அத்தியூரான் என்று அவர் பெருமாளைக் கொஞ்சுவார். அத்தியூர் எண்பது காஞ்சியின் மற்றொரு பெயர்.

அத்தியூரான் புள்ளையூர்வான், அணிமணியின்

துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான், – மூத்தீ

மறையாவான் மாகடல் நஞ்சுண்டான்  றனக்கும்

இறையாவான் எங்கள் பிரான்.

நஞ்சை (விஷம்) உண்ட நீலகண்டனான சிவனுக்கும் பெருமாள்தான் கடவுள் என்று சைவர்களை சீண்டும் வரிகள்.

ராபர்ட் க்ளைவ் இந்த பெருமாளுக்கு ஒரு மகர கண்டி என்ற மாலையை கொடுத்திருக்கிறான். அந்தத் திருடனின் காலம் (1750-1775 AD).

அப்படியானால் இந்த கோயிலைக் கட்டியவர்கள் யார் யார்? எப்போது?

************************

பெருமாளை சேவித்து விட்டு காலை உணவு சரவண பவனில்.

சுவை குறைந்து போன சரவண பவனில் இட்லியும் தோசையும் சாப்பிட்டு விட்டு காப்பி என்று பெயரில் மட்டும் இருந்த திரவத்தை குடித்து முடித்து காஞ்சி கைலாசநாதர் கோயில் செல்லும் போது மணி பத்தை தாண்டி இருந்தது.

ஊருக்கு சற்று வெளியே இருந்த கைலாச நாதரைப் பார்க்க பத்து பேர் மட்டுமே இருந்தனர்.

தமிழ் நாட்டின் கோயில் வரலாறு இந்த இடத்தில் இருந்துதான் தொடங்கியது என்ற பெருமை உடைய கோயில். ஆனால் கூட்டம் என்னவோ வரதராஜப் பெருமாள் கோயில் தங்க பல்லிக்குதான்.

இவருக்கும் வரதராஜருக்கும் உள்ள கட்டிட வரலாற்று சங்கிலி எது?

**************************

தமிழ் நாட்டின் கோயில்கள் பற்றி  சங்க இலக்கிய காலத்திலேயே குறிப்புகள் இருக்கின்றன. சிலப்பதிகாரம் (400AD), சிவன் கோயில், பெருமாள் கோயில், முருகன் கோயில், கிருஷ்ணன் கோயில் என்று ஊரில் இருந்த கோயில்களின் பட்டியலையே தருகிறது.

பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீலமேனி நெடியோன் கோயிலும்

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்” (சிலம்பு)

ஆனால் ஏழாவது நூற்றாண்டுக்கு முந்திய கோயில் எதுவும் இப்பொது இல்லை.

அவை எல்லாம் செங்கல், சுதை, மரம் கொண்டு கட்டப்பட்டன. அழிந்து போயின.

மகேந்திர வர்ம பல்லவன் (600-630AD) “(அவை) எதுவுமின்றி கல்லால் கட்டினேன்” என்று ஒரு கல்வெட்டில் பெருமையாக குறிப்பிடுகிறான்.  பின்னால் வந்த சோழர்கள் பல கோயில்களை “கற்றளியாக” (கல்லால் ஆன கோயில்) மாற்றியதை குறிப்பிடும் கல்வெட்டுகள் இருக்கின்றன.

எனவே தமிழ் நாட்டில் கோயில்கள் 300 -400 AD ஆண்டுகளிலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றின் எந்த அடையாளமும் இப்போது இல்லை – இலக்கிய குறிப்புகள் தவிர.

கோயில் எப்படி இருக்க வேண்டும் (கருவறை, அர்த்த மண்டபம் etc.) என்ற இலக்கணம் இந்த காலத்தில் உருவாகியிருக்க வேண்டும்.

புறச் சான்றுகளுடைய  கோயில் வரலாறு 600 ADக்கு பிறகே கிடைக்கிறது. 

****************************

கட்டிடக் கலையின் பரிமாணத்தை வைத்தும், அங்குள்ள கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ள மன்னர்களின் பெயர்களை வைத்தும், அவற்றைப் பாடியுள்ள நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தை வைத்தும், கோயில்களின் காலங்கள் கணக்கிடப்படுகின்றன.

கோயில்களின் பரிமாணத்தை ஒரு ஐந்து பாகமாக பிரித்து பார்க்கலாம்.

  1. குடவரை, ஒற்றைக்கல் தளிகள் காலம்  (500-600 AD)
  2. தனிக் கோயில்கள் – பல்லவர் காலம். (600 – 700 AD)
  3. சோழர் காலம். (700-1200)
  4. பாண்டியர், நாயக்கர் காலம். (1200-1600)
  5. நிகழ் காலம் (1900-)

*************

ஆரம்பத்தில் கோயில்கள் மலை அல்லது குன்று சார்ந்த குகைகளைக் குடைந்து தான் கட்டப்பட்டன.

சமண மதத்தை பின் பற்றி இந்து கடவுள்களுக்கும் குடைவரைக் கோயில்கள் அமைக்க தொடங்கினர். மாமல்லபுரம், திருப்பரங்குன்றம், நாமக்கல் பெருமாள், மதுரை லாடன் (சமணர்) கோயில் அருகே உள்ள நரசிம்மர் என்று பல கோயில்களில் மூலவர் குகையில் இருப்பார். கோயில் அதில் தொடங்கி பரந்து விரிந்து பின்வரும் காலங்களில் கட்டப்பட்டு இருக்கும்.

அதன் பின்பு ஓற்றைக்கல் தளிகள். தனியாக இருக்கும் ஒரு பெரிய பாறையை குடைந்து கோயில்கள் கட்டப்பட்டன. மகாபலிபுரம் இரதக் கோயில்கள், திருநெல்வேலி அருகில் கழுகு மலையில் தொடங்கி முடிக்காமல் விடப்பட்ட கோயில் – இந்த வகை.

எல்லோரா கைலாசநாதர் கோயில் இந்த வகையில் ஒரு அற்புதம்.

கழுகு மலை முருகன் ஒரு காலத்தில் சமணக் கடவுள் என்ற உண்மையை சொன்னால் அடிக்க வருவார்கள்.

*****************

அதன் பின் தனிக் கோயில்கள். மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலும், காஞ்சி கைலாசநாதரும் தான் இவற்றின் ஆரம்பம். காலம் 700-800 AD.

தனியாக கட்டப்பட்டு இன்றும் பூஜை நடக்கும் பழமையான கோயில் கைலாசநாதர் கோயில் தான்.

மாகாபலிபுரம் கடற்கரை கோயிலையும், இதையும் கட்டியவன் ஒரே பல்லவ மன்னனே – இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன். அவன் மனைவி பெயர் ரங்கபதாகை.  

இதைப் பார்த்த பின் தான், ராஜ ராஜ சோழன், இதை மாதிரி பதினோரு மடங்கு உயரம் உள்ள கோயில் ஓன்று கட்ட வேண்டும் என்று பெரிய கோயிலைக் கட்டினான்.

கைலாசநாதர் கோயில் ஓரு கலை அதிசயம். இதைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுத வேண்டும்.

கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவனின் பேரன் இரண்டாம் நந்திவர்மன் தான் காஞ்சி வரதராஜர் கோயிலைக் கட்டினான்.

கைலாசநாதர் கோயில்

***********************

தனிக் கோயில்களின் கட்டிட தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி தூண்களில் தெரிந்து விடுகிறது.

பல்லவர் கால தூண்களின் தலைப் பாகம் மழுக்கென்று இருக்கும்.

சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் அவை கொஞ்சம் அழகு பெறுகின்றன.

விஜயநகர, நாயக்கர் காலத்தில் அவை வாழைப் பூவின் வடிவத்தில் மாறி விடுகின்றன.

*************

பல்லவ கால கோயில்களில் மாமல்லபுரம், கைலாசநாதர், காஞ்சி வைகுந்த பெருமாள் முக்கியமானவை.

சோழர் காலம் கோயில்களின் பொற்காலம்.

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரத்தில் தொடங்கி, பரந்தாகச் சோழன் காலத்து புள்ளம்மன் கோயில், ராஜராஜனின் தஞ்சை பெரிய கோயில், அவன் மகனின் கங்கை கொண்ட சோழபுரம், இரண்டாம் ராஜாராஜனின் தாராசுரம், மூன்றாம் குலோத்துங்கனின் திரிபுவனம் கோயில் என்று அவர்கள் படைத்த ஒவ்வொரு கோயிலும் ஒரு கலை அருங்காட்சியகம்.

தாராசுரம் – ஒரு அற்புதம்

பாண்டிய காலத்து கோயில்களில் திருநெல்வேலி, மதுரை மீனாட்சி, அழகர் கோயில் முக்கியமானவை.

நெல்லையப்பர் கோயில்

விஜய நகர மன்னர்களும், நாயக்கர்களும் கை வைக்காத தமிழ் நாட்டு கோயில்கள் சிலவே. தமிழ் நாட்டின் எல்லா பெரிய கோயில்களிலும், நாயக்கர் கை வண்ணம் உண்டு. உள்ளே நுழைந்த உடன் நாம் பார்க்கும் பெரிய மண்டபங்கள் பெரும்பாலும் நாயக்கர் காலத்தை சேர்ந்தவை. அந்த வாழைப் பூ தூண்களே அவற்றின் அடையாளம், ஆதாரம்.

நெல்லையப்பர் கோயிலில் நந்தி இருக்கும் மண்டபம் நாயக்கர் காலத்து கலையின் உன்னத உதாராணம்.

காஞ்சி வாதராசப் பெருமாள், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி – இங்குள்ள கோயில்களில் இன்று நாம் பார்ப்பதில் மூக்கால் பாகம் அவர்கள் கட்டியவையே.

ஸ்ரீரங்கம் – நாயக்கர் காலத்து தூண்

முழுவதுமாக நாயக்கர் மட்டுமே கட்டிய கோயில்களும் பல உண்டு. அவற்றில் எனக்கு பிடித்தது – நெல்லைக்கு அருகில் இருக்கும் கிருஷ்ணாபுரம்.

சிற்பக் களஞ்சியம்.

கிருஷ்ணாபுரம் – (புகைப்படம்  – பதி லக்ஷ்மிநாராயணன்)

**************

தமிழ் நாட்டின் பல கோயில்களில் எல்லா வகைத் தூண்களையும் பார்க்கலாம்.

பொதுவாக கருவறை தூண்களை வைத்து முதலில் கோயில் எழுப்பபட்ட காலம் தெரிந்து கொள்ளலாம்.

அதன் பின் அதை பல நிலைகளாக விரிவு படுத்திய பின்னாள் வந்த மன்னர்களின் காலத்தை அந்தத் தூண்கள் காட்டிக் கொடுத்து விடும்.

தஞ்சை புள்ளம்மன் கோயில் கருவறை பல்லவர் காலம். பின்பு பாரந்தகச் சோழன் காலத்தில் மண்டபம், விமானம் எல்லாம் கட்டப்பட்டு இருக்கிறது.

புள்ளம்மன் கோயில் கருவறை – பல்லவர் காலத் தூண்

மதுரை நரசிம்மர் கோயிலிலும், பல்லவ காலத் தூண்களைப் பார்க்கலாம். அந்த கோயிலும் பராந்தக சோழன் காலத்தில் விரிவு படுத்தப் பட்டிருகிறது. அவன் அந்தக் கோயிலில் என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துள்ள கல்வெட்டு ஒரு சுவராசியம்.

நெல்லையப்பர் கோயிலில் பல்லவ, பாண்டிய, நாயக்கர் தூண்கள் அனைத்தும் இருக்கின்றன.

காஞ்சி வரதராஜர் கோயில் –

பல்லவர் காலத்தில் சிறியதாக இருந்து (பிரபந்தம் தான் ஆதாரம்),

சோழர் காலத்தில் விரிவு படுத்தப் பட்டு (கல்வெட்டுகள், ராமானுஜர், பிரபந்தம்),

நாயக்கர் காலத்தில் பிரமாண்டமாய் மாறி (மண்டபங்களின் தூண்கள், கல்வெட்டுகள், குண்டாய் தொப்பையுடன் தூண்களில் ஒட்டிக் கொண்டு கை கூப்பும் நாயக்க மன்னர்கள்),

க்ளைவ் காலம் (மகர கண்டி),

நிகழ் காலம் (suresh loves sujaa 1980 கிறுக்கல்கள்) வரை

நீடித்து நிற்கிறது.

தஞ்சை பெரிய கோயிலின் அம்மன் சந்நிதி பாண்டியர் கட்டியது. நந்தி, முருகர் கோயில் நாயக்கர் செய்தது. . பிள்ளையார் கோயில் மராட்டியர் காலம்.

தஞ்சை பெரிய கோயில் – நந்தி மண்டபம் – தொப்பை நாயக்கர்
தஞ்சை பெரிய கோயில் – முன்னால் இருப்பது நாயக்கர் கால கோபுரம்

கோயில்கள் வரலாற்று ஆவணங்களும், ஆதாரங்களும் கூட.

திருவலஞ்சுழி கோயிலின் வெளிப் பிரகாரத்தில் அருமையான ஹோய்சாளர் காலத்து மண்டபம், சோழர்கள் பெருமை இழந்து, இவர்களின் தயவில் ஆட்சி செய்த காலத்துக்கு சான்றாய் இருக்கிறது.

திருவலஞ்சுழி – ஹோய்சளார் மண்டபம்

மன்னர்களை தோற்கடித்தாலும், அவர்கள் கட்டிய கோவிலை விரிவு படுத்திய தமிழ் நாகரீகம் – முன்னாள் முதல்வர் கட்டினார் என்பதற்காகவே, ஒரு அருமையான நூலகத்தை அழிய விட்ட வரை தேய்ந்தது காலத்தின் கோலம். 

********************

“இதையெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போறோம்? கோயிலுக்கு போனோமா, சாமி கும்டோமா, பிரசாதம் வாங்கி சாப்ட்டோமான்னு இருக்கணும்” என்று நம்மில் சிலருக்கு தோன்றலாம்.

அடிமைப்பட்டு கிடந்த தமிழ் ஜாதிக்கு நெல்லை சுப்பையா பாரதி சொன்னதுதான் பதில்.

ஆறாயிரம் ரூபாய்க்கு ஓட்டை விற்கும் தமிழர்கள் இருக்கும் இந்த காலத்துக்கும்  பொருந்துவது வேதனை.

” தமிழா, . பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது. 

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். 

தெய்வங்கண்ட கவிகள்,அற்புதமான சங்கீதவித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல்வல்லார், பல தொழில்வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். 

அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். 

உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள்.

கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார்.”

******************

நன்றி

  1. Temples of India – Krishna Deva

2. Professor Venkatraman – Anthropology, Madurai Kamaraj University – அருமையான மனிதர். ஊர் ஊராக கூட்டிச் சென்று, கோயில்களையும், சிற்பங்களையும் அறிந்து கொள்ளவும், ஆராதிக்கவும் சொல்லிக் கொடுத்தார்.

 

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள