சங்கத் தமிழ் – படிப்பது எப்படி?

சங்கத் தமிழ் அதுவும் அகநானூறு படிக்கலாம் என்று ஆசை வந்ததற்கு முதலில் பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கு நன்றி சொல்ல வேண்டும். சில்க் போர்டு, மார்த்தஹள்ளி சந்திப்புகளில் ola கார்களில் நிற்கும் போது பொழுது போக வேண்டும். Whatsapp ல் ஐம்பதாவது முறையாக வரும் பொய்ச் செய்திகள், facebook ல் நண்பர்களின் ஏர்போர்ட் செல்பிக்கள் எல்லாம் பார்த்து முடித்த பின்பும் கார் நகராது. இணையத்தைப் புரட்டுகையில் சங்கத் தமிழ் சொல்லும் பக்கங்கள் ஏராளம். பிரமிக்க வைக்கும் முயற்சிகள்.

இவற்றை சொல்லிக் கொடுக்க சிலர் அசுர உழைப்பு உழைத்துள்ளனர். முக்கியமாக,அ.க.ராமானுஜம், வைதேஹி ஹேர்பெத் ஆகியோர். உரை ஆசிரியர் புலியூரக் கேசிகன் எழுதிய புத்தகம் இலவசமாகவே கிடைக்கிறது. அவர்களும் அவர்கள் சந்ததியினரும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” வாழ பெரிய பெருமாளை வேண்டுவோம்.

பாடலை முதலில் படித்தால் அன்மொழித் தொகையும், ஆகுபெயரும் சொல்லிக் கொடுத்த தமிழ் ஆசிரியர்கள் போல் பயமுறுத்துகிறது.

உதாரணத்திற்கு அளி நிலை பொறா அது அமரிய முகத்தள் என்று தொடங்கும் ஐந்தாம் பாடல்.

ஆரம்பமே யார்க்கர் பந்து. சில குறுக்கு வழிகளை முயற்சிக்கலாம்.

முதலில், ஆங்கில வடிவத்தை படித்து விட்டால், கவிதையின் சாரம் புரிந்து விடுகிறது. அதன் கரு மனதை தொட்டால் மேலே படிக்கலாம். இல்லை என்றால் அடுத்த பாடல்.

ஐந்தாம் பாடலின் ஆங்கில வடிவம் ஒரு மென்மையான கவிதையை அடையாளம் காட்டுகிறது. ஒரு அழகான குடும்பத்தை, கணவன் மனைவியின் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மணிரத்தினத்தின் படக் கட்சி போல வரைகிறது. பாடலின் மூலத்தை படிக்கத் தூண்டுகிறது.

பின், சொற்றொடர்களின் அர்த்தம் புரிந்து கொள்ளுதல். அதுவும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. பல வரிகள் மயக்க வைக்கும். இவை புரிந்தால் தனி வார்தைகள் பிடி படுகின்றன.

பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – looking at with the iris in her eye hidden in tears

தனித் தனியாய் எல்லா வார்த்தைகளையும் புரிந்த கொள்ள நிறைய உழைப்பு வேண்டும். நமக்கு தெரிந்த வார்த்தைகளை முதலில் அடையாளம் கண்டு கொண்டால், சிறிது எளிதாகிறது. சில வார்த்தைகள் வேறு அர்த்தத்தில் குழப்புவதால் கவனம் தேவைப்படுகிறது.

ஐந்தாம் பாடலிருந்து : நலமிகு, சேவடி, நிலம், காட்டு (forest), நெல்லி, கூர்ங்கல், விரல், சிதைக்கும், கானம் (காடு), இறப்ப (Crossing), முகம், பாவை (கண்ணின் மணி), பனி நீர் (கண்ணீர்), காலை, மலர், பிரிது

இப்போது கார் office அல்லது, வீடு வந்திருக்கும். போரடிக்கும் மீட்டிங்கில் அல்லது மனைவியின் பேச்சுக்கு நடுவில் பாடலை அசை போட்டால், புதிதாய் அர்த்தங்கள் பிறக்கிறது. நமக்கு தெரிந்த வார்த்தைகளில் கவிதையை சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம். நடு நடுவே ஏதோ புரிந்த மாதிரி தலையை ஆட்டிக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால்,  மேனேஜரோ, மனைவியோ “எந்த உலகத்துலே இருக்கிங்களோ” என்று சந்தேகப்படலாம்.

கடைசி கட்டம். இப்பொழுது நம்மை சினிமா இயக்குனராக கற்பனை செய்து கொண்டு நமக்குப் பிடித்த, நடிகர், நடிகை, நாம் காதலித்த பெண்கள், ஊர், நேரம், இடம் ஆகியவற்றோடு பாடலைப் பொருத்தி மானசீகமாய் படம் எடுக்கலாம் அல்லது கதையாய் எழுதலாம். பாடல்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஸ்கிரிப்ட் வடிவில் எழுதப் பட்டு இருப்பதால் இது சிறிதே எளிதாகிறது.  ஐந்தாம் பாடலின் நாயகியாக, தளபதியில் வரும் பானுப்பிரியா பொருத்தம். இதை நம் கற்பனையில் எழுதிப் பார்த்தால் நண்பர் நாகை ஆனந்தன் சொல்வது போல “தமிழில் ஒரு பக்கம் சொந்தமாய் எழுதிப் படித்தால் ஒரு இனம் புரியாத உணர்வு” வருகிறது.

இரண்டு வாரம் தாண்டி விட்டால் தமிழ் நம்மை விடாது.

தமிழ் என் தாய் மொழி என்று உரத்துச் சொல்ல வைக்கும் கற்பனைகள், மனித நெறிகள், எல்லா பாடல்களிலும் நிறைந்து இருக்கும் இயற்கை ரசனைகள்,  நகைச்சுவை உணர்வுகள், “இடுப்பை விட்டு அகலா1” குழந்தை போல அடம் பிடிக்கும்.

கொஞ்சம் தைரியம் வந்து விடும். புலியூர்க் கேசிகனின் புத்தகம் இப்போது சற்றுப் புரிய ஆரம்பிக்கும். சம்பந்தமே இல்லாதது போல் தோன்றும் இயற்கை வர்ணனைக் காட்சிகளின் உள் அர்த்தம் சொல்லும் உரை ஆசிரியரை கை கூப்பி வணங்கத் தோன்றும். ஆறாவது பாடலில் வரும் நாய் பற்றிய நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும் வர்ணனையும் அதன் உள் அர்த்தமும் ஒரு உதாரணம்.

அப்படி ஒரு ஆசிரியர் நமக்குப் இப் பிறவியில் கிடைக்க, பெருமாள் கோயிலை சுற்றி வரும் போது ராமானுஜர் சந்நிதியில் தண்டம் இட்டு சேவிக்கத் தோன்றும். ஆசிரியர் கிடைக்காவிட்டாலும் ஆச்சார்யனின் ஆசிர்வாதம் கிடைத்தால்,  உள் அர்த்தம் படித்த உடன் புரியலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய இலக்கியம். உலகின் மற்ற பாகங்களில் தொண்ணூறு சதவிகிதம் மரத்தில் ஆடிக் கொண்டிருந்த காலம். திணை, துறை, தளை, முதல், உரு, கரு என்று எல்லா விதிகளும் இப் பாடல்களுக்கு உள்ளன. அவ் இலக்கண மரபு தவறாமல் தொகுத்த பாட்டுகள் இவை. அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறாமல், அவை சொல்லும் நுண்ணிய மனித உணர்வுகள்,  காலம் கடந்து நிற்கும் கருத்துக்கள். எழுதப்பட்ட காலத்திற்கு முன்னால் எத்தனையோ ஆயிரம் ஆண்டு வாழ்ந்து அனுபவித்த ஒரு கூட்டத்தில் இருந்துதான் இக் கவிதைகளும் புலவர்களும் தோன்றியிருக்க முடியும். யோசிக்க யோசிக்கப் பெருமிதமாய் – “தமிழன் என்று சொல்லடா”

கூடவே கொஞ்சம் வருத்தமும் வரும். நமக்கு இருக்கும் அடுத்த தலைமுறை தமிழ் தெரியாமல் வளர்வது. அனன்யாக்களும், சூர்யாக்களும் இந்த அருமையான நாகரிகத்தை அறியாமலேயே வாழ்ந்து மறைந்து விடுவார்களோ என்ற அச்சம் நிஜம்.

அவர்கள் வளர்ந்து, பணம் சேர்க்க வழி சொல்லும் படிப்பை முடித்து, பொருள் எல்லாம் சேர்த்து போரடித்த பிறகு, தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்திலாவது படிக்க வேண்டும் என்று “சொன்ன வண்ணம் செய்த பெருமாளை” வேண்டுவோம்.

அவர்கள் எப்போதாவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நம் சொந்த எழுத்தில் சில பக்கங்கள், எதைப் பற்றியாவது (உயிலாவது) தமிழில் எழுதி விட்டுச் செல்ல ஆசை வருகிறது. நாம் விட்டுச் செல்லப் போகும் OMR வீதி கடல் பார்க்கும் வீட்டை விட, -ச்சே, ச்சே- “இந்திர லோகம் ஆளும்2” “அச்சுவையை” விட அதை அவர்கள் பெரிதாக கொண்டாடுவார்கள் என்ற கனவோடு.

  1. பாலகுமாரன்
  2. ஆழ்வார் பாசுரம் தொண்டரடிப்பொடி ஆழ்வார் – பச்சை மா மலை
Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள